World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Twenty years since the dissolution of the USSR

The capitalist crisis and the radicalization of the working class in 2012

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்கு இருபது ஆண்டுகளுக்குப் பின்னர்

2012ல் முதலாளித்துவ நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயப்படலும்

By David North
30 January 2012
Back to screen version

கீழே வருவது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் ஜனவரி மாதத்தில் நடந்த தொடர்ச்சியான பல்வேறு சோசலிச சமத்துவக் கட்சியின் பிராந்தியக் கூட்டங்களில் வழங்கிய அறிக்கையாகும்.  

உலகெங்கும் அசாதாரணமான நிகழ்வுகளைக் கண்ட ஒரு வருடத்தை நாம் இப்போது தான் பூர்த்தி செய்திருக்கிறோம். வர்க்கப் போராட்டம் சர்வதேச அளவில் மறுஎழுச்சி காண்பதைக் கண்ட ஒரு வருடமாக வரலாற்றில் 2011 ஆம் ஆண்டு நினைவு கூரப்படும். ஒரு வருடத்துக்கு முன்பு தான் துனிசியாவில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் சர்வாதிகாரத்தை வீழ்த்தின. பென் அலியின் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உடனடியாக எகிப்திலான சமூக வெடிப்பு நிகழ்ந்தது. ஒரு சில வாரங்களுக்குள்ளேயே ஹோஸ்னி முபாரக் அகற்றப்படுவதற்கு அது கொண்டு சென்றது. கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் மலர்ந்து கொண்டிருந்த போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை உலக சோசலிச வலைத் தளம் மிகச் சரியாக மதிப்பீடு செய்திருந்தது. பெப்ரவரி 1 அன்று வெளியிடப்பட்ட முன்னோக்கு பத்தியில் உ.சோ... கூறியது: “வரலாறு ஒரு முழுப்பலத்துடன் திரும்பியிருக்கிறது. கெய்ரோவிலும் எகிப்து முழுவதிலும் இப்போது கட்டவிழ்ந்து கொண்டிருப்பது உண்மையான புரட்சியை தவிர வேறொன்றுமில்லை.”

முபாரக்கின் விதி என்னவாக முடிந்தாலும் எகிப்திய தொழிலாள வர்க்கம் எதிர்கொண்ட சவால்களை உ.சோ... குறைமதிப்பீடு செய்யவில்லை, அதேபோல் முதலாளித்துவத்தை எளிதாக வெற்றி கண்டு விடலாம் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவுமில்லை. நாங்கள் பின்வருமாறு எழுதினோம்:

இந்தப் புரட்சி அதன் ஆரம்ப கட்டங்களில் தான் இருக்கிறது. ஒரு புரட்சிகர கொந்தளிப்பின் ஆரம்ப கட்டங்களில் எப்போதும் இருப்பதை போன்றே, தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் முழக்கங்கள் பொதுவான ஜனநாயக குணாம்சத்தை கொண்டிருக்கின்றன. படுபாதாளமான படுகுழி அணுகி வருவதைக் கண்டு அஞ்சும் ஆளும்வர்க்கம், பழைய அமைப்புமுறையிலிருந்து அவர்களால் எதையெல்லாம் தக்கவைத்துக்கொள்ள முடியுமோ, அவற்றை அது மூர்க்கத்தனமாக முயன்று வருகிறது. அவர்களின் உதடுகளிலிருந்து "சீர்திருத்த" வாக்குறுதிகள் மிகச் சுலபமாக உதிர்கின்றன. சமூகத்தின் மேல் அடுக்குகள், அவற்றின் செல்வவளம் மற்றும் சமூக அந்தஸ்தை அச்சுறுத்தாத அளவிற்கு மாற்றங்களை விரும்புகின்றன. அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், முதலாளித்துவ வர்க்க பிரதிநிதிகளின் அரசியல் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்து ஜனநாயக சக்திகளின் "ஐக்கியத்திற்கு" அழைப்பு விடுக்கின்றனர்.

ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு முன்னதாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) ’புரட்சிகரப் போராட்டங்களின் அடுத்த காலகட்டம் சர்வதேசப் பரிமாணங்களை விரைவாக எடுக்கும் என்று கணித்திருந்தது. எகிப்தில் கட்டவிழ்ந்து கொண்டிருந்த அபிவிருத்திகளுக்கு இந்த ஆய்வை பிரயோகித்து உ.சோ... கூறியது

உலகமெங்கும் சமூக சமத்துவமின்மை மலைக்க வகைக்கும் விகிதங்களை எட்டியிருக்கிறது. உண்மையில், சில அறிக்கைகள் கூறுவதைக் கொண்டு பார்த்தால், அமெரிக்காவில் உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு எகிப்திலும் துனிசியாவிலும் இருப்பதைக் காட்டிலும் மிகப் பெரிதாய் இருக்கிறது. மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதிலும், அரசாங்கங்கள் சமூகச் செலவினங்களில் பாரிய வெட்டுகளைக் கோருவதுடன், அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த பிரிவுகள் வறுமைக்குள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் அரசியல் ஆட்சிகளாய் இருந்தாலும் - சந்தேகமில்லாமல் இவை கூடுதல் நவீனமான பிரச்சார முகமைகளைக் கொண்டிருக்கின்றன என்ற போதிலும் - அவையும் எகிப்திய அரசாங்கத்தைப் போலவே பரந்த மக்களின் அதிருப்திக்கு அசையாமல் கல்லாய் இறுகியும், கண்மூடித்தனமாகவும் தான் இருக்கின்றன.  

கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா மற்றும் நாடு முழுவதிலும் கட்டவிழ்ந்து கொண்டிருப்பது உலக வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாகும். எகிப்தின் நிகழ்வுகள் மிக முன்னேறிய நாடுகள் உட்பட உலகின் ஒவ்வொரு நாட்டிலும் சமூக மாற்றம் எடுக்கவிருக்கும் வடிவத்தை எடுத்துக் காட்டுகிறது. உலக சோசலிசப் புரட்சியின் ஒரு புதிய சகாப்தத்தின் முதல் எழுச்சிகளைத் தான் இந்தப் பழமைவாய்ந்த மண்ணில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

உலகெங்கும் சமூக மோதல் வெடித்திருந்த நிலையில் இந்த முன்னோக்கு உறுதிப்பட்டது. முபாரக் பதவி அகற்றப்பட்ட ஒரு சில வாரங்களுக்குள் எல்லாம், விஸ்கான்சினில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீது வோக்கரது நிர்வாகம் தொடுத்த தாக்குதல்களுக்கு எதிராக பாரிய போராட்டங்களை தொடங்கின. ஐரோப்பாவில் ஸ்பெயினிலும் கிரீஸிலும் ஐரோப்பிய மத்திய வங்கியால் கோரப்பட்ட சமூகச் செலவினங்களிலான கடும் வெட்டுக்களை எதிர்த்து பெருந்திரள் போராட்டங்கள் நிகழ்ந்தன. பரிதாபகரமான சமூக நிலைமைகளுக்கு எதிராக நூறாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சீனாவிலும் ரஷ்யாவிலும் வலிமைவாய்ந்த போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரு தலைமுறைக் காலத்திற்குப் பின்னர் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக நடக்கும் முதல் முக்கியமான வெகுஜன இயக்கமாகும்.

