World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

For a European-wide struggle to defend auto jobs

வாகன உற்பத்தித் துறை தொழில்களை பாதுகாக்கும் பொருட்டு ஐரோப்பிய அளவிலான ஒரு போராட்டத்திற்காக

Statement of the Partei für Soziale Gleichheit (Germany) and Socialist Equality Party (Britain)
19 November 2012
Back to screen version

ஐரோப்பிய வாகன உற்பத்தித் துறை ஒரு முழு அழிவுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. உற்பத்தித் திறன் குறைந்தபட்சம் 5 மில்லியன் யூனிட்டுகளாகக் குறைக்கப்பட்டாக வேண்டும் என்று இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் பொருள் 20 இயந்திர பாகங்களை ஒன்றிணைக்கும் ஆலைகள் (assembly plants), 10 இயந்திர உற்பத்தி ஆலைகள் (engine plants), 10 இணைப்பு ஆலைகள்(transmission plants)மற்றும் 30 முத்திரை பதிப்பு ஆலைகள்(stamping plants)மூடப்பட்டு அதன்விளைவாக 115,000 வேலைகள் அழிக்கப்படுவது என்பதாகும் என்று அமெரிக்கத் தொழிற்துறை வலைத்தளமான autoline.tv தெரிவிக்கிறது.

சென்ற வாரத்தில் அறிவிக்கப்பட்ட வேலை வெட்டுகள்: PSA Peugeot Citroën இல் 8,000; ஃபோர்டு ஆலையில் 6,000 மற்றும் ஓப்பல் நிறுவனத்தில் 2,600. குறைந்தபட்சம் இதே அளவான எண்ணிக்கையில் விநியோகச் சங்கிலியிலும் வேலை வெட்டுகள் இருக்கும். BMW போன்று Daimler போன்று உயர்தர பிராண்டுகள் என்று கருதப்படுகின்ற நிறுவனங்களும் இதேமுறையில் பில்லியன்கணக்கில் சேமிப்பதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. பயன்பாட்டு வாகனத் துறையில்  Fiat இன் துணைநிறுவனமான Iveco ஐந்து ஐரோப்பிய ஆலைகளை மூடவிருக்கிறது. MAN சுமார் 15,000 தொழிலாளர்களை நான்கு வாரங்களுக்கு வீட்டுக்கு அனுப்பி விட்டிருக்கிறது; அத்துடன் ஆண்டின் இறுதியில் இன்னும் குறைந்த நேரத்திற்கு வேலையளிப்பதற்கும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆலை மூடல்களும், வேலை-நேரக் குறைப்புகளும் மற்றும் ஊதிய வெட்டுகளும் மிகைதிறன் என்பதாகக் கூறப்படுகின்றதைக் குறைத்து ஐரோப்பிய வாகன உற்பத்தித் துறையை மீண்டும் போட்டித் திறன் மிகுந்ததாக்குவதற்கான ஒரு அத்தியாவசிய வழிவகையாக சித்தரிக்கப்படுகின்றன தொழிற்சங்கங்கள் - IG Metall, ABVV-Metaal, CGT மற்றும் TUC உள்ளிட்டவை - இதனை ஏற்றுக் கொண்டு சலுகைகள் மட்டுமேவேலைகளைக் காப்பாற்றுவதற்கு ஒரே வழி எனக் கூறுகின்றன

உண்மையில், முதலாளித்துவ அமைப்புமுறையின் பெரு மந்தநிலை மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான பொறிவுக்கு வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள்  விலை கொடுக்கத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். போருக்குப் பிந்தைய காலத்தில் தொழிலாள வர்க்கத்தால் வெற்றி கொள்ளப்பட்ட சமூக தேட்டங்கள் அத்தனையையும் தியாகம் செய்வதன் மூலமாக தொழிலாளர்களை இந்த நெருக்கடிக்கான விலையைக் கொடுக்கும்படி செய்ய வேண்டும் என்று வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள்(ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற பெருநிறுவனக் கட்டுப்பாட்டிலமைந்த அரசாங்கங்களின் ஆதரவுடன்)வலியுறுத்துகின்றன.

