சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

EU austerity drives repression in Greece

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் கிரீஸில் ஒடுக்குமுறையைச் செலுத்துகின்றன

Christoph Dreier
13 October 2012

use this version to print | Send feedback

ஐரோப்பா முழுவதிலுமான உழைக்கும் மக்களின் சமூக உரிமைகள் மற்றும் வாழ்நிலைமைகளின் மீதான தன் தாக்குதல்களை தீவிரப்படுத்தவே ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது என்பதை ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்கெல் செவ்வாயன்று ஏதென்சுக்கு அவர் மேற்கொண்ட துரித விஜயத்தின் போது தெளிவாக்கினார்.

கிரேக்க பிரதமர் அண்டோனிஸ் சமராஸ் உடனான ஒரு சந்திப்புக்கு, 7,000 கலகத் தடுப்பு போலிசாரின் பாதுகாப்பு வலயத்துடன், மக்கள் அகற்றப்பட்டிருந்த வீதிகளின் வழியாக, மேர்கெல் விரைந்து சென்றார். ஐரோப்பிய ஒன்றியம் உத்தரவிட்ட மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் இருந்து சமராஸ் பின்வாங்காமல் இருப்பதை உறுதி செய்வது தான் அவரது இச்சந்திப்பின் நோக்கம். அதன்பின் கிரேக்க தொழிலாளர்களின் மீது திணிக்கப்பட்டு வருகின்ற பட்டினி ஊதியங்களை அடிப்படையாகக் கொண்டு இலாபம் குவிக்கும் நம்பிக்கையுடன் இருக்கின்ற தெரிந்தெடுத்த தொழிலதிபர்களையும் மேர்கெல் சந்தித்தார்.

அதே நாளில் பிரெஞ்சு தேசிய அவையில், முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் மேர்கெல் பேசி முடித்திருந்த நிதி ஒப்பந்தத்திற்கு ஆதரவாக, ஆளும் சோசலிஸ்ட் கட்சி, வலது சாரி மக்கள் பெரும்பான்மைக்கான ஒன்றியம், மற்றும் மைய-வலது ஜனநாயக இயக்கம் ஆகியவற்றின் அனைத்துக் கட்சி கூட்டணி வாக்களித்தது. சார்க்கோசியை அடுத்து பதவிக்கு வந்திருக்கக் கூடிய பிரான்சுவா ஹாலண்ட் சென்ற மே மாதத் தேர்தலில் வெற்றி பெற்றதற்குப் பெருமளவு காரணமாக இருந்ததே நிதி ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவிருப்பதாக அவர் அளித்திருந்த வாக்குறுதி தான் என்கின்ற போதிலும் ஒரு காற்புள்ளி கூட மாறாமல் அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. தீவிரமான சமூக வெட்டுகள் மூலமாக பிரான்ஸ் அதன் நிதிநிலை பற்றாக்குறையைக் குறைப்பதை இந்த ஒப்பந்தம் பிரான்சின் கடமையாக்குகிறது.

கிரீஸ் 2010 இல் பிணையெடுப்புக்கு விண்ணப்பித்த நாள் முதலாகவே அது தான் மொத்த ஐரோப்பாவுக்குமான உதாரணமாகத் திகழ்ந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய முக்கூட்டின் உத்தரவின் பேரில் அடுத்தடுத்து வந்த கிரேக்க அரசாங்கங்கள் திணித்திருக்கக் கூடிய ஊதிய வெட்டுகளும், பாரிய வேலைக்குறைப்புகளும், மற்றும் சமூக நல உதவித் திட்டங்களின் அழிப்பும் ஒவ்வொரு பிற ஐரோப்பிய நாட்டுக்குமான வார்ப்பாக சேவை செய்கிறது.

இந்தக் கொள்கையானது கிரீஸை அதன் வரலாற்றிலான மிக ஆழமான மந்தநிலைக்குள் மூழ்கடித்து, பரந்த மக்கள் அடுக்குகளை வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு சபித்திருக்கும் அதேசமயத்தில் கிரேக்க கடன் அளவுகளை வரலாற்று அளவுகளுக்கு உயர்த்திக் கொண்டும் இருக்கின்றது. என்கிறபோதிலும் இது இப்போது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டும் நிதி ஒப்பந்தத்தின் மூலமாக ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டுமாக இருக்கிறது.

