World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Socialist Party presidential candidate reassures the banks

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் வங்கிகளுக்கு மீண்டும் உறுதியளிக்கிறார்

By Pierre Mabut
7 March 2012
Back to screen version

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களின் முதல் சுற்று ஏப்ரல் 22 என நெருங்கி வருகையில், சோசலிஸ்ட் கட்சி (PS) வேட்பாளர் பிரான்ஸுவா ஹோலண்ட் உழைக்கும் மக்களுக்கு எதிராக சர்வதேச நிதியத்தினுடைய பக்கம் இருப்பதை உறுதியளிப்பதில் தீவிரமாக உள்ளார்; இது நிதியத்தின் எதிரி என முன்னதாக அவர் காட்டிக் கொண்டதிலிருந்து முற்றிலும் தலைகீழ் நிலைப்பாடு ஆகும்.

கடந்த புதனன்று லண்டனுக்குச் சென்றிருக்கையில், சிட்டி ஆப் லண்டனின் வங்கிகளுக்கு தன்னை ஒரு நண்பர் என்று கருதுமாறு ஹோலண்ட் முறையிட்டார். நான் ஒன்றும் ஆபத்தானவன் அல்ல என்றார் அவர்.

இது பெப்ருவரி 14ம் திகதி கார்டியனுக்கு PS  ஒரு மூலதனத்திற்கு நட்பு அமைப்பு எனப் பாதுகாத்து விடுத்த முந்தைய அறிக்கையைத்தான் எதிரொலிக்கிறது. இடதானது அரசாங்கத்தில் 15 ஆண்டுகளாக இருந்தது; நாங்கள் பொருளாதாரத்தை தாராளமயமாக்கினோம், சந்தைகளை நிதிப் பிரிவிற்கும் தனியார்மயமாக்குதலுக்கும் திறந்துவிட்டோம்; எனவே எங்களையிட்டு அஞ்சத் தேவையில்லை.

முதலாளித்துவ செய்தி ஊடகமும் இதே முடிவைத்தான் கொண்டுள்ளது. International Herald Tribune ஜனவரி 24ம் திகதி ராய்ட்டர்ஸ் தகவலை மேற்கோளிட்டுள்ளது: பிரெஞ்சு வங்கியாளர்கள், வணிகர்கள், மற்றும் ஒதுக்கு நிதி மேலாளர்கள் பிரான்சுவா ஹோலண்ட் மே மாதம் ஜனாதிபதியானால் பாரிசில் இருந்து வெளியேறுவதற்கு ஒருவழி பயணச் சீட்டு வாங்கும் எண்ணத்தைக் கைவிடவேண்டும். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் தலைவர் தன்னை நிதி உலகத்தின் முக்கிய எதிரி என்று அடையாளம் கண்டுள்ளார்.... உண்மையில் ஹோலண்ட் முன்வைக்கும் முக்கிய சீர்திருத்தங்கள் குறிப்பிடத்தக்க வகையில் பயம் அளிப்பவை அல்ல, அவர் குறிப்புக் காட்டுபவை தீவிரத்தன்மை உடையவை அல்ல.

அதாவது மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு ஹோலண்ட் கூறும் அனைத்தும் பொய்கள், மோசடித்தன்மை உடையவை என்பதை நிதியப் பிரபுத்துவம் நன்கு அறியும் என்று பொருள் ஆகும். ஐரோப்பிய ஒன்றிய நிதிய உடன்பாட்டை தற்போதைய ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி மற்றும் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் கையெழுத்திட்டதை மறுபேச்சுக்களுக்கு உட்படுத்த இருப்பதாக அவர் கூறியிருப்பதை பொறுத்தவரை, அவை ஒன்றும் தொழிலாள வர்க்க நலன்களை காப்பவை அல்ல, பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களை பேர்லினுக்கு எதிராக வளர்ப்பதற்குத்தான். ஹோலண்டின் பேரினவாத தன்மை நிறைந்த பிரச்சாரம் சீன இறக்குமதிகளுக்கு எதிரான அவருடைய குறைகூறல்களிலும் வெளிப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நிதிய உடன்பாடு மற்றும் அவருடைய சமூகப் பிரச்சினைகளில் கொடுக்கப்படும் நலிந்த உறுதிமொழிகளிலும் ஹோலண்ட் பின்வாங்குகிறார். பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்புவிடும் திருத்தம் அல்லது இணைப்பு மட்டும் போதும் என்று இப்பொழுது அவர் கூறுகிறார். திருத்தப்பட்ட நிதிய உடன்பாடு குறித்து மக்கள் வாக்கெடுப்பிற்கு ஏற்பாடு செய்ய அவர் மறுத்துவிட்டார்; இது பாராளுமன்றத்தில் வலதுசாரி ஆதரவுடன், சார்க்கோசி வகையில் ஏற்கப்பட்டுவிடும்.

