World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The attacks on Günter Grass—a balance sheet

குந்தர் கிராஸ் மீதான தாக்குதல்கள் – ஓர் இருப்புநிலைக் குறிப்பு

By Peter Schwarz
5 May 2012

Back to screen version

ஜேர்மனிய எழுத்தாளர் குந்தர் கிராஸ் தன்னுடைய என்ன கூறப்பட வேண்டும் என்னும் கவிதையை வெளியிட்டு சரியாக ஒரு மாதம் ஆகின்றது. ஒரு ஆரம்ப இருப்புநிலைக் குறிப்பை வரைய இது போதுமான அவகாசத்தைக் கொடுக்கிறது.

ஜேர்மனிய கூட்டாட்சிக் குடியரசின் வரலாற்றில் பல சீற்றம் நிறைந்த மோதல்கள் இருந்துள்ளன. ஆனால் செய்தி ஊடகம், கவனத்திற்குரிய பதிப்புக்கள் என்று கூறப்படுபவை உட்பட 84 வயது நோபல் பரிசு பெற்றவர் மீது கடந்த சில வாரங்களாக வெள்ளமெனக் குவிக்கப்பட்ட சாடல்கள், அவதூறுகள், அவமதிப்புக்கள் எனக் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு ஏதும் இருந்தது இல்லை.

யூத எதிர்ப்பாளர் என்னும் குற்றச்சாட்டு பல நேரங்களிலும், பல வகைகளிலும் எழுப்பப் பட்டுள்ளது. தன்னுடைய கடந்த காலத்தை ஒரு இறுக்கமான மறைப்பால் மூடி வைத்திருந்த நேரத்தில் ஜேர்மனிய சமூகத்தின் முன் கண்ணாடியை காட்டிய நேரத்தில், அதுவும் அதன் அரசாங்கம், நிர்வாகம், நீதித்துறை, ஆசிரியர்குழு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிக நிர்வாகிகளின் அறைகள் ஆகியவை ஆயிரக்கணக்கான முன்னாள் நாஜிக்கள் நிறைந்திருந்த நேரத்தில் காட்டப்பட்டபோது! The Tin Drum எழுதிய ஆசிரியருக்கு எதிராக இது வந்துள்ளது. Spiegel Online  ல் வரலாற்றாளர் மைக்கேல் வொல்ப்சோன் கிராஸின் கவிதை ஒரு போலிக் கவிதை வடிவத்தில் மறைத்து கொண்டுவரப்பட்டுள்ள யூத எதிர்ப்புத் துண்டுப்பிரசுரம் என வலியுறுத்திகிறார். இது நவநாசி NPD கட்சியின் பத்திரிகையான NATIONAL ZEITUNG ல் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறுகிறார். Berliner Zeitung ல் சுவிஸ் வரலாற்றாளரும், பிராங்பேர்ட்டில் யூதக் காட்சியரங்கின் இயக்குனருமான ரபேல் குரோஸ் இக்கவிதையை வெறுப்புக் கவிதை என அழைத்து, அப்படியானால் அவரை யூத எதிர்ப்பாளர் என்று விவரிப்பதில் என்ன பிரச்சினை? என்று கேட்கிறார்.

Die Zeit ல் செய்தியாளர் ஜோசப் ஜொவ்வ, சிக்மொண்ட் பிரோய்ட்டை குறிப்பிட்டு யூத எதிர்ப்பின் மூலத்தை கண்டுபிடிக்கிறார்: இது கிராஸின் கவிதையில் இருந்து ஊற்றென வருவது ஆழ்மனத்தில் இருந்து, சக்திவாய்ந்த தடுக்கப்பட்ட கருத்துக்களான வெட்கம், குற்ற உணர்வு ஆகியவையாகும். இந்த வகையில்தான் கிராஸிற்குள் இருக்கும் உளவியல் செயல்படுகிறது என்று ஜொவ்வ அறிவிக்கிறார். Fassbinder இன் ஒரு நாடகத்தில் யூத எதிர்ப்புப் பாத்திரத்தை இதற்கு மேற்கோளிடுகிறார்: அவர் நம்மை உறிஞ்சிவிடுகிறார்; இந்த யூதர். நம்முடைய இரத்தத்தைக் குடித்து, நம்மைத் தவறாகக் காட்டுகிறார்; ஏனெனில் அவர் யூதர், நாம் குற்றவாளிகள். எங்கிருந்து வந்தாரோ, அங்கேயே அவர் இருந்தால், அல்லது அவரை கொலை செய்திருந்தால், நான் நிம்மதியாகத் தூங்க முடியும். இது ஒன்றும் நகைச்சுவை அல்ல. என்னுள் உருவாகும் சிந்தனை இப்படித்தான் உள்ளது.

