World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

May Day 2012: Unite workers around the world against austerity and war

மே தினம் 2012: சமூக செலவின குறைப்புகள் மற்றும் யுத்தத்திற்கு எதிராக உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் ஒன்றுபடுவோம்

Statement by Jerry White, SEP candidate for US president
1 May 2012

Back to screen version

2012 அமெரிக்க தேர்தல்களில் சோசலிச சமத்துவ கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கும் நான் இந்த மே தினத்தில் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களோடு எமது ஐக்கியத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். 1880களில் அமெரிக்க தொழிலாளர்களால் நாளொன்றுக்கு எட்டு மணி நேர வேலையை வென்றெடுப்பதற்கான கசப்பான போராட்டத்தில் அதன் மூலங்களைக் கொண்டுள்ள இந்த விடுமுறை நாள், இவ்வாண்டு அதனோடு சிறப்பாக பொருந்தி நிற்கிறது.

2012 மே தினத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கம் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள், ஒரு புரட்சிகர சமூக மாற்றத்தின் அவசியத்தை முன்னிறுத்தும் போராட்டங்களினுள் நுழைய தொடங்கியுள்ளனர்.

ஓர் உலகளாவிய நிதியியல் பீதியை ஏற்படுத்திய வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு நிறுவனமான லெஹ்மென் பிரதர்ஸின் தோல்விக்கு சுமார் நான்காண்டுகளுக்குப் பின்னர், 1930களின் பெருமந்த நிலைக்குப் பின்னர் ஒருபோதும் ஏற்பட்டிராத மிக மோசமான பொருளாதார உடைவில் உலகம் சிக்குண்டுள்ளது.

நிதியியல் ஊக வணிகர்களைப் பிணையெடுக்க உலகம் முழுவதிலும் உள்ள பெருவியாபார அரசாங்கங்களால் எடுக்கப்பட்ட முறைமைகள், 2008 முறிவிற்கு இட்டுவந்த எந்தவொரு முரண்பாடுகளையும் தீர்க்கவில்லை. தோற்றப்பாட்டளவில் கட்டுப்பாடில்லாமலும் கணக்கில்லாமலும் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட பணம் உலகம் முழுவதிலும் உள்ள அரசுகளைத் திவாலாக்கி உள்ளது. உலகளாவிய நிதியியல் சந்தைகளைத் திருப்திப்படுத்த அவர்களால் செய்யப்பட்ட சமூக செலவின குறைப்புகள் நெருக்கடியை இன்னும் தீவிரப்படுத்தவே செய்துள்ளது.

மீட்பிலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் பொருளாதார நிலைமை ஒரு புதிய வீழ்ச்சிக்குள் நுழைந்து வருகிறது. இங்கிலாந்தும் ஸ்பெயினும் தற்போது ஒரு இரட்டை-இலக்க பின்னடைவில் உள்ளன. சீனாவில் பொருளாதார செயல்பாடுகள் குறைந்து வருகின்றன; ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் படிப்படியாக உயர்ந்த அதிகளவிலான வேலைவாய்ப்பின்மை அளவுகள் நிலவுகின்றன.   

உலக பங்குச்சந்தைகள் மற்றும் பெருநிறுவன இலாபங்கள் மீளுயர்வு (rebound) பெற்றுள்ள நிலையில், குறைந்தபட்சம் தற்போதைக்கு, தொழிலாள வர்க்கத்திற்கென எவ்வித மீட்பும் தென்படுவதாக இல்லை. அதற்கு முரணாக, முதலாளித்துவ வர்க்கம் ஒரு சமூக எதிர்-புரட்சியை நடத்த இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி உள்ளது. ஒரு நூற்றாண்டிற்கும் மேலான காலக்கட்டத்தில் வென்றெடுக்கப்பட்ட சலுகைகளை முற்றிலுமாக அழிப்பதே அதன் நோக்கமாகும். அதற்கான ஒரு முன்மாதிரியாக கிரீஸ் ஆக்கப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் அங்கே நிஜமான கூலிகளில் 65 சதவீதம் வரைக்கும் குறைக்கும் அளவிற்கு இட்டுச் சென்றுள்ளன. அங்கே உத்தியோகபூர்வ இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 50 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது; அங்கே இலவச உணவு வழங்குமிடங்களிலும் (soup kitchens), வீடற்ற முகாம்களிலும் மற்றும் இலவச மருத்துவமனைகளிலும் நீண்ட வரிசைகள் நிற்கின்றன.