2011ல் எழுந்த இயக்கங்களை நோக்கிய விமர்சனரீதியற்ற அணுகுமுறையை உலக சோசலிச வலைத் தளம் எடுக்கவில்லை. முதலில் இந்த இயக்கங்களில் எதுவுமே மார்க்சிச வேலைத்திட்டத்திற்குக் கூட போக வேண்டாம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் மீது கூட தங்களை அடித்தளமமைத்துக் கொண்டவை கிடையாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். உலக சோசலிச வலைத் தளத்தால்போலி-இடது என்று குறிப்பிடப்படுகின்ற குட்டி முதலாளித்துவக் கட்சிகள், தொழிலாள வர்க்கத்தின் எந்த இயக்கமும் முதலாளித்துவ ஆட்சிக்கு சவால் விடச் சென்று விடாமல் தடுப்பதற்கு தளர்ச்சியின்றி உழைக்கின்றன. எகிப்தில் குட்டி முதலாளித்துவ புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் (இவர்கள் சோசலிஸ்டுகளும் கிடையாது இவர்களிடம் புரட்சிகரமும் கிடையாது) இராணுவம் மற்றும் முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பு ஆகிய இரண்டின் மீது தான் பிரமைகளை விதைக்க முனைந்து வந்துள்ளனர். இதே துரோக வேலை தான் கிரீஸ் மற்றும் ஸ்பெயினிலும் காணத்தக்கதாய் இருக்கிறது. இங்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை எல்லாம் கிரீஸில் SYRIZA மற்றும் ANTARSYA, ஸ்பெயினில் Izquierda Anticapitalista போன்ற போலி-இடது அமைப்புகளால் முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பிற்குள்ளாக அடக்கிவைக்க பார்க்கின்றன.

அமெரிக்காவின் ஆர்ப்பாட்டங்களில் இன்னும் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் பங்குபெற்றிருக்கவில்லை. அவை இன்னும் மாணவர்களை அடித்தளமாக கொண்ட இயக்கமாகவே அதிகம் இருந்து வருகின்றன. தமது அரசியலைஅரசியல் வேண்டாம் என்கிற பதாகையின் கீழ் மறைத்துக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த அரசியல் சக்திகள் செல்வம் மக்களில் மேலிருக்கும் 10 சதவீதமானோருக்குள் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருப்பதில் அதிருப்தி கொண்ட நடுத்தர வர்க்கத்தின் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. தங்களின் நிதி நிலைமை மற்றும் சமூக அந்தஸ்தில் முன்னேற்றம் காண்பதே அவர்களது கவலை.

ஆயினும் இந்த இயக்கம் கணிசமான வெகுஜன ஆதரவை வென்றிருக்கிறது. பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும் பங்கெடுத்திருப்போரில் அநேகமானோர் நிலவும் சமூக சமத்துவமின்மை மீதான தங்களது எதிர்ப்பில் முழு ஒற்றுமை காட்டுகின்றனர். இயக்கத் தலைமையின் குட்டி முதலாளித்துவ மற்றும் சீர்திருத்தவாத அரசியலை கணக்கில் கொண்டு ஆர்ப்பாட்டங்களை உதாசீனப்படுத்துவது என்பது ஒரு பெரும் பிழையாக முடியும். அவை பெருகும் மக்கள் கோபத்தின் ஒரு வெளிப்பாடு ஆகும். செல்வம் மக்களில் ஒரு சிறு சதவீதத்தினரிடம் குவிந்து கிடப்பது, நிதி நிறுவனங்களின் குற்றவியல் ஒட்டுண்ணித்தனம், பெருநிறுவன அதிகாரத்தின் துஷ்பிரயோகங்கள், மற்றும் பெரும்பான்மையான அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரங்கள் இடைவிடாமல் சரிவு கண்டு சென்றமை ஆகியவற்றுக்கெல்லாம் நீண்ட காலமாய் கொடுக்கப்படாமல் இருந்த பதிலடியாகத் தான் நாடு முழுவதிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களைக் கண்டிருக்கின்றனர் புத்தாண்டின் முதல் முன்னோக்கு பத்தியில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியது போல:

பொருளாதார நெருக்கடி, முழ்கும் வாழ்க்கைத் தரங்கள், விரிவு காணும் சமூக ஏற்றத்தாழ்வு விரிசல், அரச சட்டச் சீர்கேடு, சுற்றுச்சூழல் பெருந்துயரங்கள் மற்றும் பெருகிக் கொண்டுவரும் ஒரு புதிய உலகப் போர் அச்சுறுத்தல் இவற்றுக்கு இடையே முதலாளித்துவம் தோல்வியடைந்து விட்டது என்பதில் பரந்த மக்களிடம் கருத்தொற்றுமை எழுந்திருக்கிறது முதலாளித்துவத்தின் புறநிலை நெருக்கடி உலகின் அடிப்படைப் புரட்சிகர சக்தியான சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அகநிலை நனவில் உள்வாங்கியுள்ளது என்பதையே ஏற்கனவே உலகெங்கும் பலபத்து மில்லியன்கணக்கான மக்கள் பங்குபற்றியதைக் கண்டிருக்கும் சமூகப் போராட்டங்களின் வளர்ச்சி குறித்து நிற்கிறது.  

அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு 2011 ஆம் ஆண்டின் நிகழ்வுகள் ஆழமான குழப்பத்தை கொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டின் ஆர்ப்பாட்டங்கள் இன்னும் பெருகி 2012 ஆம் ஆண்டில் இன்னும் தீவிரமாகும் என்று ஒரு பரந்துபட்ட உணர்வு இருக்கிறது. இந்த மாத ஆரம்பத்தில் மோய்சஸ் நய்ம் (Moisés Naím) ஃபைனான்சியல் டைம்ஸில் எழுதினார்: “2012 ஆம் ஆண்டில் சமத்துவமின்மை தான் மையப் பொருளாக இருக்கப் போகிறது. சமத்துவமின்மையுடன் சமாதான சகவாழ்வு என்பது முடிவுக்கு வரவிருக்கிறது, அதனை எதிர்த்துப் போராடுவதற்கான கோரிக்கைகளும் வாக்குறுதிகளும் பனிப்போருக்கு பிந்தைய காலத்தின் மிகக் கடுமையானதாகவும் மிகப் பரவலானதாகவும் 2012ல் ஆகவிருக்கிறது.” ஃபைனான்சியல் டைம்ஸில் ஆன் மேரி சுலோட்டர் எழுதிய இன்னொரு கருத்து பின்வருமாறு எச்சரிக்கிறது: “2012 ஆம் ஆண்டின் பெரும் பிரச்சினை ஏறக்குறைய ஒரே வகையினவாகத் தான் இருக்கப் போகிறது என்னவென்றால் பல்வேறு நாடுகளெங்கும் பரவிக்கொண்டிருக்கும் போராட்டங்கள் பல நாடுகளில் புரட்சிகளாக வடிவம் மாறவிருக்கின்றன.”   