இந்தத் தாக்குதலுக்கு எதிராக தொழிற்சங்கங்களின் தேசியவாத மற்றும் முதலாளித்துவ ஆதரவு வேலைத்திட்டத்தைக் கொண்டு போராடுவதென்பது சாத்தியமில்லாததாகும். 1991 இல் சோவியத் ஒன்றியம் பொறிந்தது முதலாக, கிழக்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் மற்ற பிற ஆசிய நாடுகளிலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வறுமை ஊதியங்கள் உலகெங்கும் ஊதியங்களைக் குறைப்பதற்காய் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. 2008 இன் சர்வதேச நிதி நெருக்கடியை இந்தத் தாக்குதல்களின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கென உலகளாவிய பெருநிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் ஒபாமா நிர்வாகம் நிர்ப்பந்த திவால்நிலையையும் வாகனத் துறை மறுசீரமைப்பையும், பத்தாயிரக்கணக்கில் வேலைகளை அழிப்பதற்கும், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஓய்வூதியப் பாதுகாப்பை அழிப்பதற்கும் புதிதாக பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியத்தை பாதியாகக் குறைப்பதற்கும் பயன்படுத்தியது. இப்போது ஐரோப்பிய தொழிலாளர்களும் அதே நிலைக்கு முகம் கொடுத்து நிற்கின்றனர்.

வாகனத் துறையின் அழிவென்பது கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் பிற நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களின் மீது மிருகத்தனமான குறைப்பை நடத்துகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தால் உத்தரவிடப்படுகின்ற சிக்கன நடவடிக்கைகளுடன் பிரிக்கவியலாமல் தொடர்புபட்டதாகும். ஒவ்வொரு நாட்டிலும் விளைவு ஒன்றுதான்: தொழிலாளர்களின் வருவாய் பலவந்தமாய் கீழிறக்கப்படுகிறது, சமூக நல உதவிகள் அழிக்கப்படுகின்றன, வேலைவாய்ப்பற்றவர்களின் ஒரு படை உருவாக்கப்படுகிறது, அதேசமயத்தில் பங்குச் சந்தைகள் அதிகரிக்கின்றன, பெருஞ்செல்வந்தர்களின் வங்கிக் கணக்குகள் பெருக்கின்றன அத்துடன் மேலாளர்களின் வருவாய்கள் வெடிப்பாய் அதிகரிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கட்டளைகள் வாகனத் தயாரிப்புத் துறையின் நெருக்கடி ஆழமடைய நேரடிப் பங்களிப்பு செய்திருக்கின்றன. சிக்கன நடவடிக்கைகளால் மக்களின் பெரும்பகுதியினருக்கு கார் வைத்திருப்பது என்பது இனியும் இயலாது என்று ஆகி விட்டது. புதிய வாகனப்பதிவுகளின் எண்ணிக்கை ஸ்பெயினில் ஒரேவருடத்தில் 37 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது, இத்தாலியில் 26 சதவீதமும் பிரான்சில் 18 சதவீதமும் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

இந்த நிலைமைகளின் கீழ், முதலாளித்துவத்தை ஒழிப்பதையும் ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் ஒன்றை உருவாக்குவதையும் தனது இலக்காக அமைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் உள்ளடக்கத்திற்குள்ளாக மட்டுமே வாகனத் தயாரிப்புத் துறையில் வேலைகளும் ஊதியங்களும் பாதுகாக்கப்பட முடியும்.

ஆலை மூடல்கள் மற்றும் ஊதிய வெட்டுகள் அனைத்தும் எதிர்க்கப்பட வேண்டும். வேலைகளையும் சமூக உரிமைகளையும் பாதுகாப்பதென்பது பாதிக்கப்பட்ட ஆலைகளின்போட்டித்திறன் நிலைக்கோ அல்லது நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைக்கோ கீழ்ப்படியச் செய்யப்பட முடியாது. நன்கு ஊதியமளிக்கப்படுகின்ற ஒரு வேலை என்பது தொழிலாள வர்க்கம் அத்தனை சூழல்களின் கீழும் கட்டாயம் பாதுகாக்க அவசியமாய் இருக்கின்ற ஒரு விலக்கவியலாத உரிமை ஆகும்.

வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் - மற்ற பெரும் பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெரும் செல்வங்கள் போலவே - சமூக உடைமையாகவும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழும் வைக்கப்பட்டாக வேண்டும். இந்த அடிப்படையில் பொருளாதார வாழ்க்கையானது ஒரு உயர்ந்த அடித்தளத்தின் மீது - இது இலாபத்தைச் சுரண்டுகின்ற பில்லியனர்கள், வங்கிகள் மற்றும் ஊகவணிகர்களுக்கு சேவை செய்வதைக் காட்டிலும் ஒட்டுமொத்தமாக உழைக்கும் மக்களின் தேவைகளுக்காய் சேவை செய்யும் - மறுஒழுங்கு செய்யப்படுவதற்கு இயலும்

இத்தகையதொரு வேலைத்திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரளல் அவசியமாக இருக்கிறது. ஸ்தாபகக் கட்சிகள், அவை ஓரளவுக்குஇடது என்றாலும் சரி அல்லதுவலது என்றாலும் சரி, அனைத்துமே இதைத் திட்டவட்டமாய் நிராகரிக்கின்றன. இவை அனைத்தும் முதலாளித்துவ தனியார் உடைமையையும் சமூக வெட்டுகளையும் பாதுகாக்கின்றன. வாகனத் துறை தொழிலாளர்கள் ஒரு சிறப்பான பொறுப்புக்கு முகம் கொடுக்கின்றனர். அவர்கள் தமது வேலைகளையும் சமூக உரிமைகளையும் பாதுகாப்பதென்பது ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலை நோக்கிய ஒரு முக்கியமான அடியெடுப்பாகும்

வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள், தனித்தனியான ஆலைகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து ஐக்கியப்பட வேண்டும். வாகன உற்பத்தித் துறையைப் போல உலகளவில் ஒழுங்கமைக்கப்பட்ட வேறொரு துறையைக் காண்பது கடினம். ஜெனரல் மோட்டார்ஸ், வோல்க்ஸ்வேகன், ஃபியட்-கிறைஸ்லர், ஃபோர்டு அல்லது டொயோட்டொ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உலகெங்குக்குமான திட்டங்களை மேற்கொள்கின்றன, உற்பத்தி செய்கின்றன. இவை ஒரு நாட்டின் தொழிலாளர்களுக்கு எதிராக இன்னொரு நாட்டின் தொழிலாளர்களை இரக்கமின்றி முன்நிறுத்துகின்றன.

இத்தகையதொரு போராட்டத்தின் வழியில் மிகப் பெரும் முட்டுக்கட்டைகளாய் நிற்பது தொழிற்சங்கங்களும் அவற்றை ஆதரிக்கின்ற அமைப்புகளுமே ஆகும். தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புகள் அல்ல, மாறாக நிர்வாகத்துடன் நெருக்கமாய் ஒத்துழைத்து தொழிலாள வர்க்கத்தின் அனைத்து எதிர்ப்புகளையும் கழுத்தை நெரிக்கின்ற ஒரு சலுகைபடைத்த அதிகாரத்துவ எந்திரமாகும். அவை அவ்வப்போது வேலைநிறுத்தங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கின்ற சமயங்களில், அவை வேகத்தை வடியச் செய்வதற்கும் பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தின் அபிவிருத்தியை தடுப்பதற்குமாகவே அமைகின்றன.

அமெரிக்காவில் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களின் - நெடுங்காலமாய் அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெற்று வந்திருக்கக் கூடிய தொழிலாளர்கள் இவர்கள் - மீது ஒபாமாவின் வரலாற்றுத் தாக்குதலில் ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கம்(UAW)முக்கியமான பாத்திரத்தை ஆற்றியது. வறுமை ஊதியங்களையும், அதிக வேலைவேகத்தையும் மற்றும் கொத்தடிமை நிலைமைகளையும் திணிக்க ஒத்துழைத்ததற்கு கைம்மாறாக, UAWக்கு பில்லியன் கணக்கில் நிறுவனப் பங்குகள் பரிசளிக்கப்பட்டது. தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சந்தாவுக்கு சம்பந்தமில்லாத ஒரு பெரும் வருவாயை இது உறுதி செய்து விடுகிறது. வாகனத் தொழிலாளர்களின் மீதான சுரண்டல் அதிகரிப்பதுடன் சேர்ந்து இவ்வருவாயும் இவர்களுக்கு அதிகரிக்கிறது. UAW தலைவரான பாப் கிங் இப்போது ஐரோப்பாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார், இங்கு அவர் அதே நிலைமைகளைத் திணிப்பதற்காக IG Metall மற்றும் CGT உடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்.

