World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Fears grow over European banks

ஐரோப்பிய வங்கிகளைப் பற்றிய அச்சங்கள் பெருகுகின்றன

By Nick Beams
18 May 2012

Back to screen version

G8 முக்கிய பொருளாதாரங்களின் தலைவர்கள் யூரோப்பகுதியில் கொந்தளிப்பு மோசமாகையிலும், ஒரு உலக நிதிய நெருக்கடி அவர்களின் தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கையில் அடுத்த இரண்டு நாட்கள் சந்திக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் கிரேக்கத்தின் திவால்தன்மையும், அது யூரோப்பகுதியில் இருந்து ஒதுக்கப்படுவதும் ஒரு படி அருகே கொண்டுவருகின்றது. இதனால் ஐரோப்பிய மற்றும் உலக நிதிய முறைக்குக் கணக்கிலடங்கா தாக்கங்கள் ஏற்படும். ஏனெனில் பல நாடுகளிலும், வங்கிமுறையின் செயலாற்றும் தன்மை பற்றிய அச்சங்கள் பெருகிவிட்டன.

உலகப் பொருளாதாரத்தை பேரழிவின் விளிம்பிற்குக் கொண்டுவந்த முதலீட்டு வங்கி லெஹ்மன் பிரதர்ஸ் சரிந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும், முழு நாடே இப்பொழுது திவால்தன்மையை எதிர்கொள்கிறது என்பது நெருக்கடியின் ஆழ்ந்த தன்மையை புலப்படுத்துகிறது. பிணையெடுப்புக்களுக்காக டிரில்லியன் கணக்கான டாலர்கள் வழங்கப்பட்டும், 2008ல் இருந்து பெரும் கடலென குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கப்பட்டும் கூட, உலக நிதிய முறை மீண்டும் சரியக்கூடும் என்னும் நிலையை எதிர்பார்க்கிறது.

உலக பங்குச் சந்தைகள் நேற்று தீவிரமாகச் சரிந்தன. FTSE எனப்படும் அனைத்துலகப் பங்குச் சந்தைக் குறியீடு இன்னும் 1 சதவிகிதம் குறைந்துவிட்டது. பங்குகள் இன்னும் இன்று சரியும் என்ற கணிப்புக்கள் வந்துள்ளன.

நேற்று கடன்தர நிர்ணயம் செய்யும் நிறுவனமான Moody’s 16 ஸ்பெயின் வங்கிகளின் தரங்களைக் குறைத்தது. மூன்று முக்கிய ஸ்பெயினின் கடன்கொடுக்கும் அமைப்புக்கள் மூன்று கட்டங்கள் தரக்  குறைவாக ஆக்கப்பட்டன. 26 இத்தாலிய வங்கிகளின் தரங்களைக் கடந்த வாரம் குறைத்தபின் இந்த முடிவு வந்துள்ளது. அதன் சமீபத்திய முடிவு சரிந்துகொண்டிருக்கும் ஸ்பெயினின் பொருளாதார மற்றும் அரசாங்கத்தின் கடன்திருப்பி செலுத்தமுடியாமை ஆகியவற்றினால் இம்முடிவு உந்துதல் பெற்றது என Moody’s கூறியுள்ளது.

ஸ்பெயினின் வங்கி முறையின் பெருகிய நெருக்கடியின் அடையாளமாக, அரசாங்கம் Bankia கூட்டுக் குழுமத்திடம் இருந்து பணத்தை திரும்பப் பெறுதல் என்ற பேச்சிற்கு இடமில்லை என்னும் அறிக்கையை வெளியிடும் கட்டாயத்திற்கு உட்பட்டது. உண்மையில் Bankia கடந்த வாரம் தேசியமயமாக்கப்பட்டது. ஸ்பெயினின் அரசாங்கம் அந்நிறுவனத்தில் கொண்டிருந்த பங்குகளை சந்தை நிகரமதிப்பாக மாற்றியது. இது வங்கியின் நிலைக்கு ஊக்கம் கொடுக்கும் எனக் கருதப்பட்டது. 2008 ல் சொத்துச் சந்தை சரிவின் விளைவாகத் தங்கள் கணக்கில் மிகஅதிக விற்கமுடியாச்சொத்துக்களை கொண்ட 7 தேசிய வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 2010ல் Bankia உருவாக்கப்பட்டது.