2011 இல் வெடித்த சமூக இயக்கத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக டைம் இதழ்ஆண்டின் சிறந்த மனிதராக”, “ ஆர்ப்பாட்டக்காரரை என தேர்வு செய்தது. ஃபிரான்சிஸ் ஃபுகுயாமாவினால்வரலாற்றின் முடிவு என்று கூறிக் கொண்டாடப் பெற்ற ஒரு நிகழ்வான 1991 ஆம் ஆண்டின் சோவியத் ஒன்றியக் கலைப்பினைத் தொடர்ந்து வந்த சமூக மற்றும் அரசியல் அக்கறையற்ற தன்மையின் ஒரு நெடிய காலகட்டத்தின் முடிவாக கடந்த ஆண்டின் நிகழ்வுகளை அது கண்டது. டைம் எழுதுகிறது, ”தொடர்ந்து வந்த வருடங்களில் நம்பிக்கை நமக்கு எளிதாய்க் கிட்டியது, மெத்தனமும் அலட்சியமும் ஏராளமாய் இருந்தன, வீதிப் போராட்டங்கள் எல்லாம் இலக்கற்ற உணர்ச்சிபூர்வமான காட்சிப் படங்கள் போல் வழக்கொழிந்ததாக, பழம்பெருமை தொனிப்பதாக, 20 ஆம் நூற்றாண்டின் மத்தியிலான போரின் தீரத்திற்குச் சமானமானதாகக் காட்சியளித்தன. செல்வந்த உலகில் நிகழ்ந்த அபூர்வமான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் பலனற்றவையாகவும் பொருத்தமற்றவையாகவும் தோன்றியது.”

ஆனால் சமூக மற்றும் அரசியல் தேக்கநிலையின் ஒரு நீண்டகாலகட்டம் திடீரென ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. டைம் தொடர்ந்து எழுதுகிறது:

சுருக்கமாய்ச் சொன்னால், 2011 ஆம் ஆண்டை 1989 முதலான எந்த ஆண்டோடும் ஒப்பிட முடியாது -ஆனால் கூடுதல் அசாதாரணமானதாக, கூடுதல் உலகளாவியதாக, கூடுதல் ஜனநாயகமயப்பட்டதாக இருந்தது. ஏனென்றால் 1989 முதலாக ஆட்சிகள் சிதறுவது தான் தலைமையகத்திலான ஒரேயொரு சிதறலின் விளைவாக இருந்தது. மாஸ்கோவில் ஒரு பெரும் குமிழ் அணைந்து போனதும் அது அமைப்புமுறை முழுவதுக்கும் மின்சாரத்தைத் துண்டித்தது. ஆனால் 2011 1968க்குப் பிந்தைய எந்தவொரு ஆண்டுடனும் ஒப்பிட முடியாது. ஆனால் தொடர்ச்சியாக நாம் காண்பது என்னவெனில் அதில் ஆர்ப்பாட்டக்காரர்களின் சொந்தப் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. அவர்களது ஆர்ப்பாட்டங்கள் 1968ல் போல ஒரு எதிர்க்கலாச்சார காட்சி அணிவகுப்பின் பகுதியாக இல்லை, அத்துடன் அவை முழு-வீச்சிலான கிளர்ச்சிகளாக துரிதமாக மாற்றமடைந்து ஆட்சிகளைக் கீழிறக்கியதோடு உடனடியாக வரலாற்றின் போக்கையும் மாற்றின.   வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இது நமது எவரொருவர் வாழ்நாட்களிலும் கண்ட எதனோடும் ஒப்பிட முடியாததாகும். அநேகமாக 1848க்குப் பிந்தைய எந்த வருடத்துடனும் ஒப்பிட முடியாது என்றும் கூறலாம். அந்த வருடத்தில் பாரிஸில் நடந்த ஒரு வீதி ஆர்ப்பாட்டம் மூன்று-நாள் புரட்சியாக மலர்ச்சியுற்று அது ஒரு முடியாட்சியை ஜனநாயக குடியரசாக மாற்றி பின்  - புதிய தொழில்நுட்பங்களின் உதவியினால் (தபால்தந்தி, ரயில்பாதைகள், சுழல் அச்சு இயந்திரங்கள்) - சிலவாரங்களுக்குள்ளாகவே முனிச், பேர்லின், வியன்னா, மிலான், வெனிஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் பத்துக்கும் மேற்பட்ட பிற இடங்களில் நிறுத்தமுடியாத அலை அலையான போராட்டம் மற்றும் கிளர்ச்சிக்கு முன்மாதிரியாய் அமைந்தது.

2011 ஆம் ஆண்டின் நிகழ்வுகளை டைம் 1848 மற்றும் 1968 ஆம் ஆண்டின் நிகழ்வுகளுடன் எளிமைப்படுத்தி ஒப்புமை காட்டுவதென்பது ஒரு கவனமான வரலாற்று, அரசியல் மற்றும் சமூகப் பகுப்பாய்வுடன் நின்றுபிடிக்க முடியாது. முந்தைய இயக்கங்களின் அரசியல் மற்றும் சமூக இயக்கவியல் முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது. அந்த ஆண்டின் நிகழ்வுகளை மறு ஆய்வு செய்யும் இடமல்ல இது என்றாலும் முந்தைய போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் பாத்திரம் இன்னும் மிகமிகப் பரந்ததான ஒரு அளவில் இருந்ததென்று கூற முடியும். குறிப்பாக 1848ல், தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் ஒரு கிளர்ச்சித் தன்மையையும் மற்றும் நேரடியான புரட்சிகரத் தன்மையையும் பெற்றிருந்தது. பாட்டாளி வர்க்கமும் சோசலிசமும் ஒரு மாபெரும் சக்தியாக எழுந்திருந்ததை அந்த ஆண்டின் போராட்டங்கள் கண்ணுற்றிருந்தன. அத்துடன் 1968 வெறுமனேஎதிர்க்கலாச்சார காட்சி அணிவகுப்பு அல்ல. தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதான பிரச்சினையை முன்நிறுத்திய ஒரு மாபெரும் பொது வேலைநிறுத்தம் பிரான்சில் நடந்தது. அந்தப் போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு முக்கியமான பகுதி சோசலிச நம்பிக்கைகளினால் ஊக்கப்படுத்தப்பட்டிருந்தது. முதலாளித்துவம்  உயிர்பிழைப்பதென்பது ஸ்ரானிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி நனவுடன் பின்பற்றி வந்த எதிர்ப்புரட்சிகரக் கொள்கைகளின் மீது தங்கியிருந்தது

