WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
சீனாவில் போ ஜிலாயின்
வீழ்ச்சி
John Chan
30 April 2012
use
this version to print | Send
feedback
சீனக்
கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினர்
போ ஜிலாயின் வீழ்ச்சி சீனாவில் ஆழ்ந்துள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியின் ஒரு
தீவிர வெளிப்பாடாகும்.
கடந்த மாதம்
சோங்குவிங்கில் கட்சியின் செயலர் என்னும் பதவி போவிடம் இருந்து பறிக்கப்பட்ட
பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இப்பொழுது அவர் தீவிர ஊழல் குற்றச்சாட்டுக்களை
எதிர்கொள்வதுடன், அவருடைய மனைவியின் வணிகப் பங்காளியும் பிரித்தானிய பிரஜையுமான
நீல் ஹேவுட்டைக் கொலை செய்தது, அதை மூடிமறைப்பதற்கு உடன்பட மறுத்த குறைந்தப்பட்சம்
இரு பொலிசாரை கொன்றார் என்ற குற்றச்சாட்டை ஒட்டி மரண தண்டனையையும்
எதிர்கொள்ளக்கூடும். குற்றச்சாட்டுக்கள் வெளிப்படும் வரை, சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் உயர்மட்டக் குழுவான அரசியல் குழுவின் நிரந்தர வேட்பாளராக போ
கருதப்பட்டார். இத்தலைமை மாற்றம் இந்த ஆண்டு நிகழவுள்ளது.
நாட்டின்
செல்வம் மிக்க உயரடுக்கை ஜனரஞ்சமாகக் குறை கூறுபவர் என நன்கு அறியப்பட்ட போ, தன்னை
“மக்களின்
பணியாள்”
என்று காட்டிக்கொண்டு ஆண்டு
ஒன்றிற்கு 26,000 டாலர் ஊதியத்தை பெறுகின்றார். அவருடைய மனைவி கூ கைலை,
வீட்டு
இல்லத்தரசியாக இருக்கின்றார். உண்மையில் போவின் அரசியல் செல்வாக்கை நம்பி,
ப்ளூம்ஸ்பெர்க் நியூஸ் கருத்துப்படி கூ
“பெய்ஜிங்கில்
இருந்து ஹாங்காங் மற்றும் கரீபியன் தீவுகள் வரை குறைந்தப்பட்சம் 126 மில்லியன்
டாலர்கள் மதிப்புடைய வர்த்தக வலைப்பின்னலை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தார்.”
பிரிட்டனில் உள்ள தனியார் சிறப்பு உயரடுக்கினரின் பள்ளியான ஹாரோவில்
படித்த அவர்களுடைய மகன் இப்பொழுது ஹார்வேர்ட்டில் படிக்கிறார். மிக விலையுயர்ந்த
விரைவாக செலுத்தும் கார்களை ஓட்டுவதின்மூலம் இழிபுகழை பெற்றுள்ளார்.
போவின்
“உள்வட்டத்தில்”
நீல் ஹேவுட் இருந்தார் எனக் கூறப்படுகிறது. இவர் சீனாவில் போவின்
கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வணிகங்களுக்கு வரிசையில் முதலீடு செய்யக்
காத்திருந்தவர் மட்டுமல்லாது போவின் குடும்பத்திற்கு வெளிநாட்டிற்கு மிகப் பெரிய
நிதியை மாற்றுவதற்கு உதவியையும் செய்தவர். கடந்த நவம்பர் மாதம் இவர் இறந்து
காணப்பட்டார். போவின் மனைவியினால் நச்சுக் கொடுத்துக் கொலையுண்டதாகக்
கூறப்படுகிறது. ஹேவுட் மிக அதிக மது அருந்தியதால் இறந்தார் என்று அறிவித்த ஆவணத்தை
ஒரு பொலிஸ் குழு கையெழுத்திட மறுத்தபின், இந்த மூடி மறைக்கும் விவகாரம்
சிதறிப்போனது.
போவின்
விவகாரம் அரசியலளவில் மிகவும் கூருணர்வுகரமானதாக இருப்பதற்குக் காரணம் அது கட்சி
மற்றும் அரசாங்க அமைப்புகளின் மிக உயர்மட்டத்தில் அதிர்ச்சி தரும் மட்டங்களில் உள்ள
ஊழலை அம்பலப்படுத்துவதால்தான். மேலும் இது சீனாவில் 1970களில் இருந்து முதலாளித்துவ
மறுபுனருத்தான நிகழ்போக்கின் விளைவினால் வெளிப்பட்டுள்ள முதலாளித்துவ வர்க்கத்தின்
சட்டபூர்வத்தன்மையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தி, மக்களின் ஆழ்ந்த சீற்றம்,
எதிர்ப்பு ஆகியவற்றிற்கு எரியூட்டியும் உள்ளது.
