World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Fire destroys plantation workers’ homes

இலங்கை: தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் தீயில் அழிந்தன

By M. Vasanthan
16 May 2012

Back to screen version

மே 3 அன்று மொக்கா தோட்டத்தின் நடுப் பிரிவில் 22 வீடுகள் மற்றும் 7 தற்காலிக குடிசைகளில் தீ பற்றியதை அடுத்து குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானோர் தற்காலிக தங்கமிடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த தீ மின் கோளாறினால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தோட்டப் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மத்திய மலையக மாவட்டத்தின் மஸ்கெலியாவில் அமைந்துள்ள மொக்கா தோட்டத்தில் ஏற்பட்ட தீ, கடந்த 12 மாதங்களில் இப்பிரதேசத்தின் லயன் அறைகளில் (வரிசை வீடுகள்) ஏற்பட்ட மூன்றாவது விபத்தாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரவுன்ஸ்வீக் மற்றும் பார்கோ தோட்டங்களிலும் ஏற்பட்ட தீ விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது தரைமட்டமாகின.  

பெரும்பாலான இலங்கை தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது விரிவடைந்த குடும்பங்களும் லயன் அறைகளிலேயே வாழ்கின்றன. இவை பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் தோட்டங்களில் வழங்கப்பட்ட தரக்குறைவான முகாம் வடிவிலான தங்குமிடங்களாகும்.

ஏனைய தோட்டங்களைப் போலவே இந்தப் பகுதியிலும் போக்குவரத்து குறைந்தபட்சமாக இருப்பதோடு, தங்குமிடங்கள் பொருத்தமற்றவையாகவும் ஆரோக்கியமற்றவையாகவும் உள்ளன. நாற்பத்து ஒன்பது குடும்பங்கள், சரியான தண்ணீர் விநியோகம் அல்லது போதிய கழிப்பிட வசதிகள் இல்லாத தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருவதோடு சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

உலக சோசலிச வலை தள நிருபர்கள் தப்பிப் பிழைத்த சிலரிடம் அண்மையில் பேசினர். அவர்கள் சீற்றத்துடன் தங்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றி புகார் செய்தனர்.

தனது இரண்டு சிறிய குழந்தைகளுடன் பாடசாலையில் தங்கியிருக்கும் ஒரு பெண் தோட்டத் தொழிலாளி தெரிவித்ததாவது: "நாங்கள் ஒரு அரை மணித்தியாலத்துக்குள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இவற்றில் தொலைக்காட்சி, உடைகள், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் மற்றும் ஏனையவையும் அடங்கும். நாம் இந்த பொருட்களில் பலவற்றை கடன் மூலம் வாங்கினோம். அவற்றை இப்போது இழந்துவிட்டதோடு இன்னும் கடனையும் செலுத்த வேண்டும்.

"எங்களது சம்பளம் சாப்பாட்டுக்குக் கூட போதாததால், எதிர்காலத்தில் அந்த பொருட்களை வாங்குவதைப் பற்றி நினைக்கக் கூட முடியாது. பலபேர் ஊழியர் சேமலாப [ஓய்வூதிய] நிதியில் கடன்களை பெற்று இந்த மிக பழைய வீடுகளை திருத்திக்கொண்டுள்ளனர். தோட்ட நிர்வாகம் புதிய குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட அல்லது திருத்த உதவி செய்யாததால், எங்கள் தோட்டத்தில் பல தொழிலாளர்கள் தற்காலிக கொட்டகையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிர்வாகம் எங்களது எரிந்த வீடுகளை மீண்டும் கட்ட உதவும் என நாம் நம்பவில்லை."

மற்றொரு தோட்ட தொழிலாளி, தோட்டத்தில் தனி வீடுகள் வழங்கப்பட்டிருந்தால் பெரும்பாலான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் தீ விபத்தில் பாதிக்கப்படாமல் இருந்திருப்பர் என்று விளக்கினார்.

"ஒரு வீட்டில் தொடங்கிய தீ, மிக விரைவாக மற்ற அனைத்து வீடுகளுக்கும் பரவியது. நாம் 100 க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்த பழைய லயன் வீடுகளில் வாழ்க்கையை ஓட்டுகிறோம். கடந்த ஆண்டு ஏப்ரலில் மஸ்கெலியாவில் மேலும் இரு தோட்டங்களில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் தீயினால் நாசமாகின. அந்த மக்கள் இன்னும் தற்காலிக கூடாரங்களிலேயே வாழ்கின்றனர்.

"அரசாங்கங்கள் வந்து போகலாம், ஆனால் நம் வாழ்க்கை மாறாது. தாம் எங்களுக்கு உதவும் பொருட்டே அரசாங்கத்துடன் இருப்பதாக தொழிற்சங்கங்கள் சொல்லிக் கொண்டாலும், நாம் இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்கின்றோம்.

"இந்த தோட்டம் நிர்வாகத்தால் சரியாக பராமரிக்கப்படாததால் இங்கு அனைவருக்கும் வேலை இல்லை. சில தொழிலாளர்கள் இங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டிக்கோயாவில் தரவளை தோட்டத்துக்கு அனுப்பப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு எங்களை நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மொனராகலை சீனி ஆலைக்கு வேலைக்கு அனுப்பினர். நாம் இந்த உத்தரவை எதிர்த்திருந்தால் எமது வேலையை இழக்க நேர்ந்திருக்கலாம்."
 

