WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The
euro crisis and the lessons of the Weimar Republic
யூரோ
நெருக்கடியும் வைய்மார் குடியரசின் படிப்பினைகளும்
Peter
Schwarz
3 October 2012
1930
மற்றும் 1932க்கு இடையில் ஜேர்மன் வைய்மார் குடியரசின் இறுதி ஆண்டுகளில்,
மூலதனம் பறந்தமை மற்றும் உலகப் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கான
பதிலிறுப்பாய் ப்ரூனிங்
(Brüning)
அரசாங்கம் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டம் அதனைப் பின்
தொடர்ந்து வந்த பாரிய வேலைவாய்ப்பின்மை,
நாசிசம் மற்றும் போர் ஆகியவையாக படிவுற்றது. ஆண்டாண்டுகளாய் இது
நன்கறிந்த விடயமாக கருதப்பட்டு வருகிறது,
பள்ளிகளிலும் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆயினும் ஆளும் வர்க்கம்
வரலாற்றில் இருந்து எதனையும் கற்றுக் கொள்ளும் திறனில்லாமல் இருக்கிறது என்பதையே
ஐரோப்பாவில் நடப்பு அபிவிருத்திகள் காட்டுகின்றன.
ப்ரூனிங்
அரசாங்கம் அமல்படுத்திய அவசரகால நடவடிக்கைகளை மிஞ்சிய அதீதமான சிக்கன
நடவடிக்கைகளுக்கு சமீப நாட்களில் கிரேக்க மற்றும் ஸ்பெயின் அரசாங்கங்கள்
உடன்பட்டிருக்கின்றன.
ஆறு
ஆண்டுகளாக கிரீஸ் மந்தநிலையில் இருந்து வருகிறது என்றபோதிலும் கூட மேலதிகமாய் 11.5
டிரில்லியன் யூரோ அளவுக்கான சிக்கன நடவடிக்கையின் இன்னுமொரு சுற்றுக்கு கிரேக்க
அரசாங்கம் ஒப்புக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் சொந்தக் கணக்கீடுகளின் படியே
கூட,
பொருளாதார விளைபொருட்களின் அளவு 2008 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்
25 சதவீதம் தாழும். இது ஒரு மலைக்க வைக்கின்ற வீழ்ச்சியாகும். இந்த வெட்டுகளில்
அநேகமானவை மக்களின் மிக ஏழ்மைவாய்ந்த அடுக்குகளைப் பாதிக்கின்ற வகையில்
ஓய்வூதியங்கள்,
சுகாதாரம் மற்றும் சமூகச் செலவினங்களில் செய்யப்படுகின்றன.
சென்ற
வாரத்தில் ஸ்பெயின் அமைச்சரவை 2013க்கான நிதிநிலையில் மேலதிகமாய் 40 பில்லியன் யூரோ
அளவுக்கு வெட்டியது. சென்ற ஆண்டில் ரஜோய் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட ஐந்து
சிக்கன நடவடிக்கை தொகுப்புகளைச் சேர்ந்த வெட்டுகள் இதனுடன் 127 பில்லியனைச்
சேர்க்கிறது. மொத்தமாய் இந்த வெட்டின் அளவு வருடாந்திர தேசிய வரவு-செலவுத்
திட்டத்தில் கால்வாசித் தொகைக்கு நெருக்கமானதாகும்.
மக்களின்
பரந்த பிரிவினருக்கு,
இந்த நடவடிக்கைகள் அப்பட்டமான ஏழ்மையைத் திணிப்பதாகும். இருப்பினும்,
ஐரோப்பிய ஒன்றியத்தையும்,
எல்லாவற்றுக்கும் மேலாய் ஜேர்மன் அரசாங்கத்தையும் பொறுத்தவரை,
அந்த வறுமையின் எல்லை இன்னும் போதுமான தூரத்திற்குச்
சென்றிருக்கவில்லை. மேலதிக வெட்டுகள் ஒரு சமூகப் பேரழிவை உருவாக்குகின்றன என்ற
நிலையிலும் ஐரோப்பிய ஒன்றியம் - இதில் ஜேர்மனி தான் முன்னணியில் நிற்கிறது -
மேலதிக வெட்டுகளுக்கு நெருக்குகின்றது.
சமூகத்
தாக்குதல்கள் எல்லாம் தெற்கு ஐரோப்பாவின் மிகக் கடன்பட்ட நாடுகளுக்கு மட்டும்
வரம்புபட்டவையாக இல்லை. மேல்மட்டத்தை நோக்கி பிரம்மாண்ட அளவிலான செல்வம்
இடம்பெயர்வது வடக்கிலிருக்கும் செழுமையான நாடுகளில் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாய் பொருளாதார நெருக்கடி வெடித்தது முதலான காலத்தில்,
ஜேர்மனியில்,
சமூகத்தின் ஒரு துருவத்தில் வறுமை புற்றுநோய்போல் பரவிக்
கொண்டிருக்கிற அதேநேரத்தில்,
இன்னொரு துருவத்தில் தனியார் பெருஞ்செல்வம் 1.4 டிரில்லியன்
யூரோவின் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
சென்ற
நூற்றாண்டின் வரலாற்று அனுபவங்களின் வெளிச்சத்தில் பார்த்தால்,
இத்தகையதொரு பாதை முழுமுதல் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்.
