World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s Independent Workers Party backs bourgeois “left” presidential candidate

பிரான்சின் சுதந்திர தொழிலாளர் கட்சி முதலாளித்துவ “இடது” வேட்பாளரை ஆதரிக்கிறது

By Antoine Lerougetel and Alex Lantier
1 May 2012

Back to screen version

குட்டி முதலாளித்துவஇடது கட்சியான சுதந்திரத் தொழிலாளர் கட்சி (POI) - இக்கட்சி 2012 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவில்லை - பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மே 6 அன்று நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்றில் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவான சோசலிஸ்ட் கட்சி(PS)வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்டை ஆதரிக்கிறது

வரவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் மார்ச் 25 அன்று ஏற்றுக் கொண்டிருக்கும் நிதிய ஒப்பந்தத்தை உறுதி செய்ய மறுக்க வேண்டும் என்பது தான் POI முன்னெடுக்கும் முக்கியமான கோரிக்கையாகும். இந்த நிதிய ஒப்பந்தம், நிதிநிலைப் பற்றாக்குறைகளை அகற்றுவதற்கு ஆழமான சமூக வெட்டுகளை அமல்படுத்த பிரான்ஸ் உட்பட, கையெழுத்திட்ட நாடுகளைக் கோருகிறது

ஏப்ரல் 23 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் POI எழுதுகிறது: “தொழிலாள வர்க்கம் மற்றும் ஜனநாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாய் கூறிக் கொள்ளும் அனைத்து சக்திகளையும் நோக்கி இந்தக் கோரிக்கை வைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாய், இந்த ஏப்ரல் 22 அன்று, தேர்தலின் முதல் சுற்றில் முன்னிலை பெற்றிருக்கக் கூடிய பிரான்சுவா ஹாலண்டை நோக்கி இக்கோரிக்கை வைக்கப்படுகிறது. அவர் அதைச் செய்வாரா? என்று அவர் முன் வைக்கப்படுகின்ற இந்தக் கேள்விக்கு அவர் தெளிவாகப் பதிலளிக்க வேண்டும்.”

இந்தக் கேள்வி அபத்தமானதாகவும் நேர்மையற்றதாகவும் இருக்கிறது. தொழிலாளர்களுக்கு எதிராய் இரக்கமற்ற சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளையே தான் பின்பற்ற இருப்பதை ஹாலண்ட் ரொம்பவும் தெளிவாகக் கூறி விட்டிருக்கிறார். நிதிய ஒப்பந்தத்தின்சிக்கன நடவடிக்கை அம்சம் என்று அவர் அழைப்பதான ஒன்றுடன் அவருக்கிருக்கும் சம்மதத்தை அவர் வெளிப்படையாகத் தெரிவித்து அதேசமயத்தில், வங்கிகளுக்கும் தேர்ந்தெடுத்த வணிகங்களுக்கும் தொகை கையளிக்கும்வளர்ச்சி அம்சம் என்கிற அட்டையை அதன் மேல் அவர் ஒட்ட முயலுவாரா என்பதை முடிவு கூறாமல் விட்டு விட்டிருக்கிறார். நிதிநிலைப் பற்றாக்குறையை வெட்டிச் செல்வதன் அடிப்படையில் 2017க்குள் பற்றாக்குறையை பூச்சியமாக்க இருப்பதாக அவர் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார். அப்படியானால் பிரான்சில் வருடாந்திரம் 115 பில்லியன் யூரோ செலவின வெட்டுகளை மேற்கொள்ள அவர் தள்ளப்படுவார்

இந்த நிலைமைகளில், ஏதோ அவர் தொழிலாள வர்க்கத்தையும் ஜனநாயகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்பதைப் போல அவரிடம் நிதிய ஒப்பந்தத்தைத் தடுப்பாரா என்று கேட்பதென்பது பிற்போக்குத்தனமான திசைதிருப்பலே ஆகும். அவர் கண்டிப்பாக அதைத் தடுக்க மாட்டார்.

