World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Afghanistan’s My Lai

ஆப்கானிஸ்தானின் மை லாய்

Patrick Martin
13 March 2012
Back to screen version

9 சிறுவர்கள் உட்பட 18 குடிமக்களை, காந்தகார் மாநிலம் பஞ்ச்வையில் அடையாளம் தெரியாத ஒரு அமெரிக்கப் படை அதிகாரி சுட்டுக்கொன்ற நடவடிக்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புப் போரில் உள்ள மிருகத்தனம் மற்றும் ஆழ்ந்த நெருக்கடியின் நிரூபணம் ஆகும்.

கொடூரத்திலும், அதன் அதில் உள்ளடங்கியுள்ள அரசியல் தாக்கத்திலும் இக்கொடிய செயல் வியட்நாம் போரின் போது நடைபெற்ற மை லாய் படுகொலையைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது. அது இன்னும் பெரிய வெகுஜனப் படுகொலை ஆகும். அது அமெரிக்க மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, தென்கிழக்கு ஆசியாவில் நடத்தப்பட்ட போரின் காட்டுமிராண்டித்தனத்தின் தன்மையை அதிகளவு எடுத்துரைத்த செயலாகும்.

நியூ யோர்க் டைம்ஸில் விசாரணைச் செய்தியாளராக அப்பொழுது இருந்த சேமுர் ஹெர்ஷ்தான் அவர் எழுதிய கட்டுரைகளில் மை லாய் படுகொலைகள் பற்றி முதலில் பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவந்தார். நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இரண்டாம் லெப்டினென்ட் வில்லியம் காலே தலைமையில் ஒரு அமெரிக்க படையினர் பிரிவினால் கொல்லப்பட்டதை அக்கட்டுரைகள் விவரிக்கின்றன.

மார்ச் 12, 2012 நிகழ்விற்கும் கிட்டத்தட்ட அதே தினம் 44 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 16, 1968 நிகழ்விற்கும் இடையே வெளிப்படையான வேறுபாடுகள் உள்ளன. ஞாயிறு நடைபெற்ற படுகொலை ஒரு தனித் துப்பாக்கி ஏந்திய படையினனின் செயல் என்றும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்ச்சூழலின் போக்கில் மனரீதியான பிரச்சினைகளை அவர் சந்தித்துள்ளார் என்றும் செய்தி ஊடகத்தின் மூலம் தெரிய வருகிறது. மை லாயில் 26 படையினர் 504 குடிமக்கள் கொலை செய்யப்பட்டதில் பங்கு பெற்றனர். அமெரிக்க உயர்மட்டத்தின் உத்தரவுகளை அவர்கள் செயல்படுத்தினர். கிராமத்தை அழிக்குமாறு அது உத்தரவிட்டிருந்தது; வியட்நாமிய தேசிய எழுச்சியாளர்களான தேசிய விடுதலை முன்னணியின் பரிவுணர்வாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட கிராமம் முழுவதும், ஒவ்வொரு வீடும் தரைமட்டம் ஆக்கப்பட்டு, எரிக்கப்பட்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகப் பெரிய தோல்வியான வியட்நாமின் துர்நாற்றம் இப்பொழுது ஆப்கானிஸ்தானத்தில் முழு அமெரிக்க-நேட்டோ தலையீட்டிலும் காணப்படுகிறது. தென் வியட்நாமில் முன் இருந்தது போன்ற, காபூலின் கைப்பாவை அரசாங்கம் அமெரிக்கத் துருப்புக்கள், அமெரிக்க டாலர்கள் ஆகியவை ஏராளமாகப் உள்வந்ததன் விளைவு ஆகும். உள்ளூர் மக்களிடம் எந்தக் கணிசமான ஆதரவையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்கவில்லை. ஆட்சியின் முக்கிய நபர்கள் பேராசை நிறைந்த, கொள்கையற்ற சமூகப் பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் வெளிநாட்டில் இருக்கும் வங்கிக் கணக்குகளை கொழுக்க வைக்கும் கவலையைத்தான் அதிகம் கொண்டிருந்தனரே ஒழிய, நடந்து கொண்டிருந்த போரைப் பற்றிக் கவலைப்படவில்லை. அது நம்பிக்கையற்ற போர் என்று கருதி அதற்காக எந்தவித ஆபத்தையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