ஐரோப்பாவில், எல்லாவற்றுக்கும் மேல் ஜேர்மனியில், தொழிற்சங்கங்களும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களும் இடைத் தரகரின் பாத்திரத்தை ஆற்றுகின்றன. இவை நிறுவனத்தின் கண்காணிப்பு குழுக்கள் அனைத்திலும் அமர்ந்து கொண்டு அத்தனை முக்கிய முடிவுகளிலும் பங்கெடுத்துக் கொள்கின்றன. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், “சமூகச் சந்தை பொருளாதாரத்தின் சட்டகத்திற்குள்ளாக, இவற்றால் சலுகைகளையும் சமரசங்களையும் பேரம் பேசிக் கொள்ள முடிந்தது. இப்போது ஆலை மூடல்களுக்காகக் குறிவைக்கப்படுகின்ற தொழிற்துறைப் பகுதிகள் பலவற்றிலும், 1960களில் இரும்பாலைகள் மற்றும் சுரங்கங்களின் மூடலுக்கு எதிரான வெடிப்பு மிகுந்த போராட்டங்களை தடுக்கும் பொருட்டே வாகனத் தயாரிப்பு ஆலைகள் கட்டப்பட்டன.

பூகோளயமாக்கம் மற்றும் முதலாளித்துவத்தின் ஒரு சர்வதேச நெருக்கடியின் நிலைமைகளின் கீழ் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கமானது தனது அமெரிக்க சகாக்களைப் போன்றே சமூக எதிர்ப்புரட்சி என்கின்ற அதே உத்தியையே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. இந்த மிருகத்தனமான நிலைமைகளை திணிக்கின்ற ஒரு தொழிலாளர் போலிஸ் படையை போன்று ஐரோப்பிய தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன. கடந்த இரண்டு தசாப்தங்களில், தொழிற்சங்கங்களின் கையொப்பம் இல்லாமல் ஒரு ஊதிய வெட்டோ, வேலைநீக்கமோ அல்லது ஆலை மூடலோ ஐரோப்பிய தொழிற்துறையில் நடைபெற்றதில்லை. தொழிலாளர்கள் எதிர்க்க முனைந்தால் அவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார்கள் அல்லது வேலைநீக்கம் செய்யப்படுவதில் முதலாவதாய் இருப்பார்கள்.

தொழிற்சங்கங்கள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் மற்றும் ஐரோப்பிய மட்டத்திலும் நிறுவன நிர்வாகத்துடன் ஒத்துழைத்து செயல்படுகின்றன. அதேநேரத்தில் தொழிற்சாலை மட்டத்தில் அவை ஓரிடத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை இன்னொரு இடத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்துகின்றன. வேலைகளை வெட்டுவதன் மூலமும் ஊதிய அதிகரிப்பு வாக்குறுதிகளின் மூலமும் தான் ஆலையின் போட்டித்திறன் மேம்படுத்தப்பட்டு ஆலை பாதுகாக்கப்பட முடியும் என்று அவை மீண்டும் மீண்டும் கூறுகின்றன. இறுதியில் அந்த ஆலை முற்றிலுமாய் மூடப்படுகின்ற வரையிலும் கூட அவை இதனையே கூறுகின்றன. Fiat Termini Imerese இல், Opel Antwerp இல், Ford Gent இல், மற்றும் Opel Bochum இல் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் இந்த உத்தியின் மிக சமீபத்திய பலிகடாக்களில் சிலர் மட்டுமே.  

தொழிற்சங்கங்களுக்கு அவற்றின் சேவைக்காக செழிப்பான வருவாய்களும் ஏராளமான சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. IG Metall தலைவரான Berthold Huber போனஸ் தொகை சேர்க்காமலேயே, அடிப்படை வருவாயாக 160,000 யூரோக்களை பெறுகிறார். வேலைக் குழுக்களின் தலைவர்களான Wolfgang Schäfer-Klug (ஓப்பல்) மற்றும் Bernd Osterloh (வோல்க்ஸ்வாகன்) ஆகியோரும் இதேபோன்ற வருமானங்களைப் பெறுகின்றனர். பல வருடங்களாக, வோல்க்ஸ்வாகன் மில்லியன் கணக்கில் பராமரித்து வருகின்ற ஒரு சிறப்பு கவனிப்பு நிதி (slush fund) தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினர்களின் உள்ளங்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

சலுகை படைத்த ஊழலடைந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களிடம் இருந்து முறித்துக் கொள்வதென்பது வாகன உற்பத்தித் துறையில் வேலைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்நிபந்தனை ஆகும். அவ்வகையில், சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைக் குழுக்கள் உலகெங்கும் இருக்கும் பிற ஆலைகள் மற்றும் தொழிலாளர்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும். கடந்த சில வருடங்களில் சீனா, இந்தியா, அமெரிக்கா, மற்றும் பல பிற ஐரோப்பிய இடங்களில் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டங்களைக் கண்டுள்ளோம், இவர்கள் அனைவருமே ஒரே நிறுவனங்களால் ஒரேவிதமான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