கிராஸை ஒரு யூத எதிர்ப்பாளர் என்று சித்தரிக்கும் நீண்ட இகழ்வான அவதூறு கூறும் பட்டியலில் இருந்து மேலும் மேற்கோள்களைக் காட்டி நம் வாசகர்களைத் தொந்தரவு செய்ய நாம் விரும்பவில்லை. உண்மையில், யூத எதிர்ப்பு என்னும் குற்றச்சாட்டு கிராஸிற்கு எதிராகக் கூறப்படும் மோசமான அவதூறும் அல்ல. சில எழுத்தாளர்கள் அவரை ஒரு நாசி என்றே சாடுகின்றனர்.

Berliner Morgenpost இன் இலக்கியத் திறனாய்வாளர் ரில்மான் க்ரௌஸ், கிராஸின் கவிதையை நாசி பிரச்சாரத் தலைவர் இகழ்வுற்ற ஜோசப் கோயபல்ஸ் 1943ம் ஆண்டு பேர்லின் விளையாட்டு அரண்மனையில் கொடுத்த உரையில் முழுப் போர் தேவை என்பதுடன் ஒப்பிட்டுள்ளார். இக்கவிதையில் கிரௌஸ் நாஜிச் சிந்தனையில் தோற்றங்களைக் கொண்டு அவற்றை மறைக்க முடியாத பலவகைச் சிந்தனை, வடிவமைப்புக் கருத்துக்கள் ஏராளமானவற்றை தான் கண்டுபிடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கிராஸின் கடைசி நாட்களில், அவர் ஒருகாலத்தில் தீவிரமாக இருந்த நாஜிப் போக்கு, பின்கதவு வழியே உள்நுழைந்துவிட்டது என்று அவர் எழுதுகிறார்.

Tagesspiegel உடைய கருத்துப் பக்கத்தின் தலைமையில் இருக்கும் மால்ட்ட லெமிங்கும் கிராசை  நவநாசி என்றே அவதூறு கூறுகிறார்: National zeigung சொல்லாட்சியில் திடீரென கவிதை எழுதுகிறார், ஒருவேளை எப்பொழுதும் அப்படித்தான் செய்தாரோ என்னவோ, மற்றவர்கள் அதைக் காணவில்லை போலும். என எழுதியுள்ளார். கிராஸை ஹிட்லருடன்கூட லெமிங் ஒப்பிடுகிறார்: தான் ஒரு குரலைக் கொடுக்க முற்படும் மௌனமான பெரும்பான்மை உடன் முழு உணர்வுடன் கிராஸ் பங்கு பெறுகிறார்”—முன்பு இப்படித்தான் இருந்தது. ஒரு மௌனமான பெரும்பான்மை ஒரு குரலைக் கண்டது, அதன் பின் விரைவில் ஒலிபெருக்கிகள், டாங்குகளின் இடிமுழக்கத்துடன் ஊக்கம் பெற்று அது ஐரோப்பா முழுவதும் கேட்கப்பட்டது.

 

கிராஸின் மீது இத்தகைய இழிந்த தாக்குதல்கள் ஜேர்மனியின் மிகப் போற்றுதற்குரிய உயிரோடு வாழும் இலக்கிய மனிதரை விட எழுதியவர்களைப் பற்றித்தான் அதிகம் கூறுகிறது. மத்திய கிழக்கில் ஒரு புதிய போர் பற்றிய ஆதாரமுடைய கிராஸின் எச்சரிக்கை நாசிக்களை நினைவுபடுத்தவில்லை. மாறாக அவருக்கு எதிராகக் கூச்சலிடும் கூட்டத்தின் சீற்றம் மிகுந்த குற்றச்சாட்டுக்கள்தான் நாசிக்களை நினைவுபடுத்துகின்றன. அதிகாரத்திற்கு வந்தபின் நாசிக்களுடைய முதல் செயல்களில் ஒன்று Heinrich Heine, Karl Marx, Sigmund Freud, Heinrich Mann, Erich Maria Remarque, Kurt Tucholsky, Carl vol Ossietzky மற்றும் பல உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைப் பொது இடங்களில் எரித்ததுதான் என்பதை இவர்கள் வசதியுடன் மறந்துவிட்டனர்.

