World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The disillusioned and dissatisfied electorate

ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்த வாக்காளர்கள்

Joseph Kishore
8 November 2012
Back to screen version

செவ்வாய் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் பற்றிய ஆரம்ப ஆய்வுகள்  அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் அதிகமாகக் குறிப்பிடப்படாத விடயமான வாக்காளர்கள் வாக்களிக்க வருவதில் மிகப் பெரிய வீழ்ச்சி மற்றும் குறிப்பாக ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்குக் கிடைத்த வாக்குகளின் வீழ்ச்சி குறித்து அதிகளவு கவனத்தை காட்டவில்லை. இவ்வாறான வாக்களிப்பு முழு இரு கட்சி ஆட்சி அரசியல் அமைப்புமுறையில் இருந்தும் வாக்காளர்கள் பெருகிய முறையில் அந்நியப்பட்டு ஏமாற்றம் அடைந்துள்ளதன் வெளிப்பாடாகும்.

செய்தி ஊடகம், குறிப்பாக தாராளவாத, மற்றும் ஜனநாயகக் கட்சியின்இடது ஆதரவாளர்கள் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒரு பெரிய வெற்றி என்று விரைவில் பாராட்டினர். உதாரணமாக சர்வதேச சோசலிச அமைப்பு அதன் தலையங்கத்தைஜனாதிபதி வெற்றிபெறத் தேவையான இடங்கள் ஒவ்வொன்றிலும் ஜனநாயகக் கட்சியின் அடிப்படை ஆதரவாளர்கள் பெருமளவில் வாக்களித்ததால் பாரக் ஒபாமா மறு தேர்தலில் வெற்றி பெற்றார்.” என்று ஆரம்பித்தது.

உண்மையில் எல்லா இடங்களிலும் ஒபாமா அவருக்குக் கிடைத்த வாக்குகள் சரிந்ததைத்தான் கண்டார். மேலும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க விரும்பவில்லை. புஷ் நிர்வாகத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அலையால் பெரும் வேகத்தில் ஒபாமா அதிகாரத்திற்கு முன்தள்ளப்பட்ட 2008ல் இருந்த ஆர்வத்தில் அதிகம் எஞ்சியிருக்கவில்லை.

ஒபாமா மொத்தம் பெற்ற வாக்கு எண்ணிக்கை 2008ல் அவர் பெற்றதைவிட கிட்டத்தட்ட 9 மில்லியன் குறைவு ஆகும். அதாவது 69.5 மில்லியனில் இருந்து 60.5 மில்லியன் அல்லது கிட்டத்தட்ட 13% குறைவு ஆகும். தன்னுடைய பங்கிற்கு ரொம்னி 57.5 மில்லியன் வாக்குகளைத்தான் பெற்றார். இது 2008ல் ஜோன் மக்கெயின் பெற்றதைவிட கிட்டத்தட்ட 2.5 மில்லியன் குறைவு ஆகும். அதாவது ஒபாமா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் குடியரசுக்கட்சியில் இருந்து சவால் விட்டவரைவிட சற்றே அதிகமான வாக்குகளைத்தான் பெற்றார்.

இத்தேர்தல்கள் பில்லியன் கணக்கான டாலர்கள் பாரியளவில் உட்செலுத்தப்பட்டதால் குணாதிசயப்படுத்தப்பட்டிருந்தது. முடிவிலா விளம்பரங்களும் செய்தி ஊடக வர்ணனைகளும் ஒன்பது மாத காலமாக நிகழ்ந்த வண்ணம் இருந்தன. கடந்த நான்கு ஆண்டுகள் பல தகுதி பெற்ற வாக்காளர்களின் வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் இறுதியில் வாக்களத்த மக்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 11 மில்லியன் குறைந்துவிட்டது. குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் கோட்டை எனக் கூறப்படும் கலிபோர்னியாவில் மொத்தம் பதிவான வாக்குகள் 2008ல் 13.2 மில்லியனில் இருந்து 2012ல் 9.2 மில்லியன் என வீழ்ச்சியடைந்தது. ஒபாமா அந்த மாநிலத்தில் 2004ம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரி பெற்ற வாக்குகளை விட ஒரு மில்லியன் வாக்குகளைக் குறைவாகப் பெற்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர் வருகை சரிந்தது என்று அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க வாக்காளர்கள் பற்றிய ஆய்வு மையத்தின் கர்ட்டிஸ் ஹன்ஸ் கூறுகிறார். “தேசிய அளவில் இது மிகப் பெரிய சரிவு ஆகும்.”

