World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Gunman kills four at Jewish school in Toulouse, France

பிரான்ஸ், துலூசில் துப்பாக்கிதாரி யூதப்பாடசாலையில் நால்வரை கொன்றார்

By Alex Lantier 
20 March 2012
Back to screen version

ஓர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி நேற்று தென்மேற்கு பிரான்ஸிலுள்ள துலூசில் ஓசார் ஹதோரா யூதப் பாடசாலையில் நால்வரை கொன்றார். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு இளம் மதநெறி ஆசிரியர் ஜோனாதன் சாண்ட்லர், அவருடைய இரு சிறு குழந்தைகள் மற்றும் ஒரு ஏழுவயதுச் சிறுமியான மிரியம் மொன்சொனேகோ ஆகியோர் அடங்குவர்.

ஒரு 17வயது சிறுவனும் இதயம், நுரையீரல் ஆகியவற்றில் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளான். ஆனால் தகவல்கள் டாக்டர்கள் அச்சிறுவன் உயிர்தப்பக்கூடும் என நம்புவதாகத் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வு பெரும் பரந்த சீற்றத்தைத் தூண்டியது. மேலும் மக்களின் பரந்த அடுக்குகளிடையே இது அரசியல்ரீதியான வெடிப்புத்தன்மை உடைய பிரதிபலிப்பை தூண்டிவிடும் என்று முழுஆளும் உயரடுக்கிலும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

ஒரு பிராந்திய பிரெஞ்சு யூதர்கள் அமைப்புகளின் பிரதிநித்துவ குழுவின் (CRIF) பிரதிநிதியான நிக்கோல் யார்டெனி, Le Parisian  பத்திரிகையிடம் பாடசாலையின் வீடியோ கண்காணிப்பு காமெராக்களில் இருந்து காட்சிகளை பார்த்தபின் பேசினார். துப்பாக்கிதாரி ஒரு ஸ்கூட்டரை பள்ளிக்கு வெளியே 8.00 8.15 க்குள் நிறுத்தினார். 11.43mm கைத்துப்பாக்கியையும் ஒரு சிறு UZI சிறு இயந்திரத் துப்பாக்கியையும் ஏந்தி அவன் சாண்டலர் மற்றும் அவருடைய குழந்தைகளைப் பள்ளிக்குமுன் கொன்றுவிட்டு, பின் பள்ளிக்குள் நுழைந்து மொசொனேகோவையும் கொன்றார் என்று அவர் கூறினார்.

இக்கொலையாளி மிகவும் அமைதியான முறையில் இயங்கியதாகவும் தன்னால் கொல்லப்பட்டவர்களை துல்லியமான படைப்பிரிவினரைப்போல் கொன்றார் என்று கூறப்படுகிறது.

இதன்பின் அவர் ஒரு யமாகா T-Max மோட்டார் சைக்கிளில் ஓடிவிட்டார். பொலிஸ் ஆதாரங்கள் இதே வாகனம்தான் அப்பகுதியில் சில இராணுவத்தினரை கொலை செய்யப்பட்டதிலும் பயன்படுத்தப்பட்டது என்று, துலூஸ் வீடியோ காட்சி, மொன்தோபான் அருகிலுள்ள நகர வீடியோ காட்சி இவற்றை மேற்கோளிட்டுக் கூறுகின்றன. இக்கொலைகளும் இதேபோல் ஒரு 11.43mm துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளன.

மார்ச் 11ம் திகதி, துலூசில் Francazal தளத்தில் இருக்கும் முதல் பாரசூட் பிரிவு படைத்துறை அதிகாரி இமாட் இபின் சியாத்தொன் தலையில் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். தாக்கிய துப்பாக்கிதாரி ஒரு யமாகா மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார்; அந்த வாகனம் அன்று துலூசில் திருடப்பட்டிருந்தது.

மார்ச் 15ம் திகதி மொந்தபானில் 17வது பாரசூட் பிரிவில் இருந்து 3 துணைப்படையினர் ஒரு பணம் எடுக்கும் இயந்திரம் உள்ள இடத்தில் ஸ்கூட்டரில் வந்த மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் அணிந்த ஒரு நபரால், சுடப்பட்டனர். அவர் 13 தடவை சுட்டுள்ளார். கோப்ரல் Abel Chennouf மற்றும் இராணுவத்தினரான Mohamed Legouad ம் அவ்விடத்திலேயே இறந்து போயினர். மூன்றாம் ஆளான Loïc Liber, ஒரு கடைக்குள் தப்பிப் பிழைக்க முயன்றார், ஆனால் துப்பாக்கிதாரி கடைக்குள் நுழைந்து பலமுறை அவரைச் சுட்டதில், முதுகுத்தண்டு உட்பட, அவர் தீவிரமான காயங்களுக்கு உட்பட்டுள்ளார்.

குவாடலூப் இல் இருந்து வந்துள்ள ஒரு கறுப்பினத்தவரான லைபரைத் தவிர பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வட ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்னும் உண்மையை விசாரணையாளர்கள் கூறியுள்ளனர். இக்குற்றம் ஒருவேளை இனவெறியினால் உந்துதல் பெற்றிருக்கும் என்ற கருத்தை இது தெரிவிக்கிறது.

