World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

China’s new leadership—a regime of crisis

சீனாவின் புதிய தலைமை – ஒரு நெருக்கடியின் ஆட்சி

John Chan
19 November 2012
Back to screen version

கடந்த வாரம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) 18வது தேசிய காங்கிரஸினால் பதவியிருத்தப்பட்ட தலைமை ஆழ்ந்த நெருக்கடி உள்ளதாகத்தான் இருக்கும். உலக முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியான நிலைமுறிவிற்கு மத்தியிலும் மற்றும் ஆசியாவிலும் சர்வதேசரீதியாகவும் சீனாவின் எழுச்சியை ஒரு போட்டியாளானாக விடாமல் தடுக்க அமெரிக்கா இராஜதந்திர, மூலோபாயத் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கையில் சீனாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வகையில் மெதுவாக வளர்ச்சியடைகின்றது.

பதவியேற்கவிருக்கும் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் மற்றும் ஏழு நபர் அடங்கிய நிரந்தர அரசியல் குழு ஆகியவை நாட்டின் 1.3 பில்லியன் மக்களின் முதுகின் பின்னேதான் முற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதியது அல்ல. “ஐந்தாம் தலைமுறை” தலைவர்கள் 1949 புரட்சி எழுச்சிகள் மற்றும் அத்துடன் இணைந்த சமூக வெற்றிகளுடன் எந்த தொடர்பையும் கோர முடியாது.

1970களில் ஆரம்பிக்கப்பட்ட முதலாளித்துவ மறுபுனருத்தானத்தாலும், குறிப்பாக 1978 இல் டெங் ஜியோபிங்கிற்குப் பின்னர் முற்றிலும் உருவமைக்கப்பட்ட கண்ணோட்டத்தை கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தினரின் தலைமுறையை ஜி பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். கடந்த தசாப்தத்தில் ஜி சில கடலோர மாநிலங்கள் மற்றும் நகரங்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளுக்கு தலைமை தாங்கினார். அவருடைய பிற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சகாக்களைப் போலவே பெரும் செல்வம் படைத்த உயரடுக்கு எழுச்சி பெறுவதற்கு வழிவகுத்த “வணிகத்தை ஈர்த்தல், மூலதனத்தை அறிமுகப்படுத்துதல்” என்ற கோஷத்தின் கீழ் செயல்பட்டார்.

ஒரு “இளவரசர் குழுவினர்” என்றும் ஜி அறியப்பட்டுள்ளார்; இது குறிப்பாக வெறுக்கப்படும் அடுக்காகும். இதன் ஒரே அரசியல் மூலதனம் “சிவப்பு பிரபுத்துவத்துடன்” உள்ள குடும்பப் பிணைப்புக்கள் ஆகும். இந்த அடுக்கினது பெற்றோர்கள் முன்னாள் மூத்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களாக இருந்தவர்கள். ஜியின் தந்தை ஜி ஜோங்க்சின் டெங்கினால் முதல் “சிறப்புப் பொருளாதாரப் பகுதியை” 1970களின் கடைசியில் ஷென்ஜென் பகுதியில் நிறுவ நியமிக்கப்பட்டார். இளவரசர் குழு சீனாவின் புதிய முதலாளித்துவத்தின் சக்தி வாய்ந்த பிரிவினர் ஆவர். அரச சொத்துக்களை பல சந்தர்ப்பங்களில் மேற்கு பெருநிறுவனம் மற்றும் வங்கிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்து இரக்கமற்ற முறையில் சொத்துக்கள் குவித்ததினால் இகழ்வுற்றவர்கள் ஆவர்.

