World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US exploits UNHRC resolution to pressure Sri Lanka

அமெரிக்கா இலங்கையை நெருக்குவதற்காக யூ.என்.எச்.சீ.ஆர். தீர்மானத்தை சுரண்டிக்கொள்கின்றது

By Sarath Kumara
7 March 2012
Back to screen version

அமெரிக்கா கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (யூ.என்.எச்.சீ.ஆர்.) கூட்டத்தில் இலங்கை மீது ஒரு தீர்மானத்தை பிரேரித்துள்ளது. இந்த நகர்வை இலங்கை அரசாங்கம் எதிர்க்கின்ற அதே வேளை, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தீவின் உள் நாட்டு யுத்தத்தின் கடைசி கட்டத்தில், இராணுவத்தால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் பகிரங்கமான ஜனநாயக உரிமை மீறல்கள் சம்பந்தமான பிரச்சினையை அணுகுவதற்கும் இந்த தீர்மானத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த வரைவுத் தீர்மானம், இலங்கை அரசாங்கமே நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி.) பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும், அதே போல், எல்.எல்.ஆர்.சீ. அறிக்கை தொடத் தவறியுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்க்கள் சம்பந்தமாக நம்பகமான விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.

தனது சொந்த விசாரணையின் பரிந்துரைகளை மேற்கொள்ளவதை கொழும்பு அரசாங்கம் எதிர்ப்பதானது, மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதற்காவும் மற்றும் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை நடத்துமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளை திசை திருப்புவதற்காகவும் வரையப்பட்ட ஒரு போலி விசாரணையே இந்த எல்.எல்.ஆர்.சீ. என்ற உண்மையை கோடிட்டுக் காட்டுகின்றது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, உண்மையான விசாரணை நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக சில ஆணையாளர்களை பொறுக்கி எடுத்திருந்தார்.

யுத்தக் குற்றங்கள் எத்தகைய அளவிலானது எனில், இராணுவத்தால் எந்தவொரு பொது மகனும் கொல்லப்படவில்லை என்ற அரசாங்கத்தின் பொய்யை எல்.எல்.ஆர்.சீ. கூட ஏற்றுக்கொள்ளவில்லை. எவ்வாறெனுனும், எந்தவொரு பொது மகனின் மரணமும் தற்செயலானது என எல்.எல்.ஆர்.சீ. முடிவுக்கு வந்துள்ளதோடு தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து மக்களை வெளியேறவிடாமல் தடுத்தமைக்காக புலிகளைக் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை உட்பட, சர்வதேச அறிக்கைகளோடு எல்.எல்.ஆர்.சீ.யின் கண்டுபிடிப்புகள் முரண்படுகின்றன. அரசாங்க, சிரேஷ்ட அரச அலுவலர்கள் மற்றும் உயர்மட்ட இராணுவ தளபதிகளை சுட்டிக் காட்டும் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான நம்பகமான ஆதாரங்களை ஐ.நா. குழு கண்டு பிடித்துள்ளது. ஆஸ்பத்திரிகள் மற்றும் முதலுதவி நிலையங்கள் மீது வேண்டுமென்ற நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட, 2009 மே மாதம் வரையான யுத்தத்தின் கடைசி மாதங்களில் பத்தாயிரக்கணக்கான பொது மக்களை இலங்கை இராணுவம் படுகொலை செய்துள்ளது என அது முடிவுற்றுள்ளது.

எல்.எல்.ஆர்.சீ. பரிந்துரைகளில் அநேகமானவை வெற்றுரைகளுக்கு சமனானவையாக உள்ள அதே வேளை, அது அரசாங்கத்தின் விருப்பத்தையும் கடந்து சென்றுள்ளது. அது, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் ஆளும் தட்டுக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட அரசியல் தீர்வுக்கும், முன்னைய யுத்த வலயத்தில் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத் தலையீட்டை நிறுத்தவும் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள், பலாத்கார ஆட்கடத்தல்கள் சம்பந்தமான விசாரணைக்கும் அழைப்பு விடுக்கின்றது.