CASS
எனப்படும் சீன சமூக அறிவியல் உயர்கூடம் தொகுத்துள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள்
மிகவும் குறைந்தப்பட்சமாக கிட்டத்தட்ட 18,000 அதிகாரிகள் கிட்டத்தட்ட 123 பில்லியன்
டாலர்களை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து 1990 முதல் 2008 வரை மாற்றியுள்ளனர் என
மதிப்பிட்டுள்ளது.
உதாரணமாக,
பிரதமர் வென் ஜியாபோவின் குடும்பம் சீனாவில் மிகச் செல்வந்தக் குடும்பங்களுள் ஒன்று
என நம்பப்படுகிறது. அவருடைய மகன் வின்ஸ்டன் வென் மிட்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில்
MBA
பட்டம்பெற்றவர்; தனியார் பங்குச் சந்தைகள் மற்றும் தொடர்புத் துறைகளில் பரந்த
அக்கறைகள் கொண்டவர். வென்னுடைய மனைவி ஜாங் பெய்லி,
Beijing Diamond
Jewlleries
ன் தலைவராக இருந்து நவரத்தினக் கற்கள் வணிகத்தில் பெரும் செல்வத்தை
ஈட்டியவர்.
உலகப்
பொருளாதார நெருக்கடி மோசமாகி வருவது சீனாவின் ஆளும் உயரடுக்கில் அழுத்தங்களை
அதிகரித்துள்ளது. 2008ம் ஆண்டு வெடித்த உலக நிதியக் கொந்தளிப்பு, மேற்குநாடுகளிடம்
முதலீடு, தொழில்நுட்பம், சந்தைகள் ஆகியவற்றிற்கு சீனா கொண்டிருக்கும் நம்பிக்கையை
அம்பலப்படுத்தியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதிகள் சரிந்தவுடன், 23
மில்லியன் சீனத் தொழிலாளர்கள் விரைவில் தங்கள் வேலைகளை இழந்தனர். சீனக் கம்யூனிஸ்ட்
கட்சி ஆட்சி மாபெரும் ஊக்கப் பொதியை அளித்தல் மற்றும் அரசாங்க வங்கிகளுக்கு மிகக்
குறைந்த வட்டியில் எளிதான கடன்களைக் கொடுத்தல் ஆகியவற்றின் மூலம் ஒரு சமூக வெடிப்பை
மிகுந்த பிரயாசையுடன் தவிர்த்தது.
கிட்டத்தட்ட
நான்கு ஆண்டுகளுக்குப் பின், மேற்கு விரைவாக பொருளாதார மீட்சியடையும் என்னும்
பெய்ஜிங்கின் நம்பிக்கை நிறைவேறவில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் சிக்கன
நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவது நுகர்வோர் செலவினங்களைக் குறைத்துள்ளன; இதையொட்டி
சீன ஏற்றுமதிகளுக்கான தேவையும் குறைந்துவிட்டது. சீனாவில் வளர்ச்சி விகிதங்கள்
குறைந்து கொண்டிருக்கின்றன. சொத்துச் சந்தைகளில், ஊக வணிக ஏற்றம் உள்வெடிப்பைக்
காணும் நிலையில் உள்ளது; வேலைநிறுத்தங்கள், எதிர்ப்புக்கள் என்னும் முறையில் சமூக
அமைதியின்மையின் முதல் அடையாளங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பொருளாதார
பிரச்சனைகளுடன் ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான
“ஆசியாவில்
இயக்கமுனை”
என்பதும் சேர்ந்துள்ளது; இது சீனாவின் செல்வாக்கை பிராந்தியம்
முழுவதும் குழிபறிக்க முயல்கிறது.
போவின்
சரிவு சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உள்ள பிளவுகளுடன், இதை எப்படி முகங்கொடுப்பது
என்னும் முறையில் பிணைந்துள்ளது. வென்னும் ஜனாதிபதி ஹு ஜின்டாவோவும்
எஞ்சியிருக்கும் அரசாங்கத்திற்குச் சொந்தமான துறைகளை மேற்கு மூலதனத்திற்கு திறக்க
முற்படுகின்றனர். இதில் உள்ள எதிர்பார்ப்பு புதிய முதலீட்டு வருகை என்பது உயர்ந்த
பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்கும் என்றும் ஒரு சமூக எழுச்சியை தடுக்கும்
என்பதும்தான். அதே நேரத்தில் அவர்கள் இது ஒபாமா நிர்வாகத்தையும் சமாதானப்படுத்தும்
என்று நம்புகின்றனர். அதுவோ பலமுறையும் சீனாவின்
“நியாயமற்ற
வணிக நடைமுறைகள்”
குறித்து மாறுதல்கள் தேவை எனக் கோரியுள்ளது.
