சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: workers oppose the attempt to sell the state owned Galaboda estate

இலங்கை: அரசுக்கு சொந்தமான கலபொட தோட்டத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர்

By Gamini Karunathilake and I.A. Lokubanda
15 May 2012

use this version to print | Send feedback

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அரச பெருந்தோட்ட அபிவிருத்திச் சபைக்கு (ஜனவசம) சொந்தமான தோட்டங்களை விற்றுத்தள்ளும் வேலைத் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இந்த தாக்குதலை எதிர்கொண்டுள்ள கலபொட மற்றும் புரோஹில் தோட்டங்களின் தொழிலாளர்களை சந்திக்க உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் சென்றனர். கீழ் வருவது தோட்டத்தின் தொழிலாளர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும்.

தொழிலாளர்கள் 300 பேரின் தொழிலை அழித்து, நாவலபிட்டியில் அமைந்துள்ள அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்கு (ஜனவசம) சொந்தமான கலபொட தோட்டத்தை கடந்த ஏப்பிரல் 25ம் திகதி ஏலமிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, தொழிலாளர்களின் எதிர்ப்பால் நிர்வாகம் ஒத்திவைக்கத் தள்ளப்பட்டது. இந்த தோட்டத்தை ஏலமிடும் முயற்சி, அரசாங்கத்துக்கு சொந்தமான ஜனவசம தோட்டங்களை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்றுத்தள்ளும் நடவடிக்கையின் பாகமாகும்.

ஜனவசம, கலபொட தோட்டத்தை பேன் ஏசியா வங்கியில் ஈடு வைத்துள்ளதுடன் அதை விடுவித்துக்கொள்வதற்கு முடியாததால் அதை ஏலமிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூறினர்.

ஊழியர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய சேவைக்கால கொடுப்பணவு மற்றும் போனஸ் நிதிகளை பெருமளவில் கொடுக்காமல் மிச்சம் வைத்திருக்கும் ஜனவசம நிர்வாகம், அவற்றை கொடுப்பதற்காக என்று கூறிக்கொண்டு தொழிற்சாலையை கழற்றி விற்றுள்ள போதிலும், இன்னமும் அந்த பணம் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

ஏப்பிரல் 25 அளவில், நிர்வாகிகள் தோட்டத்தை விற்பதற்காக, சகல நடவடிக்கைகளையும் எடுத்திருந்தனர். தோட்டத்துக்குச் செல்லும் வழியில் தடை போட்டிருந்ததோடு வெளியார் அதற்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டிருந்தது. அதே சமயம், இந்த விற்பனை தொழிற்சங்க தலைமைத்துவத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்படுகின்றது என்பது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் மூவர், விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே உடன் ஹட்டனில் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்ததன் மூலம் தெளிவானது.

தோட்டத்தை விற்பதற்கு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளியான கோபால கிருஷ்னன் பேசும் போது, இந்த தோட்டத்தை விட்டு நாங்கள் எங்கே செல்வது? ஏலம் என்றாலும் நாங்கள் ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம். இ.தொ.கா. காரர்கள் மட்டுமன்றி ஏனைய அரசியல் கட்சிகளும் செய்தது பொய். நாங்கள் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்காக ஆட்சிக்கு வந்த எல்லா கட்சிகளுக்கும் உதவி செய்துள்ளோம். ஆனால், பிரச்சினைகள் உக்கிரமடைந்தது மட்டுமே நடந்தது என்றார்.

நாங்கள் இந்த தோட்டத்தை விட்டுச் செல்லவேண்டுமோ தெரியவில்லை. நாங்கள் மிகவும் பீதியுடன் இருக்கின்றோம். தோட்டத்தில் தொழிலும் இல்லை. செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. பொருள் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது, அந்த தோட்டத்தில் சேவையாற்றும் பத்மாவதி கூறினார்.

இரு மாதங்களுக்கு முன்னர், தோட்டத்தில் இருந்த பழைய பிரதான தேயிலைத் தொழிற்சாலையை ஜனவசம நிர்வாகம் கழற்றிச் சென்றமை, தொழிலாளர்கள் மேலும் சீற்றமடைவதற்கு காரணமாகியது. தொழிற்சாலையில் இருந்த மிகவும் பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் தொழிலாளர்களின் எதிர்ப்பின் மத்தியில் கழற்றிச் செல்லப்பட்டுள்ளது.

ஸ்டன்லி (35) என்ற தொழிலாளி தோட்டத்தின் நிலைமை பற்றி இவ்வாறு கூறினார்: இந்த தொழிற்சாலையில் நன்கு வேலை இருந்தது. அதன் பின்னர் அதன் இயக்கத்தை நிறுத்திவிட்டனர். தொழிற்சாலை கழற்றப்பட்டு கொழுந்துகளை அரைக்க வெளியில் செல்ல ஆரம்பித்ததுடன் எங்களுக்கு வேலை இல்லாமல் போனது. புதிதாக பயிரிடுவதும் இல்லை.

