World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Meeting in defense of Leon Trotsky at German Historians Conference

ஜேர்மன் வரலாற்றாசிரியர்கள் மாநாட்டில் லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து கூட்டம்

By our correspondents
29 September 2012
Back to screen version

மைன்ஸ் பல்கலைக்கழகத்தில் வியாழனன்று கணிசமானோர் பங்கேற்ற கூட்டமொன்றில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தும், போட்ஸ்டாமில் இருக்கும் சமகால வரலாற்று ஆராய்ச்சி மையத்தில் விரிவுரையாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் இருக்கும் பேராசிரியர் மாரியோ கெஸ்லரும் உரை நிகழ்த்தினர். “லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகாத்து என்ற தலைப்பிலான இக்கூட்டம் 49வது ஜேர்மன் வரலாற்றாசிரியர்கள் மாநாட்டின் ஒரு பாகமாக நடந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுமார் 3,000 பேர் பங்கேற்கின்ற இக்கூட்டம் ஐரோப்பாவின் தனிச்சிறப்பான அறிவியல் கூட்டங்களில் மிகப்பெரியதாக அறியப்படுவதாகும். தொழில்ரீதியான வரலாற்றாசிரியர்கள் மற்றும் வரலாறு தொடர்புடைய துறைகளில் இருந்தான அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆர்வமுடைய பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடும் இடமாக உள்ளது.

நோர்த் மற்றும் பேராசிரியர் கெஸ்லர் உரை நிகழ்த்திய இக்கூட்டத்தின் கருப்பொருள் பெரும் ஆர்வத்தைக் கொண்டு வந்திருந்தது. வரலாற்றாசிரியர்களின் மாநாட்டிற்கென வந்திருந்த பிரதிநிதிகள் மற்றும் ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பார்வையாளர்கள்  ஆகியோர் உள்ளிட்ட சுமார் 150 பேர் இந்த உரைகளை செவிமடுக்கும் பொருட்டு  “Mushchel" என்று  அழைக்கப்படுகின்ற அரங்கத்தில்  நிரம்பியிருந்தனர்.

மேஹ்ரிங் புத்தக வெளியீட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியை சாத்தியமாக்கியதற்காக ஜேர்மன் வரலாற்றாசிரியர்களின் கூட்டமைப்பிற்கும் ஜேர்மன் வரலாற்றாசிரியர்களின் மாநாட்டிற்கும்  நன்றி தெரிவித்து வொல்வ்காங் வேபர் கூட்டத்தை ஆரம்பித்தார். பிரெஞ்சுப் புரட்சியால் உந்தப்பட்டு 1793 இல் மைன்ஸ் நகரில் தான் ஜேர்மன் மண்ணில் முதல் முதலாளித்துவ ஜனநாயக குடியரசு நிறுவப்பட்டது என்று மைன்ஸ் நகரின் புரட்சிகர வரலாற்றை வேபர் நினைவுகூர்ந்தார். மைன்ஸ்  குடியரசின் தலைசிறந்த மனிதரான ஜோர்ஜ்  ஃபோர்ஸ்டர் தனது ஆயுள் முழுவதையும் உண்மைக்காக  அர்ப்பணித்தவர் என்று வேபர் கூறினார்.

முதலாவதாக டேவிட் நோர்த் உரை நிகழ்த்தினார். 2010 இல் ஆங்கிலத்தில் வெளியான இவரதுலியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து என்ற புத்தகம் இம்மாநாட்டில் விரிவாக்கப்பட்ட இரண்டாம் ஜேர்மன் பதிப்பாக வெளிபிடப்பட்டது. இது பிரிட்டிஷ் பேராசிரியர்களான இயான் தாட்சர், ஜேஃப்ரி  ஸ்வேயின் மற்றும் ரோபர்ட் சேர்விஸ் ஆகியோர் எழுதிய ட்ரொட்ஸ்கியின்  வாழ்க்கைவரலாற்று நூல்களுக்கு (ஆசிரியர்சோவியத்துக்குப் பிந்தைய வரலாற்றுப்  பொய்மைப்படுத்தல் பள்ளி என்று அழைக்கின்ற ஒன்றின் பகுதியாக இப்படைப்புகள் அமைந்துள்ளன எதிரான ஒரு வாதநூல் ஆகும்.