2012 அமெரிக்க தேர்தல்களில், பராக் ஒபாமாவோ அல்லது மிட் ரோம்னேவாவோ, யார் வெல்கிறார்கள் என்பது விஷயமல்ல. ஆனால் இரண்டு பெருவியாபார கட்சிகளும் மெடிகேர் மற்றும் ஏனைய சமூக திட்டங்களுக்குக் குழிபறிப்பது உட்பட வரவு-செலவு கணக்கில் கடுமையான வெட்டுக்களைத் திணிப்பதற்கு பொறுப்பேற்றுள்ளன. இதுவரையில் அவர்கள் கொண்டிருக்கும் "வேலைவாய்ப்பு கொள்கையும்" (jobs policy) யாவும் பெருவணிகங்கள் மீதான வரிகளை மற்றும் நெறிமுறைகளைக் கூடுதலாக குறைப்பதற்கும் மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மற்றும் கூலிகளை வெட்டுவதற்காகவுமே உள்ளது.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் (ILO) வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையின்படி, 2008இல் இருந்து உலகம் முழுவதிலும் 50 மில்லியனுக்கும் மேலான வேலைகள் இல்லாமல் போயுள்ளன. “உலகளாவிய வேலை நெருக்கடியானது (job crisis) ஒரு புதிய, இன்னும் அதிகப்படியான கட்டமைப்பு கட்டத்திற்குள் (structural phrase) நுழைந்துள்ளதென எச்சரித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இந்த ஆண்டு வேலையற்றவர்களின் எண்ணிக்கை 202 மில்லியனை எட்டக்கூடும் என்றும், 2016 வாக்கில் அது 210 என்றளவிற்கு உயருமென்றும் மதிப்பிட்டது. சராசரியாக, அபிவிருத்தி அடைந்த பொருளாதாரங்களில் வேலை தேடுவோரில் 36 சதவீதத்திற்கும் அதிகமானோர், ஓர் ஆண்டிற்கும் அதிகமாக வேலையின்றி உள்ளனர்.

வாழ்வதற்கு தேவையான ஒரு கூலியை அளிக்கும் ஒரு வேலையாவது கிடைக்கும் என்ற குறைந்தபட்ச நம்பிக்கையோடு அல்லது நம்பிக்கையே இல்லாமல் இருக்கும் கல்லூரி மாணவர்கள் உட்பட, அடுத்த தலைமுறை தொழிலாளர்களுக்கு மங்கிப் போயிருக்கும் எதிர்கால வாய்ப்புகளைக் குறிப்பிட்டுக் காட்டி, ILO சர்வதேச அளவில் "சமூக குழப்பம்" மற்றும் "கலகங்கள்" அதிகரிப்பதற்கான அபாயம் இருப்பதைக் குறித்து எச்சரித்தது

எவ்வாறிருந்த போதினும், அதன் எச்சரிக்கைகள் செவிட்டு காதுகளில் தான் விழுகின்றன. இத்தகைய சமூக-விரோத முறைமைகளிலிருந்து விலகி நிற்காமல், வாஷிங்டனிலிருந்து பாரீஸ், பேர்லின் மற்றும் டோக்கியோ வரையில், உலகின் ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீது முன்பை விட அதிகப்படியான தாக்குதல்களுக்குத் தயாரிப்புச் செய்து வருகின்றன.

அச்சமூட்டுமளவிற்கு உள்ள சமூக சமத்துவமின்மையின் இந்த மட்டத்திற்கும் அப்பாற்பட்டு, முதலாளித்துவ இலாப அமைப்புமுறையின் உடைவானது உலக சந்தைகள், மூலப்பொருட்கள் மற்றும் மேலாதிக்க பகுதிகள் மீதான கட்டுப்பாட்டைப் பிடித்து வைக்க மீண்டுமொருமுறை அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுக்கு இடையில் பைத்தியக்காரத்தனமான போட்டிக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா அதன் பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்டவும் உலகின் முக்கிய புவி-மூலோபாய பகுதிகளின் மீது அதன் கட்டுப்பாட்டை எடுக்கவும் அது, சோவியத் ஒன்றியம் பொறிந்தலிருந்து, இராணுவ பலத்தைப் பயன்படுத்த முனைந்து வருகிறது.

