World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greece: SYRIZA support sought to enforce austerity measures

கிரேக்கம்: சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த சிரிசாவின் ஆதரவு நாடப்படுகிறது

By Christoph Dreier
15 May 2012

Back to screen version

கிரேக்கத்தில் புதிய தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன. பழமைவாத புதிய ஜனநாயகம் (ND) மற்றும் ஜனநாயக இடது (DIMAR) ஆகியவை சமூக ஜனநாயக PASOK கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள சிரிசா உள்ளடங்கிய தீவிரவாத இடதுகளின் கூட்டு பங்கு பெற வேண்டும் எனக் கோரியுள்ளன. சிரிசா இக்கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன் அவ்வாறான ஒரு கூட்டில் இணைந்துகொள்ள தனது விருப்பமின்மையை தெளிவுபடுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைகளைச் செயல்படுத்தும் ஓர் அரசாங்கத்தில் தான் பங்கு பெறத் தயார் என்று சிரிசா ஏற்கனவே அடையாளம் காட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, அது கிரேக்கம் யூரோப்பகுதியை விட்டு எச்சூழ்நிலையிலும் நீங்கக் கூடாது, மாறாக வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் கடன்களைத் திருப்பிக் கொடுத்தல் பற்றி மறு பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என அறிவித்திருந்தது. பெரிய வங்கிகளிடம் இருந்து ஆணைகளைப் பெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமரசத்திற்கு இடமில்லாத அணுகுமுறையை காணும்போது, இது வெட்டுக்களைச் செயல்படுத்துவதில் பங்குபெறத் தயார் என்பதைத்தான் குறிப்பிடுகிறது.

ஆனார் சிரிசா உடனடியாக சிக்கனக் கொள்கைகளுக்குப் பொறுப்பு ஏற்கத் தயாராக இல்லை. உத்திகளைக் கையாண்டு ஒரு இரண்டாம் தேர்தலைக் கட்டாயப்படுத்த அது தயாராக உள்ளது. அத்தேர்தல் கிரேக்கப் பாராளுமன்றத்தில் அதன் நிலைமையை வலுப்படுத்தக்கூடும்.

கடந்த வாரத்தில், தேர்தலில் மிக அதிக வாக்குகளைப் பெற்ற ND, இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்ற சிரிசா மற்றும் PASOK அனைத்தும் செயல்படக்கூடிய ஒரு அரசாங்கப் பெரும்பான்மையை அமைப்பதில் தோல்வியுற்றன. வார இறுதியில், கிரேக்க ஜனாதிபதி காரோலோஸ் பாப்போலியஸ் PASOK, ND, SYRIZA ஆகியவற்றின் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தி, அதன் பின் மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் தனித்தனி விவாதங்களை நடத்தினார்.

பேச்சுக்களுக்குப்பின், சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் டிசிப்ரஸ் மீண்டும் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் கிரேக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனத் திட்டத்தைச் செயல்படுத்தியிருந்த இரு முன்னாள் ஆளும் கட்சிகளாக இருந்த PASOK, ND  ஆகியவற்றுடன் தான் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லை என்று அறிவித்தார்.

இரு கட்சிகளுடனும் கூட்டணி என்பது வாக்களார்களின் விருப்பத்தைப் புறக்கணிப்பது என ஆகும் என்றார் டிசிப்ரஸ். வாக்காளர்கள் அரசாங்கத்தின் போக்கை எதிர்த்த கட்சிகளுக்குதான் பெரும்பாலும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ND, PASOK, DIMAR ஆகியவை மொத்தத்தில் 300 இடங்களில் கணிசமாக 168 இடங்களைக் கொண்டுள்ளன. சிரிசா பங்கேற்க வேண்டும் என்னும் அவற்றின் கோரிக்கைகள் முன்னோடியற்றவை, தர்க்கரீதியாகப் பொருந்தாதவை என்று டிசிப்ரஸ் சுட்டிக் காட்டியுள்ளார். புதிய அரசாங்கம் பற்றிய விவாதங்களைப் பகிரங்கமாக அறிவிக்குமாறும் அவர் பாபோலியசிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

DIMAR உடைய தலைவர் போடிஸ் கௌவேலிஸ் தன் கட்சி சிரிசா இல்லாத ஒரு கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கத் தயாராக இல்லை எனப் பின்னர் கூறினார். சிரிசா இல்லாத அரசாங்கம் தேவையான மக்கள் ஆதரவு, பாராளுமன்ற ஆதரவைப் பெற்றிருக்காது என்றார் அவர்.