லியோன் ட்ரொட்ஸ்கி குறித்து ஒரு உலகளாவிய ஆர்வம் மறுமலர்ச்சி கண்டிருப்பதற்கான பிரதிபலிப்பாக, இத்தகையதொரு அபிவிருத்தியை எதிர்ப்பதற்கும் தடம்பிரளச்செய்வதற்கும் விரும்புவோரின் நிலைப்பாட்டில் இருந்து இந்தப் படைப்புகள் எழுதப்பட்டிருந்தன என்பதை நோர்த்  விளக்கினார். அந்த இலக்குடன் அவ்வாசிரியர்கள் எல்லாம் அவதூறுகளிலும், திரிப்புகளிலும் மற்றும் அப்பட்டமான வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்களிலும் இறங்கினர் என்பதை நோர்த்  ஆவணப்படுத்துகிறார்.

நோர்த் பேசுகையில் தனது புத்தகம் ஏற்கனவே ஒரு இரண்டாம் பதிப்பைக் கண்டிருக்கிறது என்கிற உண்மையின் மீதான முக்கியத்துவத்தைக்  குறிப்பிட்டார்.  ”அதிர்ஷ்டவசமாக, லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகாத்து புத்தகம் உயர்ந்த கொள்கை உறுதிப்பாடு கொண்ட ஏராளமான அறிஞர்களைக் கவர்ந்தது என்றார் அவர்.

எனது புத்தகம் குறித்தும் ரோபர்ட் சேர்விஸ் ட்ரொட்ஸ்கி குறித்து எழுதியிருக்கும் வாழ்க்கை வரலாறு புத்தகம் குறித்தும் ஒரு இணைந்த திறனாய்வினை பேராசிரியர் பேர்ட்ராண்ட் பட்டனவ்ட் எழுதி 2011  ஜூன் மாதத்தில் அமெரிக்கன் ஹிஸ்டாரிக்கல் ரிவ்யூ சுற்றிதழில் வெளியானது. இது பெரும் கவனத்தைப் பெற்றது.” அதனைத் தொடர்ந்து, சேர்விஸின் புத்தகம்வரலாற்று எழுத்தை கேலிக்கூத்தாக்குகிறது என்பதால் அதனை Suhrkamp பதிப்பகம் வெளியிடக் கூடாது என்று கோரி 14 புகழ்பெற்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல் விஞ்ஞானிகளின் கையெழுத்துடனான ஒரு கடிதத்தை அனுப்பியதை நோர்த் விளக்கினார்.

பேராசிரியர் கெஸ்லர் உட்பட இந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த அனைவருமேரஷ்யப்  புரட்சியின் தன்மை குறித்தும், 1917 அக்டோபரில் போல்ஷிவிக் தலைமையில் நடந்த எழுச்சி குறித்தும், சோவியத் ஆட்சியின் தன்மை குறித்தும், மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் அரசியல் கருத்துகள்  மற்றும் வரலாற்றுப் பாத்திரம் குறித்தும் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டங்களைக்  கொண்டிருக்கின்றனர் என்றார் நோர்த். லியோன் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைவரலாற்றை நோர்த்தும் கெஸ்லரும் தனித்தனியே எழுதினால் அவை இரண்டுமே மாறுபட்ட படைப்புகளாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் மேலும் கூறினார். “ஆயினும் நாங்கள் இருவருமே   உண்மையான வரலாற்று ஆவணங்களில் இருந்தே எமது பணியை செய்திருந்திருப்போம்.”

