World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை University teachers hold protest campaignஇலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
By Kapila Fernando இலங்கையில் சகல பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் ஏப்பிரல் 26 அன்று சம்பள உயர்வு மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மூன்று மாதங்கள் நீண்டு சென்ற வேலை நிறுத்தத்தை அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியை நம்பி காட்டிக்கொடுத்த பின்னர், தமது பிரதான கோரிக்கைகளை வெற்றிகொள்வதற்காக போராட வேண்டிய தேவை விரிவுரையாளர்கள் மத்தியில் மீண்டும் வளர்ச்சியடைந்த நிலைமையின் கீழேயே பல்கலைக்கழக விரிவிரையாளர்கள் சங்க சமாசத்துக்கு இந்த அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள நேர்ந்தது. அன்று கொழும்பில் கூடிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள், கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர்கள் ஊர்வலமாகச் சென்று பொது நூலக கேட்போர் கூடத்தில் கூட்டமொன்றை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ருஹுணு பல்கலைக்கழகத்தின் விரிவரையாளர்கள் கொழும்பில் நடக்கும் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதை தடுப்பதற்காக பொலிஸ் தலையீடு செய்தது. அவர்கள் வந்த பஸ் கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள அங்குலான பொலிஸ் சோதனை நிலையத்தில் நிறுத்தி விசாரிக்கப்பட்டதோடு, அடையாள அட்டைகளை சோதித்து பெயர்களைக் குறித்துக்கொள்ளவும் அரசாங்கம் பொலிசாருக்கு பணித்திருந்தது. அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து கிடைத்த பணிப்பின் பேரிலேயே பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டது என அங்கிருந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மாணவர்களதும் தொழிலாளர்களதும் போராட்டங்கள், அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச சூழ்ச்சியின் பாகம் என கண்டனம் செய்த அரசாங்கம், கடந்த ஆண்டு விரிவுரையாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு தாக்குதல் தொடுத்தது. அரசாங்கத்துக்கு நெருக்கமான மாணவர்கள் சிலரைப் பயன்படுத்தி வேலை நிறுத்தத்தை தடை செய்வதற்காக நீதிமன்ற ஆணையையும் பெற்றுக்கொண்டது. சிரேஷ்ட பேராசிரியர் ஒருவரின் சம்பளம் 57,000 ரூபாயில் இருந்து 168,000 வரையும், கணிஷ்ட விரிவுரையாளர்களின் சம்பளம் 20,750 ரூபாயில் இருந்து 75,000 வரையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது உட்பட சம்பள கோரிக்கைகளும், கல்வி வளர்ச்சிக்குத் தேவையான ஆராய்ச்சிகளுக்கான கொடுப்பனவுகள், தங்குமிட வசதிகள் வேண்டும், மற்றும் நாட்டின் கல்விக்காக மொத்த தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு ஆறு வீதம் ஒதுக்க வேண்டும், தனியார் பல்கலைக்கழகங்களை ஸ்தாபிப்பதற்கு மாறாக அரச பல்கலைக்கழகங்களில் பொருள் மற்றும் மனித வளங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் அவர்களின் கோரிக்கைகளில் அடங்கியிருந்தன. ஆசியாவில் குறைந்த சம்பளம் பெறும் இலங்கையின் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 2006ல் இருந்து சம்பள உயர்வு கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அவர்களது அடிப்படை சம்பளத்தில் எந்தவொரு அதிகரிப்பும் ஏற்படாததோடு, ஊழியர் சேமலாப நிதியுடன் அல்லது ஓய்வு பெறும் போது கிடைக்கும் சேவைக்கால கொடுப்பனவுடன் தொடர்பற்ற கொடுப்பனவுகள் மட்டுமே அதிகரிக்கப்பட்டன. அதன் கீழ் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவருக்கு 15,000 ரூபாவும், தற்காலிக விரிவுரையாளருக்கு 1,500 ரூபாயும் அற்ப கொடுப்பனவு அதிகரிப்பு ஏற்பட்டதோடு, அதை