World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan plantation workers strike over fuel price rises

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக வேலை நிறுத்தம்

By Panini Wijesiriwardane and A. Shanthakumar 
27 February 2012
Back to screen version

இலங்கை மத்திய மலை நாட்டில் சுமார் 100,000 தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்தியதற்கு எதிராக  பெப்பிரவரி 17 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இந்த அதிகரிப்பானது சர்வதேச நாணய நிதியம் கோரும் புதிய சிக்கன நடவடிக்கையின் ஒரு பாகமாகும்.

மண்ணெண்ணெயின் விலை கிட்டத்தட்ட 50 சதவிகிதமாக லீட்டர் 71 ரூபாயிலிருந்து 106 ரூபா வரை உயர்ந்துள்ளது இதனால் தொழிலாள வர்க்கத்தின் குடும்பங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. பலருக்கு மின்சாரம்  இல்லாததால் சமையலுக்கும் வெளிச்சத்திற்கும் மண்ணெண்ணெய் பயன்படுத்துகின்றனர். மற்ற எரிபொருள்களான டீசல் 36,9 சதவிகிதமும் பெட்ரோல் 8.7 சத விகிதமும் விலை அதிகரித்ததால், பஸ் கட்டணங்களும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா.) மண்ணெண்ணெய் விலை உயர்வை ஈடு செய்ய அரசாங்கம் மானியம் வழங்க வேண்டும் என்ற மட்டுப்படுத்தப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில்  தேயிலை தோட்ட தொழிலாளர்களை  ஒரு நாள் வேலை  நிறுத்தத்திற்கு  அழைப்பு  விடுத்தது. ஜ.தொ.கா. தலைவர் மனோ கணேசன், தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதியும்  கொழும்பை தளமாகக் கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியினதும் தலைவர் ஆவார். வேலைநிறுத்தத்திற்கு வலதுசாரி எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் லங்கா தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் (LJEWU), மற்றும் ஐக்கிய தொழிலாளர் முன்னணியும் ஆதரவு கொடுத்தன.

இந்த தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஒழுங்கு செய்தது  தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய எரிபொருள் விலையேற்றம் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய கவலையினால் அல்ல. மாறாக, பரந்த போராட்டங்கள் வெடிப்பதை முன்கூட்டியே தடுப்பதற்காகவே ஆகும். தொழிலாளர்களின் பங்குபற்றலை மட்டுப்படுத்துவதற்காக, இந்த தொழிற்சங்கங்கள்  வேலைநிறுத்தத்தை பற்றி ஒரே ஒரு ஊடக அறிவிப்பை மட்டுமே விடுத்தன.

மிகப் பெரிய தோட்ட தொழிற்சங்கங்களான இலங்கை  தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (..மு.) மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம்  (NUW) ஆகியன இராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசியல் பங்காளிகளாக இருப்பதோடு, விலை உயர்வுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்த்தன. இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் இராஜபக்ஷ  அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராவார்

இந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் மானியத்தை பெற முடியும் என்றும் கூறுகின்றன. ஆனால் இராஜபக்ஷ நிர்வாகம் எரிபொருள் மானிம் வழங்கப்படமாட்டாது என ஏற்கனவே அறிவித்துவிட்டது. NUW தலைவர் பி. திகாம்பரம், "தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதன் விளைவாக தங்களது வருமானத்தையே  இழக்க நேரும்," என சிடுமூஞ்சித்தனமாக கூறினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், தொழிலாளர்கள் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.

தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு மதிப்பீட்டின்படி 400,000 பேர்- பெப்ரவரி 17 வேலை நிறுத்தத்தில் பங்குபற்றாததற்குக் காரணம், அவர்கள் போராட விரும்பாமை அல்ல. மாறாக பெரும்பான்மையோருக்கு தொழிற்சங்கங்களின் மீது நம்பிக்கையில்லாமல் போயிருப்பதே ஆகும். சம்பளத்தை வறிய மட்டத்தில் வைத்திருப்பதற்கும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் அரசாங்கத்தினதும்,கம்பனிகளதும் நேரடி முகவர்களாக தொழிற்சங்கங்கங்கள் தொழிற்படுகின்றன என்பதை பெரும்பாண்மையான தோட்டத்தொழிலாளர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

புதிய எண்ணெய் விலையேற்றத்திற்கு முன்பிருந்தே, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு எதிராகவும், வேலை நிலமைகளுக்கு எதிரான ஏனைய தாக்குதலுக்கு எதிராகவும் மெதுவாக வேலைசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இந்தப்போராட்டத்திற்கு பல கம்பனிகள் சம்பளத்தை வெட்டுவதன் மூலம் பதிலிறுத்தன.  