மாநாட்டில் ஜியின் உரை பெயரளவிற்கேனும் மார்க்சிச அல்லது சோசலிசம் பற்றிய வெற்றுத்தனக் குறிப்பு கூட இல்லாமல் இருந்தது. மேலும் அதிகரித்தளவில்  முறையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்தின் மேலாதிக்கக் கருத்தாக இது சீனாவின் பெருமையைப் பற்றி உயரத்திப் பேசியது. அதிகரித்தளவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்தின் மேலாதிக்கக் கருத்தாக சீன தேசியவாதத்திற்கு திரும்புதல் என்பது உள்ளது. இது கட்சிக்கு ஆதரவுத் தளம் ஒன்றைத் தோற்றுவிக்கும் ஒரு அவநம்பிக்கைமிக்க முயற்சியாகும். ஆனால் கட்சியோ தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகளில் இன்னும் மிருகத்தனத் தாக்குதல்களுக்கு தயாரிப்பைக் கொண்டுள்ளது.

ஆட்சி இப்பொழுது ஒரு திருப்புமுனையில் உள்ளது. கடந்த தசாப்தம் சீனாவின் தடுக்க முடியாத பொருளாதார ஏற்றம் சராசரி ஆண்டு வளர்ச்சி 10% என்ற நிலையில் குறிப்பிடத் தக்கதாக இருந்தது. ஜிக்கு முன் பதவியில் ஹு ஜின்டாவோ 2002ம் ஆண்டில் இருத்தப்பட்டபோது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.5 டிரில்லியனாகவும், உலகின் ஆறாம் பெரிய பொருளாதாரமாகவும் இருந்தது. இன்று இது $7.3 டிரில்லியனாக உள்ளது. உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரமாக சீனா விளங்குகிறது. 2002ம் ஆண்டு சீனாவில் டாலர் பில்லியனர்கள் இல்லை. இப்பொழுது அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் சீனாவில் டாலர் பில்லியனர்கள் அதிகம் உள்ளனர்.

இந்தப் பரந்த பொருளாதார விரிவாக்கம் முற்றிலும் உலகப் பொருளாதாரத்தையே நம்பியிருந்தது. உலகின் தலையாய குறைவூதியத் தொழிலாளர் அரங்காக சீனா மாறியது. மேற்கு நாடுகளின் முதலீடுகள், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளை நம்பியுள்ளது. 2008ல் வெடித்த உலக நிதியநெருக்கடி உடனடியாக சீனாவின் பொருளாதார பாதிப்புத் தன்மையை அம்பலப்படுத்தியது. ஏனெனில் ஏற்றுமதிகள் சரிந்து 23 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டன.

ஹுவின் கீழான சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை சர்வதேச பொருளாதார மீட்பு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் பொருளாதாரச் சரிவையும் சமூக அமைதியின்மையையும் பாரிய ஊக்கப் பொதி மற்றும் பெரும் குறைவான வட்டியில் கடன் ஆகியவற்றின் மூலம் தடுத்து நிறுத்தியது. ஆனால் ஐரோப்பா கட்டுப்படுத்த முடியாத கடன் நெருக்கடி மற்றும் மந்த நிலையில் மூழ்கியுள்ளது. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் பொருளாதார வீழ்ச்சிதான் உள்ளது. இதன் விளைவாக பெய்ஜிங் பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்குவதுடன், கட்டுமீறிய வகையில் சொத்துக்கள் ஊகவணிகத்தில் வாங்கப்பட்டது மற்றும் பெரிய உள்ளூராட்சி அரசாங்கக் கடன்களும் நிதிய உறுதிப்பாடற்ற தன்மையைத் தோற்றுவித்துள்ளன.

18வது மாநாடு சீனப் பொருளாதாரத்தை மீண்டும் புதிதாக மறுகட்டமைப்பதற்கு அரங்கு அமைத்துள்ளது. இது சர்வதேச நிதிய மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி  எஞ்சியிருக்கும் பல அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படல், உற்பத்தித்திறனை அதிகரிக்க உந்துதல் ஆகியவை அடங்கும். வேலைகள் அழிப்புக்கள், பணிநீக்கங்கள் பெருகையில் வர்க்க அழுத்தங்கள் தவிர்க்க முடியாமல் உயரும். உயரமட்ட அதிகாரத்துவத்தினர் அரசாங்க நிறுவனங்களை தங்கள் சொந்த தனிச்சொத்துக்களாக மாற்றித் தங்களை செல்வக்செழிப்பு உடையவர்களாக்கிக்கொள்வர்.

