World Socialist Web Site www.wsws.org |
Elections in Greece and France herald fresh social conflictsகிரீஸ் மற்றும் பிரான்ஸ் தேர்தல்கள் புதிய சமூக மோதல்களுக்குக் கட்டியம் கூறுகின்றன
By Peter Schwarz ஞாயிறன்று நடந்த தேர்தல்கள் ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்குமான விளைவுகளைக் கொண்டிருக்கிறது. பிரான்சில் நிக்கோலோ சார்க்கோசி வெளியேற்றப்பட்டதும் கிரீஸில் ஆளும் கட்சிகள் அனைத்தும் சின்னாபின்னமான தோல்வியைத் தழுவியதும் ஐரோப்பிய ஒன்றியத்தால் முன்வைக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு பரந்த மக்களிடம் எழுந்திருந்த எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாகும். அவை அதிகரித்த சமூக மோதல் மற்றும் கடுமையான அரசியல் நெருக்கடியின் காலகட்டம் ஒன்றுக்குக் கட்டியம் கூறுகின்றன. பிரான்சில் நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியை எதிர்த்துப் போட்டியிட்ட பிரான்சுவா ஹாலண்ட் ஏறக்குறைய 4 சதவீதம் என்ற ஒப்பீட்டளவில் மிகக் குறைந்ததொரு வித்தியாசத்தில் வெற்றி கண்டார். எப்படியிருப்பினும் எலிசே மாளிகையில் ஆள் மாறியிருப்பது ஒரு அரசியல் திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது. ஐந்தாம் குடியரசின் வரலாற்றில் நடப்பு ஜனாதிபதி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமல் போவது என்பது ஒரே ஒரு முறை தான் நடந்திருக்கிறது - 1981ல் வலெறி ஜிஸ்கார்ட் டெ’எஸ்ட்டான் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படாது போனார். அச்சமயத்தில் பிரான்சுவா மித்திரோன் ஜனாதிபதிப் பதவியை வென்ற சோசலிஸ்ட் கட்சியின் முதலாம் மனிதராய் ஆனார். இப்போது மித்திரோனின் ஜனாதிபதிப் பதவிக் காலம் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹாலண்ட் தான் நாட்டின் மிக உயர்ந்த பதவியை கையிலெடுக்க இருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது பிரதிநிதி ஆவார். ஹாலண்ட் ஒரு அனுபவம் வாய்ந்த முதலாளித்துவ அரசியல்வாதி. இவரது வேலைத்திட்டத்திற்கும் சார்க்கோசியின் வேலைத்திட்டத்திற்கும் இடையிலான வித்தியாசம் மிக நுட்பமானது மட்டுமே. இவர் தனது தேர்தல் வெற்றிக்கு பிரதானமாக, இடதுசாரி என்று கருதப்படுவனவான அமைப்புகளுக்குத் தான் நன்றிக்கடன் பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கான மாற்று ஹாலண்டின் மூலம் தான் கிடைக்கும் என்ற ஒரு பிரமையை இவை தான் தொடர்ந்து ஊக்குவிக்க முனைந்து வந்தன. முதலாம் சுற்றில் 11 சதவீத வாக்குகளைப் பெற்ற இடது முன்னணி வேட்பாளரான ஜோன் லூக் மெலன்சோன் இரண்டாம் சுற்றில் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தார். இது மட்டுமே சார்க்கோசியை அகற்றுவதற்கும் கொள்கை மாற்றத்தைக் கொண்டு வருவதற்குமான ஒரே வழி என்று வாதிட்டு அவர் இதனைச் செய்தார். இதே வாதத்தைத் தான் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி(NPA)மற்றும் (LO)ஆகிய கட்சிகளும் பயன்படுத்தின. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் இருவருமாய் மொத்தம் ஏறக்குறைய 2 சதவீத வாக்குகளை முதல் சுற்றில் பெற்றிருந்தனர். கிரீஸில் பழமைவாத புதிய ஜனநாயகம்(ND)கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியான PASOKம் துரும்புகளாக்கப்பட்டிருக்கின்றன. 37 வருடங்களுக்கு முன்பாக இராணுவ சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தது முதல் இவை இரண்டும் தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கட்டளைகளை