அது தான் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எண்ணெய் வளம்மிக்க பிராந்தியங்களில் நடக்கும் யுத்தங்களுக்குப் பின்னால் உள்ளது. அது தான் சிரியா, ஈரான் மற்றும் இறுதியாக ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான புதிய யுத்தங்களுக்கான திட்டங்களாகவும் உள்ளன. அதேவேளையில் பழைய ஐரோப்பிய சக்திகள் அவற்றின் முன்னாள் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு காலனி நாடுகளில் அவற்றின் சொந்த ஏகாதிபத்திய நலன்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முதலாம் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களுக்கு இட்டுச் சென்ற ஆண்டுகளைப் போலவே, ஒரு உலகளாவிய மோதலை உண்டாக்குவதற்கு களம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை மனிதயினத்தின் அடிப்படை வாழ்வையே அச்சுறுத்துகின்ற அணு ஆயுதங்களோடு அவை செய்யப்பட்டு வருகின்றன.   

ஒரு புதிய ஏகாதிபத்திய யுத்தகளத்தில் ஒருவருக்கு எதிராக மற்றொருவரைத் தாக்குவதில் தொழிலாளர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. அல்லது குறைந்த கூலிகளிலும் மோசமான நிலைமைகளிலும் யார் வேலை செய்வார்கள் என்பதைப் பார்க்க  ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுவதன் மூலமாக எதையும் நாம் பெற்றுவிடவும் முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரேமாதிரியான ஒடுக்குமுறையாளர்களையே, அதாவது பெரிய உலகளாவிய வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களையே எதிர்கொள்கின்றனர் என்பதால் அவர்கள் இந்த இலாபகர அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் அணிதிரள வேண்டும்.

ஏழ்மை மற்றும் நோய்களின் அதிகரிப்பு, உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள், இவ்வுலகில் வாழும் ஏழு பில்லியனுக்கும் மேலான மக்களுக்கு தேவையான வீட்டுவசதி, மருத்துவ கவனிப்பு, ஊட்டசத்து மற்றும் கல்வி ஆகியவை போன்ற நவீன சமுதாயத்தின் ஆழ்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு கூட்டு விடையிறுப்பும், முன்பை விட பெரிய திட்டமிடலும், கூட்டுறவும் அவசியப்படுகிறது. ஆனால் அனைத்து பொருளாதார முடிவுகளும் முதலாளித்துவத்தின் கீழ் ஒரு சிறிய சிறுபான்மையினரின் இலாப நலன்களுக்கே அடிபணிய செய்யப்பட்டிருப்பதால், இங்கே ஆதாரங்களைப் பகுத்து ஒதுக்கீடு செய்வதென்பது சாத்தியமே இல்லை

ஒவ்வொரு முதலாளித்துவ அரசியல்வாதியாலும் தொடர்ந்து கூறப்படும் முறையீடான, சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை என்ற வாதம், ஒரு முழு பொய்யாகும். மொத்த சொத்து மதிப்பு $30 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் வைத்திருக்கும் பெரும் சொத்து மதிப்புடையவர்கள் என்றழைக்கப்படுபவர்களைப் பற்றிய ஒரு சமீபத்திய அறிக்கை, அவர்களின் கூட்டுமொத்த செல்வவளம் தற்போது $26 ட்ரில்லியனைக் கடந்துவிட்டதாக குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுமார் 186,000 பேர்கள் (உலக மக்கள்தொகையில் .002 சதவீதத்தினர்) ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்கள் மற்றும் சேவைகளில் அண்ணளவாக பாதிக்கு சமமான செல்வங்களைச் சுருட்டி வைத்துள்ளனர்!   