லியோன் ட்ரொட்ஸ்கி போன்ற ஒரு சிக்கலான மற்றும் முக்கியமான மனிதரின் வாழ்க்கைவரலாற்றை  எழுத வேண்டுமென்றால் அதற்கு அந்த வரலாற்றாசிரியர் அந்த மனிதரையும் அவர் வாழ்ந்த சகாப்தத்தையும் புரிந்து கொள்வதற்கு அவசியமான நேரத்தை அர்ப்பணிப்பது அவசியமாய்  இருக்கிறது என்பதை நோர்த் வலியுறுத்தினார். புறநிலை அபிவிருத்திகளைக் கையாளுகின்ற பாரியளவிலான ஆவணங்களை அந்த ஆசிரியர் ஆய்வது அவசியமாகிறது. உண்மைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகவோ அல்லது ஒருதலைப்பட்சமாகவோ  தேர்ந்தெடுக்க முடியாது, மாறாக அவை உண்மையுடன் முன்வைக்கப்பட வேண்டும்.

இந்தத் தகுதிவகைகளில் எதையுமே ரோபர்ட் சேர்விஸ் எழுதிய வாழ்க்கை வரலாறு பூர்த்தி செய்யவில்லை என நோர்த் தொடர்ந்து கூறினார். சேர்விஸ் எழுதிய வாழ்க்கைவரலாறுப் புத்தகம் வரலாற்று ஆராய்ச்சியை கேலிக்கூத்தாக்கியிருப்பதை அப்புத்தகத்தின் மீதான தனது சொந்த ஆய்வு  விளங்கப்படுத்தியிருந்தது என்றார் நோர்த். கையெழுத்திட்டிருந்த 14 வரலாற்றாசிரியர்களும் மிகச் சரியாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததைப் போல சேர்விஸ் எழுதிய வாழ்க்கைவரலாறு ஒருவசைமழையாகத் தான் இருந்தது என்றார் அவர்.

சேர்விஸ் எழுதிய 500 பக்க வாழ்க்கைவரலாற்றுப் புத்தகத்தில் வெறும் நான்கு பக்கங்களிலேயே வரலாற்றுப் பொய்மைப்படுத்தலுக்கான ஏராளமான உதாரணங்களை நோர்த் எடுத்துக் காட்டினார். இந்த வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்களின் மிதமிஞ்சிய எண்ணிக்கை என்பதுட்ரொட்ஸ்கி என்கிற உண்மையான வரலாற்று ஆளுமைக்கு ஒரு நேர்மைக்கேடான வசைபாடலை”  உற்பத்தி செய்வதற்கே சேவை செய்தது என்றார் அவர். நவீன உலக கம்யூனிச-விரோதிகளின் அரசியல் தேவைகளுக்கு முழுக்கவும் இணக்கமுடைய ஒருட்ரொட்ஸ்கியைத் தான் வாசகர்  எதிர்கொள்ள நேர்ந்தது என்று நோர்த் கூறினார்.

Neue Zürcher Zeitung நாளிதழில் சேர்விஸின் புத்தகத்தைப் பாதுகாத்து எழுதியிருந்த  வரலாற்றாசிரியர் உல்ரிஷ் ஸிமிட் குறித்தும் நோர்த் பேசினார். ”ஸ்மிட் ஒரு வரலாற்றாசிரியராக அல்லாமல், மாறாக ஒரு குட்டி-முதலாளித்துவ அறநிலைவாதியாக வாதிடுகிறார். இறுதியில், அவர்  நிலைப்பாடு, ’சேர்விஸின் தகவல் பிழைகளை அம்பலப்படுத்துவது என்பது, அறநிலையாக, அவர்  ட்ரொட்ஸ்கியைக் கண்டிப்பதில் இருந்து அவரை விலக்க முடியாது என்பதாய் இருக்கிறது.

