World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian workers must adopt socialist strategy to oppose UPA-led big business offensive

இந்திய தொழிலாள வர்க்கம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான பெரு வணிகத்தின் தாக்குதலை எதிர்க்க சோசலிச மூலோபாயத்தை ஏற்க வேண்டும்

By the WSWS Editorial Board
28 February 2012
Back to screen version

உயர்ந்துவரும் விலைவாசி, ஒப்பந்த தொழிலாளர் விரிவாக்கம், தனியார்மயமாக்கம், பெரு வணிகத்தின் திட்டமிட்ட தொழில் நெறிமுறைகளை மீறலுக்கு அரசாங்கம் உடந்தையாய் இருத்தல் மற்றும் ஒழுங்குமுறைசாராத கடுமையாக உழைக்க வேண்டிய துறைகள் என்றழைக்கப்படுவதில் இருக்கும் 90 சதவீத தொழிலாளர்களின் மோசமான நிலைமைகள் ஆகியவற்றை எதிர்த்து இன்று பெப்ரவரி 28, செவ்வாயன்று நடக்கவிருக்கின்ற நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்தில் மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த வேலைநிறுத்தமானது நிலவிவரும் தொழிலாள வர்க்க கோபத்திற்கும், எதிர்ப்பிற்கும் எடுத்துக்காட்டாகும். மாருதி சுசூகி, ஹூண்டாய், BYD எலெக்ட்ரானிக்ஸ், மற்றும் பாக்ஸ்கான் ஆகியவற்றிற்கு சொந்தமான ஆலைகள் உட்பட, கடந்த ஒன்றரை ஆண்டானது போர்குணமிக்க வேலைநிறுத்தங்களின் மற்றும் ஆலை ஆக்கிரமிப்புகளின் ஓர் அலையைக் கண்டுள்ளது

ஆனால் தொழிலாளர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைய போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ள தொழிற்சங்கங்கள் (அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பதினாறு மத்திய தொழிலாளர் அமைப்புகளும் மற்றும் பல்வேறு தொழில்துறை அளவிலான தொழிலாளர் அமைப்புகளும்), பெரு வணிகத்தின் நலன்களுக்கு எதிரான மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்-தாக்குதலை அபிவிருத்தி செய்யாமல், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் தணிக்கும் மற்றும் ஒடுக்கும் நோக்கத்தோடு இதை ஏற்பாடு செய்துள்ளன.

இது காங்கிரஸ் கட்சி மற்றும் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சியின் (BJP) தொழிற்சங்க பிரிவுகளான முறையே இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) மற்றும் பாரதீய மஜ்தூர் சங் (BMS) ஆகியவற்றிற்கு மட்டுமின்றி அனைத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் பொருந்தும். அனைத்திந்திய வர்த்தக சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் அமைப்பு (சிஐடியு) இரண்டும் அவை எவற்றைச் சார்ந்துள்ளனவோ அந்த ஸ்ராலினிச கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐஎம்) இரண்டும் இந்திய முதலாளித்துவத்தின் "நவ-தாராளவாத" கொள்கைகளுக்கு எதிராக நிற்கின்றன; ஆனால் அந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அவை ஒரு முக்கிய பங்காற்றி உள்ளன.  

இந்திய முதலாளித்துவத்தின் "புதிய பொருளாதார கொள்கையை" தொடங்கி வைத்த நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசாங்கம் உட்பட, மத்தியில் வலதுசாரி பெரு வணிகத்தின் அரசாங்கங்களை கடந்த இரண்டு தசாப்தங்களாக சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளன. மே 2004இல் இருந்து ஜூன் 2008 வரையில், நான்கு ஆண்டுகள், ஸ்ராலினிஸ்ட்டின் இடது முன்னணியானது, தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அதிகாரத்தில் தங்கியிருக்க அதன் வாக்குகளை அளித்ததோடு, “ஒட்டுமொத்த வளர்ச்சி" என்ற அதன் பொய்யையும் ஊக்குவித்தது. இன்று வரையில், ஸ்ராலினிச கட்சிகளும் மற்றும் ஏஐடியுசி மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்களும் "மக்கள் சார்பான கொள்கைகளை" நடைமுறைப்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்க முடியுமென வாதிடுகின்றன.

