World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Wall Street vs. workers—the class gap widens

வோல் ஸ்ட்ரீட் Vs. தொழிலாளர்கள் - வர்க்கப் பிளவு விரிகிறது

Statement of Jerry White, SEP candidate for president
11 October 2012
Back to screen version

வோல் ஸ்ட்ரீட்டின் நிதி ஒட்டுண்ணிகள் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை சீர்செய்வதாக அவர்கள் நடத்திய நடவடிக்கைகளில் எதனையும் இழக்கவில்லை என்பதை செவ்வாயன்று வெளியான ஒரு ஆய்வு உறுதிப்படுத்துகிறது. வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை ஊதியமாக வழங்கவிருப்பதாக நியூயோர்க்கின் அரசு தணிக்கையாளர் தெரிவிக்கிறார். லேஹ்மென் பிரதர்ஸ் பொறிவைத் தொடர்ந்து நேர்ந்த நிதிப் பொறிவுக்கு முன்வந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மட்டுமே இதனை விஞ்சிய ஊதியத் தொகை இருந்தது.

பங்குப்பத்திரத் துறையில் ஊழியர்களின் சராசரி ஊதியம் கடந்த இரண்டாண்டு காலத்தை விடவும்  16.6 சதவீதம் அதிகரித்து $362,950 ஆக இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையும் ஏறக்குறைய  சரியான அர்த்தம் கொண்டதல்ல, ஏனென்றால் இது செயலர்களின் ஊதியத்தையும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பளங்களையும் சேர்த்துக் கணக்கிடுகிறது. வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களின் மொத்த சம்பாத்தியங்களிலான அதிகரிப்பு தான் கூடுதல் முக்கியத்துவமானதாகும். இது சென்ற ஆண்டில் 7.7 பில்லியன் டாலர்களாக இருந்ததில் இருந்து 2012 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 10.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. முழு ஆண்டிலும் இந்த வருமானம் குறைந்தபட்சம் 15 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று தணிக்கையதிகாரி கணித்துள்ளார். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் இருமடங்காகும்.

வர்த்தக வங்கிகள் மற்றும் பங்கு பத்திர விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட இன்னும் பரந்த நிதிச் சேவைத் துறையை பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு பொறிவுக்கு முந்தைய இலாபநிலையை ஏறக்குறைய முழுக்க மீட்டிருக்கிறது. சிட்டி பேங்க், அமெரிக்க மத்திய வங்கி, வெல்ஸ் ஃபார்கோ, ஜேபி மோர்கன் சேஸ், மோர்கன் ஸ்டான்லி, மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் ஆகிய அமெரிக்காவின் ஆறு மிகப்பெரும் கடன்வழங்கு நிறுவனங்கள் மொத்தமாய் ஈட்டியிருக்கும் இலாபம் 63 பில்லியன் டாலர், இது 2006 ஆம் ஆண்டுக்குப் பின் மிக அதிக அளவு. இதனிடையே இந்த ஆறு வங்கிகளும் ஆண்டின் முதல் பாதியில் 40,000 வேலைகளை வெட்டுவதாக அறிவித்தன.

அடுத்த ஆண்டில், இந்த ஆறு வங்கிகளின் மொத்த சொத்துகளின் அளவு 10 டிரில்லியன் டாலர்  என்ற அளவைத் தொட இருக்கிறது. இது பத்து வருடங்களுக்கு முந்தைய அளவைக் காட்டிலும்  ஏறக்குறைய மூன்று மடங்காகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த ஆறு வங்கிகளும் மத்திய நிதிநிலை பற்றாக்குறையின் அளவைப் போல பத்து மடங்கு நிதி ஆதாரங்களுக்குத் தலைமையில் இருக்கின்றன. அத்துடன் இரண்டு நூற்றாண்டு காலத்தில் சேர்ந்திருந்த அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் தொகையுடனும் இது ஒப்பிடக் கூடியதாகும்.

நிதி ஒட்டுண்ணிகளின் வருவாயும் சொத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற அதேவேளையில், சராசரி அமெரிக்கத் தொழிலாளியின் உண்மையான ஊதியங்கள் தேங்கியிருக்கின்றன. வோல் ஸ்ட்ரீட் பொறிவின் சமயத்தில் வேலை இழந்து பின்னர் புதிய வேலைகளைக் கண்டிருக்கும் அனைத்து தொழிலாளர்களிலும் பாதிக்கும் அதிகமான தொழிலாளர்கள் ஊதிய வெட்டுகளைக் கண்டிருப்பதாக அமெரிக்க தொழிலாளர் துறை புள்ளிவிவர வாரியத்தின் ஒரு சமீபத்திய அறிக்கை கண்டறிந்துள்ளது. இந்தத் தொழிலாளர்களில் அநேகமானோர் அவர்களது முந்தைய ஊதிய விகிதங்களுடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமான வெட்டுகளைப் பெற்றுள்ளனர்.