 

நுவரேலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ மற்றும் மஸ்கேலியா தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், பதுளை மற்றும் கண்டியில் உள்ள ஆயிரக்கணக்கான  தொழிலாளர்களுடன்  இணைந்தே பெப்ரவரி 17 வேலை நிறுத்தத்தில் பங்கேற்றார்கள்.
 

உலக சோசலிச வலைத் தள  நிருபர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட  பொகவந்தலாவ மற்றும் கொட்டியாகலைத் தோட்டத் தொழிலாளர்களுடன்  பேசினார்கள்.  தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களையோ, ஊர்வலங்களையோ ஏற்பாடு செய்யாததனால் தொழிலாளர்கள் தங்கள் லயன் அறைகளிலிலே தங்கி இருந்தார்கள். கொட்டியாகலைத் தோட்டத் தொழிளாளர்கள் டிசம்பரில் இருந்து வேலைசுமைக்கு எதிரான ஒரு  கடுமையான போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றார்கள்

ஒரு பெண் தொழிலாளி தெரிவித்ததாவது: "இந்த குளிர் காலநிலையில், நாம் எப்போதும் தண்ணீர் மற்றும் உணவுகளை சூடாக்க வேண்டும். அதே சமயம், நாம் அடிக்கடி மின்சார வெட்டுக்கு முகம் கொடுப்பதால், மண்ணெண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்துவோம். சில தோட்டங்களில்  தொழிலாளர்களுக்கு  அறவே  மின்சாரம் இல்லை.

எங்கள் சராசரி குடும்ப வருமானம் 10,000 ரூபாய்க்கும் [83 அமெரிக்க டொலர்] குறைவாகும். ஆனால் இப்போது நாம் மண்ணெண்ணெய்க்கு மேலும் செலவிட வேண்டும். மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பின் காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் சமையலுக்கு மண்ணெண்ணெய்க்கு பதிலாக  விறகை பாவிக்க தொடங்கியுள்ளார்கள்." கோதுமை மா, அரிசி, பருப்பு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் அதிஉயர்ந்த விலை அதிகரிப்பானது புதிய சுமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

எமது நிருபர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு பின்னர், கொட்டியாகலைத் தொழிலாளி ஒருவர் தெரிவித்ததாவது: "நாம் எல்லோரும் இந்த  வேலை சுமைக்கு  எதிராக போராட வேண்டும் என விரும்புகின்றோம், ஆனால்  நாம் தொழிற்சங்கங்களை நம்ப முடியாது. அவர்கள் முன்னைய போராட்டங்களில் செய்தது போல், தொழிற்சங்கங்கள் ஏற்கனவே கொழுந்து பறிக்கும் இலக்கை அதிகரித்தமைக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் எங்களை காட்டிக்கொடுத்துள்ளன. நாங்கள் எங்கள் உரிமைகளை பாதுகாக்க புதிய அமைப்புக்களை தேடுகின்றோம். நமது உரிமைகளுக்காக போராட நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும் என்ற உங்கள் யோசனை நல்லது."

மஸ்கெலியா கிளனியூ தோட்ட ஒரு  தொழிலாளி தெரிவித்ததாவது: "பல நாடுகளில் தொழிலாளர்களுக்கு  இதேபோன்ற பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.  கிரேக்க  தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். உண்மையில் எகிப்தில் நடந்தது பற்றி எனக்கு அவ்வளவு தெரியாது. ஆனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆட்சியாளர்களுக்கெதிராக வீதியில் வந்து  போராடியதை பார்த்தேன்.