ஒபாமாவிற்கு இரண்டாம் பதவிக்காலத்தில் அவர் வெற்றிபெற்றுள்ளபோது கிடைத்த வாக்குகளில் தீவிர சரிவு அமெரிக்க அரசியலில் கிட்டத்தட்ட முன்னொருபோதும் இல்லாததாகும். உண்மையில் ஒரு ஜனாதிபதி இரண்டாம் பதவிக்காலத்தில் முதல் தேர்தலை விடக் குறைந்த வாக்குகளைப் பெறுவது மிக மிக அபூர்வமாகும். உதாரணமாக ஜோர்ஜ் புஷ் 2000ம் ஆண்டில் தான் பெற்ற 50 மில்லியன் வாக்குகளில் இருந்து 2004ல் 62 மில்லியன் என்று அதிகம் பெற்றார். கிளன்டன் தன்னுடைய வாக்கை 1992ல் 45 மில்லியன் என்பதில் இருந்து 1996ல் 47.5 மில்லியன் என்று பெற்றார். ரேகன் தன்னுடைய வாக்கை 1980ல் 44 மில்லியன் என்பதில் இருந்து 1984ல் 54.5 மில்லியன் என்று அதிகரித்துப் பெற்றார்.

உண்மையில் இறுதித் தடைவையாக ஒரு ஜனாதிபதி பொதுமக்கள் வாக்கில் சரிவுடன் மறுதேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டது 1944 மற்றும் 1940 தேர்தல்களில் வந்தது. அப்பொழுது பிராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட் குடியரசுக்கட்சி போட்டியாளர்கள் மீது கொண்டிருந்த மகத்தான சாதகமான தன்மை 1932ல் அவர் பெற்ற மாபெரும் வெற்றியை விட மூன்று, நான்காம் பதவிக்காலங்களில் சற்றே குறைந்தது.

ஆனால் ரூஸ்வெல்ட் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடுதல் என்பதே ஒபாமாவின் சரிவு பற்றிய அளவு முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படும். 1936ம் ஆண்டு ரூஸ்வெல்ட் 1929 வோல் ஸ்ட்ரீட் சரிவிற்குப் பின் பெருமந்த நிலைக்கு நடுவே இரண்டாம் பதவிக்காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் ரூஸ்வெல்ட் தன்னுடைய மக்கள் வாக்கை 23 மில்லியனில் இருந்து 28 மில்லியனுக்கு, 20%க்கும் மேலான அதிகரிப்பால் உயர்த்திக் கொண்டார். அவருடைய குடியரசுக் கட்சிப் போட்டியாளர் ஆல்ப் லாண்டன் பொதுமக்கள் வாக்குகளில் 36.5%தான் பெற்றார். இரண்டு மாநிலங்களான வெர்மான்ட் மற்றும் மரைன் மட்டுமே அப்பொழுது இருந்த எட்டு தேர்தல்குழு வாக்குகளில் அவருக்குக் கிடைத்தது. அடுத்த இரண்டு தேர்தல்களிலும் ரூஸ்வெல்ட்டின் மொத்த வாக்குகள் 27.2 மில்லியன், பின் 25.6 மில்லியன் என வீழ்ச்சியடைந்தன.

ரூஸ்வெல்டை போன்றே அமெரிக்க வரலாற்றில் மிகவும் வெறுக்கப்பட்ட ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷிடம் இருந்து பதவியைப் பெற்ற ஒபாமா ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிச் சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளில் அவர் தன்னுடைய குடியரசுப் போட்டியாளர்களுக்கு எதிராகக் கொண்டிருந்த முன்னாதாயங்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்.

இரண்டு வேட்பாளர்களைப் பற்றிய இந்த மாறுபட்ட இந்த தேர்தல் போக்குகளின் பின்னணியில் இருக்கும் முக்கிய காரணி ரூஸ்வெல்ட், சமூகப் புரட்சி பற்றிய அச்சுறுத்தலால் உந்தப்பெற்ற, ஆனால் அமெரிக்க முதலாளித்தவத்தின் கணிசமான வளங்ககளில் தங்கியிருந்து, சமூக சீர்திருத்தத்தில் ஒரு முக்கிய மாற்றுத் திட்டத்தைத் ஆரம்பித்தார். இதற்கு மாறாக ஒபாமா நான்கு ஆண்டுக்காலம் பதவியில் அவருக்கு முன்பு பதவியில் இருந்தவருடைய வலதுசாரிக் கொள்கைகளைத்தான் விரிவாக்கி ஆழப்படுத்தினார்.

இதன் விளைவாக ஒபாமா மிக இழிந்த அப்பட்டமான முறையில் பெருமந்த நிலைக்குப் பின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பான நிதியப் பிரபுத்துவத்தை பிரதிபலிக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளரைக் சற்று அதிகமான அளவில்தான் தோற்கடிக்கும்  நிலையிலேயே இருந்தார்.

