WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
துலூஸ்
துப்பாக்கிச் சூட்டின் அரசியல் பிரச்சினைகள்
Alex Lantier
23 March 2012
use
this version to print | Send
feedback
பிரெஞ்சு
நகரமான துலூஸில் உயர் போலிஸ் பிரிவுகள் நேற்று முகமது மேராவைச் சுட்டுக் கொன்றன.
பாராட்ரூப்
படையினருக்கும் யூதப் பள்ளிக் குழந்தைகளுக்கும் எதிராய் ஒன்பது நாட்கள் வெறியுடன்
துப்பாக்கித் தாக்குதல் நடத்தி ஏழு பேரைக் கொன்றதாக மேரா
சந்தேகத்திற்குட்பட்டிருந்த நிலையில் அவரது குடியிருப்பு வீட்டில் இருநாட்கள்
இழுபறிக்குப் பின்னர் அவர் கொல்லப்பட்டார்.
இதுபோன்ற
சம்பவங்களில் எப்போதும் நடப்பது போலவே தொடக்கத்தில்,
போலிசும் ஊடகங்களும்
வழங்கிய சாட்சிகளுக்குள் தான் ஒருவர் அடைபடும் நிலை இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில்
நேட்டோ ஆக்கிரமிப்பில்
பிரான்ஸ் ஏற்ற
பாத்திரம்,
பிரான்ஸில் பர்தாவுக்கு தடை
செய்தமை,
மற்றும் பாலஸ்தீன மக்கள்
மீதான இஸ்ரேலிய ஒடுக்குமுறை ஆகியவை உருவாக்கிய கோபத்தால் தான் இந்தக் குற்றச்
சீற்றத்தில் இறங்க முடிவு செய்ததாய் மேரா கூறியதாக இச்சாட்சிகள் கூறுகின்றன.
இந்தக் கூற்றுகள்
உண்மையோ இல்லையோ,
மேராவின்
கொலைகளுக்கு என்ன காரணங்கள் கீழமைந்திருந்தாலும் அவர் ஒரு படுபயங்கரக் குற்றத்தை
ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆயினும்,
இந்தத் தாக்குதல்
ஒரு அரசியல் விளக்கத்திற்கு அவசியம் ஏற்படுத்துகின்ற ஒரு அரசியல் நிகழ்வு ஆகும்,
அதிலும் குறிப்பாக
பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இது நடந்தேறியிருப்பதால்.
பிரான்சின் முன்னணி
அரசியல் கட்சிகள் இதற்கு அளித்திருக்கும் பதிலிறுப்பு அரசியலை மேலும் வலது நோக்கி
நகர்த்துவதற்கு இந்தத் துயர சம்பவத்தை சுரண்டிக் கொள்ளும் நோக்கம் கொண்ட ஆழமான
சிடுமூஞ்சித் தன்மையுடன் இருக்கிறது.
தனது
வலதுசாரி,
சட்டம்-ஒழுங்கு
நற்சான்றிதழை துலக்கிக் காட்டி,
தான்
சம்பாதித்திருக்கும் ஆழமான அவப்பெயரைக் கடந்து தேர்தலில் வெற்றி பெற முனைந்து
வருகின்ற நடப்பு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசிக்கு இந்த சம்பவம் வான்கொடை போல்
வந்து சேர்ந்திருக்கிறது.
நவ பாசிச
தேசிய முன்னணியை
(FN)
சேர்ந்த மரின் லு
பென்னுக்கும் இந்த துப்பாக்கிச் சூடு உத்வேகம் கொண்டுவந்திருக்கிறது.
ஓஸ்லோவிலும்
உடோயா தீவிலும் சென்ற ஆண்டு தாக்குதல் நடத்தி
77 பேரைக் கொன்ற
நோர்வே பாசிஸ்டான ஆண்டர்ஸ் பேரிங் பிரெவிக் போன்ற ஒரு நவ நாஜியாக கொலையாளி இருந்து
விட்டால் தனது ஒட்டுமொத்தப் பிரச்சாரத்தின் கதையும் முடிந்தது என்று ஆரம்பத்தில்
தான் கொண்ட அச்சத்தில் இருந்து மீண்டிருக்கும் மரின் லு பென் இப்போது,
புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான சமூக வெட்டுக்களுக்கும் இஸ்லாமியத்துடனான
“போருக்கும்”தான்
அழைப்பு விடுப்பதை இந்த நிகழ்வு நியாயப்படுத்தியிருப்பதாய் கூறுகிறார்.