இது முதலாளித்துவ PS குட்டி முதலாளித்துவ, முன்னாள் இடது கட்சிகளில் இருக்கும் அதன் நட்பு அமைப்புக்களுக்கு ஹோலண்டை மே மாதம் நடக்க இருக்கும் இரண்டாம் சுற்றில் ஆதரவளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெறும் கானல் நீர்தான். அந்த அமைப்புக்களில் இடது கட்சி-பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டான Jean-Luc Mélenchon, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக்கட்சி NPA மற்றும் பசுமைவாதிகள் ஆகியவை உள்ளன. இக்கட்சிகளுக்கு ஹோலண்ட் தொழிலாள வர்க்கத்தை கிரேக்கத்தில் PASOK சமூக ஜனநாயகக் கட்சி செய்தது போல், திவாலாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளார் என்பது தெரியும், அக்காரணத்திற்காகவே அவருக்கு ஆதரவு கொடுக்கின்றன.

சமீபத்தில் ஹோலண்ட் நிதியத்தைக் கட்டுப்படுத்துவது பற்றிய தன் அறிவிப்புக்கள் காங்கிரசில் ஜனாதிபதி ஒபாமா உரை கொண்டுள்ள ஆக்கிரோஷத்தன்மையைத்தான் கொண்டுள்ளன என்று ஒப்பிட்டுப் பேசினார்: ஒபாமாவிற்கும் எனக்கும் ஒரே ஆலோசகர்கள் இருக்கின்றனர் என்று கூட நீங்கள் கூறலாம் என்று அவர் தொடர்ந்தார்உள்நாட்டில் ஊதிய, சமூக நலச் செலவு வெட்டுக்கள், வெளிநாட்டில் போர் என்னும் ஒபாமாவின் கொள்கைகளுக்கு அவர் எதிர்ப்புக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

லண்டனுக்குச் சென்றிருந்தபோது, ஹோலண்ட் Kings College மாணவர்களிடையே பேசுகையில், நிதியம் என்பது செல்வத்தைத் தோற்றுவிக்கவேண்டும், ஆனால் உண்மையான பொருளாதாரத்தின் இழப்பில் அல்ல என்றார். இது சார்க்கோசியின் கருத்தைத்தான் பழையபடி கூறுகிறது; அவர் 2009ல் நிதிய நெருக்கடியை தொடர்ந்து மூலதனம் அறநெறிக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.

பிரான்ஸும் பிரித்தானியாவும் சமச்சீர் செய்யப்பட்ட பொதுச் செலவுகளை கொண்ட வரவு-செலவுத் திட்டங்கள், வளர்ச்சிக்கு ஊக்கம் தருபவை (போட்டித்தன்மையை அதிகரித்தல்) மற்றும் வேலைப் பயிற்சி அளித்தல் என்னும் ஒரேவித கடமைகளைத்தான் கொண்டிருக்கின்றன என்று ஹோலண்ட் கூறினார்.

