World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US elections conceal preparations for war with Iran

ஈரானுடனான போர்த் தயாரிப்புக்கள் அமெரிக்கத் தேர்தல்களில் மறைக்கப்படுகின்றன

Barry Grey
27 September 2012
Back to screen version

அமெரிக்க ஆளும் வட்டங்களுக்குள் ஈரானுக்கு எதிரான போர்த்திட்டங்கள் மிக முன்னேறிய நிலையில் உள்ளன என்று நன்கு தெரிந்துள்ளபோதிலும் இரு அரசியல் கட்சிகளும் செய்தி ஊடகமும் இந்த உண்மையை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்பற்றதாக்கும் வகையில் மௌனமான சதியை மேற்கொண்டுள்ளன. இதன் நோக்கம், ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு பரந்துபட்ட எதிர்ப்பு உள்ளபோதிலும், போலிக்காரணங்களுடனும் பொய்களுடனும் அமெரிக்க மக்களை மத்திய கிழக்கில் இன்னுமொரு இரத்தம்தோய்ந்த யுத்தத்தினுள் இழுப்பதே.

அவர்கள் பெயரில் தயாரிக்கப்படும் இராணுவத் தகர்ப்பு குறித்து விளக்க மறுப்பதும் மற்றும் தங்கள் ஜனநாய விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க மறுப்பது ஆகியவை தேர்தல்களின் ஜனநாயக விரோத மற்றும் மோசடித்தன்மையைப் பற்றி இதைவிட தெளிவாக காட்டமுடியாது.

கடந்த வாரத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செய்தி ஊடகங்களில் பல விமர்சகர்கள் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா அல்லது இரண்டுமே மிக அண்மையில் ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரித்துள்ளனர். இரு கட்சி உறுப்பினர்கள் அடங்கிய முன்னாள் கொள்கை இயற்றும் அதிகாரிகள், ஓய்வு பெற்ற தளபதிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று பாரசீக வளைகுடா நாட்டின்மீது ஆத்திரமூட்டப்படாத தாக்குதல் நடத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவுகரமான விளைவுகளைக் கோடிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

சில சமீபத்திய கட்டுரைகள் ஈரானுக்கு எதிரான முன்கூட்டிய அரசியல் தாக்குதலை ஆளும் வர்க்கம் நடத்துவது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றன. அதே நேரத்தில் வேறு சிலர் அத்தகைய போர் தேவையானது, தவிர்க்கமுடியாதது என்றும் தெரிவிக்கின்றன. இத்தகைய விமர்சனங்கள் இணைந்து வருவதே போர் பற்றிய விவரமான திட்டங்கள் நடக்கின்றன என்பது குறித்த குறிப்பு ஆகும்.

செவ்வாயன்று ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி ஒபாமா ஈரான் அணுவாயுதத்தைத் தயாரிப்பதைத் தடுப்பதில் நாம் என்ன கண்டிப்பாகச் செய்ய வேண்டுமோ அதை அமெரிக்கா செய்யும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மிற் ரோம்னி இஸ்ரேலுக்கு இன்னும் கூடுதலான அமெரிக்க உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். இஸ்ரேலின் பிரதம மந்திரி பென்யமின் நெத்தன்யாகு ஒபாமாவை விரைவில் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு செயல்படாததற்காகக் குறைகூறியுள்ளார்.

ஆனால் இப்பொது அச்சுறுத்தல்களுக்கு அப்பால் போர் குறித்த முன்னேறிய திட்டங்கள் பற்றிய உண்மை மறைக்கப்படுகிறது. The National Journal  திங்களன்று ஈரானுடனான போர்ப்பாதை என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. கடந்த வெள்ளியன்று வாஷிங்டன் அருகேயுள்ள கிழக்கு பற்றிய கொள்கைக் கூடத்தில் நடந்த மாநாட்டை ஒட்டி ஊக்கம் பெற்றுள்ள இக்கட்டுரை அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரங்கள் குழுவில் கடந்த மார்ச் மாதம் ஒபாமா நிகழ்த்திய உரை பற்றிய முக்கியத்துவத்துடன் இக்கட்டுரை ஆரம்பிக்கிறது. அமெரிக்காவையும் ஈரானையும் ஒரு மோதல் பாதையில் இருத்தி ஒபாமா அறிவித்த ஒரு புதிய கொள்கையில் இருந்து இரு புறத்தாரும் விலகிக்கொள்ளவில்லை என்று கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ளார்.