ஜி தலைமை அமெரிக்காவில் இருந்து இடைவிட அழுத்தங்களையும் எதிர்கொள்ளுகிறது. அமெரிக்கா சீனாவின் செல்வாக்கைக் குறைத்து ஆசியா முழுவதும் மூலோபாயப் பிணைப்புக்களைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த தசாப்தத்தில் பெய்ஜிங்கின் வெளியுறவுக் கொள்கை ஹுவின் சூத்திரமான “அமைதியான எழுச்சி” என்பதை வழிகாட்டி நெறியாகக் கொண்டிருந்தது. அதாவது சீனா தற்போது இருக்கும் சக்திகளுடன் மோதலில் ஈடுபடாமல் ஒரு பெரிய சக்தியாக வரமுடியும் என்று.

அந்த அணுகுமுறை புஷ் நிர்வாகம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்களில் ஈடுபட்டிருந்த நேரத்தில் செயல்படும்போல் தோன்றியது. ஆனால் உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமாகி சர்வதேச அளவில் அழுத்தங்களை அதிகப்படுத்திவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவைத்தான் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பிற்கு நம்பியுள்ளது. ஆனால் தன் உலக மேலாதிக்கத்திற்கு ஒரு போட்டியாளனாக வருவதை அமெரிக்காவால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவில் “முன்னிலை” என்பது சீனாவை மூலோபாய முறையில் சுற்றிவளைத்து வாஷிங்டன் ஆணையிடும் உலக ஒழுங்கை அது ஏற்பதை உறுதிப்படுத்தும் முற்கூட்டிய பிரச்சாரம் ஆகும்.

மற்ற நாடுகளில் இருக்கும் அரசாங்கங்களைப்போல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி  ஒருபுறம் தன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வர்க்கப் போரைத் துவக்கும் முறையில்தான் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டும், மறுபுறும், அதன் போட்டியாளர்களுடன் மோதலும் போரும் நடத்துவதற்கு தயாரிப்புக்களை செய்யவேண்டும். இதை அது பலமற்ற நிலை மற்றும் அரசியலில் தனிமைப்பட்ட  நிலை ஆகிய சூழலில் செய்கிறது. கடந்த தசாப்தத்தின் பொருளாதார வளர்ச்சி சீனத் தொழிலாள வர்க்கத்தை மிகப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்துள்ளது. நகர்ப்புற சனத்தொகையின் அதிகரிப்பு 38%ல் இருந்து 50%க்கும் மேல், அதாவது நாட்டின் 1.3 பில்லியன் மக்களில் பாதிக்கும் மேலானவர்கள் நகரங்களுக்கு வந்துள்ளனர் என்பதை இதை காட்டுகின்றது.

சீனத் தொழிலாளர்கள், போர் ஆபத்து மற்றும் தயாரிக்கப்படும் சமூகப் பேரழிவு ஆகியவற்றிற்கு எதிராக  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை அகற்றும் நோக்கம் கொண்ட அரசியல் தாக்குதல் ஒன்றின் மூலம்தான் எதிர்கொள்ள முடியும். அது திவாலாகிவிட்ட இலாப அமைப்புமுறையை சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தால் இல்லாதொழிப்பதுடன் இணைந்த பகுதியாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கம் ஸ்ராலினிசம் மற்றும் மாவோயிசத்திற்கு எதிராக நடத்திய போராட்டங்களில் இருந்து தேவையான அரசியல் படிப்பினைகளை பற்றியெடுத்துக்கொண்டு, சீனாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக்குழுவின் பிரிவு ஒன்று கட்டியமைக்க போராடவேண்டும்.