ஏற்றுக்கொண்டு, தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் தொடர்ந்தும் முன் செல்ல முடியாது எனக் கூறியவாறே சங்கத் தலைமைத்துவம் போராட்டத்துக்கு முடிவுகட்டியது. கடந்த ஜூன் மாதம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த போது, மூன்று வருடங்கள் அடங்கிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அரசாங்கத்துக்கும் தொழிற்சங்கத் தலைமைத்துவத்துக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டது. ஆனால் இம்முறை (2012) வரவு செலவுத் திட்டத்தில், 300 ரூபா அளவிலான தொகையே அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச திறைசேரியின் செயலாளர் டி.பி. ஜயசுந்தரவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், இதற்கு மேலும் சம்பள உயர்வு கொடுப்பது பற்றி கவனம் செலுத்த முடியாது என்று தொழிற்சங்கத் தலைமைத்துவத்திடம் அவர் கூறியுள்ளார். சர்வதேச நிதி நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்காக, சமூகச் செலவுகளை மேலும் மேலும் வெட்டித்தள்ளும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை இலங்கையினுள்ளும் துரிதப்படுத்துவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, எதிர்வருகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தை நசுக்குவதற்காக பொலிஸ்-இராணுவ-அரச வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. 2006ல் இருந்து ஒட்டு மொத்த அரசாங்கத் துறையிலும் சம்பள அதிகரிப்பு கொடுக்கப்படாத நிலைமையின் கீழ், விரிவுரையாளர்களின் சம்பள அதிகரிப்பு கொடுப்பதானது முழு அரச சேவையிலும் சம்பள அதிகரிப்புக்கான பிரச்சாரத்துக்கு வழிவகுக்கும் என்ற பீதியை இராஜபக்ஷ கடந்த போராட்டத்தின் போது சுட்டிக் காட்டினார். “பணம் அச்சடித்து விரிவுரையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கச் சொல்கின்றீர்களா?” என்று அவர் வினவினார். விரிவுரையாளர்களின் போராட்டத்துக்கு சமாந்தரமாக, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, கல்வி தனியார்மயப்படுத்தல் மற்றும் வசதி பற்றாக்குறையையும் எதிர்கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களதும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் உட்பட ஏனைய தொழிலாளர்களதும், ஒடுக்கப்பட்ட மக்களதும் போராட்டம் கடந்த காலகட்டம் பூராவும் அபிவிருந்தி அடைந்தன. கொழும்பில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய தொழிற்சங்கத் தலைவர்கள், இந்தப் பிரச்சினை பற்றி எதுவும் பேசாமல், இராஜபக்ஷ அரசாங்கத்தின் கல்வி மானியங்கள் வெட்டு மற்றும் தனியார்மயப்படுத்தலும், இலங்கையிலும் உலகம் பூராவும் முதலாளித்துவ நெருக்கடியின் பாகமேவே மேற்கொள்ளப்படுகின்றது என்பதை வேண்டுமென்றே மூடி மறைத்தனர். அரசாங்கத்தின் “வீண் செலவுகளை” வெட்டித் தள்ளினால் கல்விக்காக மேலும் செலவுகளை மேற்கொள்ள முடியும் என அவர்கள் கூறினர். தொழிற்சங்க சமாசத்தின் கூட்டத்தின் போது விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் “எவ்வாறெனினும், அபிவிருத்தியடைந்த நாடுகள் என்று பெயர் பெற்றவை, தமது செல்வங்களில் இலவச சுகாதாரம், இலவச கல்வி ஆகிய இரு தேவைகளை இட்டு நிரப்பிக்கொள்வதற்கு இன்னமும் முயற்சித்துக்கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது. இது, இங்கு குறிப்பிடப்பட்ட நாடுகளில், கல்வி உட்பட நலன்புரிச் சேவைகளுக்கு எதிராக தொடுக்கப்படும் மோசமான தாக்குதலை மூடி மறைப்பதாகும். கல்வி மீது தொடுக்கப்படும் தாக்குதல் சர்வதேச ரீதியில் இடம்பெறுவதாகும். விரிவுரையாளர்கள் சங்க சமாசத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி, கூட்டத்தில் தெரிவித்ததாவது: “கல்வி தனியார்மயப்படுத்தல் உட்பட, வர்த்தக குறிக்கோள்களை முதன்மையாகக் கொண்ட சந்தையின் தேவைக்காக உழைப்பாளிகளை