இடது முன்னணி அதிகாரத்தில் இருந்த மாநிலங்களில், மிக குறிப்பாக மேற்கு வங்காளத்தில், அது பெரு வணிகத்தால் கோரப்பட்ட விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்த பொலிஸ் மற்றும் அடியாட்களின் வன்முறையை பயன்படுத்தியதுடன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்துறையில் நடந்த வேலைநிறுத்தங்களை தடுத்தும், வெட்கமின்றி "முதலீட்டாளர் சார்பான" கொள்கைகளைப் பின்பற்றியது.   

இடது முன்னணியின் பிற்போக்குத்தனமான நாடாளுமன்ற உபாயங்களுக்கும், மற்றும் உலக முதலாளித்துவத்தின் மலிவு-கூலி உற்பத்திக்கான ஒரு புகலிடமாக இந்தியாவை உருவாக்குவதற்கான பெரு வணிகத்தின் நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதில் அவற்றின் பாத்திரத்திற்கும், ஓர் அரசியல் சாயம் அளிக்க, ஏஐடியுசி மற்றும் சிஐடியு கடந்த தசாப்தத்தில் தேசியளவிலான ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தை தோற்றப்பாட்டளவில் ஆண்டுதோறும் நடக்கும் ஒரு நிகழ்வாக மாற்றியுள்ளன.  

ஆனால் இன்றைய வேலைநிறுத்த போராட்டத்தை ஸ்ராலினிஸ்டுகள் வேறுபட்ட ஒன்றெனவும் உண்மையில் "வரலாற்றுரீதியானது" என்றும் கூறுகின்றனர். ஏனென்றால் எதிர்தரப்பு மத்திய தொழிற்சங்க அமைப்புகளும் அதில் இணைந்துள்ளதால். “சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக" INTUC மற்றும் BMS (இவை முதன்மை முதலாளித்துவ தேசிய கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்களாகும்) ஆகியவையும் கூட்டாக இந்த ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன என்பதால் முக்கியமாக அவை உற்சாகத்தில் உள்ளன

மஹாராஷ்டிராவில் உள்ள பாசிச சிவசேனா மற்றும் தொழிலாளர் முற்போக்கு முன்னணி (LPF) ஆகியவற்றோடு சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பும் (union federation) இதில் கலந்து கொள்வதைதொழிலாள வர்க்க ஐக்கியம்" என்ற பெயரில் ஏஐடியுசி மற்றும் சிஐடியு இரண்டும் வரவேற்றுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஒரு கூட்டாளியான தமிழ்-பிராந்தியவாத கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) தொழிற்சங்க பிரிவான LPF, தமிழ்நாட்டில் சமீபத்தில் ஆட்சியிலிருந்து பதவியிறக்கப்பட்ட திமுக அரசாங்கத்தின் கீழ் வேலைநிறுத்தங்களை உடைத்தல் உட்பட தொழிலாளர்களின் போராட்டங்களை அடிபணிய வைப்பதில் இழிபெயர் பெற்றதாகும்.

இத்தகைய வலதுசாரி சக்திகளின் பங்கேற்பானது, இன்றைய வேலைநிறுத்தம் ஒரு பாதுகாப்பான தடுப்பாக இருக்கும் என்பதையும், அது நிலவும் சமூக கோபத்தைச் சிதறடிக்கவும் மற்றும் முதலாளித்துவத்தின் அரசியல் கட்சிகளின் மற்றும் அரசியல் வடிவமைப்பின் எல்லைக்குள்ளேயே முற்றுமுழுதாக கட்டுப்படுத்திவைக்கக்கூடிய ஓர் "எதிர்ப்பு" அரசியலுக்குள் தொழிலாள வர்க்கத்தை கட்டிவைப்பதற்குமாகும் என்பதை இந்திய ஆளும் வர்க்கம் நன்கு அறிந்துள்ளது என்பதையே அடிக்கோடிடுகிறது.