ஆயினும், டைம் இதழ் கட்டுரை, 2011 ஆம் ஆண்டின் நிகழ்வுகளுக்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பின் அளவு பற்றிய ஒரு பார்வை முக்கியத்துவமானதாகும். கடந்த ஆண்டின் ஆர்ப்பாட்டங்களுக்கு தமது குறிப்பான அரசியல் சாயத்தை வழங்கிய நடுத்தர-வர்க்க அதிருப்தி பிரிவினரின் மீதே டைமின் ஏறக்குறைய மொத்த கவனமும் இருக்கிறது. “ஆர்ப்பாட்ட முன்னணிப் படை என்று டைம் இதழ் குறிப்பிடுகிறதானநடுத்தர வர்க்க மற்றும் கல்வியறிவு படைத்த பிரிவில் தான் அதன் அதிக ஆர்வம் இருக்கிறது. பெரும் செல்வந்தர்களில் 0.1 சதவீதத்தையும் மக்கள்தொகையில் 0.01 சதவீதத்தையும் கொண்டிருக்கக் கூடிய ஆளும் உயரடுக்கு விவேகமற்ற வகையில் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்கிறதே என்கின்ற தீவிர கவலை தான் இந்த கவனக் குவிப்பின் கீழமைந்துள்ளது. செல்வம் பேரளவில் ஓரிடத்தில் குவிவதானது நடுத்தர வர்க்கத்திற்கும் பெரும் செல்வந்தர்க்கும் இடையிலமைந்த பிளவு குறித்து - செல்வம், வாய்ப்புகள், செல்வாக்கு மற்றும் கௌரவம் ஆகிய விடயங்களில் - விழிப்பும் அதிருப்தியும் பெருகி வரும் நடுத்தர வர்க்கத்தின் முக்கியமான பிரிவுகளை அந்நியப்படுத்தியிருக்கிறது. இதன்விளைவாகதங்களது நாடுகளின் அரசியல் அமைப்புமுறைகளும் பொருளாதாரங்களும் செயலிழந்தவையாகவும் ஊழலடைந்தவையாகவும் வளர்ந்திருக்கின்றன, செல்வம் படைத்தவர்களுக்கும் அதிகாரம் பெற்றவர்களுக்கும் சாதகமாய் போலி ஜனநாயகங்கள் வளைக்கப்பட்டு முக்கியமான சமூக மாற்றங்களை தடுக்கின்றன என்கின்ற நம்பிக்கையை அவர்கள் பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.

இந்த அதிருப்தி 2008 பொருளாதார நிலைகுலைவின் ஒரு துணைவிளைபொருள் ஆகும். “குமிழி வருடங்களில் இவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அளவுக்கு பணம் போதுமான அளவு சொட்டிக் கொண்டிருந்தது, ஆனால் இப்போதோ முடிவடையாத நிதி நெருக்கடியும் பொருளாதாரத் தேக்கமும் அவர்களை வெறுப்படைந்தவர்களாக உணர வைத்திருக்கிறது என்று டைம் எழுதுகிறது.

டைம் இதழ் 2011 ஆம் ஆண்டின் நிகழ்வுகளை ஒரு தட்டியெழுப்பும் அழைப்பாகக் காண்கிறது. ஆளும் உயரடுக்கு தங்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்திக் கொள்வதில் இருந்து எழுகின்ற அபாயங்களை உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் கட்டுரையில் ஒரு இடத்தில் கூடசோசலிசம் என்கின்ற வார்த்தை காட்சியளிக்கவில்லை (ஒரேயொரு இடத்தில் கூட்டத்தோடு சேர்த்துதொழிலாள வர்க்கம் என்கிற குறிப்பு காணப்படுகிறது) என்ற போதும், ஒவ்வொரு வாரமும்சமத்துவமின்மை என்கின்ற வார்த்தை ஏறக்குறைய 500 இடங்களில் நெக்சஸ் செய்தி-ஊடக தரவுத்தளத்தில் தலைகாட்டுவதாக டைம் குறிப்பிடுகிறது. வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த எண்ணிக்கை வெறும் 91 ஆகவே இருந்தது.

செல்வம் மேலிருக்கும் 10 சதவீதத்திடம் விநியோகப்பட்டிருப்பதில் அதிருப்தி கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் சற்று ஓரளவிற்கு சலுகைகள் கொண்ட பிரிவுகளுக்கு அப்பால் உழைக்கும் மக்களின் ஒரு பரந்த பிரிவு இருக்கிறது. இவர்களது வாழ்க்கை நிலைமைகள் பாரிய மற்றும் தொடர்ச்சியான சீர்குலைவுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரு பகிரங்கமான போராட்டமாக கொண்டுவரக் கூடிய அத்தனை புரட்சிகர தாக்கங்களுடனும் அத்தகையதொரு போராட்டத்திற்குள் காலடி எடுத்து வைக்காமல் அவர்களது வாழ்க்கை நிலைமைகள் மேம்பாடடைவது சாத்தியமில்லாதது. அத்தகைய போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் இன்னும் பரந்த பிரிவுகள் தலையீடு செய்வதை 2012 ஆம் ஆண்டு காணவிருக்கிறது. தொழிலாள வர்க்கத்துக்குள்ளாக அதன் சொந்த பிரத்யேகமான சமூக மற்றும் அரசியல் நலன்கள் குறித்த நனவை உருவாக்குவதும், இந்தப் போராட்டங்களுக்குள்ளாக ஒரு சோசலிச நோக்குநிலையை அறிமுகம் செய்வதும் தான் நமது கட்சி எதிர்கொண்டிருக்கும் கடமைகளில் அதிமுக்கியமானவை ஆகும். அமெரிக்காவுக்குள்ளான அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு ஒருங்கமைந்த பாகம் என்கின்ற புரிதலை, அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டம் ஒரு சர்வதேச சோசலிச மூலோபாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற புரிதலை அவர்களிடையே அபிவிருத்தி செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சி முனைந்து செயல்பட வேண்டும்.

சோவியத் ஒன்றியத்தின் முடிவுக்குப் பிந்தைய இருபது வருடங்கள்

ஒரு சர்வதேச புரட்சிகர சக்தியாக தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியில் மிக ஆழமான ஒரு பாத்திரத்தை வகிக்கக்கூடிய உலக வரலாற்று உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாமல் அரசியல் நோக்குநிலை மற்றும் நனவு பற்றிய பிரச்சினைகள் தீர்க்கப்படமுடியாது.

