World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German chancellor Angela Merkel visits Greece

ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் கிரேக்கத்திற்கு வருகை

By Christoph Dreier
10 October 2012
Back to screen version

திங்களன்று கிரேக்கத்திற்கு ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் அரச விஜயத்தை மேற்கொண்டபோது நடந்த எதிர்ப்புக்கள், ஐரோப்பாவின் வெடிப்புத் தன்மை நிறைந்த வர்க்க அழுத்தங்களை பிரதிபலிக்கின்றன.

ஆத்திரமுற்ற கிரேக்கத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை தடுப்பதற்கு கிரேக்கம் முழுவதிலும் இருந்து திரட்டப்பட்ட 7,000 பொலிசார் மத்திய ஏதென்ஸில் சின்டக்மா சதுக்கத்தில் கூடினர். இந்த அரசாங்க அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே கூடினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, பொலிசார் எந்தக் காரணமும் காட்டாமல் சந்தேகத்திற்குரியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களைக் கைது செய்தனர். எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியான அடையாளச் சோதனைகளை கடக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

குறிபார்த்துசுடும் பொலிஸார் சதுக்கத்தைச் சுற்றிய கட்டிட உச்சிகளில் நிறுத்தப்பட்டனர். கலகப் பிரிவுப் பொலிசார் எதிர்ப்பாளர்களை ஆத்திரமூட்டும்வகையில் சத்தஎறிகுண்டுகள், கண்ணீர்ப்புகை குண்டுகள், தடியடிகள் மூலம் அவர்களைத் தாக்கினர். குறைந்தபட்சம் 193 பேர் கைது செய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது. நகர மையத்தில் வெகுஜனக்கூட்டத்தைத் தடை செய்யவேண்டும் என்று பொலிசார் முதலில் திட்டமிட்டிருந்தனர், ஆனால் இறுதியில் சின்டக்மா சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை அனுமதித்தனர்.

வெளியேறு, ஏகாதிபத்தியவாதிகளே உங்களுக்கு வரவேற்பில்லை, நான்காம் குடியரசை நிறுத்தக அல்லது ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேறுக என்ற கோஷ அட்டைகளை எதிர்ப்பாளர்கள் ஏந்தியிருந்தனர். சிலர் ஜேர்மனிய இராணுவச் சீருடை அணிந்திருத்தனர் அல்லது ஸ்வாஸ்திகச் சின்னங்களை எரித்தனர். பல கோஷ அட்டைகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து கிரேக்க அரசாங்கம் சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளைத் தாக்கின.

கிரேக்கப் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸ் (புதிய ஜனநாயகக் கட்சி) மற்றும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் தங்கள் கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் இணக்கமான தன்மையை காட்டினர். உங்களுடைய உளமார்ந்த வரவேற்பிற்கு நன்றி செலுத்த நான் விரும்புகிறேன் என்று தன் உரையின் ஆரம்பத்தில் மேர்க்கெல் அறிவித்தார். நாம் பங்காளிகளும் நண்பர்களும் ஆவோம். என்றார்.

வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு அவர் கிரேக்க பிரதமரை பாராட்டினார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள வெட்டுக்களை கிரேக்கம் முழுமையாக செயல்படுத்தும் எனத் தான் எதிர்பார்ப்பதையும் தெளிவுபடுத்தினார். அதன் பின் அவர் இழிந்த முறையில் இந்த ஆண்டு முன்னதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள 30 பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய நிதியத்தை வழங்க வழிவகை செய்வதாக உறுதியளித்தார்.