நோர்த் தொடர்ந்து கூறினார்: “ஒரு தீவிரமான வரலாற்றாசிரியர் அறவியல்  விடயங்களுக்கு கவனமற்று இருப்பதில்லை. ஆனால் அந்த அறவழிக் கண்டனம் ஒழுங்காய் அமைகிறது என்றால், அது அந்த  விவரிப்பின் தர்க்கத்தில் இருந்தே கட்டாயமாக வெளிவருவதாக இருந்தாலே நம்பிக்கை கொடுக்ககூடியதாக இருக்கும். மாறாக அந்த வரலாற்றாசிரியர் தனதுஅறநிலை அம்சத்தை நிலைநிறுத்துவதற்கு வரலாற்றினை மறைப்பதோ அல்லது பொய்மைப்படுத்துவதோ அவசியம் என்று கருதியதால்  அக்கண்டனம் தோன்றக் கூடாது.”

சேர்விஸ் எழுதிய வாழ்க்கைவரலாற்றில் இருக்கும் பொய்மைப்படுத்தல்களுக்கான காரணம் இது தான்: “ட்ரொட்ஸ்கியை ஒரு வெறுக்கத்தக்க இன்னும் சொன்னால் ஒரு குற்றம்மிக்க அரசியல் மனிதராக  சித்தரிப்பதற்கான சேர்விஸின் முயற்சிகளுக்குக் கைகொடுக்கின்ற விடயங்களை அவரால் வரலாற்று ஆவணங்களில் இருந்து எடுக்க முடியவில்லை. எனவே அவர், தனது நோக்கத்தைச் சாதிப்பதற்கு,  1930களில் ஸ்ராலின் செய்ததைப் போல, திரிபுபடுத்துதல்களிலும், பாதி உண்மைகளிலும் முற்றுமுழுதான பொய்களிலும் இறங்க வேண்டியதாய் இருந்தது.

அடுத்த வார ஆரம்பத்தில் உலக சோசலிச வலைத் தளம் நோர்த்தின் உரையை முழுமையாக  வெளியிடும்.

சேர்விஸ் எழுதிய வாழ்க்கைவரலாற்றின் மீது நோர்த் வைத்திருக்கும் விமர்சனத்துடன் தனது முழு  உடன்பாட்டை அறிவித்து பேராசிரியர் கெஸ்லர் தனது பங்களிப்பைத் தொடங்கினார்.

இத்தகையதொரு புத்தகம் அமெரிக்காவில் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், இங்கிலாந்தில் மெக்மில்லன், மற்றும் மிக சமீபத்தில் ஜேர்மனியில் சுஹெர்காம்ப் ஆகிய மிகப்பெரிய புத்தக வெளியீட்டு  நிலையங்களால் வெளியிடப்பட்டதற்கான காரணம் குறித்தும் கெஸ்லர் பேசினார். மூன்று வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் இப்புத்தகத்தை தான் படித்தபோது, அது இத்தகையதொரு  அரசியல் சர்ச்சையாக மாறும் என்றோ, முதலில் ஆங்கில-சாக்சன் உலகத்திலும் இப்போது ஜேர்மனியிலுமாய் அப்புத்தகத்தைச் சுற்றி இத்தகையதொரு மிகை எதிர்பார்ப்பு உருவாக்கப்படும் என்றோ தன்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்திருக்கவில்லை என்றார் அவர்.

தான் எழுதிய வாழ்க்கை வரலாற்றில் படைப்பின் நாயகன் ட்ரொட்ஸ்கி குறித்தும் அவரது வரலாற்று சகாப்தம் குறித்தும் முக்கியமான விஷயங்களைக் குறித்து  சொல்வதற்குக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள ரோபர்ட் சேர்விஸ் தவறி விட்டார் என்று கெஸ்லர் கூறினார். அதற்குக் காரணம் மிக எளிதானது. சேர்விஸைப் பொறுத்தவரை, ட்ரொட்ஸ்கி ஒரு கம்யூனிச சதியின் பாகமே அன்றி, சமூகப் பிரச்சினைகளுக்கும் போர் மற்றும் அமைதியின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வேண்டி நின்ற, ஒரு காட்டுமிராண்டித்தனமான காலத்தினை முதலாம் உலகப் போர் போன்ற சமூக மாற்றங்களை ஆரம்பித்துவைத்த ஒரு சகாப்தத்தின் பகுதி அல்ல.