பெரும்பான்மையினரிடமிருந்து செல்வந்த மேற்தட்டிற்கு செல்வவளத்தை திட்டமிட்டு செய்யப்படும் மறுபகிர்வு (இது 2008இல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது), ஒரு பரந்த கோபத்தை உண்டாக்கி உள்ளது. ஊடக பண்டிதர்களும், கல்வித்துறைசார் மூடர்களும் மற்றும் நெறியிழந்த முன்னாள் இடதுகளும் வர்க்க போராட்டம் முடிந்துவிட்டதாக அறிவித்த தசாப்தங்களுக்குப் பின்னர், 2011ஆம் ஆண்டு உலகளவில் பரந்த சமூக மேலெழுச்சியின் மீள்-எழுச்சியைக் கண்டது.

துனிசியா மற்றும் எகிப்தில் இருந்து, கிரீஸ், ஸ்பெயின், இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வரையில், பரந்த போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஏனைய சண்டைகள் மூலமாக தொழிலாள வர்க்கம் அது திரும்பி வந்திருப்பதை அறிவித்தது. ஆனால் அண்ணளவாக ஒரு கால் நூற்றாண்டிற்கு முன்னர் நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் லியோன் டிரொட்ஸ்கி அறிவித்ததைப் போல, “மனிதயினத்தின் வரலாற்று ரீதியிலான நெருக்கடி புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியாக சுருங்கி உள்ளது,” என்பதை ஒவ்வொரு சம்பவத்திலும் இந்த போராட்டங்கள் வெளிப்படுத்தின

அமெரிக்காவில், கடந்த ஆண்டு விஸ்கான்சினில் நடந்த பரந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் விரோத போராட்டங்களின் அலை ஆகியவை தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது குழுக்களால் காட்டிக் கொடுக்கப்பட்டன. அவை இத்தகைய இயக்கங்களை ஜனநாயக கட்சிக்காக கட்டி வைத்தன. ஜனநாயக கட்சியினர் மற்றும் முதலாளித்துவ அரசியலில் இருந்து தொழிலாள வர்க்கத்தை விலக்குவதற்கான ஓர் அரசியல் போராட்டத்தை நிராகரித்து, அந்த தலைவர்கள் ஆக்கிரமிப்பு இயக்கத்தில் (Occupy movement) மிஞ்சியிருப்பதை இன்று பல்வேறு மே தின போராட்டங்களில் ஒழுங்கமைத்து வருகின்றனர். AFL-CIO தொழிற்சங்கங்களின் தரப்பில் நின்று கொண்டு, இத்தகைய போராட்டங்கள் பெரும்பாலும் ஜனாதிபதி ஒபாமாவை மீண்டும் தேர்ந்தெடுக்கும் பிரச்சாரத்திற்குள் உள்ளடங்கி உள்ளன.

கடந்த ஆண்டின் மிக முக்கியமான போராட்டங்களுக்கு எழுச்சியை அளித்த சமூக மற்றும் பொருளாதார தூண்டுதல்கள் எதுவுமே இன்னும் விட்டு போய்விடவில்லை; அவை இன்னும் பலமாக வளர்ந்துள்ளன. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் உரிமைக்கான ஒரு போராட்டத்தை நடத்த அது அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மேற்தட்டு மத்திய வர்க்கத்தின் அமைப்புகளிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள வேண்டும். அவை தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் இலாபகர நலன்களுக்கு அடிபணிய செய்கின்றன

என்னோடு தேர்தலில் இணைந்திருக்கும் பெல்லிஸ் ஷ்ரெரரும் நானும் முதன்மையாக வாக்குகளை வெல்ல வேண்டுமென்பதற்காக இந்த தேர்தல்களில் போட்டியிடவில்லை. மாறாக இந்த பெருநிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் அரசியல் அமைப்புமுறையால் நிராகரிக்கப்பட்டு இருக்கும் பெருந்திரளான உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்க ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதற்காக அதில் போட்டியிடுகிறோம்.

தொழிலாள வர்க்கம் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு இங்கே தேசிய தீர்வு இல்லை என்பதை நாங்கள் எங்களுடைய பிரச்சாரத்தின் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம். இந்த இலாபகர அமைப்புமுறையை சோசலிசத்தைக் கொண்டு பிரதியீடு செய்ய உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு ஒரு சர்வதேச மூலோபாயம் அவசியப்படுகிறது. இதன் மூலமாக மட்டுமே தொழிலாளர் உண்மையான சோசலிச சமத்துவத்தை, சமாதானத்தை மற்றும் பொருளாதாரத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டைப் பெற முடியும்.