2011 ஆம் ஆண்டில் வெடித்த போராட்டங்கள் 20 ஆண்டு கால அரசியல் தேக்கநிலையை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. 1991, டிசம்பர் 25 அன்று சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தின் கொடி கிரெம்ளினில் இருந்து இறக்கப்பட்ட சமயத்திற்கு இந்த அரசியல் தேக்கநிலைக் காலத்தை பின்னோக்கி நினைவுகூர முடியும். பல தசாப்தகால ஸ்ராலினிச காட்டுக்கொடுப்பின் விளைவான அந்த நிகழ்வு தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு பாரிய நோக்குநிலை பிறழலை கொண்ட தாக்கத்தைக் கொண்டிருந்தது. சோவியத் ஒன்றியத்தின் முடிவு முதலாளித்துவ வெற்றிக் கொக்கரிப்பை கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிசத்திற்கான பதில்கூறமுடியாத மறுதலிப்பையும் சோசலிசத்தின் முடிவையும் இந்த நிகழ்வு குறித்து நின்றதாக அது பிரகடனப்படுத்தியது. இந்தக் கூற்றுகளுக்கு எல்லாம் அடிப்படை அஸ்திவாரமாக இருந்தது என்னவென்றால் மார்க்சிசமும் சோசலிசமும் ஸ்ராலினிசத்துடன் அடையாளங்காணப்பட்டதுதான்.

நான்காம் அகிலம், அது 1938 ஆம் ஆண்டில் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்தே ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்திற்கு புதைகுழி வெட்டுவோராக இருந்ததை கண்டனம் செய்து வந்திருந்தது. ஒரு அரசியல் புரட்சியின் மூலம் அதிகாரத்துவம், தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்படாது போனால், முன்னெப்போதையும் விடக் கூடுதலாய் அது முதலாளித்துவ மீட்சிக்கான சாதனமாய் பகிரங்கமாய் செயல்பட விழையும் என்று அது தனது ஸ்தாபக வேலைத்திட்டத்தில் எச்சரித்திருந்தது. நாஜி ஜேர்மனியை சோவியத் வெற்றி கண்டதற்குப் பின்னர், நான்காம் அகிலத்தில் திருத்தல்வாதப் போக்குகள் எழுந்தன. கிரெம்ளின் மற்றும் அதன் கைப்பாவை அரசுகளுடன் கூட்டணி சேர்வதன் மூலமாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் ஒருவகை இடது சீர்திருத்தவாத மற்றும் தீவிரப்பட்ட தேசியவாத எதிர்சக்தியை கட்டுவதற்கு முனைந்த குட்டி முதலாளித்துவப் பிரிவுகளின் பின்னால் இவை சென்றன. பப்லோவாத திருத்தல்வாதிகள், ‘பல நூற்றாண்டுக் காலம் நீடிக்கக்கூடிய ஒரு நிகழ்முறையின் மூலமாகத் தான் என்றாலும் சோவியத் ஒன்றியத்துக்குள்ளும் சர்வதேசரீதியாகவும் ஸ்ராலினிஸ்டுகளின் தலைமையின் கீழ் சோசலிசத்தை அடையலாம் என்று பிரகடனப்படுத்தி ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர வேலைத்திட்டத்தின் மீதான தங்கள் காட்டிக் கொடுப்பை நியாயப்படுத்த முனைந்தனர்.

ஸ்ராலினிச ஆட்சியின் வெளிப்படையாக தெரிந்த சக்தி அன்று பப்லோவாதிகளிலும் பொதுவாக இடது குட்டி-முதலாளித்துவ அரசியல் உருவாக்கங்களிலும் ஏற்படுத்திய பிரமிப்பைப் புரிந்து கொள்வதென்பது இன்று கடினமான காரியம் தான். அவர்களுக்கு அன்று கிரெம்ளின் ஆட்சியை விட நிரந்தரமான அசைக்க முடியாத வேறொன்று இருப்பதாகத் தோன்றவில்லை. ஸ்ராலினிச அதிகாரத்தைப் போற்றுவதில் பல்வேறு அரசு முதலாளித்துவப் போக்குகளும், (state capitalist tendencies) அதாவது சோவியத் அதிகாரத்துவம் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல ஒரு ஒட்டுண்ணி சாதியை (a parasitic caste) குறிக்கவில்லை, மாறாக ஒரு புதிய ஆளும் வர்க்கத்தைக் குறித்து நின்றது என பிரகடனப்படுத்திக் கொண்ட குட்டி-முதலாளித்துவ அமைப்புகள் பங்குபெற்றன. ஸ்ரானிலிச ஆட்சி தொழிலாள வர்க்கத்தினால் தூக்கியெறியப்படாது போனால் அது சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்ற ட்ரொட்ஸ்கியின் கணிப்பு அவர்களுக்கு வேறொன்றையும்விட மிக அபத்தமானதாகத் தோன்றியது.

1980களுக்குள்ளாக, ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை நோக்கிய சந்தேகம் அந்த சமயத்தில் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவாக இருந்த தொழிலாளர் புரட்சிகரக் கட்சியின் (WRP) தலைமையை பற்றிவிட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டில் நடந்த ஒரு விவாதம் என் நினைவுக்கு வருகிறது, அதில் எனக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, WRP இன் பொதுச் செயலாளராக இருந்த மைக் பண்டா ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கை தவறு என்று என்னிடம் கூறினார். சோவியத் ஒன்றியம் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்பது வரலாற்றுரீதியாகமுடிந்து போன பிரச்சினை. அப்படியானால் இதற்கு அர்த்தம் நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கும் முடிவுக்கு ட்ரொட்ஸ்கி அடித்தளமாய் கொண்ட ஸ்ராலினிசம் குறித்த அவரது பகுப்பாய்வு தவறா என்று நான் பண்டாவிடம் கேட்டேன். பண்டா என் கேள்விக்கு மழுப்பலாய் ஒரு பதில் கூறினார். ஆனால் மூன்று வருடங்களுக்கும் குறைவான காலத்தில், பண்டா ட்ரொட்ஸ்கியை மறுதலித்து, நான்காம் அகிலத்தைக் கண்டனம் செய்து, ஸ்ராலினுக்குத் தனது போற்றுதலைப் பிரகடனப்படுத்தச் சென்று விட்டிருந்தார்.