சேர்விஸ் திட்டவட்டமாய் கூறியது போல, ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைவரலாறை எழுதுகின்ற  ட்ரொஸ்கிசவாதி அல்லாத முதல் மனிதர் சேர்விஸ் அல்ல என்பதை கெஸ்லர் குறிப்பிட்டார். ட்ரொட்ஸ்கிசவாதிகள் அல்லாத Baruch Knei-Paz போன்ற ஏராளமான பேர் ட்ரொட்ஸ்கி குறித்து  எழுதியிருந்தனர்.

1950களின் ஆரம்ப காலம் முதலாக இங்கிலாந்திலும் மற்றும் அமெரிக்காவிலும், E.H.கார் எழுதிய சோவியத் ரஷ்யாவின் வரலாறு (The History of Soviet Russia), லியோனோர்டு ஷேப்ரியோ எழுதிய  CPSU இன் வரலாறு, மற்றும் அதனையடுத்து வாட்டர் லாக்வர் எழுதிய புத்தகங்கள் போன்ற பல தொகுதி படைப்புகள் வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன. கெஸ்லர் கூறினார்: இந்த ஆசிரியர்கள்  அனைவரும் சேர்விஸ் போலல்லாமல் என்ன புரிந்து கொண்டிருந்தனர் என்றால், “ரஷ்யப் புரட்சியைப் போன்றதொரு அலை போன்றதொரு புரட்சி வருகின்ற போது, ஒருவர் புகாரிடலாம், ஒருவர்  வருந்தலாம், ஒருவர் அதைக் கண்டிக்கவும் கூட செய்யலாம். ஆனால் அத்தகைய ஒரு புரட்சிக்குப்  பின்னால் திட்டவட்டமான சமூகக் காரணங்கள் இருக்கின்றன. சமூகப் பிரச்சினைகளை மனிதாபிமானமான  எந்த வழியிலும் தீர்ப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்களிடம் திறனோ விருப்பமோ இல்லாதிருப்பதில் தான் இந்தக் காரணங்கள் தங்கியிருக்கின்றன என்பதை புரிந்து கொண்டிருந்தனர்.

ரோபர்ட் சேர்விஸ் எழுதியதைப் போன்ற புத்தகங்கள் ஒரு குறுகிய-கால வெற்றியைக் காண முடிகிற  அளவுக்கு புத்தி-ஜீவிக் கலாச்சாரம் அமிழ்ந்து போனது ஏன் என்கிற கேள்வி குறித்தும் கெஸ்லர்  பேசினார். சுக்ராம் பதிப்பகத்தின் நிறுவனர் பீட்டர் சுஹெர்காம்ப் சக்ஸன்ஹெவுசன் கடுங்காவல் முகாமில் உயிர்தப்பியவர் ஆவார். அவராயிருந்தால் ரோபர்ட் சேர்விஸ் எழுதியதைப் போன்றதொரு  புத்தகத்தை வெளியிட மறுத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை என்று கெஸ்லர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி ரொனால்டு ரீகன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருடன் தொடங்கிய ஒரு பிற்போக்குத்தனமான திருப்பம் தான் இந்தக் கலாச்சாரச் சீரழிவுக்குக் காரணம், இப்போதைய கல்வியாளர் தலைமுறையில் பலரும் அந்தக் காலகட்டத்தில்  பயிற்சியளிக்கப்பட்டவர்களாவர் என்றார் கெஸ்லர்.