மறுபுறம்,
போ அரசாங்கத்திற்குச் சொந்தமான பெருநிறுவனங்கள், வங்கிகளுடன் சீனக் கம்யூனிஸ்ட்
கட்சிக்கு நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ள அடுக்குகளுடன் தொடர்புடையவர். இப்பிரிவுகள்
சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்த அரசாங்கப் பாதுகாப்பை ஒட்டி பெரும் இலாபங்களை
ஈட்டியுள்ளன. கடந்த ஆண்டு நான்கு பெரிய அரசாங்க வங்கிகள் மொத்தமாக 999 பில்லியன்
டாலர்கள் இலாபத்தை ஈட்டின. போவும் அவருடைய ஆதரவாளர்களும் இப்பணம் பெரிய அரசாங்க
நிறுவனங்களை தேசிய
“வெற்றியாளர்களாக”
மாற்ற வேண்டும் மற்றும் அவை மேற்கு நிறுவனங்களின் பொருளாதார
ஆதிக்கத்திற்கு சவால் விடும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த மாதம்
தேசிய மக்கள் காங்கிரஸில் வென் திறமையுடன்
“ஏகபோக
உரிமைகள்”,
“அவற்றின்
எளிதில் அடையப்படும் பெரும் இலாபங்கள்”
மீது போரைத் தொடுத்தார். போவின் குறிப்பிடப்பட்ட ஜனரஞ்சன
வார்த்தைஜாலங்களை குறிப்பிடும் வகையில், பிரதம மந்திரி சீனா 1960களில் நிலவிய
கலாச்சாரப் புரட்சி என அழைக்கப்பட்ட சமூகக் கொந்தளிப்பு போன்றதை முகங்கொடுக்க
நேரிடும் என்று எச்சரித்தார். இதைத்தொடர்ந்து சோங்குவிங்கின் கட்சிச் செயலர்
பதவியில் இருந்து போ உடனடியாக நீக்கம் செய்யப்பட்டது நடந்தது.
சீனக்கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருக்கும் அரசியல் உட்மோதல்கள் நாட்டின் பொருளாதாரப்
பிரச்சினைகளைத் தீவிரப்படுத்தத்தான் செய்யும். இப்பொழுது உலகின் இரண்டாம் மிகப்
பெரிய பொருளாதாரமாக இருக்கும் நிலையில், சீனா முற்றிலும் வெளிநாட்டு மூலதனம்,
தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளை முற்றிலும் நம்பியுள்ளது. இதன் விளைவாக
ஆழ்மடைந்துவரும் உலகப் பொருளாதாரச் சரிவினால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது.
நாட்டின்
சரியும் வளர்ச்சி விகிதம் வெகுஜன வேலையின்மை என்னும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது,
பரந்த சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும் என்பது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி
முழுவதற்கும் நன்கு தெரியும். எனவேதான் ஊழல் பிரச்சினை, அரசாங்க அமைப்புகளுக்குள்
உயர் பிரிவுகளுள் இருப்பது அரசியலளவில் வெடிப்புத்தன்மை கொடுக்கும் பிரச்சினையாக
உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மற்றும் அக்கட்சி பிரதிபலிக்கும்
முதலாளித்துவ வர்க்கம் இரண்டிற்கும் இது உண்மையான ஆபத்தை முன்வைக்கின்றது.
முற்றிலும்
அழுகிவிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்திற்கு எதிராக, சர்வதேச
சோசலிசத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான புரட்சிகர இயக்கத்தை
கட்டியெழுப்பவேண்டும் என்பதுதான் சீனத் தொழிலாளர்கள் கற்க வேண்டிய படிப்பினை ஆகும்.
அதற்கு ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீடித்தபோராட்டத்தினதும்
மற்றும் சீனாவிலும் சர்வதேச ரீதியாகவும் மாவோயிசத்திற்கு எதிராக நீடித்த
போராட்டத்தின் அரசியல் படிப்பினைகள் உள்வாங்கப்பட வேண்டும். இதற்கு நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சீனப் பிரிவு கட்டமைக்கப்படுவது அவசியமாகும்.
அதுதான் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான முன்னணிக் கட்சியாக திகழும். |