இத்தகைய நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு ஆலோசனைகளையும் தொழில்நுட்பட உதவிகளையும் ஏற்றுக்கொள்ளுமாறும் அடுத்த யூ.என்.எச்.சீ.ஆர். கூட்டத்துக்கு முன்னதாக ஒரு உறுதியான பல் பூரணமான நடவடிக்கைத் திட்டமொன்றை முன்வைக்குமாறும் இந்த அமெரிக்க தீர்மானம் இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றது. இது, சர்வதேச விமர்சனங்களுக்கு முடிவுகட்டவும் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர்கொள்ளும் ஆபத்துக்கு முடிவுகட்டவும் ஒரு வழியை கொழும்புக்கு விளைபயனுள்ள வகையில் அளித்துள்ளது.

ஒபாமா நிர்வாகமானது அமெரிக்காவின் நலன்களுக்கும் மற்றும் எல்.எல்.ஆர்.சீ. பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரும் இந்தியாவின் நலன்களுக்கும் இணங்குமாறு இராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்குவதற்கான ஒரு வழிமுறையாக இந்த தீர்மானத்தை முன்கொணர்ந்துள்ளது. இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் சம்பந்தமாக தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் நிலவும் சீற்றத்தை தணிப்பதற்காக, தீவின் சிங்கள மற்றும் தமிழ் ஆளும் தட்டுக்களுக்கு இடையில் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்தும் அரசியல் தீர்வு ஒன்றுக்காக புது டில்லி அழுத்தம் கொடுக்கின்றது.

எல்.எல்.ஆர்.சீ. பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக் காட்டி, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இலங்கையில் உள்ள தனது சமதரப்பினருக்கு ஜனவரியில் கடிதம் ஒன்றை அனுப்பினார். பெப்பிரவரியில், அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் மாரியா ஒடேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக்கும் கொழும்புக்கு வந்தனர். யூ.என்.எச்.சீ.ஆர். கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை முன்வைக்க வாஷிங்டன் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு ஒடேரோ அறிவித்திருந்தார்.

புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஒத்துழைத்த வாஷிங்டனுக்கு ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவை விட, இலங்கையில் மனித உரிமைகள் சம்பந்தமாக அக்கறை கிடையாது.  ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், பெய்ஜிங்குடன் ஸ்தாபித்துக்கொண்டுள்ள நெருக்கமான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் இருந்து தூர விலகுமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு வசதியான உபகரணமே இந்த விவகாரமாகும்.

2009 மே மாதம் புலிகள் தோல்வியடைந்த பின்னர், இலங்கையில் மனித உரிமைகள் சம்பந்தமாக யூ.என்.எச்.சீ.ஆர்.க்கு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருதவற்காக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு உதவியது. சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா அதே போல் மேலும் பல நாடுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக்கொண்டதை அடுத்து அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

யூ.என்.எச்.சீ.ஆர். அமர்வில் உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதிகளின் தலைவர் மஹிந்த சமரசிங்க, எல்.எல்.ஆர்.சீ. பரிந்துரைகள் சம்பந்தமாக ஏற்கனவே ஒரு உள்ளக பொறுப்புடைமை செயற்பாடு இடம்பெறுகிறது என பொய்ப் பிரகடனம் செய்ததோடு பிரச்சினை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க இன்னும் கால அவகாசம் கோரினார்.

விமர்சனங்களை தணிப்பதற்காக, பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான எல்.எல்.ஆர்.சீ. அறிக்கையை பரிசோதிக்கவும் மற்றும் இலங்கை கொலைக் களம் என்ற பிரித்தானியாவை தளமாகக் கொண்டு செனல் 4 வெளியிட்ட விவரணப் படம் சம்பந்தமாக விசாரிக்கவும் ஐந்து பேர் கொண்டு விசாரணை மன்றம் ஒன்றை அண்மையில் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமித்துள்ளார். யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான விபரங்களை சித்தரிக்கும் ஒரு மணித்தியால இந்த வீடியோவை முன்னர் அரசாங்கமும் இராணுவமும் நிகாரித்திருந்தன.

