WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
கிரேக்கப் பொலிசார் பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை சித்திரவதை செய்கின்றனர்
By Christoph Dreier
11 October 2012
பாசிச
Chrysi Avgi (Golden Dawn)
கட்சிக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்
செப்டம்பர் 30 அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டபின் அடியுண்டு,
பொலிசாரால் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின்
கூற்றுப்படி, பொலிசார் அபு காரிப் போன்ற சிறைகளில் கையாளப்படும் சித்திரவதை
உத்திகளைக் கையாண்டனர். கைதிகள் அடிக்கப்பட்டனர், நிர்வாணமாகத் திரைப்படம்
எடுக்கப்பட்டனர், அவர்களுடைய தோல் சுட்டெரிக்கப்பட்டது. இது செவ்வாயன்று
பிரித்தானியாவின் கார்டியன் செய்தித்தாளில் தகவலாக வந்துள்ளது;
எதிர்ப்பாளர்களின் காயங்களையும் பத்திரிகை புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 30, ஞாயிறன்று, கிட்டத்தட்ட 15 இளைஞர்கள் ஏதென்ஸின்
அகியோஸ் பான்டெலீமோன் மாவட்டத்தில் கூடினர்; இவர்களுடன் இதே போன்ற கருத்துடைய
கிட்டத்தட்ட 150 எதிர்ப்பாளர்களும் மோட்டார் சைக்கிளில் ஒரு டன்ஜானியச் சமூக
மையத்தின் மீது தாக்குதலை பற்றி எதிர்ப்பதற்கு வந்தனர். கோல்டன் டானின்
உறுப்பினர்கள் சிலர் அவ்விடத்தில் தோன்றினர்.
இதைத் தொடர்ந்து பூசல்கள் வெடித்தன; ஏராளமான பொலிஸ் அதிகாரிகள்
ஆர்ப்பாட்டத்தில் அருகில் இருந்த தெருக்களில் இருந்து புகுந்து சில
எதிர்ப்பாளர்களைக் கைது செய்தனர். எதிர்ப்பாளர்களின் வக்கீல் கருத்துப்படி, அவர்கள்
“மறைக்கப்பட்ட
முகங்களுடன் அமைதியைக் குலைத்தனர்”—அதாவது
அவர்கள் மோட்டார் சைக்களில் ஹெல்மட்டுக்களை அணிந்திருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலர் தாங்கள் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்
அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறினர். அதிகாரிகள் இவர்களை ஏசினர்,
தாக்கினர், அவர்கள் மீது துப்பினர், அவர்களை ஆஷ்ட்ரேக்கள் போலவும் பயன்படுத்தினர்.
முழு இரவும் அவர்கள் கண்விழிக்குமாறு செய்யப்பட்டனர்; 19 மணி நேரத்திற்கு உணவோ,
நீரோ கொடுக்கப்படவில்லை; சட்டபூர்வ பிரதிநிதிகளோடு தொடர்பு கொள்ளவும்
அனுமதிக்கப்படவில்லை. சிகிரெட் கொளுத்தும் கருவியால் எப்படித் தங்கள் தோல்கள்
காயப்படுத்தப்பட்டன என்றும் சிலர் கூறினர்.
பொலிஸ் அதிகாரிகள் அவர்களை படம் எடுத்து, இப்படங்களை இணைய தளத்தில்
வெளியிடுவதாகவும் அச்சறுத்தினர்; கோல்டன் டான் பாஸிஸ்ட்டுக்களிடம் இவர்களுடைய
விலாசங்களை கொடுக்கப் போவதாகவும் அச்சுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட இரு பெண்கள் பாலியல் அவமதிப்புக்கள், வன்முறைகள்
பற்றியும் புகார் கூறினர்; ஆண்களில் ஒருவர் பொலிஸ் எப்படி அவருடைய கால்களைப்
பிரித்து அவருடைய ஆண் உறுப்பைத் தாக்கினர் என்று கூறியுள்ளார். மற்றொருவர் ஒரு
வெளிப்படையான தலைக்காயம் இருந்தபோதிலும், பல மணி நேரம் மருத்துவப் பாதுகாப்பு
கொடுக்கப்படவில்லை, இன்னும் அடிகள் கொடுக்கப்பட்டன என்று கூறினார்.