ஸ்பெயினின் செய்தித்தாள் El Mundo கடந்த வாரம் தேசியமயமாக்கப்பட்டபின் வாடிக்கையாளர்கள் 1 பில்லியன் யூரோக்களை எடுத்துக் கொண்டுவிட்டனர் என்ற தகவலை கொடுத்தபின் அரசாங்கம் Bankiaவின் செயற்பாட்டுத் தன்மை குறித்த உத்தரவாதங்களை அளித்துள்ளது.

Bankia வின் தலைவராக போனவாரம் பதவியேற்ற ஜோஸே கோறிகொல்ஸாரி அதன் சேமிப்பு வைப்புக்களில் அசாதாரண மாற்றங்கள் ஏதும் இல்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மிகப் பெரிய பொருளாதாரக் கொந்தளிப்பு காலத்தில் நாம் உள்ளோம், கடந்த சில நாட்களாக உள்ள இக்கடின நிலையில் Bankia கிட்டத்தட்ட சாதாரணமாக செயல்பட்டது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இக்கருத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், நம் வாடிக்கையாளர்கள் Bankia மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், பாதுகாப்பை உணரவேண்டும், ஏனெனில் Bankia மிக உறுதியான தன்மை உடைய நிறுவனம் ஆகும். வங்கியின் ஊழியர்கள் என்ற முறையில் மட்டும் இதைக் கூறவில்லை, இது ஸ்பெயின் அரசாங்கத்தில் வங்கி என்பதாலும் கூறுகிறேன் என்றார்.

இப்படி ஓர் அறிக்கையை கோறிகொல்ஸாரி வெளியிடும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ள நிலையே, ஆழ்ந்த பிரச்சனைகளைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இந்த உத்தரவாதங்கள் தேவையான விளைவை கொடுத்தனவா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் கடந்த ஜூலை பங்குச் சந்தையில் Bankia ஆரம்பிக்கப்பட்டபோது அதன் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன எனக்கூறப்பட்ட உத்தவராதங்களை ஒருவரும் மறந்துவிடவில்லை. இப்பங்குகள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எடுத்துக் கொண்டபின், அரசாங்கம் வங்கியை எடுத்துக் கொள்ளுமுன் 45% சரிவைக் கண்டிருந்தன.

கிரேக்க வங்கி முறையிலுள்ள நெருக்கடி --நாடு யூரோப்பகுதியில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, ட்ராஷ்மாவிற்குத் திரும்பினால் உள்வெடிப்பைக் காணக்கூடும் என்பது ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. அது பெயரிடப்படாத நான்கு கிரேக்க வங்கிகளை அது சொத்துக்களை பணமாக மாற்றும் தன்மையின் வழமையான முற்காப்பில் இருந்து அகற்றிவிட்டதாக அறிவித்தது. இந்த வங்கிகளுக்கு இப்பொழுது அவசரக்கால சொத்துக்களை பணமாக மாற்றும் உதவி கிரேக்க மத்திய வங்கியினால் வழங்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய மத்திய வங்கி கூறியுள்ளது; ஆனால் அதற்கு ஐரோப்பிய மத்திய வங்கியின் ஒப்புதல் தேவை. கிரேக்க வங்கிகளுக்கு ஐரோப்பிய மத்திய வங்கி ஆதரவைத் தொடர்கிறது என ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கிரேக்க ஜனாதிபதி காவோலோஸ் பாப்பௌலியாஸ் நாட்டின் வங்கிகள் பணம் இல்லாத நிலையில் இருக்கும் இடரைக் கொண்டுள்ள என எச்சரித்து, இது நம் தேசிய நிலைப்பாட்டிற்கே ஓர் அச்சுறுத்தல் என்றும் கூறினார். கிரேக்க மக்கள் நாள் ஒன்றிற்கு 100 மில்லியன் யூரோக்களை வங்கிகளில் இருந்து திரும்ப எடுத்துக் கொள்வதைக் காட்டும் அரசாங்க ஆவணங்களை அவர் மேற்கோளிட்டார். மே 6 தேர்தல்களுக்குப் பின் 1 டிரில்லியன் யூரோக்கள் வங்கிகளில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டன என்றார்.