கடந்த வாரத்தில் மட்டும், அமெரிக்க செய்தி ஊடகத்தில் அமெரிக்க உதவிநிதிகள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் உடைய நெருக்கமான நண்பர்கள் பில்லியன் கணக்கில் கொள்ளையடிப்பது குறித்தும், அத்துடன் காபூல் வங்கி நட்டத்தில் சென்றதை தொடர்புபடுத்தி, திருட்டு பற்றிய விசாரணை குறித்து கர்சாய் இன் உயர்மட்ட அதிகாரிகள் தலையீடு செய்தது பற்றியும் தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்க அதிகாரிகள் இப்பொழுது பென்டகன் தோற்றுவித்த ஆப்கானிய விமானப்படை போதை மருந்துகளையும் சட்டவிரோத ஆயுதங்களையும் நாடெங்கிலும் வினியோகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து விசாரிப்பதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது. உலகின் அபின் போதை மருந்தில் 90% ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வருகிறது. வியட்நாம் போர் வரலாறு குறித்து அறிந்தவர்கள் எப்பொழுதும் ஊழல், இழிந்த நிலை ஆகிய வழிவகை முழுவீழ்ச்சிக்கு முன் ஏற்படும் என்பதை உணர்வர்.

வியட்நாமில் இருந்ததைப் போலவே, சகோதரக்கொலை என்பதே இறப்பிற்கு முக்கிய காரணமாக ஆப்கானிஸ்தானத்தில் உள்ள ஆக்கிரமிப்புப் படைகளிலும் ஏற்பட்டுள்ளது. வியட்நாமில் விருப்பமற்ற, கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்ட சிப்பாய்கள் குறிப்பிடத்தக்க வகையில் மிருகத்தனமாக அல்லது பொறுப்பற்று இருந்த அதிகாரிகளை அவர்கள் தூங்கும்போது கையெறிகுண்டுகளால் கொலை செய்தது நிலவியது. ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கர்களிடம் பயிற்சி பெற்ற ஆப்கானியப் பொலிசாரும், இராணுவத்தினரும்தான் டஜன் கணக்கில் அவர்களுடைய அமெரிக்க, நேட்டோ நண்பர்களை தொடர்ச்சியாக இராணுவம் பச்சை, நீலம் என வர்ணிக்கும் தாக்குதல்கள் என்பதில் கொன்றுள்ளனர். கடந்த வாரம் ஒரு ஆப்கானியப் பொலிஸ் ஒருவர், தலிபான் எழுச்சியாளர்களை ஒரு சோதனைச் சாவடியில் நுழையவிட்டு தன்னுடைய சக பொலிசார் ஒன்பது பேரை நித்திரையிலிருக்கும்போது கொல்லவிட்டுப் பின் அவர்களுடன் சேர்ந்து தப்பி ஓடிவிட்டார்.

பஞ்ச்வாயக்கும் மை லாய்க்கும் இடையே உள்ள இணையான தன்மை நிர்வாகம் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகமும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் மனிதாபிமானக் காரணங்களுக்காக இராணுவத் தலையீடுகளில் ஈடுபட்டுள்ளது என்று இடைவிடாமல் வெளியிடும் கூற்றுக்களை அப்பட்டமாக நிராகரிப்பது ஆகும். முதலில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ், பின்னர் பாரக் ஒபாமாவின் கீழ், அமெரிக்க குண்டுகளும் ஏவுகணைகளும் ஈராக், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், யேமன் மற்றும் லிபியா மீது மழை போல் பொழிந்தன. இப்பொழுது சிரியாவும் ஈரானும் அந்நிலையில் அகப்பட்டுக் கொள்ளும் சாத்தியம் உள்ளது.