ஒன்றுபட்டுத் திணித்திருக்கின்றன. கடைசியாய் மூன்று வருடங்களுக்கு முன் நடந்த தேர்தலுடன் ஒப்பிட்டால் ND இன் வாக்குகள் 2.3 மில்லியன் என்பதில் இருந்து 1.2 மில்லியனாகச் சரிந்திருக்கிறது. PASOK வாக்குகள் 3 மில்லியனில் இருந்து 0.8 மில்லியனாகச் சரிந்திருக்கிறது. இந்த இரண்டு பாரம்பரிய முதலாளித்துவக் கட்சிகளும் சேர்ந்து மொத்தமாய் பதிவான வாக்குகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே பெற்றிருக்கின்றன. ஜனநாயக விரோதமான ஒரு தேர்தல் ஷரத்து NDக்கு நாடாளுமன்றத்தில் கூடுதலாக 50 இடங்களை அளிப்பதால் ND தான் நாடாளுமன்றத்தில் மிக அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கிறது என்றாலும், அப்படியும் கூட அதற்கு 300 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்குப் போதுமான ஆதரவு பற்றாக்குறையாக இருக்கிறது. தீவிர இடது கூட்டணி(SYRIZA)தான் இத்தேர்தலில் உண்மையான வெற்றியாளராக எழுந்திருக்கிறது. இது தனது வாக்கு அளவினை 315,000 என்பதில் இருந்து 1.1 மில்லியனுக்கும் அதிகமான அளவுக்கு மும்மடங்காய் உயர்த்த முடிந்திருக்கிறது. SYRIZA தலைவரான அலெக்சிஸ் சிப்ராஸ் சர்வதேச அளவில் மெலன்சோனின் இடது முன்னணியுடனும் ஜேர்மன் இடது கட்சியுடனும் நெருங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார். அவர்களைப் போலவே இவரும், முதலாளித்துவ எதிர்ப்பு வாய்வீச்சைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நடப்பு முதலாளித்துவ ஸ்தாபனங்களை ஆதரித்துக் கொண்டும் பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறார். பிரச்சாரத்தின் போது எவர் எப்போதும் வலியுறுத்திய விடயம்: “நாங்கள் யூரோவுக்கு எதிரானவர்களில்லை, மாறாக யூரோவின் பெயரால் பின்பற்றப்படும் கொள்கைகளுக்கு மட்டுமே எதிரானவர்கள்.” அதி வலதின் பக்கத்தில், பேரினவாத சுதந்திர கிரேக்கக் கட்சியும்(Independent Greeks)நவ நாசிச பொன் விடியல் கட்சியும் (Golden Dawn) கணிசமான முன்னேற்றம் கண்டன. ND-PASOK கூட்டணியின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைக்கு எதிராக தேசியவாத வீராவேசத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட இவை முறையே 11 சதவீத மற்றும் 7 சதவீத வாக்குகளைப் பெற்றன. இரண்டாவது பெரிய கட்சியாக SYRIZA இப்போது கிரேக்க அரசியலில் ஒரு மையமான பாத்திரத்தை வகிக்கிறது. ஒரு புதிய அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தைகளில் இக்கட்சி நெருக்கமாய் சம்பந்தப்பட்டிருக்கும். அரசியல் சட்டத்தின் படி அரசாங்கம் அமைக்க முதலில் அழைக்கப்பட்ட ND இன் தலைவரான அண்டோனிஸ் சமராஸ் தன்னால் ஒரு பொருத்தமான கூட்டணியை உருவாக்க முடியவில்லை என்று திங்களன்று அறிவித்து விட்டதால் இப்போது அந்த வாய்ப்பு SYRIZA தலைவரான சிப்ராஸ்க்குச் சென்றிருக்கிறது. தேவையானதொரு பெரும்பான்மையுடன் ஒரு அரசாங்கம் மே 17 அன்று உருவாக்கப்படாது போகுமானால், புதிய தேர்தல் அதிகப்பட்சம் ஜூன் 17க்குள்ளாக நடத்தப்பட்டாக வேண்டும். ஜேர்மன் அரசாங்கமும் ஞாயிறன்று ஒரு கடுமையான தோல்வியைச் சந்தித்தது. அங்கேலா மேர்க்கேலின் ஆளும் கூட்டணியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் கூட்டணி - இக்கூட்டணி முன்னதாய் வடக்கு மாநிலமான Schleswig-Holstein இல் ஆட்சி செய்தது - SPD, பசுமைக் கட்சி மற்றும் டேனிஷ் சிறுபான்மைக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியிடம் தனது பெரும்பான்மையை இழந்தது. CDU 1 சதவீத வாக்குகளையும் FDP 7 சதவீத