ஜனாதிபதி பதவிக்கு வரவிருப்பது எவராய் இருந்தாலும் அவருக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்திற்கு தயாரிப்பு செய்வதன் மூலமாக மட்டுமே தொழிலாளர்கள் தங்களுக்கு எதிராகத் தயாரிப்பு செய்யப்பட்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்க முடியும். ஹாலண்ட் வெற்றி பெற்றால், இப்போராட்டம் என்பது PS மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு எதிராகத் தான் அமையும். ஜோன் லூக் மெலன்சோனின் இடது முன்னணி, தொழிற்சங்க அதிகாரத்துவம், மற்றும் POI உள்ளிட்ட குட்டி முதலாளித்துவஇடது கட்சிகள் ஆகியவேயே அந்த கூட்டணியினர். அதனால் தான் இந்தப் போராட்டத்தைத் தடுப்பதற்கு POI முனைகிறது.

பிற்போக்குத்தனமான ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தின் மீது POI ஐயும்  வரம்புபட்ட விமர்சனங்களை வைப்பதன் மூலம் PS வரிசையிலான அதன் சொந்த வலது-சாரி அரசியலுக்கு முகத்திரையிடுவதற்கு முனைகின்றது. அதன் ஏப்ரல் 26 அன்றான அறிக்கை 1983 இல் PS இன் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனால் நடத்தப்பட்டசிக்கன நடவடிக்கையைக் குறிப்பிட்டுத் தொடங்கி, “முப்பது வருட காலம் ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டளையிடப்பட்ட தொழிலாள வர்க்க-விரோதமான கருத்தொற்றுமையை கண்டனம் செய்தது.

அதன்பின் POI ஐரோப்பிய ஒன்றியம் 1992 இல் தான் மித்திரோனின் செயலூக்கத்துடனான பங்கேற்புடன் உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிட்டு, தான் விடயங்களை வழங்கிய விதத்திற்குத் தானே குழிபறித்துக் கொண்டது. இவ்வாறாய் 1980களிலான மித்திரோனின் தொழிலாளர்-விரோதக் கொள்கைகளுக்கான பழியை ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது சுமத்த முயலுவதென்பது POI இன் சொந்தப் பாத்திரத்தை அது மறைக்கச் செய்கின்ற ஒரு அவசரமான முயற்சியே ஆகும்.

POI இன் முன்னோடியான சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு (OCI), 1968 ஆம் ஆண்டின் மாணவர் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது வேலை நிறுத்தத்திற்குப் பின்னர், 1971 இல் ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொண்டது. PS மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (PCF)நெருக்குதலளித்து ஒரு தேர்தல் கூட்டினை உருவாக்குவதன் மூலம் ஒரு வெகுஜனப் புரட்சிகர இயக்கத்தை OCI உருவாக்க முடியும் என்கின்ற ஒரு போலியான முன்னோக்கில், “இடது ஒன்றியம் ஒன்றுக்கான அழைப்பை அது கையிலெடுத்தது. PS எந்திரத்துடன் இது முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டது. இதன் உறுப்பினர்களில் பலரும் 1970கள் மற்றும் 1980களில் PSக்குள் சென்று விட்டிருந்தனர்.

விளைவு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் பெருந்துயரமாகவும் அத்துடன் ஒரு கட்சி, OCI செய்ததைப் போல மார்க்சிசத்திற்கு எதிராய்த் திரும்பும் முடிவுக்குச் செல்லும்போது ஏற்படும் தாக்கங்கள் மீதான ஒரு கடினப் படிப்பினையாகவும் இருந்தது. OCI 1981 இல் மித்திரோனுக்கு வாக்களிக்க அழைத்தது என்பதோடு 1983 “சிக்கன நடவடிக்கைத் திருப்பத்தின் போதும் அதற்குப் பின்னரும் PS ஐ நோக்கிய அதன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருந்தது.