இருந்தபோதிலும்,
அதை அத்தனை ஸ்தாபனக் கட்சிகளும் - அவை தங்களை கன்சர்வேடிவ்,
லிபரல்,
பசுமைவாதம்,
சமூக ஜனநாயகம் அல்லது “இடது” என எப்படி அழைத்துக் கொள்கின்ற
நிலையிலும் - ஆதரிக்கின்றன.
ஹெஹார்ட் சுரோடரின்
கீழான ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD),
டோனி பிளேயரின் கீழான பிரிட்டனின் தொழிற்கட்சி,
மற்றும்,
மிக சமீபத்தில்,
ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூவின் கீழான கிரீஸின்
PASOK
மற்றும் ஜோஸ் சப்பாதேரோவின் கீழ் ஸ்பெயினின்
PSOE
போன்ற சமூக ஜனநாயகக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தின் சமூக
நிலைகளையும் மற்றும் அதன் கடந்த காலத்தின் வெற்றிகள் அனைத்தையும் வெற்றிகரமாக
அழித்திருக்கின்றன. சமீபத்தில் பிரான்சிலும் பிரான்சுவா ஹாலண்ட் ஜனாதிபதியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி சோசலிசக் கட்சியின் கீழ் இதேதான் நடந்து
கொண்டிருக்கிறது.
நடப்பு
அபிவிருத்திகளுக்கு ஆழமான புறநிலை வேர்கள் இருப்பதை இதுவொன்றே காட்டி விடுகிறது.
“இதுவரை நிலவிய அத்தனை சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே”
என்று மார்க்ஸ் எழுதியது எத்துணை துல்லியமாக இருக்கிறது. ஆளும் வர்க்கத்தின்
அரசியலை பகுத்தறிவும் உன்னத இலட்சியங்களும் தீர்மானிக்கவில்லை,
மாறாக சமூக நலன்கள் தான் தீர்மானிக்கின்றன.
சமூக
சமரசத்திற்கான கொள்கைக்கு மீண்டும் திரும்புவதை சாத்தியமற்றதாக ஆக்குகின்ற
அடிப்படையான சமூகப் பொருளாதார மாற்றங்கள் கடந்த முப்பதாண்டு காலத்தில்
நடந்தேறியுள்ளன. எந்தச் சட்டகத்திற்குள்ளாக வர்க்கங்களுக்கு இடையிலான சமரசத்தின்
பொருட்டு தொழிற்சங்கங்கள் பேரம் பேசி வந்திருந்ததோ அந்த தேசிய எல்லைகள் மற்றும்
தேசியச் சந்தை என்கிற சட்டகத்தை உற்பத்தியின் உலகமயமாக்கம் கடந்து சென்று
விட்டிருக்கிறது. தேசிய தொழிற்துறைகள் இரக்கமற்ற உலகப் போட்டியை எதிர்கொண்டு,
ஒவ்வொரு தேசிய முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் ”சொந்த” தொழிலாள
வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தள்ளியிருக்கிறது.
1990களின்
பங்குச் சந்தை எழுச்சியின் சமயத்தில்,
நிதித் துறையானது உற்பத்தியின் உண்மையான நிகழ்முறையில் இருந்து
தன்னை பெருமளவில் விடுவித்துக் கொண்டு பெருகிய முறையில் ஒட்டுண்ணித்தனமாய்
வளர்ந்தது. பத்து மில்லியன் கணக்கில் ஆண்டு ஊதியங்களும் போனஸ் தொகைகளும் முப்பது
வருடங்களுக்கு முன்பாக சிந்தித்தும் பார்த்திருக்க முடியாதவை,
ஆனால் இப்போதோ அவை வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இயல்பான
நிர்ணய ஊதியங்களாய் இருக்கின்றன. தணியாத வெறியுடனான ஒரு நிதிப் பிரபுத்துவம்
உருவாகியிருக்கிறது,
இது,
”யூரோவைக் காப்பாற்று”வதான பேரில் தொழிலாள வர்க்கம் கடந்த 65 ஆண்டு
காலத்தில் வென்றிருக்கக் கூடிய சமூக ஆதாயங்கள் அத்தனையின் மீதும் எந்தவிதக்
கட்டுப்பாடும் இன்றி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகளும்
ஊடகங்களும் அதன் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றன.