ஈரானின் தலைவர்கள் என்னிடத்தில் வெறும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு கொள்கை இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அப்பொழுது ஒபாமா அறிவித்திருந்தார். என்னுடைய கொள்கை ஈரான் அணுவாயுதம் பெறுவதைத் தவிர்த்தல் என்பதாகும்... அமெரிக்காவையும் அதன் நலன்களையும் பாதுகாப்பதற்குத் தேவையான வலிமையைப் பயன்படுத்த நான் தயங்கமாட்டேன்.

ஒரு அணுவாயுதம் கொண்ட ஈரானைக் கட்டுப்படுத்துல் என்னும் கொள்கையை ஒபாமா நிராகரித்துள்ளதின் உட்குறிப்புக்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த கட்டுரை ஆசிரியர் பின்வருமாறு எழுதினார்: ஒன்று தெஹ்ரான் அதனிடம் இருப்பதாகக் கூறப்படும் அணுவாயுதத் திட்டத்தை கைவிட வேண்டும் அல்லது ஜனாதிபதி ஒரு முன்கூட்டிய போரை மேற்கொண்டு அதை அழிப்பது என்ற உறுதிமொழியைக் கொடுக்கிறார்.

இதன்பின் அவர் வாஷிங்டன் பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு அமெரிக்கக் கடற்படைத் பிரிவுகளை மிகஅதிகளவில் பாரசீக வளைகுடாவில் நிலைநிறுத்தியுள்ளது என்றும் கடந்த வெள்ளியன்று அமெரிக்க செனட் இருகட்சித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மன்றத்தில் முக்கால் வாசிப்பேர் அதை இணைந்து முன்மொழிந்து, ஈரானைப் பொறுத்தவரை வெறும் கட்டுப்படுத்துதல் என்னும் மூலோபாயம் போதாது என்று நிராகரித்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரை ஒரு இஸ்ரேல் குறித்த வல்லுனரும் வாஷிங்டன் உயர்கல்விக்கூடத்தில் மூத்த உறுப்பினருமான டேவிட் மகோவ்ஸ்கியை மேற்கோளிட்டுள்ளது; அடுத்த நிர்வாகம், ஒபாமா அல்லது ரோம்னி எவர் தலைமை தாங்கினாலும், எண்ணெய் வளமுடைய நாட்டின் மீதான இராணுவத் தாக்குதலைத் தொடங்கப் பெரும் அழுத்தத்தைக் கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் உயர்கல்விக் கூடத்தில் ஆய்வுத்துறை இயக்குனராக இருக்கும் ஈரானிய வல்லுனர் ஒருவரான பாட்ரிக் கிளாசன்  இப்பொழுது நாம் போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் எனக் கூறினார்.