இந்த உரை வழங்கல்களைத் தொடர்ந்து ஒரு உயிரோட்டமான விவாதம் நடந்தது பார்வையாளர்களிடம் இருந்தான கேள்விகளுக்கு நோர்த் மற்றும் கெஸ்லர் இருவரும் பதிலளித்தனர் படைவலிமை பயன்படுத்தல் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் ட்ரொட்ஸ்கியின் மனோபாவத்தின்  மீது தான் பல கேள்விகளும் மையம் கொண்டிருந்தன.

ஒரு குட்டி-முதலாளித்துவ அறநிலைவாதியின் கோணத்தில் இருந்து தான் வரலாற்றாசிரியர்கள் பலரும் புரட்சி மற்றும் வன்முறை பிரச்சினையை அணுகினர் என்பதை நோர்த் குறிப்பிட்டுக்  காட்டினார். அவர்களது அணுகுமுறை எங்கு கொண்டு செல்கிறது என்றால், “ட்ரொட்ஸ்கி ஏன் ஒரு  புரட்சியாளராக இருந்தார்? அதற்குப் பதில் அவர் ஒரு தாராளவாதியாக இருந்திருக்க வேண்டும்!”  என்கிற தொனியில் முடிகிறது.

இந்தக் கண்ணோட்டம் போல்ஷிவிக்குகள் போராடிய காலகட்டத்தின் யதார்த்தங்களை முற்றிலும்  உதாசீனப்படுத்துவதாய் இருக்கிறது என்றார் நோர்த். உள் நாட்டுப் போருக்கு முன்னதாகக் கூட ரஷ்யா சொர்க்கமாக இருக்கவில்லை. ரஷ்ய சமூகம் 1914க்கு முன்னதாகவே பெரும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது, இந்த நிகழ்போக்கு முதலாம் உலகப் போரினால் இன்னும் மோசமாக்கப்பட்டது.

புரட்சியின் போது, தாங்கள் தோற்றால் என்ன நடக்கும் என்பதை போல்ஷிவிக் கட்சியின் தலைவர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். பாரிஸ் கம்யூன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 20,000 புரட்சிகரத்  தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை அவர்களது நினைவில் அப்போதும் பசுமையாக இருந்து கொண்டிருந்தது.

குட்டி-முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் கண்ணோட்டத்தில், போல்ஷிவிக்குகள் புரட்சியுடன்  விளையாடவில்லை மாறாக அதனை தீவிரமாய் எடுத்துக் கொண்டார்கள் என்ற உண்மையில் தான் போல்ஷிவிக்குகளதுகுற்றங்களும் தங்கியிருக்கிறது. 1973 இல் சிலியில் சல்வடோர் அலெண்டே நடந்து கொண்டதைப் போல போல்ஷிவிக்குகள் நடந்திருப்பார்களேயானால், இதே விமர்சகர்கள் அவர்களைமகத்தான மனிதர்கள் என்று குறிப்பிட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கெஸ்லரும் இதேயொரு வகையிலேயே பதிலளித்தார். ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக்குகள்  வலிமையைப் பயன்படுத்தியதை வரலாற்றுச் சூழலில் இருந்து பிரித்தெடுத்துப் பார்க்க முடியாது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். புரட்சியைத் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போரின் உச்சகட்ட  நேரத்தில் கட்சியிலும் இராணுவத்திலும் ஜனநாயகம் அனுமதிக்கப்படாதிருந்ததற்கும் இது பொருந்துவதாகும்.

போரினாலும் உள்நாட்டு யுத்தத்தாலும் ரஷ்யாவில் நிலவிய பெருந்துயரான நிலைமைகளையும் பஞ்சத்தையும் ஒருவர் மறந்து விடக் கூடாது என கெஸ்லர் கூறினார். அந்தப் பொருளில்எவரொருவரும் போரையும், அதற்கு குறைந்த  உள்நாட்டுப் போரையும், மனிதாபிமானப் பள்ளியாகக் கருதவில்லை என்று ட்ரொட்ஸ்கி எழுதியதை அவர் மேற்கோளிட்டுக் காட்டினார்