பிரதம மந்திரி மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தொழிலாளர்துறை மந்திரியிடமிருந்து வந்த கோரிக்கைகளை கவனத்தில் எடுக்காது காங்கிரஸுடன் இணைந்துள்ள INTUCஇன் கலந்துகொள்ளலுக்கு அதிக முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, INTUC தலைவரும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான G. சஞ்சீவ் ரெட்டியிடம், “தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே" அவருடைய வேலை என்பதை தாம் உணர்ந்திருப்பதாக கூறி, கடந்தமுறை CITU-INTUCஆல் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தில் INTUC பங்கேற்பதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி இருந்தார்.

ஸ்ராலினிஸ்டுகள் ஜோடித்துள்ள இந்த "ஐக்கியம்", இந்திய ஆளும்வர்க்கத்தின் கட்சிகளின் தொழிற்சங்க அதிகாரத்துவ அமைப்புகளின் ஐக்கியமாகும். இது ஆரம்பகட்டத்திலுள்ள தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு எதிராக திருப்பிவிடப்பட்டுள்ளது.

நடைமுறையில் இது, கடந்த கோடையிலும் அதன் இறுதியிலும் மாருதி சுசூகியின் மானேசர் கார் அசெம்பிளி தொழிற்சாலையில் தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டத்தை நசுக்க அவர்கள் செய்த கூட்டு முயற்சியை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. மானேசர்-குர்காவ் தொழிற்துறை வளாகம் முழுவதிலும் ஏற்படவிருந்த ஒரு பரந்த தொழிலாளர்-எதிர்ப்பிற்கு தாக்குமுனையாக அந்த வேலைநிறுத்தம் ஆகிவிடாமல் தடுக்க ஏனைய தொழிற்சங்க அமைப்புகளின் சக்திகளோடு சேர்ந்த ஏஐடியுசி மற்றும் சிஐடியு, தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யாத தீர்வுகளை ஏற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தன. அத்தோடு வேலைநிறுத்தத்தை முறிக்க மாருதி-சுசூகியோடு கைகோர்த்து வேலை செய்து வந்த ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திடம் உதவி கேட்டு முறையிடுமாறும் அவர்களை வலியுறுத்தியது.

இன்றைய போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஸ்ராலினிஸ்டுகளின் கோரிக்கைகளுக்கு INTUC மற்றும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த BMSஉம் விடையிறுப்பு காட்டியிருக்கின்றன என்றால் அது தொழிலாளர்களின் ஆதரவாளர்களாக அவர்களைச் சித்தரிக்கவும் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காகவும் அந்த போராட்டத்தை ஒரு வழியாக காண்கின்றனர்.   

ஸ்ராலினிஸ்டுகளைப் பொறுத்த வரையில், எதிர்தரப்பு தொழிற்சங்க அமைப்புகளோடு நெருங்கிய உறவுகளைப் பின்தொடர்வதென்பது, தேசியளவிலும் மாநில அளவிலும் இரண்டிலும் "வலதிடமிருந்து வெளிப்படும் பிரதான அபாயத்தைத்" தோற்கடிப்பது என்ற பெயரில், மாறி மாறி, ஒரு முதலாளித்துவ கட்சியுடன் இணையும் அவர்களின் நீண்ட-கால கொள்கையை இன்னும் தொடர்ந்துசெல்வதில் உள்ளது. தமிழ்நாட்டில், கடந்தமுறை அதிகாரத்தில் இருந்தபோது, அரசு தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை மற்றும் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடந்த பல்வேறு போராட்டங்களை உடைக்க கருங்காலிகளையும், துப்பாக்கி சூட்டையும் பயன்படுத்திய அஇஅதிமுக உடன் சிபிஐ மற்றும் சிபிஎம் இரண்டும் கடந்த ஆண்டின் மாநில தேர்தல்களில் ஒரு தேர்தல் கூட்டணியை ஏற்படுத்தி கொள்வதை ஒரு முன்னேற்றப் படியாக கருதி, அதனோடு இணைந்து பங்கெடுத்தன.

தற்போது ஸ்ராலினிஸ்டுகள் ஒரு மூன்றாம் முன்னணியின், அதாவது காங்கிரஸ் மற்றும் பிஜேபி-இன் முன்னாள் கூட்டாளிகளாக இருந்த அனைத்து பல்வேறு பிராந்தியவாத மற்றும் ஜாதியவாத கட்சிகளால் ஜோடிக்கப்பட்ட ஒரு தேர்தல் கூட்டணியின் அவசியத்தை ஊக்குவித்து வருகின்றனர். ஆனால் வெகு விரைவிலேயே அவர்கள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ காங்கிரஸ் அல்லது பிஜேபி உடன் கூட்டுச் சேர்வார்கள் என்பதை நிராகரிக்கமுடியாது.