யூத எதிர்ப்புக் குற்றம் பற்றிய கிராஸின் நிலையை ஆதரிக்கச் சில குரல்கள் முற்பட்டுள்ளன. ஆனால் அவை தயக்கத்துடன், ஒதுக்கியிருக்கும் தன்மையைக் கொண்டு, முற்றிலும் பின்னடித்துக்கொண்டு இருக்கின்றன. எந்த ஒரு நபரும் கலாச்சாரம், செய்தி ஊடகம், அரசியல் வட்டங்களில் இருந்து புறப்பட்டு ஜேர்மனியில் போருக்குப் பிந்தைய இலக்கிய உலகின் மிக முக்கியமான பிரதிநிதிகளில் ஒருவரின் குணநலனைப் படுகொலை செய்யும் முயற்சிக்கு எதிராக, வலுவாகக் குரல் கொடுக்க முன்வரவில்லை.

இதற்கு சற்று விளக்கும் கொடுக்கும் தேவை உள்ளது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஜோசப் ஜொவ்வ எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரு குறிப்பு அளிக்கப்படுகிறது. கிராஸிற்கு எதிரான நச்சுத் தன்மை மிகுத்த தாக்குதலை இதில் அவர் அளிக்கிறார்; ஒரு 70 ஆண்டுக்கால அறநெறியில் ஒருமித்த உணர்வை அவர் மீறியுள்ளார்; இது அறநெறி உலகைத் தலைகீழாக மாற்றி, இஸ்ரேலை ஆக்கிரமிப்பாளர் என்றும் ஈரானை பாதிக்கப்பட்ட நாடு என்றும் சித்தரிக்கிறது. என்ற குற்றச்சாட்டில் இது உச்சக்கட்டத்தை அடைகிறது.

அறநெறியில் கருத்து ஒருமைப்பாடு என்று கூறும்போது ஜொவ்வ ஹோலோகோஸ்ட்டை (Holocaust) ஒட்டி ஜேர்மனி நிரந்தரமாக, நிபந்தனையற்ற ஆதரவை இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற கருதுகிறார். இந்த நிலைப்பாட்டை சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் தன்னுடைய அறிக்கையில் இஸ்ரேலின் பாதுகாப்பு என்பது ஜேர்மனிய தேசிய நலன் அல்லது அந்த நலனுக்கு அடிப்படை என்று சுருக்கிக் கூறியுள்ளார்.

இத்தகைய வாதத்துடன், ஜேர்மனிய அரசாங்கம் ஈரானுக்கு எதிராக ஒரு போரில் பங்கு பெறத் தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது. பல காலம் செயல்படாத நிலையில், அது மத்திய கிழக்கின் எண்ணெய் வளமுடைய பிராந்தியத்தில் ஒரு இராணுவ பாதத்தை பதித்துக்கொள்ள விரும்புகிறது. வரலாற்று உண்மைகளைக் கொடூரமாகத் திரித்தல், தற்கால அரசியல் உண்மைகளைக் கொடூரமாகத் திரித்தல் என்னும் வகையில், இது நாசிக்களுடைய குற்றங்களை தன் வருங்கால ஏகாதிபத்தியக் குற்றங்களை நியாயப்படுத்தப் பயன்படுத்த முயல்கிறது.

கிராஸின் கவிதை இத்திட்டங்களுக்குக் குறுக்கே நிற்கிறது. ஜேர்மனியின் இராணுவவாதம் புதுப்பிக்கப்படுவதற்கு எதிரான, பரந்த மக்களின் நம்பிக்கையற்ற தன்மைக்கு வெளிப்பாடு கொடுக்கிறது. மேலும் மத்திய கிழக்கில் மற்றொரு ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும் நிற்கிறது. எனவேதான் இது இவ்வளவு கடுமையாகத் தாக்கப்படுகிறது.

அரசியல் வர்க்கம் என்று அவர் கூறுவதின் கொள்கைக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது பற்றி ஜொவ்வ நன்கு அறிவார். கிராஸின் கவிதை செய்தி ஊடகத்தினால் கிட்டத்தட்ட முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 90% வாசகர்களின் கருத்துக்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறது என்று அவர் கடுமையான புகாரைக் கூறுகிறார். இத்தகைய உணர்வுகளுக்கு யூத எதிர்ப்பு, தேசிய உந்துதல்களை கொடுத்தல் என்பதாகத்தான் ஜொவ்வயின் விடையிறுப்பு உள்ளது.