சிக்கன நடவடிக்கைகளுக்கான செலுத்தமானது அரசின் கடன்களைக் குறைப்பது மற்றும் யூரோ மண்டலத்தின் ஒத்திசைவைப் பராமரிப்பது ஆகிய அதன் வெளிக்கூறப்படுகின்ற இலக்குகளை ஒவ்வொரு படியிலும் கீழறுக்கின்றது. எனினும் அது ஒரு இரண்டாவது, கூறப்படாத திட்டநிரலுக்கு வழிவகை செய்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களின் மூலமாக செயல்படுகின்ற ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பியத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை சீனாவின் ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் மட்டத்திற்கும் தென்னாபிரிக்காவின் சுரங்கத் தொழிலாளர்களின் மட்டத்திற்கும் கீழிறக்கும் வரை ஓயப் போவதில்லை.

நெருக்கடியின் மத்தியிலான இப்போது கூட, சமூகத்தின் உயரடுக்கு வெறுப்பூட்டும் மட்டங்களுக்கு சொத்துகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. சுவிஸ் வங்கிகளில் பில்லியன்கணக்கான தொகைகளை வைப்பு செய்திருக்கக் கூடிய கிரேக்க மில்லியனர்கள் மீது, அவர்களின் நடவடிக்கைகள் மீதான குற்றத்தன்மையை வெளிப்படுத்தக் கூடிய விவரங்களை கிரீஸின் நிதியமைச்சர் இரண்டு வருடங்களாகக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற போதிலும் கூட, துரும்பு கூட படவில்லை. ஐரோப்பிய பிணையெடுப்பு நிதிகளில் இருந்து பில்லியன்கணக்கான யூரோக்கள் நேரடியாக வங்கிகளுக்குப் பாய்ந்து அங்கிருந்து செல்வந்தர்களின் கஜானாக்களுக்குப் பாய்கின்ற அதேநேரத்தில் தொழிலாளர்களோ முறைப்படி கொள்ளையடிக்கப்படுகிறார்கள்.

சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களில் மட்டுமல்ல, தொழிலாள வர்க்கத்தின் மீதான அரசியல் தாக்குதல்களிலும் கூட கிரீஸ் முன்னணியில் நின்று கொண்டிருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் இதுவரை தொழிற்சங்கங்களையும் சிரிசா (தீவிர இடதுகளின் கூட்டணி - SYRIZA) போன்ற போலி-இடது அமைப்புகளையும் தான் பிரதானமாக நம்பி வந்துள்ளது. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோபத்தை வடியச் செய்வதற்கு வரம்புபட்ட ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்கின்ற அதேசமயத்தில் அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்துஐரோப்பிய ஒன்றியத்தை சீர்திருத்தி அதனை தொழிலாள-வர்க்கத்திற்கு ஆதரவான கொள்கைகளை அமல்படுத்தும்படி செய்ய முடியும் என்பதான பிரமைகளைப் பரப்புகின்றன.

ஆயினும் இந்த வழிமுறைகள் எல்லாம் தேய்ந்து சென்று கொண்டிருக்கின்றன. SYRIZA தலைவரான அலெக்சிஸ் சிப்ராஸ் சென்ற ஜூன் மாதத் தேர்தலில், அவர் புதிதாகத் தேர்வாக இருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதியுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதையை மாற்றவிருப்பதாக வாக்குறுதியளித்தார். இந்த முன்னோக்கு முழு கற்பனைவிநோதமானது என்பதை இந்த வாரத்தில் பாரிஸில் நிதி ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டமை விளங்கப்படுத்துகிறது.

பாசிச பயங்கரம் மற்றும் எதேச்சாதிகார ஆட்சி என 1930களில் ஐரோப்பாவில் ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளை நோக்கி இப்போது கிரேக்க முதலாளித்துவம் திரும்பிக் கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் மிகவும் பின்தங்கிய சமூக அடுக்குகளை அவர்கள் அணிதிரட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பாசிசக் கட்சியான Chrysi Avgiக்கு(பொன் விடியல்)எதிராக ஆர்ப்பாட்டம் செய்த போராட்டக்காரர்களை போலிஸ் சித்திரவதை செய்தமை சர்வதேசரீதியாக தொழிலாளர்களுக்கான ஒரு எச்சரிக்கை ஆகும். ஏதென்ஸ் சிறைகளில் நிகழ்ந்திருக்கக் கூடிய விடயங்கள் அபுகரீப் சித்திரவதையையும் கடைசியாக 1960கள் மற்றும் 1970களில் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் பாசிச சர்வாதிகாரங்களின் கீழ் ஐரோப்பாவில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களையும் நினைவூட்டுகின்றன.