அந்த அமைப்பின் அடுத்துவந்த அபிவிருத்தி அதன் பிரெஞ்சு தேசியவாத நோக்குநிலையையும் தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துக்குமான அதன் குரோதத்தையும் உறுதி செய்தது. 1991 நவம்பரில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததற்கு முன்னோட்டமாக, OCI ஆனது, ஒரு தேசியவாதத் தளத்தில் சிறிய சமூக ஜனநாயக, அராஜகவாத-தொழிற்சங்க ஆட்சிவாத, மற்றும் ஸ்ராலினிசக் கன்னைகள் மூன்றுடன் இணைத்துக் கொண்டு தன்னை தொழிலாளர் கட்சி (PT)என்று உருமாற்றிக் கொண்டது. 2007 இல் POI ஆக தனக்கு மறுபெயர் சூட்டிக் கொண்ட இக்கட்சியின் முழக்கம்குடியரசு, சோசலிசம், மற்றும் ஜனநாயகம்என்றிருந்தது.   

இப்போது POI மீண்டும் PS ஐ ஆதரித்துக் கொண்டிருக்கிறது. இந்தமுறை, 1970களின் பிற்பகுதியில் மித்திரோனின் கீழான ஒரு PS நிர்வாகியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடக்கி, “சிக்கன நடவடிக்கைத் திருப்பத்தை நடத்துவதில் உதவி, அத்துடன் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கான தனது எண்ணத்தை வெளிப்படையாகவும் ஆக்கியிருக்கின்ற ஹாலண்ட் மீது இது பிரமைகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், லிபியா, ஐவரி கோஸ்ட் மற்றும் சிரியாவில் பிரான்சின் ஏகாதிபத்தியத் தலையீடுகள் குறித்த எந்தக் கருத்தும் POI இன் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்படவும் கூட இல்லை.

இதன் அரசியல் நிலைப்பாடென்பது பெருமளவில் இடது முன்னணியின் ஜோன் லூக் மெலன்சோனது தேசியவாத, PS-ஆதரவுப் பிரச்சாரத்தில் இருந்து பிரித்தறிய முடியாததாய் இருக்கிறது. 1976 இல் PS இல் இணைந்த முன்னாள் OCI உறுப்பினரான மெலன்சோன் 1997-2002 இல் பிரதமர் லியோனல் ஜோஸ்பனின் (இவரும் ஒரு முன்னாள் OCI உறுப்பினர்)PS-தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சரானார். இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் PCF மேலாதிக்கம் செலுத்தும் இடது முன்னணியின் வேட்பாளராகக் களமிறங்கிய மெலன்சோன் இப்போது இரண்டாம் சுற்றில் ஹாலண்டுக்கு வாக்களிக்க செயலூக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஜூனில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் 60 மாவட்டங்களுக்கு 130 வேட்பாளர்களை POI முன்வைக்கிறது. POI உறுப்பினர்கள் WSWS செய்தியாளர்களிடம் அளித்த தகவல்களின் படி, அவர்கள் மெலன்சோனின் இடது முன்னணியுடன் ஏதேனும் வகையில் கூட்டணை அமைத்துக் கொள்வதை ஆலோசித்து வருகின்றனர்.

POI ஒரு இடதுசாரிக் கட்சியோ அல்லது சோசலிஸ்ட் கட்சியோ கிடையாது. மாறாக குட்டி-முதலாளித்துவ அல்லது முதலாளித்துவ நலன்களின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்ற ஒரு பிற்போக்குத்தனமான கட்சியாகும். தொழிலாளர் சக்தி (FO) தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் கிராம கம்யூன்களின் நிர்வாகிகள் தான் இதன் பிரதான ஆதரவுக்களம். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் POI செயலாளரான கெரார்டு சிவார்டி. இவர் 2001 இல் PS டிக்கெட்டில் மெயில்ஹாக்கின் மேயராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்ளுர் நிர்வாகிகள் தேசிய அரசில் இருந்து சுதந்திரப்பட்டவர்கள் என்பதாய் POI புகழ்பாடுகிறது, உண்மையில் அவர்கள் தேசிய அரசாங்கம் மற்றும் உலகச் சந்தையால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் சமூகப் பொருளாதார நிலைமைகள் மீதே பெருமளவில் சார்ந்திருக்கின்றனர்.