கிராஸின் மீதான பல பிற தாக்குதல்களில் ஒரு இழை போல் இக்கருத்து  தொடர்கிறது. ஏற்கனவே மேற்கோளிடப்பட்டுள்ள மால்டே லெமிங் குரோஸ் சாதாரண மக்களுடைய ஆர்வத்திற்கு தீனி போடுகிறார் என வாதிட்டுள்ளார். டில்மன் குரோஸ் கிராஸின் பின்னணியையும் (மற்ற எழுத்தாளர்களின் பின்னணியையும்) குறிப்பிட்டு, நாசிச் சிந்தனைப்போக்கை சிந்தனை வழியில் எதிர்க்கும் அறிவார்ந்த திறன் இல்லாத படிப்பறிவற்ற குடும்பங்களில் பிறந்தவர்கள் என்று கூறுகிறார். நாஜிக்கள் இத்தகைய பாட்டாளி வர்க்க மயமாக்கப்பட்ட குட்டி முதலாளித்துவத்தை அரசியலில் பங்கு பெற உதவினர் என்று அவர் கூறுகிறார். அவர்களுடைய ஆதரவினால்தான் தங்கள் உலகப் பேரரசு என்னும் கருத்தை அவர்கள் கட்டமைக்க முயன்றனர் என்கிறார். இதற்கு மாறாக பழையை உயரடுக்குகள், மண்ணிறக் கூட்டத்திற்கு சந்தேகத்திற்குரியதாக இருந்தன; அவர்கள் அடக்கப்பட்டனர், முடிந்தபோது அழிக்கப்பட்டனர்.

வரலாற்று உண்மையை இதைவிடத் திமிர்த்தனமாக சிதைப்பதை நினைத்தும் பார்க்க இயலாது. நாஜிக்கள் நம்பிக்கையிழந்த குட்டி முதலாளித்துவத்தின் அடுக்குகளில் இருந்து ஆதரவைப் பெற முயல்கையில், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பெரும்பான்மையினர் மற்றும் மத்தியதர வர்க்க மக்களும்கூட நாஜிக்களுக்குப் பெரும் எதிர்ப்பைக் காட்டியவர்கள் ஆவர். 1932ல் கூட இரு தொழிலாளர்களின் கட்சிகள் ஜேர்மன் கம்யூனிஸ்ட கட்சி, சமூக ஜனநாயக கட்சி -KPD, SPD- ஆகியவை ஹிட்லரின் நாசிக் கட்சியைவிட இணைந்த முறையில் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தன. கம்யூனிஸ்ட் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி தலைமையின் மோசமான தோல்விதான் தொழிலாள வர்க்கம் ஹிட்லரின் ஏற்றத்தைத் தடுத்து நிறுத்தமுடியாமல் செய்துவிட்டது.

தொழிலாள வர்க்கத்தின் தோல்வியும் யூதர்களின் தலைவிதியை முடித்தன. தொழிலாளர் இயக்கம் அழிக்கப்பட்டபின், இரண்டாம் உலகப் போர் தொடங்கியபின்தான், நாஜிக்கள் தங்கள் யூத எதிர்ப்பை முழுமையாகச் செயல்படுத்த முடிந்து, மனித வரலாற்றில் மிகப் பெரிய குற்றத்தை இழைக்க முடிந்தது.

நாஜிக்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்று லெமிங் அளிக்கும் பழைய உயரடுக்கினர்தான் ஹிட்லரின் வெற்றியை அடைய உதவினர் பிரஷ்ஷிய ஜங்கர்களும், இராணுவ அதிகாரிகளும் அவர் பதவிக்கு வர உதவினர். குருப், பிளிக் மற்றும் பிற வணிகத் தலைவர்கள் அவருடைய ஏற்றத்திற்கு நிதியளித்தனர். முதலாளித்துவக் கட்சிகள் அதிகாரத்தை கொடுக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்து, தொழிலாளர் இயக்கத்தை நசுக்க உதவினர். முதுகெலும்பற்ற அதிகாரத்துவத்தினர், நீதிபதிகள், ஹிட்லருக்கு உறுதிமொழி அளித்தனர். உயர்கல்விக் கூடத்தினர் தங்கள் யூதச் சக ஊழியர்களை முற்றுகையிட்டு இனவெறிக் கோட்பாட்டைக் கற்பித்தனர். கற்ற வகுப்பினர்கள்தான் ஹிட்லரின் வாக்னர் வழிபாட்டு (Wagner cult) போதைக்கு உட்பட்டனர்.

இந்த இழிந்தவர்கள் இப்பொழுது கிராஸை இந்த மரபில் சித்திரிக்கின்றனர். பொதுமக்கள் மீது கொண்டுள்ள அவர்களுடைய இகழ்வு, யூத எதிர்ப்புக் கூட்டம் என்று அவர்கள் இகழ்வாகப் பேசுவது, ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் போர்த் திட்டங்களை அடைவதற்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒதுக்கித் தள்ளுவதற்கு அவர்கள் தயார் என்பதைத்தான் நிரூபிக்கிறது.