உள்துறை மந்திரி குளோட் கெயோன் (Claude Guéant) இவற்றில் தொடர்புடைய துப்பாக்கிதாரி மிகவும் பயிற்சி பெற்ற நிலையில் செயல்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். சம்பவ இடத்தில் அவர் விட்டுச் சென்றுள்ள கைத்துப்பாக்கி ரவைக்கூடு கவனத்துடன் துடைக்கப்பட்டு எவ்வித DNA சான்றையும் விட்டுவைக்கவில்லை. பொலிஸ் விசாரணையாளர்கள் துப்பாக்கி ஏந்திய நபர் இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், ஒரு அதிவலது தீவிரவாதி அல்லது ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதியாக இருக்கலாம் என்ற உத்தேசத்துடன் ஆய்வை நடத்திவருகின்றனர் என்று கூறப்படுகிறது.

மொந்தபானில் ஒரு சாட்சி துப்பாக்கிதாரியின் ஹெல்மெட்டின் கண் மேல்மறைப்பு சற்றே விலகி ஒரு பரந்த பச்சைக்குத்தல் மற்றும் தழும்பை அவருடைய இடது கன்னத்தில் காட்டியது என்று கூறினார். அப்பெண்மணி அந்த நபர் உறுதியான கட்டமைப்பையும், நடுத்தர உயரத்தையும் கொண்டிருந்தார் என்றும் கூறினார்.

நேற்று மாலை 9 மணியளவில், செய்தி இதழான Le Point பொலிஸார் 2008ல் 17வது பரசூட் பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 3 பரட்சூட் பிரிவினரை தேடிக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் புகைப்படம் எடுப்பவர்கள் முன் ஒரு ஸ்வாஸ்திகா சின்னம் கொண்ட கொடியின் முன்பாக நவநாஜி சீருடை அணிந்து நின்றனர் என்று கூறினர். அந்த நேரத்தில் அவர்களை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த முன்னாள் படையினரான Jamel Benserhir அவர்கள் வெளிப்படையாக பச்சை குத்தியிருந்தனர் என்று கூறினார்.

Francazal படைத்தளம் 1989ல் துன்பகரமான முறைகேடு ஒன்றில் தொடர்பு கொண்டிருந்தது. அப்பொழுது நான்கு பரட்சூட் துருப்பினர் மூன்று இளம் பெண்களைச் சித்திரவதை செய்து கொன்றனர், ஒரு காட்டு இலாகா அதிகாரியைக் கொன்றனர் என்ற குற்றச்சாட்டில் நிரூபணமானார்கள்.

திங்கள் கொலைகள் பல நகரங்களிலும் எதிர்ப்புக்களையும், கண்காணிப்புக்களையும் தூண்டியுள்ளன. பாரிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் Republic என்னும் இடத்தில் இருந்து பாஸ்டி சதுக்கத்திற்கு பிரான்ஸிலுள்ள யூத மாணவர்கள் சங்க (UEJF) பதாகைகளின் கீழ் அணிவகுத்துச் சென்றனர். இதைத்தவிர ஒரு பெரிய கூட்டம் பாரிஸ் மையத்தில் உள்ள நஷாரெத் யூத ஆலயத்தருகே கூடினர். துலூஸில் ஓசார் ஹதோரா பள்ளியில் ஒரு மாலை நினைவுக்கூட்டம் நடைபெற்றபோதும் ஒரு கூட்டம் கூடியது.

பிரான்சின் முக்கிய அரசியல் கட்சிகளின் அதிகாரிகள் அனைவரும் அவர்கள் அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களின் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், தேசிய ஐக்கியத்திற்கு குரல் கொடுத்தும் அறிக்கைகளை வெளியிட்டனர். ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி மற்றும் அவருடைய முக்கிய போட்டியாளர் சோசலிஸ்ட் கட்சியின்  பிரான்சுவா ஹோலண்ட் ஆகியோர் பாரிசில் உள்ள நஷாரெத் யூத ஆலயத்திற்கு நேற்று சென்றிருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல்களில் கிட்டத்தட்ட 17% வாக்குகள் பெறுவார் என எதிர்பார்க்கப்படும் நவபாசிச தேசிய முன்னணியின் (FN) மரி லு பென், தன் தொலைக்காட்சி நிகழ்வுகள், பிரச்சாரக் கூட்டங்கள் ஆகியவற்றை இரத்து செய்துவிட்டார். அவர் I-Télé யிடம், இது எப்படி அரசியலைப் பாதிக்கிறது என்பது குறித்து நான் கருத்துக் கூறமாட்டேன். நாங்கள் காத்திருக்கிறோம், நாடு முழுவதும் பொறுமை இழந்து இத்தொடர் கொலைகளை செய்பவர் கண்டுபிடிக்கப்படுவதற்கு காத்திருக்கிறது, பின் நாம் நிம்மதியாக மூச்சு விடமுடியும் என்றார்.