இந்த பகுதியில் தீ அணைப்புப் படையினரோ அல்லது வேறு எந்த மீட்பு சேவையோ இல்லாததால், வாளிகளில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றியே தீப்பிழம்புகளை அணைத்தனர் என்று அந்த தொழிலாளி விளக்கினார். "நாங்கள் கத்திக் கதறினோம்; எங்களால் அதை மட்டுமே செய்ய முடியும்" என்று அவர் கூறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) உட்பட முக்கிய பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், இலங்கை ஆளும் அரசாங்கத்தின் கூட்டணி பங்காளிகளாகும். இன்னொரு பெருந்தோட்ட தொழிற்சங்கமான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.), வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.) உடன் இணைந்துள்ளது. இந்த அமைப்புக்கள் தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வீட்டு பிரச்சினைகளை முற்றிலும் புறக்கணித்து, நல்ல சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கான கோரிக்கைகளை அடக்கி வைக்க நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடனும் செயற்பட்டு வருகின்றன.

மற்றொரு தோட்டத் தொழிலாளி தெரிவித்ததாவது: "அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்க தலைவர்களும் தேர்தல் காலத்தில் மட்டுமே நம்மை சுற்றி வந்து பொய் சொல்லி ஏமாற்றுவர். அனைத்து தொழிற்சங்கங்களும் முண்டு கொடுத்த இந்த அரசாங்கம் மற்றும் முந்தைய யூ.என்.பி. அரசாங்கத்தாலும் நாம் வெறுத்துப் போய்விட்டோம்."

தோட்ட தொழிலாளர்களின் லயன் அறைகளில் தீ பற்றுவது இலங்கையில் ஒரு பொதுவான நிகழ்வாகும். 200 க்கும் மேற்பட்ட லயன் வீடுகள் கடந்த பத்து ஆண்டுகளில் மின் தவறுகளால் எரிந்து சாம்பலாகியுள்ள போதும், தோட்ட நிறுவனங்கள் எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு திணைக்களத்தின் படி, தோட்டப் பகுதியில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களில் 64 சதவீதத்தினர் லயன் வீடுகளிலேயே வாழ்கின்றனர். ஒரு மதிப்பீட்டின்படி தற்போதைய விடுதி தேவைகளை நிறைவேற்ற 150,000 வீட்டுத் தொகுதிகள் வேண்டும்.

2010 ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஒவ்வொரு தோட்ட தொழிலாளி குடும்பத்துக்கும் ஒரு புதிய வீடு தருவதாக உறுதியளித்தார். "என் முக்கிய இலக்குகளில் ஒன்று, தோட்ட சமூகத்தை சொந்தமாக வீடுகள் கொண்ட சமுதாயமாக ஆக்குவதுதான்," என அவர் மஹிந்த சிந்தனை என்றழைக்கப்படுவதில் தெரிவித்துள்ளார். "தற்போதைய 'லயன் அறைகளுக்கு' பதிலாக, ஒவ்வொரு தோட்ட தொழிலாளர்கள் குடும்பமும் 2015ல் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒரு புதிய வீட்டிற்கு உரிமையாளராக இருக்கும்."

இராஜபக்ஷ, தனது அரசாங்கம் இந்த நோக்கத்துக்காக 5 பில்லியன் ரூபாய்களை வருடத்துக்கு ஒதுக்கும் என்று கூறினார் அதாவது ஒரு வீட்டுத் தொகுதிக்கு 440,000 ரூபாய், என்ற தொகை முற்றிலும் பற்றாக்குறையானதாகும்.  உண்மையில்,  லயன் அறைகளை மாற்றி அமைப்பதற்காக, புதிய வீட்டுத் தொகுதிகளுக்கு தேவையான மொத்த தொகை 66 பில்லியன் ரூபாவாகும். அவரது வாக்குறுதி, தேவையான நிதியில் மூன்றில் ஒன்றுக்கும் குறைவாகும்.

தோட்ட வீடமைப்பு, உட்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் எம். வாமதேவன், சமீபத்திய சண்டே டைம்ஸில் எழுதிய கட்டுரையின் படி, வருடாந்திரம் தேவைப்படும் தொகை சுமார் 13.2 பில்லியன் ரூபாவாகும். 2011ல் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு, 481 மில்லியன் ரூபாய் மட்டுமே ஆகும். இது அவரது மஹிந்த சிந்தனையில் அவர் வாக்குறுதியளித்த தொகையில் 9,62 சதவீதம்" மட்டுமே என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டு நெருக்கடி பற்றி மொக்கா தோட்டம் மற்றும் பிற தோட்டங்களில் தொழிலாளர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்திய உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், இந்தப் பிரச்சினையை முதலாளித்துவ முறையின் கீழ் தீர்க்க முடியாது என்று சுட்டிக் காட்டினர். தோட்ட நிறுவனமோ அல்லது இலங்கை அரசாங்கமோ இந்த நோக்கத்துக்காக நிதி ஒதுக்கப் போவதில்லை.

 
தோட்ட கம்பனிகள் உட்பட வங்கிகள் மற்றும் பெரும் கூட்டுத்தாபனங்களை தேசியமயமாக்கி, பொருளாதாரத்தை சோசலிச பாதையில் மறு ஒழுங்கு செய்வதன் மூலம் மட்டுமே, உழைக்கும் மக்களின் அடிப்படை வீட்டுத் தேவைகளை பூர்த்திசெய்ய முடியும்.

அனைவருக்கும் ஒழுங்கான வீடு கிடைக்க வேண்டும் என்பது ஒரு சமூக உரிமையாகும். இதை பெறுவதற்கு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்கான ஒரு அரசியல் போராட்டம் அவசியமாகும். இது சோசலிச மற்றும் அனைத்துலகவாத முன்நோக்கின் ஒரு பாகமாகும். சோசலிச சமத்துவக் கட்சி மே 20 அன்று நடத்தவுள்ள தோட்டத் தொழிலாளர்களின் மாநாட்டில் இந்த முன்நோக்கு பற்றி கலந்துரையாடப்படவுள்ளது.