அதே நேரத்தில் ஐரோப்பிய ஆணையம் கடந்த வாரம் கிரேக்க அரசாங்கம் ஒப்புதல் கொடுத்துள்ள சிக்கன நடவடிக்கைகளை கிரேக்கம் மதிப்பளிக்கவேண்டும், விதிகள் குறித்த மறு பேச்சுக்களுக்கு இடமில்லை என்று வலியுறுத்தியுள்ளது. நம் குடும்பத்தில் ஒரு பகுதியாக கிரேக்கம் இருக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸே பரோசோ செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அப்படிக் கூறினாலும், யூரோவில் தொடர வேண்டும் என்னும் இறுதி தீர்மானம் கிரேக்கத்திடம் இருந்துதான் வரவேண்டும்.

வேறுவிதமாகக் கூறினால், ஜூன் 17ல் திட்டமிடப்பட்டுள்ள புதுத் தேர்தல்களில் கிரேக்க மக்கள் எப்படி வாக்களித்தாலும், வரவிருக்கும் அரசாங்கம் ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணைக்குழு, சர்வதேச நாணய நிதியம் என்னும் முக்கூட்டின் ஆணைகளை செயல்படுத்த வேண்டும்இல்லாவிடில் நிதியளிப்பது நிறுத்தப்பட்டுவிடும்.

இந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய நிதி மந்திரிகள் கூட்டம் ஒன்றிற்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள சர்வதேச பிணை எடுப்புத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தக்கூடிய அரசாங்கத்தை கிரேக்கம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

கிரேக்கம்.... யூரோவில் தொடர்ந்து இருக்க விரும்பினால், அது விதிகளை ஏற்க வேண்டும். இல்லாவிடில் அது முடியாது. வாக்காளர்களிடம் இருந்து இந்த உண்மையை எந்தப் பொறுப்பான வேட்பாளரும் மறைக்க முடியாது என்றார் ஷொய்பிள. புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை நிலைமையை ஒன்றும் மாற்றிவிடவில்லை என்றும் அவர் கூறினார்.

யூரோப்பகுதியில் இருந்து வெளியேறுவதை கிரேக்கம் இனியும் தாமதப்படுத்த முடியாது என்ற தலைப்பில் முக்கிய கட்டுரை ஒன்றை ஜேர்மனிய இதழ் Der Spiegel வெளியிட்டு, சிக்கனத் திட்டத்தின் விதிகள் ஏற்கப்பட வேண்டும் என்னும் அதன் கடினப் போக்கில் இருந்து எந்தப் பின்வாங்கல் ஏற்பட்டாலும், அதன் விளைவுகள் குறித்து ஜேர்மனிய அரசாங்கம் கவலைகளைக் கொண்டுள்ளது என அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய பகுதி நாடுகள் விதிகளைத் தளர்த்தினால், மற்ற நெருக்கடி நிறைந்த நாடுகளிலும் சீர்திருத்தங்களுக்கான அழுத்தம் குறைந்துவிடும். அவ்வாறு ஏற்பட்டால், அவற்றின் கடன்கள் உயரும், முதலீட்டாளர்கள் யூரோவில் இருந்து அகன்றுவிடுவர், முழு நாணய ஒன்றியமும் முறிந்து போகும் என்று இதழ் கூறியுள்ளது. அத்தகைய சிதைவு தவிர்க்க முடியாமல் ஜேர்மனிய வங்கி முறையையும் கீழிழுக்கும்.