ஒரு ஓய்வு பெற்ற பெண் தொழிலாளி தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மேல் கடந்த இரண்டு தசாப்தங்களாக சுரண்டல் அதிகரித்துள்ளதாக  விளக்கினார். அவர் 1996 இல் ஓய்வு பெறும் போது அவர்களின் தேயிலை கொழுந்து பறிக்கும் இலக்கு 4 கிலோவாகும். அது இப்போது நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு முன்பு கொழுந்து பறிக்கும் இலக்கு குறைவாக இருந்தது, ஆனால் இப்போது எந்த வேறுபாடும் கிடையாது.

 

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் நோர்வூட்  சென் ஜோன்ஸ் டில்லரி  தோட்ட தொழிலாளர்களுடன் பேசினார்கள். தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி வானொலியின் ஊடகவே அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்கள் காலை 9 மணி வரை வேலை நிறுத்த்தில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் தொழிற்சங்கங்களிடமிருந்து எந்த அறிவித்தலும் கிடைக்காததனால் வேலையை தொடங்குவதற்கு முடிவெடுத்தார்கள்.
 

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான மீனவர்களின்  சமீபத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததுடன் சிலாபத்தில் நடத்திய ஆர்பாட்டத்தில் அன்ரணி வர்ணகுலசூரிய கொல்லப்பட்டதற்கும் கண்டணம் தெரிவித்தார்கள். "இப்போது எங்களுடைய கோரிக்கைகளுக்காக  போராடடுவதற்கு  ஜனநாயக உரிமை இல்லை. நீங்கள் சொல்வது போல், மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கி சூடு  அரசாங்கத்தின்  ஒரு எச்சரிக்கையாகும். அதே துப்பாக்கிகள் எங்களுக்கு எதிராகவும் திருப்பப்படும்," என ஒரு தொழிலாளி தெரிவித்ததார்.


தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கை தரங்கள் மீதான இரக்கமற்ற தாக்குதல்களை எதிர்த்து போராட ஒரு வழியை தேடும் போது, ஜ.தொ.கா. ஒரு துரோக பாத்திரத்தை வகிக்கிறது. DWC தலைவர் கணேசன்,  அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காவிட்டால், "நாங்கள் அடுத்த வாரம் சந்தித்து வேலைநிறுத்தத்தை தொடர திட்டமிடுவோம்." என்று சண்டே டைம்ஸ்க்கு வாய்சவடால் விட்டார்.


தோட்ட தொழிலாளர்களின்  ஊதியங்கள் வறிய மட்டத்தில் இருப்பதை உறுதிசெய்ய தோட்ட நிர்வாகத்துடனும் அரசாங்கத்துடன் நேரடியாக இணைந்து வேலை செய்யும் இ.தொ.கா. மற்றும் LJEWU உடன் தொழிலாளர்கள் முன்னரும் மற்றும் மீண்டும் மீண்டும் மோதிக்கொண்டுள்ளனர். கணேசனின்  ஜ.தொ.கா.,  ஏனைய ஒரு சில தொழிற்சங்கங்களுடன்  இணைந்து, .தொ.கா.வை அவ்வப்போது விமர்சித்து, சம்பள போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக  உறுதியளித்த போதிலும், பின்பு வளைந்து கொடுத்து அதே  கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு யூ.என்.பீ. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் போலி இடதுசாரியான நவசமசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவினதும் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் மனோ கணேசன் பெருமையாக கூறினார். யூ.என்.பீ. ஆட்சியில் இருந்த போது, அதுவும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை தீவிரமாக அமுல்படுத்தியது. 

உண்மையில், கணேசன், விக்கிரமசிங்க மற்றும் கருணாரட்னவும் ஒரு "பொது மேடையில்" உள்ளனர். இராஜபக்ச  அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் வாய்ச்சவடால் விட்டாலும்  மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஏனைய  நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் பல்வேறுபட்ட மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும், இந்த அரசியல் கூட்டணி, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக கிளம்பும் தொழிலாளர்கள்  மற்றும் கிராமப்புற ஏழைகளின்  போராட்டங்களை தடுத்து  முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கவே செயற்படுகின்றது.