ஜேர்மனிய நாளேடு Süddeutsche Zeitung திங்களன்று ஆபத்தான போர் வார்த்தைஜாலங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. ஒவ்வொருவரும் போர் பற்றிப் பேசுகையில், ஒரு சிறு பொறி பெருந்தீயை ஏற்படுத்தப் போதுமானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய மத்திய கிழக்கில் உள்ள நிலைமையை முதலாம் உலகப் போருக்கு முன் இருந்த நிலையுடன் அக்கட்டுரை ஒப்பிடுகிறது. மேலும், ஒரு ஐரோப்பிய முன்னோக்கில் இருந்து, ஐரோப்பாவில் 1914ல் இருந்ததைப்போல்தான் பலவும் உள்ளன என்றும் எச்சரிக்கிறது. அமெரிக்க ஈரானியக் கப்பல்களுக்கு இடையே பாரசீக வளைகுடாவில் திட்டமிடப்படாத ஒரு நிகழ்வின் மூலம் போர் தொடங்கலாம், அல்லது இஸ்ரேலிய அல்லது ஈரானிய இராணுவம் ஒரு சிறு தவறான கணக்கீட்டின் மூலமும் ஏற்படலாம் அல்லது ஒரு குறிப்பிடத்தக்க பயங்கரவாதத் தாக்குதல் மூலமும் வரலாம் என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் நியூஸின் வாஷிங்டன் ஆசிரியர் ஆல்பெர்ட் ஹன்ட் Newsday இல் ஒரு கட்டுரையை திங்களன்று வெளியிட்டார்; இதன் தலைப்பு ஈரான் மீதான தாக்குதல் குறித்து ஒரு முற்கூட்டிய விவாதம் அமெரிக்கர்களுக்குத் தேவை என உள்ளது. கடைசி இரு ஜனாதிபதிகளும் ஆயுத மோதல்கள் குறித்த செலவுகள் பற்றி வாக்காளர்களுக்கு தவறான தகவல்களைத்தான் கொடுத்துள்ளனர். மற்றும் ஒரு தேர்தலுக்கு இடையே, போர் முரசுகள் மீண்டும் முழங்குகின்றன. இம்முறை இது ஈரான் பற்றியது ஆகும். ரோனால்ட் ரேகன் கூறியதை மீண்டும் உரைத்தால்: மீண்டும் நாம் புறப்படுகிறோம்.

அத்தகைய போரின் சில பேரழிவுதரும் விளைவுகள் எவ்வாறிருக்கலாம் என முன்னாள் அமெரிக்கத் தூதர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அடங்கிய Iran Project என்னும் ஒரு இருகட்சிக்குழு கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக்கப்பட்டிருந்தது.

அக்குழுவினர் எழுதினர்: ஈரான் அணுகுண்டை ஒருபொழுதும் அடையக்கூடாது என்னும் இலக்கை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்கா நீண்டகால அடிப்படையில் வான், கடல் போருக்கான விரிவாக்கத்தைக் கொள்ள வேண்டும்; இது சில ஆண்டுகள் கூட நீடிக்கலாம். இன்னும் பெரும் விழைவுடைய நோக்கத்தை அமெரிக்கா காணமுற்பட்டால், அதாவது ஈரானில் ஆட்சி மாற்றம் அல்லது ஈரான் அப்பிராந்தியத்தில் கொண்டுள்ள செல்வாக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவது என்பவற்றை, பின் நாட்டின் அனைத்துப் பகுதிகள் அல்லது ஒரு பகுதியைக் கூட ஆக்கிரமிக்கத் தேவையான அளவிற்கு இன்னும் கூடுதலாக வலிமை கொள்ள அது உறுதிப்படுத்திக் கொள்ள  வேண்டும். ஈரானின் நிலப்பரப்பு, மக்கட்தொகை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் இம்முன்னோக்கிற்கான இருப்புக்கள், நபர்கள் ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் கொண்ட நிலைப்பாட்டைப் போல் பல மடங்கு கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கில் முழுப் பிராந்தியப் போரில் இருக்கும் அபாயங்களை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பெயரிடப்படாத ஈரானின் நட்பு நாடுகள் (ரஷ்யா, சீனா போன்றவை) ஈரானுக்கு அமெரிக்கத் தாக்குதல்களை எதிர்க்க உதவக்கூடும், இதையொட்டி ஒரு உலகப் பொருளாதாரச் சரிவும் ஏற்படலாம்.

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் அணுவாயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. 2008ம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் தேர்தல் ஆரம்ப பிரச்சாரத்தின்போது ஹில்லாரி கிளின்டன் ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக அச்சுறுத்தினார்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் அமெரிக்க மக்களின் முதுகின் பின்னால் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு தயார்செய்யும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் 1964ம் ஆண்டு தேர்தலுக்கு நிற்கையில், அமெரிக்கத் தலையீட்டை விரிவாக்க அவர் திட்டமிட்டிருந்தபோதிலும் வியட்நாமில் பெரிய போர் தவிர்க்கப்படும் என்ற வாக்குறுதியைக் கொடுத்தார். இழிந்த முறையில் இராணுவ அதிகாரிகளிடம் அவர் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், நீங்கள் உங்கள் போரை நடத்தலாம். என்றார்.