அட்லான்டிக் கடந்து, அமெரிக்கப் மத்திய வங்கிக்கூட்டமைப்பு பெருகிய முறையில் ஐரோப்பிய நிலைமை குறித்துக் கவலை கொண்டுள்ளது. மத்திய வங்கிக்கூட்டமைப்பு திறந்த சந்தைக் குழுவின் ஏப்ரல் மாதக் கூட்டத்தின் நடவடிக்கைகள் குறிப்பு இந்த வாரம் வெளியிடப்பட்டது, அது தன் குறைந்த வட்டிக் கொள்கையை குறைந்தபட்சம் 2014 கடைசிவரை தொடரும் கருத்தை கொண்டுள்ளது என்பதையும் காட்டுகிறது.

அரசாங்கக் கடன்களில் இருந்தும் ஐரோப்பிய வங்கி நிலைமையில் இருந்தும் தோன்றும் உலக நிதியச் சந்தைகளில் அழுத்தங்கள், இங்கும் வெளிநாட்டிலும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கணிசமான கீழிறக்க சிக்கல்களை வழங்குகின்றன என்று குறிப்புக்களில் உள்ளது. இக்கவலைகள் பிந்தைய வாரங்களில் கூடுதலாகியிருக்கும்.

உத்தியோகபூர்வ நிலைப்பாடு கிரேக்கம் யூரோப்பகுதிக்கள் வைத்திருக்கப்பட வேண்டும் என்றாலும், மாற்றுத் தயாரிப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கிரேக்கம் வெளியேறுதல் குறித்த கருத்தை இவ்வாரம் வெளிப்படுத்தி, நிலைப்பாட்டின்படி தான் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும், ஒருக்கால் அத்தகைய வெளியேற்றம் ஏற்பட்டால் அது ஒரு ஒழுங்கிற்குள் இருக்குமாறு செயல்படுத்த முயலப்போவதாகவும் கூறினார்.

இது மிக அதிகச் செலவையும், பெரும் அபாயங்களை கொடுக்கும். ஆனால் முறையாக அது பற்றியும் ஆராயவேண்டியது நம் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாகும் என்றார் லகார்ட்.

ஆனால் கிரேக்கம் யூரோப் பகுதியை விட்டு வெளியேறினால் எத்தைகைய விளைவுகளை ஏற்படுத்தும், ஐரோப்பிய, உலக நிதியச் சந்தைகளில் எத்தகைய நிதியக் குழப்பம் ஏற்படும் என்பது பற்றி ஒருவராலும் கூறமுடியவில்லை. கிரேக்கத்தில் உள்ள நிதிய நிறுவனங்களில் உலக நிறுவனங்கள் எத்தனை பங்கு கொண்டிருக்கும் என்னும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் $536பில்லியன் என்று காட்டுகின்றன. ஆனால் International Finance  மொத்தச் செலவினம் $1.2 டிரில்லியன் இருக்கலாம் எனக் கூறுகிறது.

கிரேக்கம் டிராஹ்மாவிற்குத் திரும்பினால், அதன் மதிப்பு யூரோவிற்கு எதிராக பாதியாகத்தான் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது ஓர் ஊகம்தான். பெரும் கீழ்நோக்குச் சரிவில் டிராஹ்மா அகப்பட்டுக் கொள்ளக்கூடும் என்ற இடரும் உண்டு.

