World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : பங்களாதேஷ்Bangladeshi garment workers clash with policeபங்களாதேஷ் ஆடை தொழிலாளர்கள் பொலிசாருடன் மோதல்By Sarath Kumara and Wimal Perera20 September 2012Back to screen versionபல்லாயிரக்கணக்கான பங்களாதேஷ் ஆடை தொழிலாளர்கள் டாக்காவுக்கு தெற்கில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நரயன்கஞ் தொழில்துறை பகுதியில் ஞாயிறன்று நடந்த எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசாருடன் மோதிக்கொண்டனர். தொழிலாளர்கள் ஒரு பொலிஸ் அரனுக்கும் மற்றும் நான்கு போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர். அரசாங்கம் ஏழு மணி நேரம் நீடித்த அந்த எதிர்ப்பை ஒடுக்க, பொலிசுடன் சேர்த்து இழிபுகழ்பெற்ற துரித அதிரடி படைப் பிரிவையும் அனுப்பியது. அவர்கள் தொழிலாளர்களை கலைக்க ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தி 50 பேருக்கு காயமேற்படுத்தினர். அடம்ஜீ ஏற்றுமதி செயற்பாட்டு வலயத்தில் (EPZ) ஒரு தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி ஏமாற்றப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற வதந்தி பரவியதை அடுத்தே இந்த எதிர்ப்புக்கள் வெடித்தன. என்ன நடந்தது என்பது தெளிவில்லாவிட்டாலும், இந்த போராட்டத்துக்கு முந்திய 10 நாட்களில் தொழிலாளர்கள் மீது 15 குண்டர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என தொழிலாளர்கள் கூறினர். அவர்களின் பாதுகாப்பு குறைபாடு பற்றி பொலிசுக்கு முறைப்பாடு செய்திருந்தும் பயனில்லை. எபிக் கார்மென்டின் பல நூறு தொழிலாளர்களே ஆர்ப்பாட்டத்தை தொடங்கியிருந்தாலும், அந்த எண்ணிக்கை விரைவில் 100,000 ஆக பெருகியது. பல மணி நேரம் டாக்கா-சிட்டகாங், டாக்கா-சில்ஹெட், டாக்கா-நராயன்கஞ் போன்ற பிரதனா நெடுஞ்சாலைகளை முடக்கிய தொழிலாளர்கள், தாக்குதல்களை தடுக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். எவ்வாறெனினும், ஆர்ப்பாட்டக்காரர்களின் 'கோரிக்கைகள் விரைவில் அதிகரித்தன. அவர்கள் வேலை நேரத்தை குறைப்பது, நிலைமைகளை மேம்படுத்துவது போன்ற கோரிக்கைகளையும் உள்ளடக்கினர். ஆடை தொழிலாளர்கள் மத்தியில் குமுறிக்கொண்டிருக்கும் அதிருப்தியையே திடீரென வெடித்த இந்த எதிர்ப்பு சுட்டிக் காட்டுகிறது. ஜூன் மாதம், நாட்டின் ஆடைகள் ஏற்றுமதியில் 20 சதவீதம் உற்பத்தி செய்யும் அஷுலியா வலயத்தின் தொழிலாளர்கள், 50 சதவீத ஊதிய உயர்வு கோரி ஒரு வாரகால பிரச்சாரத்தில் பங்கேற்றனர். ஆலை உரிமையாளர்கள், அவாமி லீக் தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவுடன், 500,000 தொழிலாளர்களை வெளியில் தள்ளி, வலயத்தின் அனைத்து 350 தொழிற்சாலைகளையும் இழுத்து மூடினர். ஊதிய அதிகரிப்புக்கான கோரிக்கையை நிராகரித்த உரிமையாளர்கள், கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் ஹசீனா வஜீட் உறுதியளித்த பின்னர் ஆலைகளை மீண்டும் திறந்தனர். பங்களாதேஷ் ஆடை ஏற்றுமதியில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கவும் முறையே 57 சதவீதம் 23 சதவிகிதத்தைப் பெற்றுக்கொள்கின்றன. அந்த நாடுகளில் மோசமடைந்துவரும் பொருளாதார பின்னடைவு நிலைமையானது பங்களாதேஷ் தொழிற்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு பணியகத்தின் படி, அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி 2011-12 நிதியாண்டில் 1.7 சதவீதம் குறைந்துள்ளதுடன், ஐரோப்பாவிற்கான ஏற்றுமதி மார்ச் மாதத்தில் இருந்து சரிந்து வருகின்றது. இதன் விளைவு வேலையிழப்பாகும். பங்களாதேஷின் எட்டு ஏற்றுமதி செயற்பாட்டு வலயங்கள் ஜூலை 1 அளவில் தங்கள் மொத்த தொழிலாளர் படையில் 23 சதவீதத்தை குறைத்தது - 1983ல் இந்த வலயங்கள் நிறுவப்பட்டதில் இருந்து, பிரமாண்டமான வேலையிழப்பு இதுவாகும். விலைவாசி உயர்வு தொழிலாளர்களின் உண்மையான வருமானத்தை விழுங்கிக்கொள்கின்றன. ஆண்டு பணவீக்கம் 2010ல் 8.1 சதவீதமாக இருந்து 2011ல் 10.