அமெரிக்க சமூகத்தின் உயரடுக்கின் ஒரு சதவீதத்தினர் 2010 ஆம் ஆண்டின் போதான - இத்தகைய புள்ளிவிபரம் தொகுக்கப்பட்டிருக்கும் மிக சமீபத்திய வருடம் இதுதான் - தேசிய வருவாயின் மொத்த வளர்ச்சியில் மலைக்க வைக்கும் 93 சதவீதத்தை கைப்பற்றியிருந்தனர் என்று இன்னுமொரு அரசாங்க அறிக்கை தெரிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், 2008 பொறிவுக்குப் பின்னர் தங்களது வேலைகளை இழந்திருக்கக் கூடிய தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்குமே உண்மையான வருவாய் தேங்கியிருக்கிறது அல்லது வீழ்ச்சி காண்கிறது.

ஒபாமா நிர்வாகம்மீட்சி நடந்திருப்பதாக கூறுகின்ற இந்த மொத்த மூன்று வருடங்களின் போதும், மத்தியலமைகின்ற ஒரு அமெரிக்க வீட்டு வருமானத்தின் அளவு 4.8 சதவீதம் சரிந்திருக்கிறது, உத்தியோகபூர்வமாகமந்தநிலை என்று பதிவு செய்யப்பட்ட இரண்டு வருடங்களின் போதே 2.6 சதவீதம் தான் சரிந்திருந்தது, இது அதனையும் விட அதிகமாகும். பொருளாதார நெருக்கடிக்கு காரணங்கள் அனைத்தையும் புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் மீது சுமத்துவதற்கு ஒபாமா முயற்சி செய்கின்ற போதிலும், அமெரிக்காவின் பரந்த பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்ததற்கு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகிய இருபெரும் பெருவணிகக் கட்சிகளுமே பொறுப்பானவை என்பது தெளிவாகி விட்டது.

இந்த புள்ளிவிவரங்கள் முதலாளித்துவத்தின் அப்பட்டமான யதார்த்தத்தை விளங்கப்படுத்துகின்றன: சோசலிஸ்டுகள் வெகு காலமாய் கூறி வந்திருப்பதைப் போல, இலாப அமைப்புமுறையானது சமூகத்தின் ஒரு துருவத்தில் செல்வம் மேலும் மேலும் குவிந்து செல்வதையும் இன்னொரு துருவத்தில் சமூக துயரம் அதிகரித்துச் செல்வதையும் கொண்டிருக்கிறது. நியூயோர்க் நகரத்தை விடவும் இது அப்பட்டமாய் வெளிப்படுவது வேறெங்குமில்லை. வோல் ஸ்டீரிட்டின் வரலாறு காணாத இலாபங்களுடன் கைகோர்த்தபடி வீடின்மையின் ஒரு பெரும் அலையும் இருக்கிறது. அமெரிக்காவின் மொத்த வீடற்ற மக்களில் சுமார் 15 சதவீதம் பேர் நியூயோர்க் வீதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று இந்த வாரத்தில் அசோசியேடட் பிரஸ் வெளியிட்ட செய்தி ஒன்று கூறுகிறது.

சமூக முன்னேற்றத்தின் ஒவ்வொரு துணுக்கையும் பிய்த்தெறிவதற்கு ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் உறுதிபூணாமல் இருந்திருந்தாலே கூட, இந்த சமூக முரண்பாடுகள் எல்லாம் சீர்திருத்தவாத நெளிவெடுத்தல்கள் மூலம் தீர்க்கப்பட இயலாது. அவற்றுக்கு ஒரு துணிவான புரட்சிகரமான தீர்வு அவசியமாக இருக்கிறது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும், பெரும்-செல்வந்தர்களின் செல்வங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும், தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வகையில் பொருளாதார வாழ்வு மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

இந்தப் புரட்சிகரமான சமூக மாற்றினை உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் சாத்தியமான மிகப் பரந்த பார்வையாளர்கள் முன் வைப்பதே 2012 தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சிப் பிரச்சாரத்தின் நோக்கமாகும். அமெரிக்காவில் இந்த ஒட்டுமொத்தமான துருவப்படுத்தல்கள் குறித்தும் மற்றும் சமூக அநீதி குறித்தும் உண்மையான கவலையும் நியாயமான கோபமும் கொண்ட அனைவரும் எங்களது பிரச்சாரத்தை ஆதரிக்க வேண்டும்; சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதனைக் கட்டியெழுப்புகின்ற முடிவை மேற்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.socialequality.com வலைத் தளத்தை பார்வையிடவும்.