கிரேக்கம் வெளியேறுதல் என்பது முழு ஐரோப்பிய வங்கி முறையிலும் ஒரு முடக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் வங்கிகள் ஒன்றுக்கொன்று கடன் கொடுக்காது; எந்த அளவிற்கு மற்றவை அபாயமான சொத்துக்களில் ஈடுபாடு கொண்டுள்ளது என்பதை அறிந்திராத காரணத்தால். அமெரிக்க நிதியாளர் வாரன் பபேற் ஒரு முறை கூறியது புகழ்பெற்றது: அலைகள் பின்னேறியபின்தான் எவர் நிர்வாணமாக நீந்தி வந்தார் என்பது தெரியவரும். ஏராளமான நிர்வாண நீச்சல்கள்தான் நடக்கின்றன எனத் தோன்றுகிறது.

இந்த வாரம் Business Spectator ல் எழுதிய ஆஸ்திரேலிய விமர்சகர் ரோபர்ட் கோட்லிப்சன் மேல்தளத்தில் இருந்து மிகஅதிகம் கீழே போகமலேயே பல ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் முட்டாள்தனமான, கிறுக்குத்தனமாக பங்கு/முதலீட்டுச் செயல்களில் ஈடுபட்டுள்ளன என்ற ஆழ்ந்த அச்சங்கள் உள்ளன. உலகின் வங்கிமுறை மிகவும் பின்னிப் பிணைந்துள்ளதால், எவருக்கும் எவர் திவால், எவர் திவால் இல்லை என்று தெரியாது; பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகளிடம், அவற்றின் பத்திர மதிப்பு, சந்தைகளில் பிற கடன்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளும்போது, மூலதனம் இல்லை என்பது மட்டும் நமக்கு நன்கு தெரியும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதம் JPMorgan Chase முன்னதாக வெளியிட்ட அறிவிப்பு ஒன்றை ஒட்டி இந்த அச்சங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அதிகரித்துள்ளன. முன்பு மிகப் பாதுகாப்பான முதலீட்டு வங்கிகளின் ஒன்று எனக் கருதப்பட்டது, பங்குவணிகத்தில் $2 பில்லியன் இழப்புக்களைக் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சிக்கன நடவடிக்கைத் திட்டம் வேண்டும் என்பதின் அரசியல் விளைவுகள் குறித்துச் சிலர் கவலை கொண்டுள்ளனர். இந்த வாரம் பைனான்சியல் டைம்ஸில் ஜோன் மேனார்ட் கீன்ஸின் வாழ்க்கை நூலை எழுதிய ரொபேர்ட் ஸ்கிடெல்ஸ்கி, வேர்சாய் உடன்படிக்கையின்படி ஜேர்மனி மீது கடுமையான பொருளாதார நிபந்தனைகளைக் கண்டித்து பகிரங்கப்புகழ்பெற்ற கீன்ஸ், 1923லேயே, ஒப்பந்தமுறையை முற்றிலும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துபவர்கள்தான் புரட்சியின் உண்மை பெற்றோர்களாவர் என எச்சரித்தார்.

வங்கி நெருக்கடிக்குப் பின் மீண்டும் பெருமந்த நிலை வராமல் தவிர்த்த ஐரோப்பிய நாடுகள் இப்பொழுது முந்தைய பேரழிவின் மிகத்தீவிர நிலைப்பாட்டிற்கு மீண்டும் குருட்டுத்தனமாக உந்துதல் கொடுத்திருப்பது ஒரு வரலாற்று விந்தைதான். ஜேர்மனி பற்றிய வரலாற்று நினைவு 1920-23ல் ஏற்பட்ட மிகப்பெரிய பணவீக்கம் பற்றி அறிந்துள்ளது. ஆனால் பணச் சுருக்கம் மற்றும் பெருமந்தநிலை என்று 1933ல் ஹிட்லரைப் பதவிக்குக் கொண்டு வந்தவற்றை மறப்பது சுலபமா? வரலாற்றின் மிகப் பெரிய படிப்பினைகளில் ஒன்று, பொருளாதாரம் அல்லது அதைச்சுற்றியுள்ள அரசியல் மையம் இவற்றை அழிக்காத வகையில் அரசாங்கக் கடன்கள் திறமையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதாகும். என அவர் எழுதினார்.