நேற்று மாலை எலிசே ஜனாதிபதி அரண்மனையில் சார்க்கோசி செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தினார். முழுக் குடியரசும் இப்பெரும் சோகத்தை எதிர்கொள்ளத் திரட்டப்பட்டுள்ளது என்று கூறிய அவர் நல்ல சிவப்பு எச்சரிக்கையான Vigipirate பயங்கரவாத எதிர்ப்புத் திட்டம் Midi-Pyrénées பிராந்தியத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றார். இத்தகைய உயர்மட்ட எச்சரிக்கை, இதற்குமுன் பயன்படுத்தப்படவே இல்லை. இது அரசாங்கத்திற்கு குடிமக்களை சோதனை செய்வதற்கும், வெகுஜனப் போக்குவரத்துக்கள், விமானப் பயணங்கள், பள்ளிகள், குடிநீர் வழங்குதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தும் பகுதி சர்வாதிகார அதிகாரங்களை கொடுக்கிறது.

பிரான்சின் அரசியல் ஸ்தாபனத்தின் மையத்திலுள்ள அச்சங்களில் ஒன்று இந்த இனவழித் தாக்குதல் லு பென்னின் புதிய பாசிசப் பிரச்சாரத்தை கேள்விக்குரியதாக்கும் என்பது மட்டும் இல்லாமல், இனவெறி உணர்விற்கு இரகசியமான அல்லது வெளிப்படையான முறையீடுகளை செய்துள்ள அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் கேள்விக்குள்ளாக்கும். தேசிய ஐக்கியத்திற்கு அரசியல்வாதிகள் அழைப்புவிடுவது, இன்னும் பரந்த முக்கியத்துவம் உடைய இனவழித் தாக்குதல்கள் குறித்த விவாதங்களை திசை திருப்புவதற்குத்தான். அவை சமீபத்தில் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் அரசியலில் மையத்தளமாகியுள்ள ஏகாதிபத்தியப் போர் மற்றும் வெளிநாட்டவருக்கு எதிரான இனவெறி ஆகியவற்றின் மீதான குற்றப்பத்திரிகையாகும்.

இவ்வகையில், வலதுசாரி சமூக இணக்க மந்திரி Roselyne Bachelot தன்னுடைய ட்விட்டரில் ஒரு குறிப்பை வெளியிட்டு, துலூஸ் கொடூரத்தை விவாதப் பொருளாகச் செய்யாதீர்கள். குடியரசின் ஐக்கியத்தை மதியுங்கள். அது ஒன்றுதான் ஏற்கத்தக்க மனப்பாங்கு என்று அதில் தெரிவித்துள்ளார்.

ஆனால் மற்றவர்கள் மத அல்லது இனவழிச் சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுவதற்கும் பிரெஞ்சு முதலாளித்துவ அரசியலின் போக்கிற்கும் இடையே அரசியல் தொடர்பு உள்ளதை ஒப்புக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளனர். Le Nouvel Observateur, சார்க்கோசியின் முன்னாள் ஆலோசகரான Abderrahmane Dahmane, சார்க்கோசியின் UMP எனப்படும் மக்கள் இயக்கத்திற்கான ஒன்றியம் என்னும் வலதுசாரி அமைப்பையும் தேசிய முன்னணியையும் குறைகூறியதை மேற்கோளிட்டுள்ளது. Dahmane, “இச்செயல்கள் அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக சமீபகாலங்களில் நெருப்புடன் விளையாடிவருபவர்களுக்கு ஒரு வலுவான சமிக்ஞை ஆகும்.... இத்தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வகையில் வன்முறையாகவும் மதரீதியான சிறுபான்மையினரிடம் வெறுப்பும் காட்டும் வகையில் உள்ள தேர்தல் பிரச்சாரத்தின் விளைவுதான். என்றார்.

ஆனால் பொறுப்பு சார்க்கோசி மற்றும் லு பென் இடம் மட்டும் இல்லை. முழு அரசியல் ஆளும்தட்டின் மீதும் உள்ளது. ஜனாதிபதி சார்க்கோசி தன்னுடைய ஆழ்ந்த செல்வாக்கற்ற தன்மையைக் கடப்பதற்கு நவபாசிஸ்டுகளின் வாக்குகளுக்கு அழைப்புவிடும் வகையில் மார்ச் 6ம் தேதி பிரான்சில் கூடுதலான வெளிநாட்டவர்கள் உள்ளர் என்றார். சோசலிச கட்சியின் ஹோலண்டை பொறுத்தவரை, ரோமா மக்களுக்கு அவர் முன்வைத்த தீர்வு அவர்களை ஒரு முகாமில் அடைப்பது என்பதாக இருந்தது.

லு பென்னுடன் பலமுறை கலந்துரையாடல்களிலும் விவாதங்களிலும் ஈடுபட்ட பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் லூக் மெலோன்சோன் பாரிசில் நேற்று இரவு அணிவகுப்பில் கலந்து கொள்ள முற்பட்டபோது ஏளனமான கூச்சலுக்கு உட்பட்டார்.