அடுத்த நாள் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஆதரவு தரும்
வகையில் ஒற்றுமை ஆர்ப்பாட்டம் நடந்தபோது, பல கைதுகள் நடந்தன. 25 எதிர்ப்பாளர்கள்
அடங்கிய குழு கார்டியனிடம் தாங்கள் எப்படிக் காவல் நிலையத்தில்
அடிக்கப்பட்டனர், நிர்வாணமாக நிற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டனர், தங்கள்
பின்புறத்தைக் காட்ட வற்புறத்தப்பட்டனர் என்று கூறினர். மற்ற அதிகாரிகளும் காவலில்
உள்ளவர்களும் அந்த நேரத்தில் அங்கு இருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூறினார்:
“அந்த
அதிகாரி விரும்பியபடி எங்களை நடத்தினார்—கன்னத்தில்
அடித்தார், தாக்கினார், அவரைப் பார்க்கக் கூடாது என்றார், கால் மேல் கால் போட்டு
உட்காரக்கூடாது என்றார். அங்கு வந்த மற்ற அதிகாரிகள் ஒன்றும் பொருட்படுத்தவில்லை.”
பாதிக்கப்பட்டவர்களின் வக்கீல்களில் ஒருவரான
Charis Ladis,
பொலிஸ்
நிலையங்களில் வன்முறை என்பது முன்பு விதிவிலக்காகத்தான் நடைபெற்றது.
“இந்த
வழக்கில் ஒரு புதிய பக்கம் திறக்கப்பட்டுள்ளது காட்டப்படுகிறது. இதுவரை எவரேனும்
கைது செய்யப்பட்டால், வன்முறையில் ஈடுபட்டிருந்தால்கூட முன்கருத்து பாதுகாப்பாக
இருப்பார் என இருந்தது. இப்பொழுது இந்த இளைஞர்கள் அனைவரும் முடிவில்லாத இருண்ட
இரவில் அவர்கள் வாழ்ந்தனர் எனக் கூறியுள்ளனர்.”
இத்தகைய தகவல்கள் விதிவிலக்கல்ல; பொலிஸுக்கும் கோல்டன் டானுக்கும்
இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பின் உண்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. கடந்த
தேர்தல்களில் கோல்டன் டான் 6.9% வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் முதல் தடவையாக
நுழைந்துள்ளது.
நிறைய பொலிஸ் அதிகாரிகள் இக்கட்சிக்கு வாக்களித்தது மட்டுமின்றி,
குடியேறுபவர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது கட்சியினரின் மிருகத்தனத்
தாக்குதல்களையும் மூடி மறைத்துள்ளனர். குடியேறுபவர்கள் நிகழ்த்துவதாக கூறப்படும்
குற்றங்களைப் பற்றிப் புகார் கூறும் மக்களிடம், பொலிஸ் அதிகாரிகள் கோல்டன் டான்
பிரதிநிதிகளிடம் நேரில் கூறுமாறு தெரிவித்த அறிக்கைகள் பல உள்ளன; பிந்தையவர்கள்
“குடியேறுபவர்கள்
பிரச்சினைகள்”
குறித்து செயல்பட பொறுப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
பல மாதங்களுக்கு கிரேக்க அரசாங்கம் இவ்வகையில் பாசிசக் கட்சி
கட்டமைக்கப்பட உதவியுள்ளதுடன் இனவெறிக்கும் ஊக்கம் கொடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதம்
அதிகாரிகள் 4,500 பொலிஸ் அதிகாரிகளை பெரும் வெகுஜன குடியேற்ற எதிர்ப்புத்
தாக்குதல்களுக்காக திரட்டினர்.
இன்றளவும் இத்தகைய சூனிய வேட்டை, குடியேறுபவர்களை துன்புறுத்த
தொடர்கிறது. இதன் நோக்கம் சட்டவிரோத குடியேறியவர்கள் எனப்படுவோரைக் கண்டுபிடித்து
அவர்களை நாடுகடத்துவது ஆகும். உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான மந்திரி
நிகோஸ் டெண்டியஸ் முழு உணர்வுடன் பேரினவாத போக்கிற்கு ஊக்கம் கொடுத்து அரசாங்கம்
நடத்தும் சமூகத் தாக்குதல்களில் இருந்து கனவத்தை திசை திருப்புகிறார்.