நிறுவனத்தின் கணக்குவழக்குகள் ஆய்வுக்காய் திறக்கப்படுவதையும் தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான இரகசியப் பேச்சுவார்த்தைகளும் வெளிவராத தகவல் பரிவர்த்தனைகளும் பகிரங்கமாக்கப்படுவதையும் நடவடிக்கைக் குழுக்கள் உறுதி செய்ய வேண்டும். வேலைகளையும் ஊதியங்களையும் பாதுகாப்பதற்கு வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போர்க்குணமிக்க நடவடிக்கைகளுக்கு அவை தயாரிப்பு செய்ய வேண்டும். மூடல் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்ற அனைத்து ஆலைகள் மற்றும் துறைகளின் உள்ளிருப்புக்கு ஏற்பாடு செய்து, ஒட்டுமொத்த பிராந்தியங்களும் மற்றும் மக்களின் பெரும் பகுதியினரும் தமது வாழ்வாதாரத்திற்காக சார்ந்திருக்கக் கூடிய உற்பத்தி வசதிகள் மூடப்படுவதை அவை தடுத்து நிறுத்த வேண்டும்.

இத்தகையதொரு அணிதிரள்வுதான் தான் பெரும் பெருநிறுவனங்களையும் வங்கிகளையும் தேசியமயமாக்கி அவற்றை ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தின் சட்டகத்திற்குள்ளாக, ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கக் கூடிய ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தில் முதல் அடியெடுப்பாக இருக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய, சர்வதேசிய மற்றும் புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதென்பதே இத்தகையதொரு சோசலிச முன்னோக்கினை எட்டுவதற்கான மிக முக்கியமான நிபந்தனை ஆகும்.

மக்களின் மிகப் பரந்த பெரும்பான்மையினரின் நலன்களைப் பாதுகாப்பது எதனையும் ஸ்தாபகக் கட்சிகள் வெகு காலத்திற்கு முன்பே கைவிட்டு விட்டன. சமூக நலன்களையும் உரிமைகளையும் அழிப்பதில் சமுக ஜனநாயகக் கட்சிகளும் தொழிற் கட்சிகளும் கன்சர்வேடிவ்கள் மற்றும் லிபரல்களுடன் போட்டி போடுகின்றன. ஜேர்மன் இடது கட்சியும் ஒத்த அமைப்புகளும் அவற்றின் மறைப்பாக சேவை செய்கின்றன.

தொழிலாள வர்க்கம் இந்த அரசியல் முன்னெடுப்பை பற்றிக் கொள்ளத் தவறுமானால், இக்கண்டம் மீண்டும் காட்டுமிராண்டித்தனம் மற்றும் போரின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் நிலை அமைந்துள்ளது. முதலாளித்துவ சமூகத்தின் நெருக்கடியும் சிதைவும் மிக முன்னேறிய நிலையில் இருக்கிறது. ஆளும் வர்க்கமானது மக்களின் மீதான அதன் தாக்குதல்களைத் திணிப்பதற்கு பெருகியமுறையில் எதேச்சாதிகார வழிமுறைகளில் இறங்கியிருக்கிறது. ஹங்கேரியில் ஜோபிக், பிரான்சில் தேசிய முன்னணி மற்றும் கிரீஸில் Chrysi Avgi (பொன் விடியல்) போன்ற வலதுசாரி, இனவாத மற்றும் வெளிப்படையான பாசிச அமைப்புகள் அரசினால் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதோடு விரக்தியடைந்த சமூக அடுக்குகளிடம் இருந்து அவை ஆதரவையும் காண்கின்றன

வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் அனைவருக்கும் நாங்கள் விண்ணப்பிக்கிறோம்: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அன்றாட அங்கமான உலக சோசலிச வலைத் தளத்தை வாசியுங்கள். ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளுங்கள். நடவடிக்கைக் குழுக்கள் உருவாக்குவதிலும் சர்வதேசத் தொடர்புகளை உருவாக்குவதிலும் நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம். சோசலிச சமத்துவக் கட்சி/Partei für Soziale Gleichheit இல் இணைந்து தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு உதவுங்கள்.