World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan fishermen forced back to workஇலங்கை மீனவர்கள் வேலைக்குத் திரும்பத் தள்ளப்பட்டுள்ளனர்
By our
correspondents Back to screen versionஇலங்கை வடமேற்கு கடற்கரையோர மீனவர்கள், அரசாங்கம் தமது தொழிலை முடக்குமளவு எரிபொருள் விலைகளை அதிகரித்ததை விலக்கிக்கொள்ளக் கோரி இரண்டு வாரங்கள் நடத்திய எதிர்ப்பின் பின்னர், மீன்டும் மீன்பிடிக்குத் திரும்பத் தள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், அவர்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்து அவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மீது பொலீஸ் பாய்ச்சலை கட்டவிழ்த்துவிட்டது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள சிக்கன திட்டத்தின் பகுதியாக 50 சதவீதம் வரை எரிபொருள் விலைகளை உயர்த்தியதை அடுத்து, மீனவர்கள் பிப்ரவரி 13 அன்று நீர்கொழும்பில் இருந்து கல்பிட்டிய வரையான நெடுஞ்சாலையை தடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரூபாயின் மதிப்பை குறைத்தல், அரசாங்க செலவுகளை வெட்டிக் குறைத்தல் மற்றும் மின்சார கட்டணம் மற்றும் போக்குவரத்து கட்டணங்களை அதிகரித்த்தல் ஆகியவையும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் அடங்கும். அரசாங்கம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கலைக்க நூற்றுக்கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்தியிருந்தது. பிப்ரவரி 15 அன்று சிலாபத்தில் சுமார் 4,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் அந்தோணி வர்னகுலசூரிய என்ற மீனவர் கொலை செய்யப்பட்டதோடு மேலும் மூவர் காயமடைந்தனர். கடலுக்கு செல்ல தயாராகிவரும் மீனவர்கள் பின்னர் இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும் மீனவர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரமொன்றை முன்னெடுத்தனர். மீனவர்கள் “நாட்டை ஆட்டங்காண வைக்கும் சர்வதேச சதியின்” பாங்காளிகள் என அவர்களை வகைப்படுத்தினர். பிப்ரவரி 26 அன்று அரசுக்கு சொந்தமான சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு பேசுகையில், சிலாபத்தில் ஆர்ப்பாட்டம் செய்த நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் "உண்மையான மீனவர்கள் அல்ல" என சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேன கூறினார். இந்த ஆர்ப்பாட்டம், “கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட” ஒரு பாதிரியாராலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சிறிசேன வலியுறுத்தினார். இவை அப்பட்டமான பொய்களாகும். சிலாபம் கத்தோலிக்க பாதிரியார்களின் வகிபாகம், மீனவர்களின் போராட்டத்தை பின் தள்ளி கட்டுப்படுத்துவதோடு, அந்த போராட்டம் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு பரந்த தொழிலாள வர்க்க இயக்கமாக அபிவிருத்தியடைவதை தடுக்க சாத்தியமான அனைத்தையும் செய்வதே ஆகும். கட்டுநாயக்கவில் கடந்த மே மாதம், சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தை மோசமாக குறைக்க ஒரு ஓய்வூதிய மசோதாவுக்கு எதிராக போராடிய போதும், பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர். கடந்த மாதம் எதிர்ப்புக்களை சந்தித்த அரசாங்கம், சிறிய