ஜெயபாக்கியம் என்ற இன்னுமொரு தொழிலாளி கூறும் போது, இந்த தோட்டத்தின் இதயம் போன்று இருந்த தொழிற்சாலையின் கோடிக்கணக்குப் பெறுமதியான மின் உற்பத்தி இயந்திரம் போலவே, வேறு பெறுமதியான உபகரணங்களும் சில மாதங்களுக்கு முன்னர், ஜனவசம நிர்வாகத்தால் அகற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டன. இப்போது வேறு தனியார் தொழிற்சாலையிலேயே கொழுந்து அரைக்கப்படுகின்றது, எனக் கூறினார்.

நாவலப்பிட்டி நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கலபொட பெருந்தோட்டத்துக்கு புகையிரத்திலேயே செல்ல முடியும். ஆகையால் அங்கு செல்வது மிகவும் சிரமமான காரியமாகும். வேறு பஸ் பாதையால் சென்றாலும் ஓரளவு தூரம் மட்டுமே செல்ல முடியும். அங்கிருந்து மீண்டும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். மூன்று பகுதிகளாக இருந்த இந்தப் பெருந்தோட்டம் 825 ஹெக்டயர் கொண்டது. 500 ஆக இருந்த தொழிலாளர் படை, கடந்த சில ஆண்டுகளுக்குள் 300 ஆக வீழ்ச்சி கண்டது. முழுத் தோட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கும் அதேவேளை, 5000 அளவிலான ஜனசமூகம் அங்கு வாழ்கின்றன.

தோட்டத்தில் வேலை நிலமை சம்பந்தமாக பேசிய ஏ. சிவபாக்கியம் (45), மாதத்துக்கு 5,000 ரூபா மட்டுமே கிடைக்கும். 15 நாட்களுக்கு மட்டும் தான் வேலை கிடைக்கும். அந்த வருமானத்தில் வாழ்வது மிகவும் சிரமம். 4 பிள்ளைகளை வளர்க்க வேண்டும். ஒழுங்காக சாப்பாடு கொடுக்க முடியாது. இங்கு தண்ணீரும் இல்லை, என்றார்.

ஜனவசமவுக்கு சொந்தமான பல தோட்டங்கள், இவ்வாறு மூடப்பட்டு குத்தகைக்கு வழங்கவோ விற்றுத் தள்ளவோ தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. கலபொட தோட்டத்தின் சிரேஷ்ட அதிகாரியான கருணாபால எதிரிசிங்க (57), ஜனவசமவுக்கு சுமார் 16 தோட்டங்கள் உள்ளன. அவற்றினை மிகவும் சிரமத்துடனேயே நடத்துகின்றனர். காரணம் வேறொன்றுமல்ல, நிதி இன்மையே. எங்களுக்கும் அடுத்து வரும் நாட்களில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது என்றார்.

 இப்பொழுதே எங்களுக்கு வாழ்வது சிரமம். தோட்டத்தில் வேலையும் இல்லை. பிள்ளை குட்டிகளை வளர்க்க முடியாது. எங்களது லயன் வீடுகளைப் பாருங்கள் தகரங்கள் இத்துப் போயுள்ளன. புதிய தகரங்கள் கொடுக்க மறுக்கிறார்கள். தேர்தல் காலத்தில் பொய்யாக வாக்குறுதி அளிக்கிறார்கள். இ.தொ.கா. தொழிற்சங்கத்தினைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை, அவர்கள் பொய்யர்கள், என்று அந்த தோட்டத்தில் இன்னுமொரு தொழிலாளி கூறினார்

பொருள் விலையைப் பற்றி சொல்லத் தேவையில்லை என்று கூறிய ஜெயபாக்கியம் தொழிலாளர்களின் வாழக்கை நிலமை சம்பந்தமாக விளக்கினார். இந்தப் பகுதியில் யாருக்கும் மலசல கூடம் கிடையாது. எல்லோரும் காட்டுக்கே செல்கிறார்கள். சுகாதார வசதிகளை எடுத்துக் கொண்டால், ஒரு ஆஸ்பத்திரியும், தாய்மார் வாட்டு ஓன்றும் உள்ளன. வைத்தியர் கிடையாது. மருத்துவிச்சி இல்லை. மருந்துகள் இல்லை. அது பெரிய பிரச்சினை 13 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ள நாவலப்பிட்டி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். அந்த தூரத்துக்கு செல்ல வாகன வசதிகள் கிடையாது. போகும் போதே நோயாளி இறந்துவிடுவார். இவை அன்றாட பிரச்சினைகள், என அவர் கூறினார்.

