WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The pseudo-left unmasked in Greece
கிரேக்கத்தில் போலி இடது முகத்திரை கிழிக்கப்படுகிறது
Alex Lantier
24 May 2012
Back to screen version
கிரேக்கத்தின் ஜூன் 17 தேர்தல்களில் தீவிர இடதுகளின் கூட்டணியான
சிரசா
(SYRIZA)
முன்னணியில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்த சில
நாட்களிலேயே அதன் அரசியலில் உள்ள திவால்தன்மை தெளிவாகிவிட்டது.
கிரேக்கத்தின் முக்கிய கட்சிகளான சமூக ஜனநாயக
PASOK,
வலதுசாரி புதிய ஜனநாயகம்
(ND)
இவற்றிற்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வாக்களிப்பர் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இக்கட்சிகள் நடத்திய
பிணையெடுப்புக்கள் எனப்படுபவை பற்றிய பேச்சுக்களால் ஏற்பட்ட பொருளாதாரப்
பேரழிவிற்கு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள். கிரேக்கத்தின் பொருளாதாரம்
2009ல் இருந்து 20%க்கும் மேல் சுருங்கிவிட்டது. இரண்டாம் உலகப் போரின் போது நாஜி
ஆக்கிரமிப்பிற்குப் பின் இது மிகப் பெரிய சரிவாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் தங்களிடம் இருந்து திருடிவிட்ட ஊதியங்கள் மற்றும்
சமூகநல சேவைகளைத் தொழிலாளர்கள் மீண்டும் பெற விரும்புவதுடன், முக்கூட்டு எனப்படும்
ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றினால்
மேற்பார்வையிடப்பட்ட வங்கிச் சர்வாதிகாரத்தை அழிக்கவும் விரும்புகின்றனர்.
இந்த எழுச்சி பெற்றுள்ள சீற்றத்திற்கு விடையிறுக்கும் வகையில்
சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கொள்கைகளை விமர்சித்துள்ளது. ஆனால்,
பாரிஸுக்கும் பேர்லினுக்கும் அண்மையில் பயணிப்பதற்கு முன்னதாக சிரிசா தலைவர்
அலெக்சிஸ் சிப்ரஸ் அரசியல்வாதிகளிடமும் செய்தியாளர்களிடமும் அத்தகைய அறிக்கைகள்
குறித்து கவனம் செலுத்தத் தேவையில்லை என்று கூறிவிட்டார்.
ராய்ட்டர்ஸுக்குக் வழங்கிய நேர்காணல் ஒன்றில்,
“எங்களைப்
பற்றி ஐரோப்பாவில் கூறப்படுவது நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதையோ விரும்புவதையோ
அல்ல”
என்று அவர் வலியுறுத்தி,
“நீண்டக்காலச்
சீர்திருத்தங்கள்”
வரும் என்றும் உறுதியளித்தார். இச்சீர்திருத்தங்களின் அடிப்படையில் சிப்ரஸ்
ஐரோப்பிய ஒன்றியமும் யூரோவும் ஒன்றாகத் தக்க வைக்கப்பட முடியும் என்றும்
வங்கிகளுக்கு
“நீங்கள்
எங்களுக்குக் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிடமுடியும்”
என உறுதியளிக்கிறேன் என நம்புவதாகவும் கூறினார்.
தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கத் தரங்களை பாரியளவு குறைப்பதின்
மூலம்தான் வங்கிளுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்பட முடியும் என்ற உண்மையை சிப்ரஸ்
கூறவில்லை. சிக்கனம் பற்றிய விமர்சனங்களை ஐரோப்பிய ஒன்றிய வடிவமைப்பிற்கான ஆதரவுடன்
இணைக்கும் அவருடைய முயற்சி விரைவில் ஏற்க முடியாததாகிவிட்டது. ஒரு
“தீவிரவாத
இடது”
அரசியல்வாதி எனக் காட்டிக் கொள்ளும் இவருடைய முயற்சியினால் சிரிசா
28% வாக்குகளை வெற்றிபெறக்கூடும் என்னும் நம்பிக்கை, இவர் பேர்லினுக்குச் செல்ல
பயணப்பெட்டியை தூக்குவரைகூட தப்பிப் பிழைக்கவில்லை.
ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களுடன் ஒரு சிறந்த உடன்பாட்டைக் காண
வேண்டும் என்னும் சிரிசாவின் முயற்சி தொழிலாளர்கள் மீது சுமத்தப்படவிருக்கும்
சிக்கன நடவடிக்கைகளில் வெறும் போலித்திருத்தங்களை செய்யும் முயற்சியாக
சரிந்துவிட்டது. இதில் சிப்ரஸ் கிரேக்க மத்தியதர வர்க்க உயரடுக்கு, முதலாளித்துவம்
ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உள்ளடங்கலான ஐரோப்பிய முதலாளித்துவத்தின்
பிரிவுகளுக்கு அவர் முறையீடு செய்கிறார். ஹாலண்ட்,
சான்ஸ்ர் அங்கேலா மேர்க்கெலின் தயாரிப்புக்களுக்குப் பதிலாக
அமெரிக்க வடிவமைக்கும் சிக்கனக் கொள்கைகளுக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் பெரும் வங்கிப் பிணை எடுப்புக்களை சிப்ரஸ் பாராட்டினார்:
அவை அமெரிக்காவில் ஐரோப்பாவை விட மந்த நிலையின் கடுமையைக் குறைத்துள்ளன என்றார்.
நியூயோர்க் டைம்ஸிடம் தான்
“மேர்க்கெலிடம்
அமெரிக்காவின் மாதிரியைப் பின்பற்ற அழுத்தம் கொடுக்க விரும்புவதாகவும்,
அமெரிக்காவில் சிக்கன நடவடிக்கைகள் மூலம் கடன் நெருக்கடி சமாளிக்கப்படவில்லை, மாறாக
விரிவாக்க அணுகுமுறை மூலம்தான் கையாளப்பட்டன”
என்றார்.
எவ்வாறான மோசடிப் பேச்சு இது! வாஷிங்டன் வோல் ஸ்ட்ரீட்
பிணையெடுப்புக்களிலும், மத்திய கிழக்கில் நடக்கும் ஏகாதிபத்தியப் போர்களிலும் பல
டிரில்லியன்களைச் செலவு செய்துள்ள நிலைமையில், அமெரிக்கத் தொழிலாள வர்க்கம்
சமூகநலக் குறைப்புக்களினால் பெரும்பாதிப்பிற்கு உட்பட்டுவிட்டது. கிரேக்கத்தைப்
போலவே, அமெரிக்காவிலும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை பெறுதல் என்பது
இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது. மில்லியன் கணக்கான மக்கள் வேலையின்மையில் உள்ளனர்,
முக்கிய அமெரிக்க நகரங்களான வாஷிங்டன் டி.சி. டெட்ரோயிட் போன்றவற்றில் இளைஞர்
வேலையின்மை கிரேக்கத்தில் உள்ள 50%க்கு ஒப்பாகத்தான் உள்ளது.
தொழிலாள வர்க்கம் ஓரிரு ஏகாதிபத்திய அரசியல்வாதியை மட்டும்
போராட்டத்தில் எதிர்கொள்ளவில்லை. மாறாக உலகெங்கிலும் தோற்றுவிட்ட ஒரு சமூக
ஒழுங்கிற்கு எதிரான அதாவது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளது.
ஐரோப்பாவில் இது ஐரோப்பிய ஒன்றியத்தை தூக்கிவீசும் சர்வதேசப்
போராட்டத்துடன் பிணைந்துள்ளது. ஒரு திருடர்களின் சமையலறையான இதில், வலதுசாரி
ஏகாதிபத்திய அரசியல்வாதிகளாலும் அல்லது சிப்ரஸ் போல் முதலாளித்துவ
“இடதினராலும்”
ஐரோப்பாவை ஹிட்லர் ஆண்ட காலத்தில் இருந்த அளவிற்குப் பின் காணப்படாத
அளவிலான தாக்குதல்களை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திட்டமிட்டு நடத்துகின்றனர்.
இத்தகைய பிற்போக்குத்தனமான அமைப்பை பாதுகாக்க தியாகம் செய்யவேண்டும் என்பதற்கான
எவ்விதமான அழைப்பையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.