அதே சமயம், அமெரிக்க ஆதரவிலான தீர்மானத்துக்கு எதிராக திரைக்குப் பின்னால் இலங்கை கனமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இலங்கைக்கு சீனாவும் ரஷ்யாவும் ஆதரிவளிப்பது போல் தெரிந்தாலும், இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. புது டில்லி இலங்கையில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்த முயற்சித்த போதிலும், தீர்மானத்தை நிராகரிப்பது சம்பந்தமாக தமிழ் நாட்டில் இருந்து எழும் அரசியல் தாக்கத்தைப் பற்றியும் அது கவலை கொண்டுள்ளது.

அதே சமயம், இலங்கை அரசாங்கம், நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சர்வதேச சதி என்று சொல்லப்படுவதற்கு எதிராக உள்நாட்டிலும் ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தையும் குவித்துள்ளது. இந்த பிரச்சார மழை, குவிந்துவரும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை, இந்த சதி என சொல்லப்படும் திட்டத்தின் பாகமாக வகைப்படுத்தி, அவை உட்பட எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதை இலக்காகக் கொண்டதாகும்.

பி.பி.சீ.க்கு பேசிய சிங்கள அதிதீவிரவாத ஜாதிக ஹெல உறுமிய கட்சியின் தலைரான நிஷாந்த வர்ணசிங்க, தனது கட்சி வாஷங்டனுக்கான எந்தவொரு சலுகையையும் எதிர்ப்பதோடு இராணுவ விசாரணை மன்றம் ஒன்றை அமைப்பதையும் எதிர்க்கிறது என்றார். ஜாதிக ஹெல உறுமய, இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் பங்காளியாகும்.

புலிகளுக்கு எதிரான இராஜப்கஷவின் யுத்தத்தை ஆதரித்த மற்றும் இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை பாதுகாத்த எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), வாஷிங்கடனுடன் ஒரு இணக்கப்பாட்டை எதிர்பார்க்கிறது. யூ.என்.பீ. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையில் ஒரு கருத்தொருமைப்பாட்டுக்கு அழைப்பு விடுக்கின்றார்.

இதே போல், முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சூழ்ச்சித்திட்டம் வகுக்கிறது. முதலில் எல்.எல்.ஆர்.சி. அறிக்கையை தமிழ் கூட்டமைப்பு கண்டனம் செய்த போதிலும், இப்போது அது வாஷிங்டன் மற்றும் புது டில்லியின் வழியில் நின்று அதன் பரிந்துரைகளை அமுல்படுத்த அழைப்பு விடுக்கின்றது. தமிழ் கூட்டமைப்பு, அது நன்மையடைய எதிர்பார்த்துள்ள அரசியல் தீர்வுக்கு இந்தியாவினதும் அமெரிக்காவினதும் ஆதரவை ஏக்கத்துடன் எதிர்பார்க்கின்றது.

அமெரிக்க ஆதரவிலான போலித் தீர்மானத்தையும் அதற்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் பேரினவாத பிரச்சாரத்தையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கின்றது. பல்வேறு தமிழ் எதிர்க் கட்சிகள் உட்பட இலங்கையில் எந்தவொரு கட்சியும் அல்லது ஏகாதிபத்திய சக்திகளும், அரசாங்கமும் இராணுவமும் பொறுப்புடைமை கொண்டுள்ள அட்டூழியங்களை கண்டனம் செய்யக்கூட இல்லை. தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காவும் சோசலிச கொள்கைகளுக்காகவும் முன்னெடுக்கும் ஐக்கியப்பட்ட போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே அநேகமான அடிப்படை ஜனநாயக உரிமைகளை காக்கவும் இத்தகைய துன்பகரமான யுத்தக் குற்றங்கள் பற்றி நடவடிக்கை எடுக்கவும் முடியும்.