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று உலக வங்கி விவரங்கள் காட்டுகின்றன. தொழிற்சங்கங்களின் படி, தொழிலாளர்களின் வாழ்க்கை செலவுகள் கடந்த 18 மாதங்களில் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் மேலதிக சம்பளம் இன்றி நாளொன்றுக்கு 10 முதல் 16 மணி நேரம் வாரம் ஆறு நாட்கள் வேலை செய்யத் தள்ளப்பட்டுள்ளனர். ஆடைத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 1994 ல் நிறுவப்பட்டது. ஊதிய விகிதங்கள் மட்டும் 2006 மற்றும் 2010 இல், இரண்டு முறை அதிகரிக்கப்பட்டன. அதுவும் கடுமையான போலீஸ் அடக்குமுறையை எதிர்கொண்டு தொழிலாளர்கள் பல வாரங்கள் உறுதியாக முன்னெடுத்த போராட்டங்களின் பின்னரே அதிகரிக்கப்பட்டன. ஆடை தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் அமைதியின்மை, வெளிநாட்டு நிறுவனங்கள் மத்தியில் கவலையை தூண்டியுள்ளது. தாம் உற்பத்திகளை மேற்கொள்ளும் மலிவு உழைப்புத் தளங்களின் பயங்கரமான நிலைமைகள் அம்பலப்படுவதனால் தங்கள் மீதான மதிப்பு பாதிப்படைகின்றன என்று அவர்கள் கவலைகொண்டுள்ளனர். ஆகஸ்ட்டில், எச் அன்ட் எம் என்ற ஸ்வீடிஷ் பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்ல் ஜான் பேர்சன், நாட்டின் சுதந்திர வர்த்தக வலயத்தில் தலைநீட்டிவரும் வெடிக்கும் நிலைமையை சமாளிப்பது எப்படி என்று கலந்துரையாட பிரதமர் ஹசீனாவை சந்தித்தார். எச் அன்ட் எம் நிறுவனமானது பங்களாதேஷ் பூராவும் 250 தொழிற்சாலைகளுடன் வணிகம் செய்கின்றது. ஆகஸ்ட் 23 அன்று, நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்ட, "ஏற்றுமதி பலவான்கள் தொழிலாளர் போராட்டங்களால் வேதனையடைந்துள்ளனர்," என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், இது போன்ற பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது. “கடந்த ஜூலையில், அதிகரித்து வரும் தொழிலாளர் அமைதியின்மையால் விழிப்படைந்த 12 முக்கிய பெரும் வர்த்தக மற்றும் சில்லறை விற்பனை பிரதிநிதிகள், ஊதிய கோரிக்கைகளை தீர்க்க முயற்சிக்குமாறு பங்களாதேஷ் அரசாங்கத்தை நெருக்கினர். இந்தப் பிரேரணையை தொழில் அமைச்சர் நிராகரித்துவிட்டார்,” என அந்தக் கட்டுரை சுட்டிக் காட்டியிருந்தது. அந்தக் கட்டுரை, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், மே மாதம் பங்களாதேஷ் விஜயத்தின் போது, "தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் இஸ்லாம் கொலை வழக்கு சம்பந்தமாகவும் விசாரித்தார்”, என்று சுட்டிக் காட்டியது. தொழிற்சங்க அமைப்பாளர் அமினுல் இஸ்லாம் கடந்த ஏப்பிரலில் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சூழ்நிலைகள் நாட்டின் பாதுகாப்பு இயந்திரத்தின் தலையீட்டை சுட்டிக்காட்டின. வாஷிங்டனுடைய உண்மையான கவலை தொழிலாளர்களின் ஒடுக்குமுறை நிலைமைகள் அல்ல என்பதையும், பெருநிறுவன இலாபங்களுக்கு ஏற்படும் சேதமே என்பதையும் டைம்ஸ் உளறிவிட்டுள்ளது. "தொழிலாளர் உரிமைகள் மீண்டும் அபகரிக்கப்படுகின்றன என்ற உணர்வு” பல்தேசிய நிறுவனங்களை அச்சங்கொள்ளச் செய்யும், என்று கடந்த ஜூன் மாதம் அமெரிக்க தூதர் டான் மொஸேனா பங்களாதேஷ் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், என்று அது விளக்கியது. “இத்தகைய அபிவிருத்திகள் அமெரிக்காவில் பங்களாதேஷ் உற்பத்திகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய ஒரு பெரும் புயலுடன் ஒன்று சேரக்கூடும்," என்று அவர் கூறினார். ஆடை தொழிலாளர்களுக்கு கொடுக்கும் எந்தவொரு சலுகையும், நாட்டின் "சர்வதேச போட்டித்தன்மையை" கீழறுக்கும் என்ற பீதியிலேயே ஹசீனா அரசு, இந்த பரிந்துரைகளை நிராகரித்தது. பங்களாதேஷ் ஏற்றுமதியில் ஆடை உற்பத்தி 80 சதவீதத்தைக் கொண்டுள்ளதோடு ஜூலை 1 ம் தேதி தொடங்கிய நிதி ஆண்டில் ஏற்றுமதியை 18 பில்லியன் டொலரில் இருந்து 28 பில்லியன் டொலர்வரை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்களின் அமைதியின்மை காரணமாக, "பங்களாதேஷ் தலைவர்கள் தொழிற்சாலைகள் கொந்தளிக்காமல் இருக்க அரச பாதுகாப்பு கருவிகளை நிலை நிறுத்தி வைத்துள்ளனர். ஒரு உயர் மட்ட அரசாங்க குழு ஆடை துறையை கண்காணித்து வருவதோடு இராணுவம், பொலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையில் இருந்தும் உயர்மட்ட அதிகாரிகளை அந்தக் குழு உள்ளடக்கிக்கொண்டுள்ளது. பல தொழில்துறை பகுதிகளில் புதிய சிறப்பு பொலீஸ் படை ரோந்து செய்கின்றது. தொழிலாளர் அமைப்பாளர்கள் மீது சில உள்நாட்டு உளவுப் பிரிவுகள் ஒரு கண் வைத்துள்ளன,” என டைம்ஸ் விளக்கியுள்ளது. தங்களது உறுதிப்பாட்டை மற்றும் போர்க்குணத்தை வெளிப்படுத்தியுள்ள, முக்கியமாக கிராமப்புற பகுதிகளில் இருந்துவந்த இளம் பெண்களான, நாட்டின் 3.5 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தால், இந்த பொலிஸ்-அரச வழிமுறைகளால் அதை கட்டுப்படுத்த முடியாது என்ற அச்சத்தையே கிளின்டன் மற்றும் அமெரிக்க தூதர் மொஸேனாவின் கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன. ஊதியங்கள் மற்றும் நிலைமைகளை குறைந்தபட்சமேனும் மேம்படுத்த விடுக்கப்படும் அழைப்புக்கள் என்பன, ஆடை தொழிலாளர்களின் போராட்டங்களை மேலும் ஒடுக்க தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) இயலுமையை வலுப்படுத்துவதற்கான முயற்சியாகும். அமெரிக்க ஏ.எஃப்.எல்.-சி.ஐ.ஓ. தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த செயல்பாட்டை முன்னெடுக்க டாக்காவில் உள்ள ஒருமைப்பாடு மையம் போன்ற பல பங்களாதேஷ் தொழிலாளர் அமைப்புக்களுடன் இயங்குகின்றது. பங்களாதேஷ் தொழிற்சங்கங்கள், பெரும் வணிகர்களின் மற்றும் அரசாங்கத்தின் நலன்களுக்கு சேவையாற்றுவதில் இழிபுகழ் பெற்றவையாகும். ஜூன் மாத போராட்டங்களின் போது, ஆடைத் தொழிலாளர்கள் தொழிற்சங்க மையத்தின் (GWTUC) பொதுச் செயலாளர் காஸி ருஹுல் அமின், “ஒருவருக்கொருவர் எதிரிகள் போல் நடந்துகொள்ள வேண்டாம்,” என முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் வலியுறுத்தினார். இந்த தொழிற்சங்க மையம், கடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் ஹசீனாவின் அவாமி லீக்குக்கு ஆதரவளித்த, ஸ்ராலினிச வங்காள கம்யூனிஸ்ட் கட்சி (பி.சி.பீ.) உடன் சம்பந்தப்பட்டதாகும். ஆடை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை நிலைமைகள் பங்களாதேசுக்கு மட்டும் உரிய தனிப்பட்ட பிரச்சினை அல்ல. மாறாக ஆது ஆசியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகள் முழுவதிலும் காணப்படும் பிரச்சினையாகும். மோசமடைந்து வரும் பூகோள பொருளாதார நெருக்கடி, சந்தைகளுக்கான போட்டியைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், தொழிலாளர் செலவுகளை மேலும் குறைப்பதற்கான அழுத்தத்தையும் உக்கிரமாக்கியுள்ளது. இந்த கொடூரமான சுரண்டலுக்கு முடிவு கட்ட ஒரே வழி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம், ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் இலாப முறைமையை தூக்கி வீசுவதேயாகும். |
|