படகுகளுக்கு 250 லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 25 ரூபாயும், பெரிய படகுகளுக்கு 2,000 லிட்டர் டீசலுக்கு 15 ரூபாயும் மானியம் வழங்க உறுதியளித்தது. கடந்த மாதம் இறுதியில், சிறிய படகுகளுக்கு 125 லிட்டர் மண்ணெண்ணெய்க்கும் மற்றும் பெரும் படகுகளுக்கு 100 லிட்டர் டீசலுக்குமாக, அது மானியத்தை மேலும் அதிகரித்தது. மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்ற போதிலும், அவர்களின் பிரச்சினைகள் எதுவும் தீராததோடு, அதிருப்தி அதிகரித்து வருகிறது. பொலிஸ் வர்ணகுலசூரியவைக் கொன்ற சிபாபம்-வெல்ல பகுதி மீனவர்கள், அண்மையில் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் தமது வறிய நிலைமைகளை தெளிவுபடுத்தினர். அவை ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மீதான குற்றப் பத்திரிகையாகும். சிலாபம்-வெல்ல பிரதேசம் சிலாபம் நகரில் இருந்து ஒரு கி.மீ. மேற்கில் அமைந்துள்ளது. இது கடல் ஏரிக்கும் கடலுக்கும் இடையேயான ஒரு சிறிய நிலப் பகுதி ஆகும். இங்குள்ள குடும்பங்கள் தென்னை ஓலை கூரைகளைக் கொண்ட அல்லது அரைவாசி கட்டப்பட்ட ஓட்டு கூரை கொண்ட குடிசை வீடுகளில் வாழ்கின்றன. இங்கு பொருத்தமான வடிகால் அல்லது குடி தண்ணீர் வசதிகள் இல்லை. இது இலங்கை மீன்பிடி கிராமங்களில் நிலவும் வறுமை பற்றிய ஒரு வெளிப்படையான காட்சியாகும். சிலாபம் வெல்ல பகுதி மீனவ குடும்ப பெண்கள் இந்த மீனவர்கள் ஏற்கனவே கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, மீன்பிடி உபகரணங்களுக்கான அதிக செலவு மற்றும் தீவின் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் நடத்திய கிட்டத்தட்ட 30 ஆண்டு கால இனவாத யுத்தத்தின் போது விதிக்கப்பட்ட இராணுவ கட்டுப்பாடுகள் போன்றவை காரணமாக ஏற்கனவே பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். போர் 2009 மே மாதம் முடிவடைந்த பிறகும், நிலைமைகள் இன்னும் மோசமடைந்துள்ளன. வர்ணகுலசூரியவுடன் அவரது வல்லத்தில் வேலை செய்த கிஸ்தோபர் வேலையின் பண்பு பற்றி விளக்கியதாவது: “சிறிய வள்ளங்களில் இருவர்தான் செல்வர். நாம் விடிய 1 அல்லது 2 மணிக்கு கடலுக்குச் செல்வோம். சில நாட்களில் அதற்கு முன்னதாக செல்வோம். வலைகளுக்கு மேலதிகமாக நாங்கள் கொண்டு செல்வது டோர்ச் லைட் மட்டுமே. 15 கிலோமீட்டர் தூரம் சென்று டோர்ச்சின் உதவியுடன் கடலில் வலை வீசுவோம். நாங்கள் அதை எரிய வைக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறு வள்ளங்களில் இடிபடக்கூடும். மீண்டும் கரைக்கு வரும் போது காலை 9 மணியாகிவிடும். மீன் கிடைப்பது குறைவு என்றால், இன்னும் கொஞ்சம் கடலில் தாமதிக்க வேண்டும். கரைக்கு வந்த உடன் எங்களுக்கு உதவி செய்ய அம்மா தங்கை போன்றோர் வருவர். பின்னர் பிடித்ததை விற்க சந்தைக்குச் செல்வோம். தமது தொழிலில் ஓய்வற்ற நிலைமையை மேலும் விளக்கினார் கிஸ்தோபர்: “பகல் சாப்பிட்டு விட்டு ஒன்று இரண்டு மணித்தியாலம் தூங்குவோம். பின்னர் வலையில் உள்ள கிழிசல்களை கட்டுவோம். மீண்டும் வள்ளத்துக்கு எண்ணெய் ஊற்றிக்கொள்ள, அதை நிரப்பும் இடத்துக்கு வள்ளத்தை இழுத்து வருவோம். மறுநாள் கடலுக்குச் செல்வதற்கான இத்தகைய தயாரிப்புகளை செய்துவிட்டு படுக்கைக்கு போகும் போது இரவு 9.30 மணியாகிவிடும். நாங்கள் ஒரு நாளுக்கு 5 