கிரேக்கத்தின்
“குடியேற்றப்
பிரச்சினை”
நிதியப் பிரச்சினைகளைவிட மிகப் பெரியவை என்றார் அவர்.
கிரேக்க சிறைகளில் சித்திரவதை பயன்படுத்துவது தற்செயல் நிகழ்வு
அல்ல. பொலிசார் மக்களை அச்சுறுத்துவதற்கு வன்முறையைப் பயன்படுத்துகின்றனர்;
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தன சிக்கனக் கொள்கைகளுக்கு மக்கள் எதிர்ப்பு
எப்படி வெளிப்பட்டாலும் அதை நசுக்குகின்றனர்.
அரசாங்கம் பாசிஸ்ட்டுக்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களுடைய செயல்களை
மூடி மறைப்பதில் இருந்து அரசியல் எதிர்ப்பாளர்களை சித்திரவதை செய்யும் வரை
போய்விட்டது என்பது ஐரோப்பிய தொழிலாள வர்க்கம்முழுவதற்குமே ஒரு தெளிவான எச்சரிக்கை
ஆகும். இத்தகைய காட்சிகள் கடைசியாக ஐரோப்பாவில் கிரேக்கத்தில் கேர்னல்கள்
நிகழ்த்திய ஆட்சி மாற்றத்தின் போது காணப்பட்டன; அல்லது ஸ்பெயினிலும்
போர்த்துக்கல்லிலும் பாசிச சர்வாதிகாரிகள் ஆட்சியின்போது இருந்தன.
எந்த அளவிற்கு சமூக மோதல் முன்னேறிவிட்டது என்பதை இவை காட்டுகின்றன.
அரசாங்கம் பொலிஸைத் திரட்டத் தயார் என்பது மட்டும் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தின்
சிக்கன நடவடிக்கை ஆணைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை முறிப்பதற்கு
சமூகத்தில் மிகப்பிற்போக்கான, இழிசரிவுற்ற அடுக்குகளையும் திரட்டுகிறது.
குடியேறுபவர்கள் மற்றும் பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக முதல்
அடிகள் இலக்கு கொண்டிருக்கையில், இவை பின்னர் சமூகக் காட்டுமிராண்டித்தனத்தை
எதிர்க்கும் அனைத்து கிரேக்கத் தொழிலாளர்கள் மீதும் பாயும்.
கிரேக்க அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவுடன்
செயல்படுகிறது; பிந்தையது குடியேறுவோருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஊக்கம்
கொடுத்து, வரவேற்பது மட்டும் இல்லாமல் பாசிஸ்ட்டுக்களின் ஒத்துழைப்புடன் நடைபெறும்
பெருகிய பொலிஸ் வன்முறையையும் பொறுத்துக் கொள்ளுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் அல்லது
ஐரோப்பிய அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதிகூட இதுவரை எதிர்ப்பாளர்கள் சித்திரவதை
செய்யப்பட்டது குறித்து அறிக்கை ஏதும் வெளியிடவில்லை. கிரேக்கப் பொலிஸின்
நடவடிக்கைகள் மௌனமாக ஏற்கப்படுகின்றன.
தவறாக நடத்தப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பற்றிய சித்திரங்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உண்மையான முகத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன. இது கண்டம்
நெடுகிலும் தொழிலாள வர்க்கம் பெற்றுள்ள சமூக நலன்களை அழிப்பதற்காக நிதிய
உயரடுக்கின் மிக முக்கியமான கருவி ஆகும். இத்தகைய சமூக தாக்குதல்கள், கிரேக்கத்தில்
மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பவை, ஜனநாயக உரிமைகளுடன் இயைந்து இராதவை.
ஏதென்ஸில் நடக்கும் நிகழ்வுகள் ஐரோப்பிய ஒன்றிய உயரடுக்கு சலுகைகள் வழங்குவதற்குப்
பதிலாக தொழிலாளர்களுக்கு எதிராக பாசிசக் கும்பல்களை அட்டூழியம் செய்வதற்கு ஊக்கம்
கொடுக்கத் தயாராக உள்ளது என்பதையே வெளிப்படுத்தியுள்ளது. |