எதிர்வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களில் சிரிசா,
தொழிலாளர்களை ஒரு விரோதி போல் எதிர்கொள்ளும். அதிகாரத்தில்
இருந்தாலும், இல்லாவிடினும் இதன் நோக்கம் சிக்கனக் கொள்கைகளுக்கு மக்களுடைய
எதிர்ப்பைக் கட்டுப்படுத்துதல், தொழிலாள வர்க்கத்தின் மீதான நிதிய மூலதனத்தின்
அரசியல் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளுதல் என்பதாகும். சிரிசா அதிகாரத்தை
எடுத்துக் கொள்ள கிரேக்க ஆளும் வர்க்கத்தால் அனுமதிக்கப்பட்டால், அது மக்களின்
தீவிரமயமாக்கலை சிரச்சேதம் செய்யும் ஒரு முயற்சியாகும். இது தொழிலாள வர்க்கத்தின்
ஏமாற்றங்களையும் தோல்விகளையும் அதிகரிக்கத்தான் செய்யும்.
ஜேர்மன் இடது கட்சி
(Left Party),
பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி
(PCF)
போன்ற சிரிசாவின் சர்வதேச நட்பு அமைப்புக்கள் பல, உள்ளூர் அல்லது தேசிய
அரசாங்கங்களில் சமூகநலச் செலவுகளைக் குறைத்த நீண்டகால வரலாற்றைக் கொண்டவை ஆகும்.
சிரிசா வாக்குகளில் ஏற்றம் பெற்றுள்ளதை பாராட்டும் பிரான்ஸின் புதிய முதலாளித்துவ
எதிர்ப்புக் கட்சி, அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற மற்ற கட்சிகளைப்
பொறுத்தவரை, இவை சமூகத்தில் வசதிபடைத்த அடுக்குகளினால் ஈர்க்கப்பட்டு, தொழிலாளர்களை
தாக்கும் அரசாங்கங்களுடன் அவர்கள் கொண்டிருக்கும் பிணைப்பினால் சடரீதியான இலாபங்களை
பெறும் நம்பிக்கையைக் கொண்டவை.
இக்கட்சிகளின் வர்க்க அடிப்படை மற்றும் அவற்றின் இடது எனக்
காட்டிக்கொள்ளும் மோசடித் தன்மை என்பவைதான் உண்மை. இவை சோசலிசக் கட்சிகளோ,
புரட்சிக் கட்சிகளோ, சீர்திருத்தக் கட்சிகளோ கூட இல்லை. இவற்றின் கொள்கைகள் எத்தகைய
முன்னேற்றத்தையும் வழங்கவில்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்களை
பின்னடைய செய்வதாகும்.
அவர்களிடம் கோரப்படும் சலுகைகளை எதிர்ப்பதற்கு கிரேக்கத்
தொழிலாளர்களிடம் உள்ள ஒரே வழி, மேற்கு ஐரோப்பா இன்னும் அப்பால் இருக்கும் தொழிலாள
வர்க்கத்திடம்,
மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு புரட்சிகரக் கொள்கையை
ஏற்றுக்கொள்ள ஒரு பொதுப் போராட்டத்திற்கு அழைப்புவிடுவதுதான். ஒரேயொரு சாத்தியமான
முன்னோக்கு சோசலிசத்திற்கான போராட்டம்தான். இது அரச அதிகாரத்தை கைப்பற்றுவதின்
மூலமும், முதலாளித்துவத்திடம் இருந்து பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாட்டை
அகற்றுவதின் மூலம்தான் முடியும்.
சோசலிச சிந்தனை கொண்ட தொழிலாளர்களும் இளைஞர்களும் போலி இடது
கட்சிகளின் செல்வாக்கை முறியடிக்கப் போராடி, தொழிலாள வர்க்கத்தின் மத்தியில்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாக்கும் ட்ரொட்ஸ்கிச மரபுகளை
அடித்தளமாகக் கொண்ட ஒரு சோசலிசத் தலைமையை கட்டியமைக்க முன்வரவேண்டும்.
கிரேக்கத்தில் எதிர்வரவிருக்கும் போராட்டங்களின் வரலாற்றுப்பணி உலக சோசலிசப்
புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தை தூக்கிவீசி, ஐக்கிய
ஐரோப்பிய சோசலிச அரசுகளை கட்டமைத்தல் என்பதாகும். |