வெகுகாலம்
FN
இன் தலைவராய் இருந்த ஜோன்
மரி லு பென்னின் –
இவர் ஒருமுறை யூதப்
படுகொலை என்பது இரண்டாம் உலகப் போர் வரலாற்றின் ஒரு
”விபரணம்”என்று
கூறி நிராகரித்தவர்
– புதல்வியான
இவர் இப்போது
பிரான்சின் கிறிஸ்தவ மற்றும் யூத இளைஞர்களின் பாதுகாவலரைப் போல ஒரு வெறுப்பூட்டும்
கபடநாடகத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்.
இந்த
வரிசையில் கடைசியாய் வந்து சேர்ந்திருப்பவர் பிரான்சுவா ஹோலண்ட்.
சோசலிசக் கட்சி
(PS) வேட்பாளராகப்
போட்டியிடும் சமீபத்திய அரசியல் கோழை.
துப்பாக்கி சூட்டு
சம்பவத்துக்கு கொஞ்சம் முந்தைய காலத்தில் இவர் பேசுகையில்,
புலம்
பெயர்ந்தவர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான சார்க்கோசியின் தாக்குதல்களில்
அநேகத்தை தானும் பராமரிக்க விரும்புவேன் என்பதையும்,
குறிப்பாக ரோமாக்களை
முகாம்களில் அடைப்பதற்கு அழைப்பு விடுப்பதற்கும் சூசகம் செய்திருந்த நிலையில்,
வலது சாரி ஊடகக்
கருத்தொற்றுமைக்கு எதிராக எதையும் செய்வதற்கோ அல்லது கூறுவதற்கோ அவரால்
முடியாதிருக்கிறது.
இத்தகையதொரு
துயர சம்பவம் எவ்வாறு நோக்கப்பட வேண்டும்?
அப்பாவி மக்களுக்கு
எதிராக இத்தகையதொரு கொலைச் செயலில் ஈடுபடத் துணியும் எவரொருவரும் ஆழமாய் மனம்
பிறழ்ந்திருக்க வேண்டும்,
ஆனால் இப்பிறழ்வு
ஒரு நிச்சயமான சமூக மற்றும் அரசியல் உட்பொருளில் இருந்து தான் எழுகிறது.
1988ல்
பிறந்த மேரா,
அமெரிக்காவும் பிரான்ஸ்
உள்ளிட்ட அதன் நேச நாடுகளும் சர்வதேசச் சட்டத்தை முன்னினும் பகிரங்கமாய்
அலட்சியப்படுத்தி விட்டு,
முஸ்லீம்
நாடுகளுக்கு எதிராகத் தொடுத்த தொடர்ச்சியான நவகாலனித்துவ போர்களின் சூழலுக்கு
இடையில் தான் வளர்ந்தார்.
அவருக்குப் பத்து
வயதாயிருக்கையில்,
அமெரிக்கா முதலாவது
வளைகுடாப் போருக்குப் பின்னர் ஈராக் மீதான தனது குண்டுவீச்சைத் தொடர்ந்து
கொண்டிருந்தது;
அவரது இருபதாம்
பிறந்தநாள் சமயத்தில்,
ஒரு மில்லியனுக்கும்
அதிகமான ஈராக்கியர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் பலியாகியிருந்தனர்.
பாலஸ்தீனக்
கிளர்ச்சியை இஸ்ரேல் ஒடுக்கியதையும் அது லெபனான் மற்றும் காசாவுக்குள் ஊடுருவல்
செய்ததையும் கண்டிருந்தார்.
அத்துடன் சென்ற
ஆண்டில் லிபியாவில் நேட்டோவின் ஆக்கிரமிப்பையும் அவர் கண்டிருந்தார்.
சார்க்கோசி
தீவிரமாய் ஊக்குவித்த இந்தத் தலையீடு குறைந்தபட்சம்
50,000 உயிர்களைக்
காவு கொண்டிருந்தது.
அதே
சமயத்தில் ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீதான தங்களது சமூகத்
தாக்குதல்களை ஆழப்படுத்தின.
அரசியல் சூழலை
நஞ்சாக்கி தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு
புலம்பெயர்ந்தவர்களைக் குறிவைத்த நவ-பாசிசக்
கொள்கைகளை அதிகமாய் ஊக்குவித்தன.