இதற்கும் மேலாக கலபொட பெருந்தோட்டத்தில் காணப்படும் நெருக்கடியான நிலைமை தொடர்பாக எம். முருகேசு (48) பேசும் போது, எங்களுக்கு இப்போது வேலை இல்லை, இரண்டு நாட்கள்தான் வேலை உள்ளது. பக்கத்து கிராமங்களுக்கு சென்றுதான் ஏதாவது சம்பாதிக்கின்றோம், என்றார்.

அந்த தோட்டத்தின் ஸ்டான்லி விளக்கியதாவது: எங்களைப் போன்ற இளைஞர்கள் தோட்டத்தில் வேலை இல்லாததால் மாபாகந்த, தெகிந்த, நாவலபிட்டிய போன்ற பிரதேசங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர். அநேகமானவரக்ள் கொழும்புக்குச் செல்கின்றார்கள். அவ்வாறு செல்லும் போது குடும்பமும் பெண் பிள்ளைகளும் பாதுகாப்பின்றி தணிமைப்படுகின்றனர். அவ்வாறு சென்று கூலி வேலை செய்கின்றனர். தேங்காய் பறிப்பது, மணல் மற்றும் கல் இழுப்பது, மலசலகூட குழி வெட்டுவது, புல் செதுக்குவது, குப்பை இழுப்பது போன்ற வேலைகளை செய்தால் ஒரு நாளுக்கு 350 ரூபா (3 டொலர்) கிடைக்கும். அன்றாடம் வேலை இல்லை.

இந்த தோட்டத்தில் சில பகுதி காடாகுவதற்கு இடமளிக்கப்பட்டுள்தோடு, 20 ஏக்கர் அளவிலான பகுதி இப்போது 30 ஆண்டுகளுக்கு ஒரு வியாபாரிக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 37 ஏக்கர் நிலம் ஆணைக்குழு ஒன்றின் மூலம், ஒரு பரப்பு (பேர்ச்சர்ஸ்) 1000 ரூபாவுக்கு மாபாகந்த பிரதேசவாசிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு பட்டியலிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர். இந்த விற்பனையை நியாயப்படுத்துவதற்காக தேயிலை செய்கையால் வளம் குறைந்துள்ள இந்த நிலத்தை வேறு பயிர்களுக்காக பயன்படுத்த வேண்டும் என ஜனவசம தெரிவிக்கின்றது.

புரோஹில் தோட்டம்

100 தொழிலாளர்கள் வாழ்கின்ற, இரண்டு பகுதிகளாக 80 ஏக்கர் அளவு பயிரிடப்பட்டுள்ள புரோஹில் தோட்டமும் இந்த நிலைமையை எதிர்கொண்டுள்ளது. நாவலப்பட்டி நகரில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் தலவாக்கலை வீதியில் இந்த தோட்டம் அமைந்துள்ளது.

இந்த தோட்டத்துக்கு உரிமை கோரும் சொந்தக்காரி, தொழிலாளர்களை தோட்டத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக, ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், எஞ்சிய சேமலாப நிதியை கொடு மற்றும் தோட்டத்தில் வேலை வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் பிரச்சாரம் செய்தனர்.

புரோஹில் தோட்ட தொழிலாளியான விக்ரம் பாலசிங்கம் தெரிவித்ததாவது, இந்த தோட்டத்தில் இருந்த தொழிற்சாலையை கழற்றி கொண்டுபோய்விட்டனர். ஊழியர் சேமலாப நிதி 2001 ஜூலை மாதத்தில் இருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை. ஜனவசம நிர்வாகம் பணம் இல்லை என்றும், மிகவும் சிரமத்துடன் தோட்டத்தை நடத்துவதாக கூறுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம், உக்கிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதன் பாகமாக, இந்த தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு முதலீடு செய்யாமல் தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளிக்கொண்டிருக்கின்றார். இந்த தோட்டத்தை துண்டாடும் மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு தொழில் மட்டுமன்றி, தாம் இதுவரை வாழ்ந்த குறைந்தமட்ட வசதிகள் கொண்ட லயன் அறைகளும் இல்லாமல் போகும்.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் தொழில் அழிப்புக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் அணிதிரள வேண்டியிருப்பதோடு, அதை தோற்கடிப்பதற்காக, தனியார் இலாபத்துக்காக இயங்கும் கைத்தொழில் துறையில் முதலாளித்துவ உரிமையை தூக்கிவீசி, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக ஆட்சியின் கீழ் பெருந்தோட்டங்களை மக்கள்மயப்படுத்த வேண்டும். இதைச் செய்வதற்கு சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரள்வது அவசியத் தேவையாக உள்ளது.

இந்த வேலைத் திட்டத்தை பற்றி கலந்துரையாடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்துள்ள தோட்டத் தொழிலாளர் மாநாட்டுக்கு வருகை தருமாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். இந்த மாநாடு மே 20ம் திகதி, ஹட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில், காலை 10 மணிக்கு நடக்கவுள்ளது.