இதுபோன்ற சிடுமூஞ்சித்தனமான மனிதர்களின் மேலாதிக்கத்தில் பிரான்சின் உத்தியோகப்பூர்வஇடது அரசியல் இருந்ததன் காரணம் தான் நவ பாசிச தேசிய முன்னணியை இத்தகைய துரிதமான வளர்ச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் அக்கட்சி 18 சதவீத வாக்குகளைப் பெற்றது. தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதிகள் POI போன்ற கட்சிகளை ஒரு ஊழலடைந்த அரசியல் ஸ்தாபகத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாய் சரியான வகையிலேயே காண்கின்றனர். ஒரு எதிர்ப்பு வாக்கினைப் பதிவு செய்வதற்கு அவர்கள் முனையும் மட்டத்திற்கு, இடதின் பக்கம் ஒரு அரசியல் வெற்றிடம் நிலவுவதால், அவர்களது வாக்குகள் FNக்கு செல்கின்றன.

POI இன் கைப்புரட்டுகள் எல்லாம் தொழிலாள வர்க்கம் இடது நோக்கிச் செல்லும் எந்த நகர்வையும் தடுத்து நிறுத்தி புறநிலையாக FN வாக்குகளில் முன்னேற்றம் காண்பதற்கான மேம்பட்ட நிலைமைகளையே உருவாக்குகின்றன. அதிர்ச்சியூட்டும் வகையில் அதன் ஏப்ரல் 23 தலையங்கம் FN பற்றிக் குறிப்பிடவும் மறந்தது.

அதன் அடுத்துவந்த அறிக்கை FN இன் எழுச்சியை எப்படித் தடுப்பது என்று PSக்கு முற்றுமுழுதாய் ஒரு திவாலான அறிவுரையை வழங்கியது. “பிரான்சுவா ஹாலண்டும் ஜோன் லுக் மெலன்சோனும் மாஸ்ட்ரிச்ட் மற்றும் லிஸ்பன் ஒப்பந்தங்களை அழிப்பதற்கும், ஐரோப்பிய மத்திய வங்கியிடம் இருந்து முறித்துக் கொள்வதற்கும், கடன் தொகை செலுத்த மறுத்து கையிருப்பு நிதிகளை வேலைகளைப் பாதுகாக்க மற்றும் வேலைநீக்கங்களைத் தடைசெய்ய பாதுகாத்துக் கொள்வதற்கும் தெளிவுபட வாக்குறுதிகளை அளித்திருப்பார்களேயானால், லு பென்னுக்கு வாக்குகள் எவ்வாறு கிட்டியிருக்கும்?”

உண்மையில், ஹாலண்டும் மெலன்சோனும் இவை அனைத்தையும் இன்னும் அதிகமாகவும் கூட வாக்குறுதியளித்திருந்தாலும் கூட, அவர்களால் இதே தாக்கத்தைத் தான் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் பரந்த அடுக்குகளிடம் உருவாக்கியிருக்க முடியும், அந்த அடுக்குகள் இவர்களை நம்பியிருக்கப் போவதில்லை. POI முன்வைக்கும் சுலோகங்களின் நோக்கம், தொழிலாள வர்க்கத்துள் இந்த கோரிக்கைகளுக்கான ஒரு போராட்டத்தை நிலைநிறுத்துவதல்ல, மாறாக அவற்றை சோசலிஸ்ட் கட்சியின் மீது பிரமைகளை ஊக்குவிப்பதற்கான இன்னொரு பிரச்சாரத்தின் அடிப்படையாகக் கொள்வது தான்.