வாக்குகளையும் இழந்தன. சார்க்கோசி மற்றும் மேர்கெல் இருவரும் ஒட்டுமொத்தமாகத் தேர்தல் தோல்வியைச் சந்தித்துள்ளதும் கிரீஸில் நடந்திருக்கக் கூடிய தேர்தல் எழுச்சிகளும் ஒரு தீவிரமான சமூக மோதல்களின் காலகட்டத்திற்கு முன்னறிவிப்பு செய்கின்றன. இதுதான் முன்னணி வணிக இதழ்களும், அத்துடன் கணிசமான சரிவைக் கண்டிருக்கும் பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச் சந்தைகளும் வரைந்துள்ள முடிவாகும். திங்களன்று காலை யூரோவின் பரிவர்த்தனை விகிதம் பெருமளவு சரிந்தது, ஐரோப்பிய பங்கு விலைகள் நட்டங்களைப் பதிவு செய்தன. அதே சமயத்தில் தெற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கப் பத்திரங்களின் மீதான வட்டி விகிதங்கள் உயர்ந்து சென்றன. The Frankfurter Allgemeine கிரேக்க தேர்தல் முடிவுகளை ஒரு “எச்சரிக்கை அடையாளம்” என விவரித்தது: “தேர்தல் முடிவுகள் கிரீஸுக்கு அழிவு தரக் கூடியது, ஐரோப்பாவுக்கு அழிவு தரக் கூடியது.” ஜேர்மனியின் ஃபைனான்சியல் டைம்ஸ் தனது கருத்தில், கிரேக்க மக்கள் “தேர்தலை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அரசாங்கத்தின் சேமிப்புத் திட்டங்களின் மீது வாக்களித்துள்ளனர். இதன் விளைவு ஐரோப்பாவுக்கு அழிவு தரக் கூடியதும் ஆபத்தானதும் ஆகும். குறிப்பாக, தீவிர சக்திகள் பெரும் வெற்றிகளை ஈட்டியிருக்கின்றன, இக்கட்சிகள் முற்றுமுதலாய் கடனில் முழுகி விட்ட ஒரு நாட்டினை மறுசீரமைப்பு செய்வதை நிராகரிப்பவை ஆகும்.” Handelsblatt எழுதியது: “நிதி அழிவுடன் சேர்த்து அரசியல் குழப்பத்தையும் கட்டவிழ்த்து விட கிரீஸ் அச்சுறுத்துகிறது.... இந்தத் தேர்தல் எல்லாவற்றுக்கும் மேலாய் கோபத்தினை அடிப்படையாகக் கொண்ட வாக்குப் பதிவாக ஆகியிருக்கிறது.” அப்பத்திரிகை எச்சரிக்கிறது: “இந்தத் தேர்தலில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அரசியல் பூகம்பமானது உண்மையில் கிரீஸில் இருந்து நெருக்கடியில் இருக்கும் பிற நாடுகளுக்குத் துரிதமாய்ப் பரவக் கூடிய ஒரு சமூக வெடிப்புக்கான முன்னறிவிப்பாகும்.” ஹாலண்ட், மெலன்சோன், சிப்ராஸ் மற்றும் இன்ன பிற தலைவர்கள் எல்லாம் நிதிச் சந்தைகளின் உத்தரவுகளுக்குத் தலைவணங்குவார்கள் என்பதில் இந்த வட்டங்களில் அதிகம் சந்தேகம் எழவில்லை. Handelsblatt இல் வெளியான ஒரு கருத்து கூறியது: “பெரும் வளர்ச்சித் தொகுப்புகள் குறித்து ஆர்வமுடன் இருக்கும் சோசலிஸ்டான பிரான்சுவா ஹாலண்ட் தனது பதவிக் காலத்தில் முதல் வருடத்திலேயே உண்மையான யதார்த்தத்தைக் கண்டுணரத் தள்ளப்படுவார். சந்தைகள் தான் அவற்றின் விருப்பத்தை புதிய ஜனாதிபதியின் மீது திணிக்கவிருக்கின்றன. மாறாக சந்தைகள் மீது ஜனாதிபதி ஆதிக்கம் செய்வது என்பது நடக்காது.” சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரான மெலன்சோனுக்கு சந்தையின் உத்தரவுகளுக்கு கட்சி கீழ்ப்படியும் என்பது நன்கு தெரியும். அவர் ஹாலண்டுக்கு தனது முழு விசுவாசத்தை உறுதியளித்திருக்கிறார். ஹாலண்டின் தேர்தல் வெற்றி குறித்த அவரது கருத்து அமைச்சரவைப் பதவிக்கு கோரிக்கை வைப்பது போல் தொனிக்கிறது. ஞாயிறன்று ஹாலண்ட் பெற்ற வெற்றிக்கு தனது வலைப் பதிவில் மெலன்சோன் வாழ்த்து தெரிவித்திருந்தார். “நமது ஜனாதிபதிக்கும் நமது நாட்டிற்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதிய அவர் “இம்முடிவைக் கொண்டுவருவதற்கு உதவிய வாக்குகளுக்குச் சொந்தக்காரர்களான இடது முன்னணியின் நான்கு மில்லியன் வாக்காளர்களுக்கு”ம் வாழ்த்துத் தெரிவித்தார். “வலதின் தேர்தல் தோல்வியும் பிரான்சுவா