பழமைவாதத் தலைவர் அன்டோனிஸ் சமரஸ் கடந்த வாரம் இதேபோன்ற கருத்துக்களைக் கூறினார். பேச்சுக்களைத் தொடர்ந்து அவர் எந்த அரசாங்கத்திலும் டிசிப்ரஸ் சேர மறுப்பது பற்றிப் புகார் கூறியுள்ளார். அவர்கள் இந்நிலைப்பாட்டுடன் எங்கு செல்வர் என்பது எனக்கு உண்மையில் புரியவில்லை என்றார் அவர்.

திங்கள் மாலை ஜனாதிபதி ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரு கூட்டணியை அமைக்க இறுதி முயற்சிக்காக நான்கு முக்கியக் கட்சிகளின் தலைவர்களும் அதில் ஈடுபட வேண்டும் என்றார். ஆனால் டிசிப்ரஸ் அத்தகைய விவாதங்களில் வலதுசாரி ஜனரஞ்சகவாத Independent Greeks, கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியும் (KKE) கலந்து கொண்டால்தான் பங்கு பெற இருப்பதாக அறிவித்தார்.

கிரேக்கத்தின் ஆளும் உயரடுக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் சிரிசாவின் உதவியுடன் வெட்டுக்களுக்கான பெருகிவரும் மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி அதன்மீது கட்டுப்பாட்டைப் பெறலாம் என்று நம்புகின்றன. தேர்தலில் சிரிசா இரண்டாம் வலுவான அரசியல் சக்தியாக வெளிப்பட்டுள்ளது. இது அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு அறிவிக்கப்பட்ட எதிர்ப்பின் அடிப்படையில் வந்துள்ளது.

தேர்தல் முடிவு எந்த அளவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைகள் மக்களின் பரந்த அடுக்குகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது. வாக்காளர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர்தான், நாட்டின் அரசியலை 1974ல் இராணுவச் சர்வாதிகாரம் முற்றுப்பெற்றதில் இருந்து ஆதிக்கம் செலுத்தும் இரு ஆளும் கட்சிகளுக்கு வாக்களித்தன. இவை சமீபத்திய மாதங்களில் ஒரு கூட்டணி அரசாங்கத்தையும் அமைத்தன.

இந்த அவமதிப்பிற்குட்பட்டுவிட்ட இரு கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரு பெரும்பான்மையை அமைக்க முடியும் என்னும் உண்மை கிரேக்கத்தில் இருக்கும் ஜனநாயகத் தன்மையற்ற தேர்தல் முறையுடன் தொடர்புடையது. அதன்படி, அதிக வாக்குகள் பெற்ற ஒரு கட்சி, மிகக் குறைவான பெரும்பான்மையைக் கொண்டாலும், கூடுதலாக 50 இடங்களைப் பாராளுமன்றத்தில் பெறும். புதிய ஜனநாயகக் கட்சி சிரிசா பெற்ற 16.8% உடன் ஒப்பிடுகையில் மொத்த வாக்குகளில் 18.8% ஐப் பெற்றது. ஆனால் பாராளுமன்றத்தில் இடது எனப்படும் கட்சி பெற்றுள்ள 52 இடங்களுடன் இது ஒப்பிடுகையில் 108 இடங்களைக் கொண்டுள்ளது..

இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை இலக்குகளை பொறுத்த வரை தாங்கள் எச் சலுகைகளையும் கொடுப்பதற்கில்லை எனத் தெளிவாக்கியுள்ளனர். ஏற்கனவே அது பாரிய வேலையின்மை, வறுமை ஆகியவற்றிற்கு வழிவகுத்துவிட்டது. கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும் என்னும் கூட்டுக் கோஷங்களும் வந்துள்ளன. அத்தகைய நடவடிக்கை பெரும் பணவீக்கத்திற்கும், இன்னும் மோசமாக மக்களுடைய வறுமையை பெருக்குவதற்கும் வழிவகுக்கும்.

இந்த நெருக்கடியான நிலையில், கிரேக்க, ஐரோப்பிய உயரடுக்குகளின் முக்கிய முன்னுரிமை மக்கள் எதிர்ப்பைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய ஒரு வழிவகையைக் கண்டுபிடிப்பது ஆகும். சிரிசா தொடர்புடைய அரசாங்கத்தை அமைப்பது ஒரு சில போலி மாற்றங்களுடன் பாக்கியிருக்கும் வெட்டுக்களை சுமத்துவதற்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. அந்நிலைமை முற்றிலும் PASOK, ND, DIMAR ஆகியவற்றை நம்பியிருப்பதற்கு பதிலாக பயனுடையதாக இருக்கும்.

அத்தகைய ஆட்சியில் பங்கு பெறுவதற்கு சிரிசா கொள்கையாளவில் எதிர்ப்பு எதையும் கொள்ளவில்லை. கடந்த வாரம், சிரிசாதான் ND, PASOK ஆகியவற்றுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு பேச்சுக்களை தொடங்கியது: அப்பொழுது சமரஸ் ஒரு சில மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டார். Independent Greeks உடன்கூட சேர்ந்து உழைப்பதற்குத் தான் தயார் என டிசிப்ரஸ் கூறினார். அது அரசாங்கத்தை அமைப்பதற்காக, புதிய ஜனநாயக கட்சியில் இருந்து பிரிந்த ஒரு வலதுசாரிப் பிரிவு ஆகும்.

சிரிசா புதிய தேர்தல்களில் வெற்றிபெறக்கூடும் என்று புதிய கருத்துக் கணிப்புக்கள் கூறிய பின்னர்தான் கட்சி தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டுள்ளது. இதன்பின் டிசிப்ரஸ் தான் இரு ஆளும் கட்சிகளுடனும் ஒத்துழைக்க இயலாது, மாறாக வெட்டுக்களை எதிர்க்கும் கூட்டணி சக்திகளுடன் உழைக்கத்தயார் என அறிவித்தார்.

அதே நேரத்தில், அவர் தன்னுடைய சிக்கன எதிர்ப்பு வார்த்தை ஜாலங்களை குறைத்துக் கொண்டார். தான் முன்பு விடுத்திருந்த கடன் திருப்பிக் கொடுத்தலில் தற்காலிக நிறுத்தம் தேவை, ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகள் மறுபேச்சுக்களுக்கு உட்பட வேண்டும் என வலியுறுத்தியது ஆகியவற்றை அறிக்கையில் இருந்து நீக்கி விட்டார்.

சிரிசா அடங்கியிருக்கும் ஒரு கூட்டணியின் முக்கிய நோக்கம் ஐரோப்பிய ஒன்றியம், யூரோ நாணயம், ஐரோப்பிய முதலாளித்துவம் ஆகியவற்றை பாதுகாத்தல் என்பதாகத்தான் இருக்கும். ஒரு சில சிறு மாற்றங்களுக்கு அது ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு நடத்தலாம். அதற்கு இடதுசாரி வார்த்தை மறைப்பைக் கையாளலாம். அதன் பின் தொழிற்சங்கங்களுடன் அது கொண்டுள்ள தொடர்புகளை பயன்படுத்தி தொழிலாளர்களின் எதிர்ப்பை மீறி புதிய வெட்டுக்களை செயல்படுத்தலாம்.