திங்களன்று யூரோப்பகுதியின் நிதி மந்திரிகள் கிரேக்க அரசாங்கத்திற்கு ஓர் இறுதி எச்சரிக்கை விடுத்தனர். கிரேக்க மந்திரிசபை கடந்த மாதம் முடிவு செய்யப்பட்ட வெட்டுக்களைச் செயல்படுத்தத் தவறினால், உதவி நிதியின் அடுத்த தவணை கொடுக்கப்படமாட்டாது, கிரேக்கம் திவாலுக்குத் தள்ளப்படும் என்று அதில் காணப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)  தலைவர் கிறிஸ்டின் லகார்ட், நடவடிக்கை என்றால் நடவடிக்கை, வெறும் பேச்சு அல்ல என்று அறிவித்தார்

இன்னும் உருப்படியாக முக்கூட்டின் (ஐரோப்பிய மத்திய வங்கி- ECB, சர்வதேச நாணய நிதியம்- IMF, ஐரோப்பிய ஆணைக்குழு- European Commission) பிரதிநிதிகள் ஏதென்ஸ் ஓய்வூதியங்கள், ஊதியங்கள், சமூகநலச் செலவுகளில் இன்னும் வெட்டுக்கள் வேண்டும் என்று கோரினர். மொத்தம் இவை 14.5 பில்லியன் யூரோக்கள் என்று உள்ளன. உண்மையில் முக்கூட்டால் வழங்கப்படும் அவசரக்காலக் கடன்கள் என்று அழைக்கப்படுபவை, கிரேக்கத்தினதும் மற்றும் சர்வதேச வங்கிகள், ஊகவணிகர்களுக்கு கொடுக்கத்தான் ஒதுக்கப்படுகின்றன.

ஜேர்மனிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைகளை செயல்படுத்துவதில் மையப் பங்கைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் கிளவுஸ் மாசுச் ஐரோப்பிய ஆணைக்குழுவின் மத்தியாஸ் மோர்ஸ் இருவரும் ஏதென்ஸில் முக்கூட்டுப் பிரதிநிதிகள் மூவரில் இருவர் ஆவர். இவர்கள் ஜேர்மன் சான்ஸ்லர் அலுவலகத்துடன் நேரடிப் பிணைப்புக்களை கொண்டுள்ளனர். பேர்லின் பலமுறையும் முக்கூட்டு முடிவுகளை திருத்த நேரடியாகத் தலையீட்டைச் செய்துள்ளது.

செய்தியாளர் கூட்டத்தில் மேர்க்கெல் கிரேக்கம் வெட்டுக்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதோடு அடிப்படைச் சீர்திருத்தங்கள் என்பவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என்ற ஜேர்மனியின் முக்கூட்டுப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை மீண்டும் கூறினார். இது ஊதியங்களைக் குறைக்கும் புதிய தொழிலாளர் சட்டங்கள், நீண்ட பணி நேரத்தை அறிமுகப்படுத்துதல், குறைந்த இடைவேளைகள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளை நசுக்குதல் என்பவற்றைக்  குறிக்கிறது.

இந்த நடவடிக்கைகள் கிரேக்கத் தொழிலாளர் வர்க்கத்தின் இழப்பில் தங்களை செழிப்பாக ஆக்கிக் கொள்ளுவதற்கு நிறுவனங்களுக்கு உதவும் இலக்கு கொண்டுள்ளவை. கிரேக்கத்தில் மோசமான பணிநிலைமைகள் என்பது ஐரோப்பா முழுவதும் சமூகத் தரங்களை அகற்றுவதற்கு ஒரு நெம்புகோல் போல் பயன்படுத்தப்படும். திங்கள் பிற்பகல் மேர்க்கெல் கிரேக்க, ஜேர்மனிய வணிக வட்டங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து இந்த இலக்கை ஒட்டிய உள்ளார்ந்த திட்டங்களை விவாதித்தார்.

ஏதென்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கிரேக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படும் இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னோடியில்லாத வகையில் சமூகப் பேரழிவைத் தோற்றுவித்துள்ளன. ஊதியங்களும், ஓய்வூதியங்களும் கிட்டத்தட்ட 60% வரை குறைக்கப்பட்டுவிட்டன. வேலையின்மை 24%க்கும் அதிகமாகிவிட்டது; இளைஞர்களிடையே வேலையின்மை 55% என உயர்ந்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் கிரேக்கத்தின் பொருளாதார உற்பத்தி 20% குறைந்துவிட்டது; இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி சமீபத்தில் மேல் நோக்கிய வகையில் 7.1% எனத் திருத்தப்பட்டுள்ளது.