1985 மார்ச் மாதத்தில் கோர்பசேவ் பொதுச் செயலாளர் பதவிக்கு வந்த போது, திருத்தல்வாதிகள் எல்லாம் அவரை புதிய சோசலிச புனிதத்தூதராக பிரகடனப்படுத்த அதிக ஆர்வம் காட்டினர். அவரது கிளாஸ்னோஸ்ட் (வெளிப்படைத்தன்மை) மற்றும் பெரெஸ்த்ரோய்கா (புனர்நிர்மாணம்) ஆகிய கொள்கைகளை அவர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். கோர்பசேவின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை ஆகக் குறைந்த விமர்சன ரீதியான திறனாய்வுக்கும் உட்படுத்தக் கூட இந்தப் போக்குகளில் எதுவும் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பப்லோவாதத்தின் முன்னணி தத்துவாசிரியராக இருந்த ஏர்னெஸ்ட் மண்டேல் கோர்பசேவை வாழுகின்ற மாபெரும் அரசியல்வாதி என்று போற்றியதோடுஇந்த சோவியத் தலைவர் சோவியத் ஒன்றியத்திற்குள் முதலாளித்துவத்தை மறு அறிமுகம் செய்ய முயற்சிக்கிறார் என்ற அபத்தமான கருத்தை கண்டனம் செய்தார். [ஏர்னெஸ்ட் மண்டேல், மறுநிர்மாணம் கடந்து, வெர்சோ புக்ஸ், 1989, பக். 129]

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன் வைத்திருந்த தத்துவம் தான் மண்டேலால் நிராகரிக்கப்பட்ட அபத்தமான தத்துவமாகும்”. 1987 மார்ச்சில், “சோவியத் ஒன்றியத்தில் என்ன நடக்கிறது?” என்கிற தலைப்பில் கோர்பசேவ் ஆட்சியின் கொள்கைகள் குறித்த ஒரு விரிவான பகுப்பாய்வை அனைத்துலகக் குழு வெளியிட்டது. கிரெம்ளின் அறிமுகம் செய்த புதிய கொள்கைகள் எல்லாம் 1917 அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சொத்து வடிவங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன என்று அந்த ஆய்வு எச்சரித்தது. அந்த அறிக்கை அறிவித்தது:

மேற்கத்திய முதலாளித்துவ நெருக்கடியால் சோவியத் அதிகமாய் பாதிப்புள்ளாகிக் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ் கோர்பசேவின் சீர்திருத்தங்கள் திட்டமிட்ட பொருளாதாரத்தின் அடித்தளங்களுக்கு குழிபறித்துக் கொண்டிருக்கின்றன. 20 அமைச்சகங்கள் மற்றும் 70 அரசு நிறுவனங்களை முதலாளித்துவ நாடுகளுடன் அவை தமது சொந்த வர்த்தக உறவுகளை ஸ்தாபித்துக் கொள்வதற்கும் அந்நியச் செலாவணியில் 40 சதவீதத்தை அவர்களே வைத்துக் கொள்வதற்கும் அனுமதித்ததன் மூலம் கோர்பசேவ், –நெப்-மென்களுக்கும் -NEP-men- உலகச் சந்தைக்கும் இடையில் ஒரு தொடர்பைத் திறந்து விட முயன்ற ஸ்ராலினின் முயற்சியை லெனினும் ட்ரொட்ஸ்கியும் முறியடித்ததற்குப் பிந்தைய காலத்தில் முதன்முறையாக வெளிநாட்டு வர்த்தகத்தில் அரச ஏகபோகத்திற்கு குழிபறித்துக் கொண்டிருக்கிறார். அதேசமயத்தில் முதலாளித்துவத் திரட்சி நிகழ்முறை ஒன்றுக்கும் அவர் தொடக்கமளித்துக் கொண்டிருக்கிறார், இது தேசியமயமாக்கப்பட்ட சொத்து உறவுகளைத் தீவிரமாய்க் கீழறுக்கும். [நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை, மார்ச் 23, 1987, நான்காம் அகிலம், ஜூன் 1987, பக். 38]

அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதற்கு ஏதுவாக்கிய சோவியத் பொருளாதார உருக்குலைவுக்கான காரணங்களை ஆராய்ந்த முனைவர்களது ஆய்வுகள் இந்த பகுப்பாய்வை உறுதிசெய்தன. ’ரஷ்யா 1980இல் இருந்து என்கிற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பிரசுரத்தில் இருந்து 2008 இல் வெளியிடப்பட்ட புத்தகத்தில் பேராசிரியர்கள் ஸ்டீவன் ரோஸ்ஃபீல்டும் ஸ்டீபன் ஹெட்லண்டும், கோர்பசேவ் அறிமுகம் செய்த நடவடிக்கைகள், திரும்பிப் பார்த்தால், சோவியத் பொருளாதாரத்தைக் கீழறுக்கும் நோக்கம் கொண்டவையாகத் தோன்றுவதற்கான ஆதாரங்களை வழங்குகின்றனர். “விடயங்கள் விரைவாய் கைமீறிப் போகக் காரணமாய் அமையும் வகையில் கோர்பசேவுக்கும் அவரது பரிவாரங்களுக்கும் ஒரு இரகசியமான நச்சு உள்நோக்கம் இருந்ததாய்த் தோன்றுகிறது என்று அவர்கள் எழுதுகின்றனர். {பக். 38] கோர்பசேவின் கொள்கைகள் மீதான ஒரு கனன்றெழும் மதிப்பீட்டில்  ரோஸ்ஃபீல்டும் ஹெட்லண்டும் கூறுகின்றனர்:

வரலாறு காட்டுவது என்னவென்றால் போல்ஷவிக் ஆட்சி சதியின் பேரப் பிள்ளைகள் சோவியத் ஒன்றியத்தை அழித்தது கம்யூனிச செழிப்பை முன்னெடுக்கும் ஒரு தீரமான முயற்சியிலோ அல்லது தமது பொதுவான ஐரோப்பியத் தாயகத்திற்கு திரும்பும்  முயற்சியிலோ கூட அல்ல; மாறாக இது சோவியத் நிர்வாகிகளையும், அமைச்சர்களையும் மாஸ்கோ மனிதர்களின் புதிய ஆட்சியின் கீழ் ஒரு மறைமுகமான ஒத்துழைப்புடனான ஜனாதிபதியின் வழிகாட்டலில் மக்களின் சொத்துக்களையும் வருவாய்களையும் தங்களுக்கே மாற்றிக் கொள்ளக் கூடிய நடமாடும் கொள்ளைக்காரர்களாய் (சொத்துகளைப் பறிக்கும் தனியார்கள்) மாற்றியது.