மணித்தியாலங்கள் கூட தூங்குவதில்லை. நாட்டின் ஏனையவர்கள் தூங்கும் போது நாங்கள் கடலில் இருப்போம். கிறிஸ்டோபர் மேலும் கூறியதாவது: "என் தந்தை 9 வயது முதல் மீன்பிடித்து வருகின்றார். நாம் எனக்கு 3 வயதாகும் வரை ஒரு ஓலை வீட்டில் தான் வாழ்ந்து வந்தோம். பின்னர் தகரக் கூரையுடன் கூடிய பலகை வீட்டில் வாழ்ந்தோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த வீட்டை சீமெந்தால் கட்டினோம். ஆனால் அதுவும் இன்னும் முடிவடையாது உள்ளது." வர்ணகுலசூரியவின் உறவினாரான டபிள்யூ குமார் தெரிவித்ததாவது: "நாங்களும் மனிதர்கள். நாங்களும் குளிர், வெப்பம், மூடுபனி, தூக்கமின்மையை உணர்கின்றோம். நாங்கள் உடுத்துவது எல்லாம் சாதாரண உடையும் தொப்பியும் தான். எங்களுக்கும் சுகயீனம் ஏற்படும். மற்ற வேலைகளுடன் ஒப்பிடுகையில், எங்களது கடின உழைப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. நாம் கடலில் புயல் மற்றும் மழையை எதிர்கொள்ள வேண்டும். நான் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வாழ்கிறேன். நாம் கடலில் இருந்து திரும்பி வரும் வரை எங்கள் மனைவிமாரும் மற்றும் தாய்மாரும் அச்சத்துடன் காத்திருப்பர். கடந்த மாதம், நமது மீனவர்களில் ஒருவரின் கால் வலையில் சிக்கி கடலில் விழுந்து விட்டார். அவரது உடல் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம், மற்றொரு இளம் மீனவர் மின்னல் தாக்கி கொல்லப்பட்டார்." 19 வயதான கிளின்டன் பேசிய போது, "பொருளாதார சிரமங்கள் காரணமாக எங்களால் பாடசாலை கல்வியைத் தொடர முடியாது போனது. நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். எங்களுக்கு ஞாயிறு மட்டுமே விடுமுறை. சில நேரங்களில் வலைகளை பழுதுபார்க்க அந்த நாளைக் கழிக்க வேண்டும்," என்றார். மற்றொரு மீனவர் விளக்கியதாவது: "கடல் அலை ஆறு மாதங்களுக்கு கடுமையாக இருக்கும். அந்த நேரத்தில் நாம் உணவிற்கு கடலேரியில் சில மீன்களை பிடிப்போம். அந்த நாட்களில் எங்களுக்கு சரியான உணவு கிடையாது. எங்களால் காய்கறிகளுக்கு செலவிட முடியாதபோது, சோற்றுக்கு சோயா மீட் குழம்பு வைத்துக்கொள்வோம் அல்லது தேங்காய் சம்பல் அரைத்து சாப்பிடுவோம். அது கூட முடியாது போது, கடுமையாக காற்றுப் பருவத்திலும் எங்கள் உயிர்களை பணயம் வைத்து கடலுக்குச் செல்ல வேண்டும்." சிலாபம் அம்பகந்தவிலவைச் சேர்ந்த ஒரு சிறிய படகோட்டி எமது நிருபர்களிடம் பேசினார்: "எங்களுக்கு எரிபொருள் மானியம் தருவதாக உறுதியளித்த போதிலும், அது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. முன்னர், அது ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டது. சில மாதங்களுக்கு இதே நிலை தொடரும்.” மீனவர்கள் எரிபொருள் மானியத்தைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் அருவருப்பான அதிகாரத்துவ வழிமுறைகளை விளக்கினார். அவர்கள் மூன்று நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின்னரும், எரிபொருள் பெற வரிசையில் காத்திருக்க வேண்டும். மானியம் கொடுக்கப்பட்டிருந்தாலும் மண்ணெண்ணெய்க்கு மேலும் 10 ரூபா கொடுக்க வேண்டியிருப்பதாக இன்னொரு படகோட்டி தெரிவித்தார். "இப்போது கிடைக்கின்ற மீன்கள் எரிபொருள் செலவை சமாளிக்க போதாது. இவ்வாறு மீன்பிடியைத் தொடரவும் முடியாது, "என்றும் அவர் கூறினார். |
|