மேர்க்கெலை தொடர்ந்து, கிரேக்கப் பிரதமரும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். நம் இலக்குகளை அதிகரித்தளவில் சாதிக்கிறோம். அவ்வாறு நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்று பிரதம மந்திரி அறிவித்து, இன்னும் பணம் என்று நாங்கள் கேட்கவில்லை, சிறப்புச் சலுகைகளை எதையும் கேட்கவில்லை என்றும் சேர்த்துக் கொண்டார்.

சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட சமூகத் தாக்குதல்கள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுடன் நெருக்கமாக உழைத்த தொடர்ந்த அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டன. கிரேக்க நிதிய உயரடுக்கின் ஆணையின்பேரில், சிக்கன நடவடிக்கைகள் சுமத்தப்பட்டுள்ளன. அவை வறியவர்கள், தொழிலாளர்களை பாதித்துள்ளதுடன், அதே நேரத்தில் பெரும் செல்வந்தர்களுக்கு எத்தகைய பாதிப்பும் இல்லை.

சமீபத்திய வாரங்களில் 2010ன் இறுதியில் இருந்து ஏதென்ஸ் 1991ல் இருந்து தகவல்களைக் கொண்ட USB தண்டுப் பதிவில் தகவல்களை கொண்டிருந்தது, அதில் ஜெனீவாவில் உள்ள HSBC வங்கியில் கணக்கு வைத்திருக்கும் கிரேக்கக் குடிமக்களின் பட்டியல் இருந்தது எனத் தெரியவந்துள்ளது. இப்பட்டியல் வரி ஏமாற்றுவோர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சில மதிப்பீடுகளின்படி கிரேக்க மில்லியனர்கள் கிட்டத்தட்ட 600 பில்லியன் யூரோக்களை ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் சேமித்து வைத்துள்ளனர்இந்நிதி கிரேக்கத்தின் தேசியக் கடனைவிட மிக அதிகம் ஆகும். 

இப்பட்டியலைச் சூழ்ந்துள்ள  அவதூறு கிரேக்க அரசியல் உயரடுக்கு மற்றும் கிரேக்கப் பெரும் செல்வந்தர்களுக்கு இடையே உள்ள நெருக்கமான பிணைப்புக்களை வெளிப்படுத்தியுள்ளது. நிதி அமைச்சரகம் இரண்டு ஆண்டுகளாக இத்தகவல்களைக் கொண்டிருந்தபோதிலும்கூட, வரித்துறையினருக்கு இது தெரியப்படுத்தப்படவில்லை. செய்தித்தாட்கள் இப்பொழுது குறைந்தப்பட்சம் ஆளும் கட்சியில் இருக்கும் 60 அரசியல் வாதிகள் USB பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்று வெளிப்படுத்துகின்றன.

நியூ யோர்க் டைம்ஸ் கருத்துப்படி நெருக்கடி தொடங்கியதில் இருந்து 30 பில்லியன் யூரோக்களை வேறுநாடுகளில் வைத்துள்ள 54,000 கிரேக்கர்களின் பெயர்ப்பட்டியலும் உள்ளது எனத் தெரிகிறது.