ஹாலண்ட் தேர்வு செய்யப்பட்டதும், முன்நிற்கும் தொலைபயனுடைய கோரிக்கைகளின் வெற்றிக்குக் கொண்டு செல்வதை உறுதி செய்ய இடது முன்னணி பாடுபடும்” சிப்ராஸ் மற்றும் SYRIZAவின் விடயத்தில், அரசின் திவால்நிலை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றுவது பற்றிய அச்சுறுத்தலே அவர்களை வழிக்குக் கொண்டுவரப் போதுமானவை. ”சிப்ராஸ் உண்மையில் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிரான அவரது வாய்வீச்சில் தீவிரமானவராய்த் தான் இருக்கிறார்” என்று குறிப்பிடும் Frankfurter Allgemeine அற்ப தன்னிறைவுடன் சொல்கிறது, “ஆனால் யூரோ மண்டலத்தில் இருந்து விலகிக் கொள்வது குறித்தும் கூட அவர் பேசுகிறார்” என்று. மெலன்சோனின் இடது முன்னணி மற்றும் சிப்ராஸின் SYRIZA போன்ற அமைப்புகள் எல்லாம் வருகின்ற காலத்தில், ஞாயிறன்றான தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்ட கோபத்தையும் ஆவேசத்தையும் தலை துண்டிப்பதிலும் ஒடுக்குவதிலும் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றவிருக்கின்றன. இந்த வகையில் அவர்களுக்கு வசதி செய்தளிக்கும் முகமாக வெறுப்பைச் சம்பாதித்த ஐரோப்பிய நிதிய ஒப்பந்தத்திற்குத் துணையளிப்பாய் ஒரு “வளர்ச்சி ஒப்பந்த”த்தையும் அளிக்க விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அத்தகையதொரு நடவடிக்கைக்கான ஒரு அகன்ற கருத்தொற்றுமை ஹாலண்ட் மற்றும் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியினர் தொடங்கி ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் மரியோ டிராகி மற்றும் ஃபைனான்சியல் டைம்ஸ் வரை நீண்டு செல்கிறது. அரசாங்கம் இந்த விடயத்தில் யாரின் வாக்குகள் மீது தங்கியிருக்கிறதோ, அந்த SPD, அரசாங்கம் ஒரு துணையளிப்பு வளர்ச்சி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நாடாளுமன்றத்தில் நிதிய ஒப்பந்தத்திற்கு தான் ஒப்புதல் அளிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. ஹாலண்டின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், SPD தலைவரான சிக்மார் காப்ரியேல் அறிவித்தார்: “இப்போதைய கேள்வி இதுதான்: மேர்கெலும் அவரது கூட்டணியும் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தக் கூடிய நிலையில் இருக்கின்றனரா? பிரெஞ்சு சோசலிஸ்டுகளுடன் இணைந்து நாங்களும் அத்தகையதொரு பேச்சுவார்த்தைக்குத் தயாராய் இருக்கிறோம்.” மேர்கெல் ஒத்துழைப்பதற்கான தனது விருப்பத்தை சமிக்கை செய்திருக்கிறார். ஒரு வளர்ச்சி ஒப்பந்தம் என்பது என்ன என்பதையும் அவர் தெளிவாக்கி விட்டிருக்கிறார்: தொழிலாளர்களைப் பலியாக்கி போட்டித்திறனை மேம்படுத்துவதான கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிற்துறையின் சில பிரிவுகளின் இலாபங்களுக்கு ஊக்கமளிக்க இப்போதிருக்கும் ஐரோப்பிய ஒன்றியக் கையளிப்புகளை மறுவிநியோகம் செய்வது. அதேசமயத்தில் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்கள் எல்லாம் தளர்ச்சியின்றித் தொடர வேண்டும். ஹாலண்டும் காப்ரியேலும் ஏற்கனவே இதில் உடன்பாடு கண்டிருக்கிறார்கள். மெலன்சோனும் சிப்ராஸும் தங்களது சொந்த சம்மதத்தை மறைத்து வெளிப்படுத்துவதற்கு அவசியமான “இடது” வாசகங்களைக் கண்டுபிடிப்பார்கள். வரும் காலத்தில், தொழிலாளர்கள் இந்த அமைப்புகள் மற்றும் அவர்களது போலி வாக்குறுதிகளில் இருந்து முறித்துக் கொண்டு ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான சுயாதீனமன ஐக்கியப்பட்ட போராட்டத்தை கையிலெடுப்பதில் தான் எல்லாமே தங்கியிருக்கிறது. |
|