கடந்த இரண்டு தசாப்தங்களில், விவசாயிகளின் கடுமையான அதிருப்திக்கு காரணமாக இருந்து வந்த அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தை கண்மூடித்தனமாக சுரண்டியதன் மூலமாக இந்திய பெரு வணிகங்கள் "எழுச்சி" கண்டன. இப்போது, உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடிக்கு விடையிறுப்பாக, வேலைமுடக்கம் மற்றும் ஆலைமூடல்களுக்கு எதிராக எஞ்சியிருக்கும் தடைகளையும் அகற்றும் விதத்தில் மற்றும் சமூக செலவினங்களுக்கு ஒதுக்கப்படும் சொற்பமான தொகைகளையும் வெட்ட, சந்தை-சார்பு சீர்திருத்தங்களை வேகப்படுத்த அவை கோரி வருகின்றன.

தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், "சமாளிக்க முடியாத செலவு" என்றும், நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் சற்று அதிகமான கூலியுடன் சில கிராமப்புற ஏழைகளுக்கு வேலைகள் அளித்து வருவதானது, “கிராமப்புற உழைப்புச்சந்தையை" திக்குமுக்காட செய்வதாகவும் அந்த திட்டத்திற்கு எதிராக கூக்குரல் அதிகரித்து வருகிறது.

உலகளாவிய தொழிலாளர்கள் முகங்கொடுப்பதைப் போலவே, இந்திய தொழிலாளர்களும் ஒரேயொரு அரசாங்கத்திற்கு எதிராக அல்ல, மாறாக முதலாளித்துவத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தை முகங்கொடுக்கின்றனர்; உற்பத்தியானது ஒருசிலரின் இலாபங்களுக்குள் குவிக்கப்படுவதற்கு பதிலாக மனிதயினத்தின் தேவையின் அடிப்படையில் இருக்கும்படியாக, சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை மீள்-ஒழுங்கமைப்பு செய்யும் ஒரு போராட்டத்தை அவர்கள் முகங்கொடுக்கின்றனர். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஓர் அரசாங்கத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் பாகமாக, வேலைகளைப் பாதுகாப்பதற்கான, தற்காலிக தொழிலாளர்களாக மாற்றுவதற்கு எதிரான மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான போர்குணமிக்க தொழிற்துறை நடவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

அத்தகைய ஒரு போராட்டமானது, அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளோடு உடைத்து கொள்வதன் மூலமாக மட்டுமே அபிவிருத்தி செய்யப்பட முடியும். தொழிலாளர்கள் தங்களின் போராட்டங்களை நடத்த, அவர்களுக்கென சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். அவை தொழிலாள வர்க்க அதிகாரத்திற்கான சுயாதீனமான அமைப்புகளாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

நிலப்பிரபுக்கள், வட்டிக்கு விடுபவர்கள் மற்றும் பெரு வணிக பெருநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக போராடும் ஏழை விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏனைய பிரிவுகளுக்கும் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக தலைமை கொடுக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக இதற்கு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச கட்சியின் பாகமாக தொழிலாளர்களின் ஒரு பாரிய புரட்சிகர கட்சியை, அதாவது 1917 ரஷ்ய புரட்சியின் இணைத்-தலைவரும், ஸ்ராலினிசத்திற்கு எதிராக சளைக்காத எதிர்ப்பாளரும், சர்வதேச சோசலிசத்தின் முன்னோடி மூலோபாயவாதியுமான லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு இந்திய பிரிவை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

முதலாளித்துவத்தை தூக்கியெறியவும் அவர்களின் போராட்டத்தை முன்னெடுக்கவும் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய கட்சி, அதாவது சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு புரட்சிகர கட்சி அவசியமாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜேர்மனி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள சமூக சமத்துவக் கட்சியும் மட்டுமே சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அத்தகைய ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்ப போராடிவரும் ஒரே அரசியல் இயக்கமாக உள்ளது.