தேர்தல் முடிவு ஒபாமா நிர்வாகத்தின் அரசியல் திவால்தன்மையின் வெளிப்பாடு என்பது மட்டும் அல்ல; முழு இரு கட்சி ஆட்சி முறையின் நெருக்கடியும் ஆகும். இரு கட்சிகளுமே ஒரு சிறிய நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களுக்கு பணிபுரியத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவையாகும். அதனால் அமெரிக்க மக்களுக்கு சிக்கனம், போர், ஜனநாயக உரிமைகளின் தகர்ப்பு ஆகியவற்றைத் தவிர வேறு எதையும் வழங்கமுடியாது.

எவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒரேவிதக் கொள்கைகள்தான் தொடர்கின்றன. ஒபாமா புஷ்ஷின் கொள்கைகளைத் தொடர்ந்தார். ரோம்னி வெற்றி பெற்றிருந்தால் முக்கியமான விடயங்கள் பலவற்றில் ஒபாமாவின் கொள்கைகளைத்தான் தொடர்ந்திருப்பார்.

உண்மையில் தேர்தல்களுக்குப் பின், செய்தி ஊடகம் மற்றும் அரசியல் நடைமுறையில் ஒபாமாவில் ஆரம்பித்து மேலாதிக்கம் செலுத்திய  கருத்துஇருகட்சி உடன்பாட்டிற்கான அழைப்பு என்பதுதான். இதன் பொருள் இரு கட்சிகளும் தொழிலாளர்களுக்கு எதிராகக் கூட்டுத் தாக்குதல் நடத்துவதுதான். தேர்தல்கள் ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் மக்கள் ஒன்றாக இணைந்துநாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று கொடுத்துள்ள ஆதரவுக்கட்டளை என்று கூறப்படுகின்றது.

செவ்வாய் இரவில் வெளிப்படுத்திய தனது கருத்துக்களில் ஒபாமா, “இரு கட்சித் தலைவர்களும் சேர்ந்து நாம் ஒன்றாக இயங்கினால்தான் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை ஒன்றாக இணைந்து தீர்க்கலாம்  என நான் முனைகின்றேன்.” இதில்வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என்றார். அவருடையசெயற்பாட்டில் முதன்மையானது” Medicare, Medicaid மற்றும் சமூகநலத் திட்டங்களில் டிரில்லியன் கணக்கான டார்களைக் குறைப்பதற்கான உடன்பாட்டை அடைந்து செயல்படுத்துவதுதான். இதுதான் ஆண்டு இறுதியில்நிதிய சிக்கலுக்கு தக்க விடையிறுப்பாக இருக்கும். புதன் அன்று குடியரசுக் கட்சித் தலைவர்கள் இதற்கு விடையிறுக்கையில் அவர்களும் உடன்பாட்டை அடைய உறுதிகொண்டுள்ளதாகக் கூறினர்.

அமெரிக்க அரசியலின் உத்தியோகபூர்வ விளக்கத்தின்படி, “இடது மற்றும் வலது பகிர்ந்துகொள்ளும் விளக்கத்தின்படி, மக்கள் இனம், பால், பாலியல் சார்பு என ஒவ்வொரு அடையாள முறைப்படியும் பிளவுற்றுள்ளனர். இப்பகுப்பாய்வின்படி ஒபாமாமகளிர் வாக்கு அல்லதுஹிஸ்பானியர்களின் வாக்கை பெற முடிந்தது. வர்க்கம் என்பது ஒருபோதும் குறிப்பிடப்படக்கூடாது. ஆயினும் இதுதான் மிக அடிப்படைப் பிரச்சினை ஆகும்.

செவ்வாய் தேர்தலின் மிக முக்கிய தாக்கம் தொழிலாள வர்க்கம் முழு அரசியல் முறையில் இருந்து பெருகிய முறையில் விரோதப்பட்டு நிற்பதுதான். அதுவும் நல்ல காரணத்திற்குத்தான். அமெரிக்காவில் மகத்தான சமூக அழுத்தங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை 1920களில் இருந்து காணப்படாத அளவிற்கு சமூகத்தில் இருக்கும் எல்லாத் தரங்களிலும் இருக்கும் சமூக சமத்துவமின்மையில் வேர்களைக் கொண்டுள்ளன. ஆயினும்கூட இந்த அழுத்தங்கள் தேர்தல் நிகழ்முறைகளில் வெளிப்பாட்டைக் காணவில்லை.

அமெரிக்காவில் எதிர்வரவிருக்கும் மாதங்களில் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கையில், அவை அதிகரித்தளவில் முழு அரசியல் முறையுடனும் நேரடி மோதலில் ஈடுபடும். இதில் ஜனநாயகக் கட்சியின் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதை முக்கிய செயற்பாடாக கொண்ட தாராளவாத மற்றும் போலி இடது அமைப்புக்களின் வலைப்பின்னல்களும் உண்டு. எதிர்ப்பு வேறொரு வடிவத்தை எடுத்தாக வேண்டும். அதாவது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாக  கொண்ட தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் வெளிப்பட வேண்டும்.