உண்மை என்ன என்றால், வியட்நாமைப் போலவே, கடந்த தசாப்தத்தில் அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்புத்தன்மை முற்றிலும் குற்றம் சார்ந்த தன்மையைத்தான் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு 1960களில் இருந்ததை விடச் சற்றும் குறைந்த மிருகத்தனத்தையோ இரக்கமற்ற தன்மையையோ கொண்டிருக்கவில்லை. இதன் வழிவகைகள் இன்னும் தொழில்நுட்ப முறையில் நவீனமயப்படுத்தப்பட்ட smart குண்டுகள், ஆளற்ற விமானம் வழிகாட்டும் ஏவுகணைகள் தான் அன்றைய B-52 களுக்கும் நாபாம் குண்டுகளுக்கும் பதிலாக இருக்கிறது. இலக்கு கொள்ளப்படும் மக்கள்மீது காட்டப்படும் அடிப்படை ஏகாதிபத்திய இகழ்வுணர்வு அப்படியேதான் இருக்கிறது. தவிர்க்க முடியாமல் இது ஞாயிறு காலை வெளிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில்தான் வெளிப்பாட்டைக் காண்கிறது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானத்தில் ஒபாமா வன்முறையைத் தீவிரமாக்கியதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளார். அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை மும்மடங்கு ஆக்கப்பட்டுள்ளதுடன், போரை நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிற்கும் கொண்டு சென்றுள்ளதுடன், எல்லை கடந்து பாக்கிஸ்தானிலும் விரிவாக்கியுள்ளார். ஈராக்கில் எழுச்சியாளர்களுக்கு எதிராக படுகொலைத் திட்டங்களுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ஸ்டான்லி மக்கிறிஸ்டலை அவர் ஆப்கானிஸ்தானத்திலும் இதேபோன்ற முயற்சிகளுக்கு வழிநடத்துவதற்குத் தலைமை தாங்க வைத்துள்ளார். அதன்பின் அவர் வான்சக்தி மற்றும் பொறுப்பற்ற முறையில் குடிமக்கள்மீது வன்முறையைச் செலுத்த தயங்கியபோது, அவரைப் பதவியில் இருந்து அகற்றவிட்டார்.

மக்கிறிஸ்டலுக்குப் பின் பதவிக்கு வந்த ஜெனரல் டேவிட் பெட்ரீயஸின் கீழ் அமெரிக்கச் சிறப்புப் படைகளின் செயற்பாடுகள் பல ஆப்கானிய கிராமங்களை பேரழிவிற்கு உட்படுத்திய இரவுநேரத் தாக்குதல்களை பெரிதும் அதிகரித்தன. இவற்றைத் தொடர்ந்து பெருகிய சீற்றம் தரும் நிகழ்வுகளும் ஏற்பட்டன. சில நன்கு வெளிப்படையான, சடலங்களின்மீது சிறுநீர் கழித்தல், இன்னும் கொலைசெய்யப்பட்ட ஆப்கானியர்களின் சடலங்களில் இருந்து விரல்கள், பிற உறுப்புக்களை வெற்றிச் சின்னங்கள் என்று எடுத்து வைத்துக் கொள்ளுதல், பக்ரம் விமானத் தளத்தில் குர்ரான் பிரதிகளை எரித்தல் போன்றவை நடைபெற்றன.

பஞ்ச்வாய் படுகொலை ஈராக்கிற்கு எதிரான மக்களின் போர் எதிர்ப்பு உணர்வை  ஜனநாயகக் கட்சி மற்றும் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக திசை திருப்பியதில் பங்கு பெற்றிருந்த போலி இடது குழுக்களின் பிற்போக்குத்தனத்தையும் அம்பலப்படுத்தி உள்ளது. இந்த அமைப்புக்களில் பல 1960களின் எதிர்ப்பு இயக்கங்களில் தோன்றியவை, வியட்நாம் போரினால் உந்துதுல் பெற்றவை. ஆனால் அவை அமெரிக்க ஏகாதிபத்திய முகாமின் பக்கம் சென்றுவிட்டன, அது நடத்தும் குற்றங்கள் குறித்து எத்தகைய எதிர்ப்பையும் கைவிட்டுவிட்டன. கடந்த ஆண்டு லிபியாவின் அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சிற்கு இவை உற்சாகமாக ஆரவாரக் குரல் எழுப்பின என்றால், இன்று அவை அசாத்தின் சிரிய ஆட்சிக்கு எதிரான வெளிநாட்டுத் தலையீட்டிற்குக் குரல் கொடுக்கின்றன; நாளை ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு ஒப்புதல் கொடுக்கும்.

அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும் அமெரிக்க இராணுவ வாதம் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தொழிலாள வர்க்கம் திரட்டப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. 2012 தேர்தல் பிரச்சாரங்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் கோட்பாடு சர்வதேசிய வாதமாகும். உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ முறைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் ஒன்றாக இணைந்துக் கொண்டுவருவதாகும். அனைத்து அமெரிக்க மற்றும் நேட்டோத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானத்தில் இருந்து உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும், ஆப்கானிய மக்களுக்கு நிதி இழப்பீட்டுத் தொகைகள் கொடுக்கப்பட வேண்டும், இப்போரில் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்க வைக்கப்படவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துறோம்.