சமீப மாதங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இடது-சாரி அரசாங்க எதிர்ப்பாளர்கள் மீது பொன் விடியல் நடத்தியிருக்கக் கூடிய தாக்குதல்களுக்கு அரசியல் மறைப்பை வழங்கியிருப்பதன் மூலம் அரச சக்திகள் பொன் விடியலை வளர்த்தெடுப்பதற்கு வேலை செய்திருக்கின்றன. கிரீஸில் போலிஸின் பெரும் சதவீதத்தினர் பாசிசக் கட்சியின் உறுப்பினர்களாகவோ அல்லது ஆதரவாளர்களோ இருக்கின்றனர் என்பது நன்கறிந்த விடயமாகும்.

இவை அனைத்துமே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளால் அமைதியாக சகித்துக் கொள்ளப்படுகின்றன. இந்த வாரத்தில் மேர்கெலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த சிலர் சுவஸ்திக அடையாளங்களைக் காட்டிய சம்பவத்திற்கு கவலையுடன் எதிர்வினையாற்றிய ஜேர்மன் ஊடகங்கள் அதேசமயத்தில் கிரீஸில் பாசிஸ்டுகளின் நடவடிக்கைகள் குறித்து வாய்திறக்கவில்லை. காரணம் என்னவென்றால் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை பலவந்தமாக ஒடுக்குவதற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் அனைத்துமே தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன என்பதால் தான். சமீபத்தில் ஜேர்மனியில் மத்திய அரசமைப்பு நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை தூக்கி வீசி விட்டு இப்போது உள்நாட்டு விடயங்களில் ஜேர்மன் இராணுவம் தலையிடுவதற்கும் அனுமதிக்கிறது.

ஐரோப்பாவில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகப் பேரழிவு, ஜனநாயகத்துடன் இணக்கமற்றதாகும். எந்த அளவுக்கு அதிகமாக வர்க்க குரோதங்கள் தீவிரமடைகின்றதோ அந்த அளவுக்கு அதிகமாய் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களில் இறங்குவதற்கான உணர்வுக்கு ஆளும் உயரடுக்கு தள்ளப்படுகின்றது. கிரீஸில் புலம்பெயர்ந்தவர்களைத் தண்டிப்பது எனத் தொடங்கிய ஒன்று குறுகிய காலத்திற்குள்ளாக அரசியல் எதிரிகளை சித்திரவதை செய்வதாக விரிவடைந்திருக்கிறது, இது எதிர்காலத்தில் ஒட்டுமொத்த ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் செலுத்தப்படும்.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதென்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்தாபனங்களுக்கும் அதன் எதிர்ப்புரட்சிகர கொள்கைகளுக்கும் எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாது பிணைக்கப்பட்டிருக்கிறது. 1930களில் போலவே இப்போதும் ஐரோப்பா இரண்டு எதிரெதிரான மாற்றுகளுக்கு முகம் கொடுக்கிறது: ஒன்று ஆளும் உயரடுக்கு தனது செல்வத்தை பத்திரப்படுத்திக்கொள்வதற்கான முயற்சியில் கண்டத்தையே போர் மற்றும் சர்வாதிகாரத்தில் மூழ்கடிக்க வேண்டும், இல்லையென்றால் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுத்து வங்கிகள் மற்றும் பெருவணிகத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கொண்டு இடம்பெயர்க்க வேண்டும்.

தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஐரோப்பிய ஒன்றிய ஸ்தாபனங்களுக்கும் மற்றும் முதலாளித்துவ அரசுக்கும் கீழ்ப்படியச் செய்வதற்கும் அதன்மூலம் பொன் விடியல் போன்ற பாசிசப் போக்குகளின் வளர்ச்சிக்குப் பாதை திறந்து விடுவதற்கும் முனைகின்ற தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது கட்சிகளில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முறித்துக் கொள்வதே எல்லாவற்றுக்கும் முதலாய் இதற்கான அவசியமாக இருக்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் அடிப்படையிலும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கட்டியெழுப்பப்படுவதின் அடிப்படையிலுமே இத்தகையதொரு வேலைத்திட்டம் சாதிக்கப்படுவது சாத்தியமாக முடியும்.