2000ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ஈராக் மீதான தாக்குதல் பற்றிய திட்டங்கள் புஷ் மற்றும் கோரினால் மறைக்கப்பட்டன. 2002 நடு பதவிக்கால தேர்தலினபோது, ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்ட முடிவைக் கொண்டனர். புஷ்ஷின் போர்த்திட்டங்களுக்கு மக்களுடைய பரந்த எதிர்ப்பு உள்ளது என்பதை அறிந்தும், படையெடுப்பிற்கான தயாரிப்புக்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன என்பதை அவர்கள் விவாதிக்கவில்லை.

2008ம் ஆண்டு ஒபாமா ஒரு போர் எதிர்ப்பு வேட்பாளராகக் காட்டிக் கொண்டார். ஆனால் பதவிக்கு வந்த பின் ஈராக் போரைத் தொடர்ந்ததுடன், ஆப்கானிஸ்தான் படுகொலைகளை விரிவாக்கி, அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பையும் நாச வேலைகளையும் பாக்கிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் தொடர்ந்தார்.

ஒபாமாவும் ரோம்னியும் நெத்தன்யாகுவிடம் எத்தகைய இராணுவ நடவடிக்கை பற்றிய உறுதிமொழிகளையும் கொடுத்திருந்தாலும், அவை அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் பொதுமக்கள் கருத்தை இகழ்வுபடுத்தும் வகையில் நடத்தப்பட இருக்கும் குற்றம்சார்ந்த ஆக்கிமிப்பு செயல்கள் ஆகும். Chicago Council for Global Affairs  நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பு அமெரிக்காவில் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு 70% மக்கள் எதிர்ப்பு உள்ளதாக அறிந்துள்ளது. மற்றொரு கருத்துக் கணிப்பு இஸ்ரேலியத் தாக்குதலுக்கு இஸ்ரேலில் 32% ஆதரவுதான் இருப்பதாகக் காட்டுகிறது.

இது அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க அரசியல் அமைப்புமுறை குறித்த  இழிநிலையான தீர்ப்பாகும் இது. நூறயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டபின்னரும், டிரில்லியன் கணக்கான டாலர்கள் செல்வாக்கற்ற போர்களில் அமெரிக்கா எண்ணைய் வளமுடைய மத்திய கிழக்கின் மீது கட்டுப்பாட்டிற்காக  செலவழிக்கப்பட்டாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்னும் புதிய, கொடூரமான போருக்குத்தான் திட்டங்களை தீட்டிவருகிறது.

உங்களின் முதுகிற்கு பின் உங்கள் பெயரில் ஒரு பரந்த குற்றம் தயாரிக்கப்பட்டுவருகிறது  என்று அமெரிக்க மக்கள் எச்சரிக்கப்பட வேண்டும். வெள்கை மாளிகை, பென்டகன் மற்றும் CIA  யில் இருக்கும் போர்க்குற்றவாளிகள் ஆயுதம் களையப்பட்டு பொறுப்புக் கூற நிறுத்தப்பட்டால் ஒழிய, இன்னும் குருதிக் களரி ஏற்படுத்தும் பிராந்தியப் போர்கள் இணைந்து மற்றும் பெரும் உலக அழிவிற்குத்தான் வழிவகுக்கும்.

இதைத் தடுத்து நிறுத்தக்கூடிய சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான். ஆனால் அது ஜனநாயகக் கட்சி, இரு கட்சி முறை இவற்றின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு போருக்கு அடிப்படைக் காரணமான முதலாளித்துவத்தை அகற்றுவதற்கும் சோசலிசத்தை நிறுவுவதற்குமான வெகுஜன அரசியல் போராட்டம் என்னும் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.