தொழிலாளர்களின் இழப்பில் நிதிய உயரடுக்கைச் செல்வச் செழிப்பாக்கும் கொள்கையே மேர்க்கெல் மற்றும் சமரசிற்கு இடையே உள்ள நட்பார்ந்த பேச்சுக்களுக்கு அடிப்படை ஆகும். இக்கொள்கை ஜனநாயக உரிமைகளுடன் இயைந்து இருக்காது. மாறாக ஐரோப்பிய ஆளும் வர்க்கம் பொலிஸ் அரசாங்க நடவடிக்கைகள், சர்வாதிகார ஆட்சி வழிவகை ஆகியவற்றை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

350 கப்பல் துறைத் தொழிலாளர்கள் கடந்த வியாழன் அன்று பாதுகாப்பு அமைச்சரகத்திற்கு வெளியே ஆர்பாட்டம் நடத்தி, தங்கள் ஊதியங்களை வழங்குமாறும் மற்றும் புதிய உற்பத்தி அழைப்பாணைகளையும் கோரியபோது, பொலிசார் அவர்கள் மீது  கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல், தடியடித் தாக்குதல்கள் ஆகியவற்றை நடத்தினர். ஞாயிறன்று பொலிசார் மின்சார குழுத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை கலைத்தனர். அவர்கள் செல்வந்தர்களுக்கு வரி குறைப்புக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். இதில் 18 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

செவ்வாயன்று கார்டியன், பாசிச Chrsi Avgi (Golden Dawn) கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 15 பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்பட்டனர் என்று கூறியுள்ளது. கிரேக்கப் பொலிஸ் மற்றும் பாசிச வன்முறைக் கும்பல்களுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஆவணப்படுத்திய ஏராளமான அறிக்கைகள் வந்துள்ளன.

ஆனால் தொழிலாளர்களின் எதிர்ப்பை முறியடிக்கும் ஆளும் உயரடுக்கின் மிக முக்கியமான கருவி தொழிற்சங்கங்களும் போலி இடது குழுக்களும் ஆகும். இவை தொழிலாளர்களின் சீற்றத்தை ஆபத்தற்ற திசைகளில் திசைதிருப்புவதுடன், ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய நப்பாசைகளையும் வளர்க்கின்றன. இந்த அமைப்புக்கள் இடைவிடாமல் முக்கிய அரசாங்க, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. கடந்த புதன் அன்று நாட்டின்மிகப் பெரிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான  GSEE உடைய தலைமை, ஜனநாயக இடது (DIMAR), உடைய தலைவர், கூட்டணி அரசாங்கத்தின் ஓர் உறுப்பினர் போடின் கௌவேலிஸ் உடன் பேச்சுக்களை நடத்தச் சந்தித்தது.

இதற்கிடையில் திங்களன்று மாற்றீட்டு இடதுக் கூட்டணி சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் சின்டக்மா சதுக்கத்தில் நடந்த எதிர்ப்புக்களில் பங்கு பெற்று, வெட்டுக்களுக்கு முடிவு வேண்டும் என்று கூறினார். அதே நேரத்தில் அவர் இந்த வெட்டுக்களைச் செயல்படுத்தும் நிதிய உயரடுக்கின் முக்கிய கருவியான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவையும் கொடுத்தார். திங்களன்று கார்டியனில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் அவர் ஐரோப்பிய நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும், ஐரோப்பிய ஒன்றியம் அரசியல் ஒன்றயமாகத் தோற்றுவிக்கப்படுவதற்கு அது உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏதென்ஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றிருந்த ஜேர்மனியின் இடது கட்சித் தலைவர் பெர்ன்ட் றீக்ஸிங்கர் சிப்ரஸிற்கு ஆதரவு கொடுத்தார். ஜேர்மனியில் வங்கிகளுக்குப் பிணை வழங்க இடது கட்சி அனுமதித்தது மட்டும் இல்லாமல், பேர்லின், பிராண்டன்பேர்க், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்களில் சமூநலக் குறைப்புக்களையும் செயல்படுத்தியுள்ளது. எனவே றீக்ஸிங்கரின் முக்கிய கோரிக்கை மேர்க்கெல் சிப்ரசைப் பேச்சுக்களுக்காக சந்திக்க வேண்டும் என்பதில் வியப்பு ஏதும் இல்லை.