உருவாக்கும் நிலைப்பாடும், மற்றும் கல்வி என்பது நாகரீகத்தின் இன்றியமையாத பகுதி என்ற எமது நிலைப்பாடும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டத்தில் மோதிக்கொண்டுள்ளன” என்றார். அதே மூச்சில் தேவசிறி மேலும் கூறியதாவது: நாகரீக ரீதியில் இன்றியமையாத கல்வியை, இந்த இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மட்டுமே வெற்றிகொள்ள முடியும்” என்றார். கடந்தகால நீண்ட எதிர்ப்பு இயக்கத்தின் போது, தேவசிறி தூக்கிப் பிடிக்கின்ற இத்தகைய பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு கோரிக்கையும் வெல்ல முடியாமல் தோல்வி கண்டதற்கு காரணம், சம்பள உயர்வை கொடுக்காமல் இருக்கவும், இலவச கல்வியை தனியார்மயப்படுத்துவதன் மூலம் அதை இலாபகராமான வியாபாரமாக ஆக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதே ஆகும். தனது உரையின் முடிவில், அந்த கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைக்காமல் அதை மக்களுக்கு முன்வைப்பதாக தேவசிறி கூறுகின்றார். “மக்களின் அரசாங்கம் கல்விக்கு செய்வது என்ன என்பது பற்றி நாங்கள் மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். அது ஒவ்வொரு விரிவுரையாளரதும் கடமையாகும்.” இந்த கருத்து அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் இருந்து கை கழுவிக்கொள்வது மட்டுமன்றி, இலவசக் கல்வியை நாசமாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்தும் மோசடியான முயற்சியாகும். கடந்த ஆண்டு போராட்டத்தை நிறுத்தி ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சமாசம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் எதிர்ப்பை கரைந்துபோகச் செய்வதற்காகவே இம்முறை வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்துள்ளது. அன்றை விட இன்று பொருளாதர நெருக்கடி ஆழமடைந்துள்ள நிலைமையின் கீழ், அரசாங்கத்தின் தாக்குதலும் உக்கிரமடைந்திருந்தாலும், விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர்கள் இம்முறையும் தோன்றியுள்ள அரசியல் பிரச்சினையை மூடி மறைத்தனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் மூலம், அதை பதிலீடு செய்து சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்துகின்ற தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டு வராமல் விரிவுரையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியாது. இந்த அரசியல் போராட்டத்தை தொழிலாளர் வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே இட்டு நிரப்ப முடியும். அரச ஒடுக்குமுறையின் எதிரில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பாதுகாப்பதற்காக முன்னணிக்கு வருமாறு மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அழைப்பு விடுத்து, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் மேல் குறிப்பிட்ட முன்நோக்குக்காக விரிவுரையாளர்களின் கடந்த போராட்டத்தின் போது போராடின. அப்போது தேவசிறி கூறியதாவது: “அரசியல் வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போராடுவது அரசியல் கட்சியின் வேலை. விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சமாசம் ஒரு தொழிற்சங்கமாகவே செயற்படுகின்றது” என்று கூறினார். அரசியல் வேலைத்திட்டம், அதாவது சோ.ச.க. முன்வைப்பது போன்ற வேலைத் திட்டத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கு விரிவுரையாளர்களை வளைத்துக்கொள்வது கடினம் என்று தேவசிறி அங்கு மேலும் தெரிவித்தார். சோ.ச.க மற்றும் ஐ.எஸ்.எஸ்.இ. முன்வைத்த வேலைத் திட்டம் பலம் வாய்ந்த முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க விலங்கில் இருந்து பிரிந்து இந்த வேலை திட்டத்துடன் ஐக்கியப்படுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் நாம் கோருகின்றோம். |
|