நிதிப்
பிரபுத்துவத்தின் அதிகாரத்தை முறிக்காமல்,
ஒரு பேரழிவு தடுக்கப்பட முடியாது. ஒரு சமூகப் புரட்சியே தேவையாக
இருக்கிறது. பெரும் வங்கிகளும் பெருநிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஜனநாயகக்
கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்,
ஊக வணிகங்களின் இலாபங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்,
அத்துடன் பெரும் செல்வங்களுக்கு பாரிய வரிவிதித்தல் வேண்டும்.
அரசியலுக்குள் வெகுஜனங்களின் சுயாதீனமான தலையீட்டின் ஊடாய் தொழிலாள வர்க்கத்தை
அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே இத்தகையதொரு தீவிரமான சமூக மாற்றம் சாத்தியமாகும்.
இதற்கான நிலைமைகள் வெகுதுரிதமாக அபிவிருத்தியுற்றுக் கொண்டிருக்கின்றன. கோபம்
அதிகரிப்பது காணக்கூடியதாய் இருக்கிறது. வேலைநிறுத்தங்கள்,
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களின் எண்ணிக்கை (அவற்றை
தனிமைப்படுத்துவதற்கும் அவற்றைக் கழுத்தை நெரிப்பதற்கும் தொழிற்சங்கங்கள் இயன்ற
அனைத்தையும் செய்கின்ற போதிலும்) அதிகரித்துச் செல்வது தெளிவு. நடுத்தர
வர்க்கத்தின் பிரிவுகளிலும் கூட வங்கிகளை நோக்கிய ஆழமான குரோதம் இருப்பதை
கருத்துக் கணிப்புகள் காண்கின்றன.
வேறெதனைக்
காட்டிலும் இத்தகைய அணிதிரளலைக் கண்டே தொழிற்சங்கங்களும் சமூக ஜனநாயகக் கட்சிகளும்
அஞ்சுகின்றன. இந்த அதிகாரத்துவ அமைப்புகள் எல்லாம் உழைக்கும் மக்களின் நலன்களுடனான
எந்தத் தொடர்பினையும் வெகு காலத்திற்கு முன்பே துண்டித்து விட்டன. இவற்றின்
நிர்வாகிகள் எல்லாம் வசதியான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்
என்பதோடு இவர்கள் வங்கிகளோடும்,
பெருநிறுவனங்களோடும் மற்றும் அரசாங்கங்களோடும் ஆயிரம் இழைகளால்
இணைக்கப்பட்டிருக்கின்றனர். சமூகத்தை சோசலிச ரீதியில் உருமாற்றுவதை நிராகரிக்கும்
இவை,
வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதும் முதலாளித்துவத்தைப்
பாதுகாப்பதுமே தமது கடமையாகக் காண்கின்றன.
ஜேர்மனியின்
இடது கட்சி,
பிரான்சின் இடது முன்னணி,
மற்றும் கிரீஸின் மாற்று இடதின் கூட்டணி (SYRIZA)
போன்ற கட்சிகளுக்கும் இது பொருந்தும். இவை முதலாளித்துவத்தின் மீது
வரம்புக்குட்பட்ட விமர்சனங்களை வைப்பதன் மூலமும்,
அதில் சீர்திருத்தத்திற்கான சாத்தியம் உள்ளதான பிரமைகளை
ஊக்குவிப்பதன் மூலமும் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் தீவிரமயப்படலை
மட்டுப்படுத்துவதற்கு முனைகின்றன. அதேசமயத்தில்,
தொழிலாள வர்க்கப் போராட்டங்களை தனிமைப்படுத்துவதிலும் காட்டிக்
கொடுப்பதிலும் அவை தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக வேலை செய்கின்றன.
கட்டுப்பாடானது மற்ற முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து நழுவுகின்ற பட்சத்தில்
காலம்தவறாமல் அரசாங்கத்தில் நுழைவதற்கு இவை தயாரிப்பு செய்கின்றன.
இத்தகைய
“இடது-சாரி” அரசாங்கங்கள் சமூக எதிர்ப்பை மிருகத்தனமாக ஒடுக்குவதன் மூலமாக
முதலாளித்துவத்திற்கு முட்டுக் கொடுப்பதற்கே செயல்படுகின்றன. மேலும் “இடது”
போர்வையில் நடக்கின்ற இத்தகைய வலது-சாரி அரசியலால் உருவாக்கப்படுகின்ற அரசியல்
ஏமாற்றமானது வலதுசாரிப் போக்குகளுக்கு பலனளிப்பதாய் வேலை செய்கிறது என்பதை
பிரான்சில் மரின் லு பென்னின் தேசிய முன்னணிக்குக் கிட்டிய தேர்தல் முடிவுகளும்
ஹங்கேரியில்
Fidesz
மற்றும்
Jobbik
இன் எழுச்சியும் எடுத்துக் காட்டுகின்றன.
ஒரு சர்வதேச
சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுகின்ற தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய
சுயாதீனமான கட்சியைக் கட்டுவதே இந்நாளின் மிக அவசரமான அரசியல் பணியாகும். |