சார்க்கோசியின் வலதுசாரிக் கொள்கைகளை ஹோலண்ட் தொடரும் விருப்பம் குறித்த மிகத் தெளிவான அடையாளம், ஒருவேளை லண்டனில் பிரான்ஸ்-பிரித்தானிய ஒத்துழைப்பிலான அணுச்சக்தி, பாதுகாப்புத் துறைகளில் அவர் காட்டிய உறுதியான உடன்பாட்டில் காணப்படலாம். இப்பயணத்தின்போது ஹோலண்டுடன் சென்றிருந்த முன்னாள் PS ஐரோப்பிய விவகாரங்கள் மந்திரி Elisabeth Guigou, பிரான்ஸ் நேட்டோ கட்டுப்பாட்டு அமைப்பில் தொடர்ந்து அதன் நிலைப்பாட்டைக் கொள்ளும் என்றும் நவம்பர் 2010ல் சார்க்கோசி கையெழுத்திட்டிருந்த லங்காஸ்டர் இராணுவ உடன்பாட்டை மதிக்கும் என்றும் தெளிவாக்கினார். அவர் முன் எப்பொழுதையும்விட இப்பொழுது இது பொருந்தும் என்றும் கூறினார்.

ஹோலண்டின் ஜனாதிபதி பதவிக் காலம் பிரான்ஸும் பிரித்தானியாவும் அமெரிக்காவுடன் லிபியாவிற்கு எதிராகப் பயன்படுத்திய சட்டவிரோத, காலனித்துவ ஆக்கிரமிப்பை தொடரும்சிரியாவிலும் அதற்கும் அப்பாலும்.

சார்க்கோசியிடம் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொள்ளவும் மாற்றத்திற்கான ஒரு வேட்பாளர் என்று காட்டிக் கொள்ளும் வகையில் ஹோலண்ட் (தன் பிரச்சாரக் குழு உட்பட) அனைவரையும் இரு நாட்களுக்கு முன் லண்டன் செல்வதற்கு முன்னதாக தான் மில்லியன் யூரோக்களுக்கு அதிகம் வரும் ஆண்டு வருமானங்களுக்கு 75 சதவிகிதம் வரிவிதிக்க உள்ளதாகக் கூறி வியப்பில் ஆழ்த்தினார்.

தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் தொழிலாள வர்க்க எழுச்சி குறித்த அச்சத்தினால், ஹோலண்ட் சமூக ஒழுங்குமுறையை தக்க வைத்தல் முக்கியம் என்றும், அதே நேரத்தல் செல்வந்தர்கள் மீதான பாதிப்பைக் குறைக்க முற்பட்டவகையில், 3,000 பேர்தான் பாதிக்கப்படுவர் என்றும் கூறினார். The Credit Suisse வங்கி அதன் 2010 ஆண்டு அறிக்கையில்  ஐரோப்பாவிலேயே பிரான்ஸில்தான் மிக அதிக டாலர் மில்லியனர்கள் இருப்பதாக தெரிவித்தது: அதாவது 2.6 மில்லியன் பேர்கள்.

ஹோலண்ட், மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை தொழிலாளர்களுக்கு எதிராக திட்டமிட்டிருப்பதாகவும், அவருடைய கொள்கைகள் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளதைவிட இன்னும் மிருகத்தனமாக இருக்கும் என்பதற்கான சான்றுகள் பதிவாகியுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்டால் குறைந்தப்பட்ச ஊதிய அளவு உயர்த்தப்படுவது குறித்துத் தான் எதிர்க்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

தேசிய புள்ளிவிபரக் கூடத்தின் ஆய்வு (INSEE) ஒன்று 2010ல் கண்டறிந்தது: பிரெஞ்சு மக்களிடையே மிகச் செழிப்பானவர்களுக்கும் மக்களில் மற்றவர்களுக்கும் சமத்துவமின்மை நிலைமை 2004 முதல் 2007 வரை [வங்கி நெருக்கடிக்கு முன்] பெரிதும் தீவிரமாகியுள்ளது; 2007ல் தொடக்கநிலை வறுமை என்பது மாதத்திற்கு 908 யூரோக்கள் என இருந்து, 13 சதவிகிதம் மக்கள் அதில் காணப்பட்டனர், அதாவது 8 மில்லியன் மக்கள். இன்று உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்தபின், சார்க்கோசியின் தொடர்ந்த வெட்டுக்களுக்குப் பின் அது ஐயத்திற்கு இடமின்றி மோசமாகியுள்ளது.