பிரான்சில் இது,
பர்தாவைத் தடை
செய்வது மற்றும் நாட்டை விட்டுக் கடத்துவதற்கென ரோமா போன்ற இனக் குழுக்களை
ஒட்டுமொத்தமாய்க் குறிவைப்பது ஆகிய லு பென் மற்றும் சார்க்கோசியின் கொள்கையை
ஊக்குவிப்பதான வடிவத்தை எடுத்தது.
சோவியத்
ஒன்றியத்தின் உருக்குலைவுக்குப் பின்னர் வலது நோக்கித் திரும்பி விட்ட
உத்தியோகபூர்வ
”இடது”கட்சிகள்
எல்லாம் –
சோசலிஸ்ட் கட்சி
(PS) மற்றும் அதன்
அரசியல் துணைக்கோள் கட்சிகள்,
கம்யூனிஸ்ட் கட்சி
மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக்
கட்சி (NPA)
ஆகியவை
– இத்தகைய கொள்கைகளை
நன்கு பகிரங்கமாகவே ஆதரித்தன,
அதிகாரத்திற்கு
உள்ளிருந்தாலும் அல்லது வெளியிலிருந்தாலும்.
முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ
“இடது”
கட்சிகளின் இந்த
ஆழமான சீர்கேடு ,
பிரான்சில்
இருக்கும் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர்களின் பரந்த அடுக்குகள்
வர்க்க ஒடுக்குமுறைக்கான இடது-சாரி
எதிர்ப்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருக்கிற ஒரு நோய்வாய்ப்பட்ட நிலைமையை
உருவாக்கியது.
அதேசமயத்தில் அந்த
அடுக்குகள் பாரிய வேலைவாய்ப்பின்மைக்கும் ஊடகங்களில் அவதூறுகளுக்கும்
உட்படுத்தப்பட்டன.
இத்தகைய
நிலைமைகளின் கீழ்,
மன ஸ்திரமற்ற
மற்றும் மனப் பிறழ்வு கண்ட தனிநபர்கள் தங்களது எதிர்ப்பை வன்முறைச் செயல்களின்
மூலமாக,
இன்னும் கொலையின் மூலமாகக்
கூட,
பதிவு செய்யத் துணிவதென்பது
தவிர்க்கமுடியாத நிகழ்வாகி விட்டதாய்த் தோன்றுகிறது.
மேரா அத்தகையதொரு
நபராய் இருக்க வேண்டும் என்பதாகவே தோன்றுகிறது.
முன்கோபத்தை
சமாளிக்கத் திணறியிருந்த ஒரு மெக்கானிக்காகவும் சில்லரைக் குற்றங்களின் ஒரு
வரலாறைக் கொண்டவராகவும் இருந்த மேரா இராணுவத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார்.
2010ல் பிரான்சின்
வெளிநாட்டுப் படையணி
(French Foreign Legion)
இவரை ஒரு சிப்பாயாக
சேர்த்துக் கொள்ள மறுத்ததில் வெறுப்புற்றார்.
இறுதியாய்
வலது-சாரி
இஸ்லாமியவாதிகளின் பிற்போக்குத்தனமான சர்வநிவாரணிப் பரிந்துரைகளை நோக்கி அவர்
ஈர்க்கப்பட்டு,
முஸ்லீம்கள்
பலியாக்கப்படுவதற்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய இஸ்லாமிய உரைகளில் அவர்
விடைதேடக் கிளம்பினார்.
அதன்பின்,
தெளிவற்ற
சூழ்நிலைகளின் கீழ் அத்துடன் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு உளவுத் துறை அறிந்திருந்த
வகையில்,
அவர் ஆப்கானிஸ்தான் மற்றும்
பிற ஏராளமான முஸ்லீம் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு விட்டு பிரான்ஸ் திரும்பினார்.
இந்த துயர
சம்பவத்தை அதிகப்படியான போலிஸ்
–அரசு நடவடிக்கைகள்
மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு சுரண்டிக் கொள்வதன்
மூலமாக பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்தின் மீதான மிருகத்தனமான
தாக்குதலை அதிகப்படுத்துவதோடு முதலாவதாய் மேராவின் குற்றத்தை உற்பத்தி செய்த
கொள்கைகளை
மேலும்
உயர்த்துகிறது. |