1917 முதல் ஒவ்வொரு போல்ஷிவிக்கிற்குள்ளும் ஆழப்பதியப்பட்டிருந்த அரசின் வருவாய்களையும், பொருட்களையும் உடைமைகளையும் தனிநபர் உபயோகத்துக்குப் பயன்படுத்தும் விடயத்தில் மிகுந்த கவனத்துடன்  நடந்து கொள்வதற்குப் பதிலாக  கோர்பசேவ் கீழிருந்தான ஒரு  எதிர்ப்புரட்சியை கண்டும்காணாமல்  தீமைகளுக்கான பாதையை திறந்து விட்டார். நிறுவனங்களும் மற்றவர்களும் அரசுக்கான வருவாயை பல்வேறு வழிகளிலும் அதிகப்படுத்துவதை (அது அனுகூலமான விஷயமே) மட்டும் அவர் அனுமதிக்கவில்லை, மாறாக அரசின் சொத்துக்களை தவறான வழிகளில் கையகப்படுத்திக் கொள்வதையும், இலாபங்களை வெளிநாடுகளுக்கு மாற்றுவதையும் கூட அனுமதித்தார். இந்த நிகழ்முறையில், சிவப்பு இயக்குநர்கள் அரசுக்குரிய ஒப்பந்தங்களையும் கடப்பாடுகளையும் கொஞ்சமும் மதிக்கவில்லை, இது தொழிற்துறைகளுக்கு இடையிலான பொருட்கள் பண்டமாற்றின்  ஒழுங்கை சிதறச் செய்து ஒரு மந்த நிலையைத் தூண்டியது.  இதிலிருந்தான் அப்போது ரஷ்யா வெளிவர ஆரம்பித்திருந்தது, ஆனால் சோவியத் ஒன்றியம் மீளவேயில்லை.

யெல்ட்சினும் அவரது அதிர்ச்சி வைத்தியமும் எவ்வாறு பரந்த மக்களிடம் கொள்ளையடிப்பதைச் சூழ்ந்து நின்றன என்பதைக் குறித்த காரசாரமான விவாதங்கள் எல்லாம் பின்னால் எழுந்த நிலையில், இந்தக் கொள்ளை கோர்பசேவின் கண்காணிப்பின் கீழ் தான் தொடங்கியது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அவரது கெட்டநோக்கத்துடனான அலட்சியம் தான் சந்தை கம்யூனிசம் என்கின்ற வார்த்தைஜாலம் தேசியச் சொத்துகளை சுருட்டுவதாக உருமாற்றியது.

இந்தச் சுருட்டலின் அளவு மலைக்க வைப்பதாகும். இது சோவியத் ஒன்றியத்தை திவாலாக்கி, ரஷ்யப் பிரதமர் போரிஸ் யெல்ட்சினை 1991 டிசம்பர் 6 அன்று 6 பில்லியன் டாலர் உதவி கோரி ஜி-7 நாடுகளிடம் விண்ணப்பிக்கத் தள்ளியதோடு நிற்கவில்லை, ஒட்டுமொத்த உற்பத்தியிலான ஒரு இடைவிடாத வீழ்ச்சி 1990ல் தொடங்குவதையும் - இது கேடோஸ்ரோய்கா (catastroika) என்று அறியப்படுவது பொருத்தமே - தூண்டியது.

திரும்பிப் பார்த்தால், 1953க்குப் பின்னர் வடிவமைக்கப்பட்ட தாராளமயமாக்கப்பட்ட கட்டளைப் பொருளாதாரம் அழிந்துபோகுமென அடையாளமிடப்பட்டிருந்ததால் சோவியத் பொருளாதாரம் உருக்குலையவில்லை. அந்த அமைப்புமுறை பலதரப்பட்ட வகையிலும் திறனற்றதாய் இருந்தது, ஊழலடைந்து இருந்தது, கண்டிக்கத்தக்கதாய் இருந்தது என்றாலும் அது சிஐஏ மற்றும் அநேக சோவியத் ஆய்வு அறிஞர்கள் கூறி வந்ததைப் போல தாக்குப்பிடிக்கக் கூடியதாகவே இருந்தது. அரசு வருவாய்களை துஷ்பிரயோகம் செய்வது, பொருட்களின் சில்லறைத் திருட்டு, அதே சமயத்தில் தனியார்மயமாக்குவது, தவறாய் பெற்ற இலாபங்களை வெளிநாடுகளுக்குக் கடத்துவது இதற்கெல்லாம் தனியார்களை அனுமதிப்பதை கோர்பசேவ் சகித்துக் கொண்டதிலும் இரகசிய ஒப்புதலளித்ததிலும் தான் அது அழிக்கப்பட்டது, அவை அனைத்தும் உற்பத்தியை சீர்குலைத்தன. [பக். 49] 

ரோஸ்ஃபீல்டு மற்றும் ஹெட்லண்டின் பகுப்பாய்வு கோர்பசேவின் நடவடிக்கைகள் குறித்த அதன் மதிப்பீட்டில் துல்லியமாய் இருந்தாலும் எளிமைப்படுத்தப்பட்டதாய் இருக்கிறது. இன்னும் அடிப்படையான அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகளின் கட்டமைப்பிற்குள்ளாக மட்டுமே கோர்பசேவின் கொள்கைகள் புரிந்து கொள்ளப்பட முடியும். அதில் முதலாவதும் மிக முக்கியமானதும் என்னவென்றால் சோவியத் பொருளாதாரத்தின் உண்மையான புறநிலை நெருக்கடியாகும் (கோர்பசேவ் அதிகாரத்துக்கு வருவதற்கு முந்தைய பல தசாப்தங்களாகவே அது நிலவியது, முன்தொடர்ந்து இருந்து வந்திருந்தது). இது 1924ல் ஸ்ராலினும் புகாரினும்தனியொரு நாட்டில் சோசலிசம் வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்த காலத்தில் இருந்து சோவியத் ஆட்சியால் பின்பற்றப்பட்டு வந்திருந்த தன்னிறைவு தேசியவாதக் கொள்கைகளின் முரண்பாடுகளில் இருந்து அபிவிருத்தி கண்டிருந்தது சோவியத் பொருளாதாரத்தின் துரிதமான வளர்ச்சியும் சிக்கலான அமைப்பும் உலகப் பொருளாதாரத்தின் வளங்களுக்கான அணுகலைக் கோரின. இந்த அணுகல் இரண்டு வழிகளில் மட்டுமே சாதிக்கப்பட முடிவதாய் இருந்தது: ஒன்று சோசலிசப் புரட்சி முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்குப் பரவுவதன் மூலமாக, இல்லையேல் எதிர்ப்புரட்சிகரமான வகையில் சோவியத் ஒன்றியம் உலக முதலாளித்துவத்தின் பொருளாதாரக் கட்டுமானங்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலமாக

தனது சலுகைகளை பாதுகாத்துக் கொள்ளும் உறுதிப்பாடு கொண்டதான, தொழிலாள வர்க்கத்தை கண்டு அஞ்சி நடுங்குவதான ஒரு ஒட்டுண்ணி சமூகச்சாதியாக இருந்த சோவியத் அதிகாரத்துவத்திற்கு சோவியத் பொருளாதாரத்தின் முரண்பாடுகளுக்கான புரட்சிகரத் தீர்வு என்பதெல்லாம் முற்றுமுதலாய் சிந்தித்துப் பார்க்க முடியாததாய் இருந்தது. அது சிந்தித்துப் பார்க்கக் கூடிய ஒரே பாதை இரண்டாவது பாதையாகத் தான் இருந்தது - அதாவது ஏகாதிபத்தியத்திடம் சரணடைவது. மேலும், இந்த இரண்டாவது பாதையானது, அதிகாரத்துவத்தின் முன்னணிப் பிரிவுகளுக்கு அவர்களது சலுகைகளை நிரந்தரமாகப் பத்திரப்படுத்திக் கொள்வதற்கும் அவர்களது சொத்துகளை பரந்த முறையில் விரிவுபடுத்துவதற்குமான சாத்தியத்தை திறந்து விட்டது. இந்த சலுகை படைத்த சாதி ஒரு ஆளும் வர்க்கமாக மாறும். கோர்பசேவ், யெல்ட்சின் மற்றும் இவர்களது துணைவர்களது ஊழல் எல்லாம் இந்த முழு பிற்போக்குத்தனமான மற்றும் தீவிர நாசகரமான விளைவை சாதிப்பதற்கு அதிகாரத்துவத்தால் உபயோகிக்கப்பட்ட அவசியமான வழிவகை மட்டுமே

அக்டோபர் 3, 1991 அன்று, அதாவது சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பு, கீவ் நகரில் நான் ஒரு உரை வழங்கினேன். அதில் முதலாளித்துவ மீட்சி மக்களுக்குத் பாரிய ஆதாயங்களைக் கொண்டு வரும் என்கின்ற வாதத்திற்கு (இது ஸ்ராலினிச ஆட்சியால் பரவலாய் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது) சவாலெழுப்பினேன். நான் கூறியதாவது:

இந்த நாட்டில், ஏற்கனவே இருந்து வரும் உற்பத்தி சக்திகளையும் அவற்றைச் சார்ந்திருக்கும் சமூக-கலாச்சார நிறுவனங்களையும் பரவலாய் அழிப்பதின் அடிப்படையில் மட்டும் தான் முதலாளித்துவ மீட்சி நடைபெற முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வாதானால், சோவியத் ஒன்றியத்தை உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் கட்டமைப்புடன் ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஒன்றிணைப்பது என்பதன் அர்த்தம் ஒரு பின் தங்கிய தேசியப் பொருளாதாரம் மெதுமெதுவாய் அபிவிருத்தி காணவிருக்கிறது என்பதல்ல, மாறாக குறைந்தபட்சம் தொழிலாள வர்க்கத்திற்கேனும் மூன்றாம் உலக நாடுகளை விடவும் மேம்பட்ட, முன்னேறிய நாடுகளில் நிலவும் வாழ்க்கை நிலைமைகளுக்கு மிக நெருக்கமான, வாழ்க்கை நிலைமைகளை காப்பாற்றி வந்திருக்கக் கூடிய ஒன்று துரிதமாக அழிக்கப்படவிருக்கிறது என்பதே அதன் அர்த்தமாகும். முதலாளித்துவ மீட்சியை ஆலோசனையளிப்பவர்கள் உற்பத்தி செய்கிற பல்வேறு திட்டங்களையும் ஒருவர் ஆராய்வாரேயானால், உலக முதலாளித்துவப் பொருளாதாரம் உண்மையாக இயங்கும் வழிவகை குறித்த அறியாமையில் ஸ்ராலினுக்குக் கொஞ்சமும் சளைக்காதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்கிற முடிவுக்கு அவர் வராமல் இருக்க முடியாது. ஸ்ராலினின் நடைமுறைவாத மற்றும் தேசியவாதக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகத் துன்பியலை விஞ்சும் பெரியதொரு துன்பியலுக்கு அவர்கள் களம் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். [”முட்டுச்சந்தியில் சோவியத் ஒன்றியம்”, நான்காம் அகில வெளியீடு (இலையுதிர் காலம் - குளிர் காலம் 1992, தொகுதி 19, எண். 1, பக். 109), அழுத்தம் மூலத்தில் உள்ளவாறு.]

சுமார் 20 வருடங்களுக்கு முன் ஏறக்குறைய இதே சமயம், ஜனவரி 3, 1992 அன்று, வேர்க்கர்ஸ் லீக் (Workers League) சோவியத் ஒன்றியக் கலைப்பின் வரலாற்று, அரசியல் மற்றும் சமூகத் தாக்கங்களை விவாதிப்பதற்கு டெட்ராயிட்டில் கட்சி உறுப்பினர் கூட்டம் ஒன்றை நடத்தியது. பல வருடங்களுக்குப் பின் இப்போது மறுவாசிப்பு செய்து பார்க்கையில் இந்த அறிக்கை காலத்தால் தாக்குப் பிடித்து நின்றிருக்கிறது என்றே நான் நம்புகிறேன். அது கூறியது, “சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு தொழிலாளர் அரசின் சட்டரீதியான கலைப்பையும் அதனை, அக்டோபர் புரட்சியில் இருந்து எழுந்த தேசியப் பொருளாதாரம் மற்றும் திட்டமிட்ட அமைப்புமுறையின் மிச்சங்களை அழிப்பதற்கு பகிரங்கமாகவும் உரத்த குரலிலும் அர்ப்பணித்துக் கொண்ட ஆட்சிகளைக் கொண்டு இடம்பெயர்ப்பதையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. CIS (சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பு) அல்லது அதன் சுதந்திரக் குடியரசுகளை தொழிலாளர் அரசுகள் என்று வரையறை செய்வதென்பது முந்தைய காலத்தில் இந்த வரையறை வெளிப்படுத்திய ஸ்தூலமான அர்த்தத்தில் இருந்து அதனை முழுமையாகப் பிரித்தெடுப்பதாகும்.” [டேவிட் நோர்த், சோவியத் ஒன்றியத்தின் முடிவு, லேபர் பப்ளிகேஷன்ஸ், 1992, பக். 6]

அறிக்கை தொடர்ந்தது:

ஒரு புரட்சிகரக் கட்சி யதார்த்தத்திற்கு முகம் கொடுத்தாக வேண்டும், அதை உள்ளவாறு கூற வேண்டும். சோவியத் தொழிலாள வர்க்கம் ஒரு தீவிரத் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கு முன்பாக அதிகாரத்துவம் தொழிலாளர் அரசை விழுங்கி விட்டிருக்கிறது. இந்த உண்மை, எவ்வளவு விரும்பத்தகாததாய் இருந்தாலும், அது நான்காம் அகிலத்தின் முன்னோக்கை மறுப்பதாக அமையவில்லை. தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை அழிக்க முடியாது போகுமானால், சோவியத் ஒன்றியம் உடைந்து மூழ்கிப் போகும் என்பதை எங்களது இயக்கம், அது ஸ்தாபிக்கப்பட்ட 1938 ஆம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து கூறி வந்திருக்கிறது. இந்த அல்லது அந்த அதிகாரத்துவத்தின் தவறான கையாளுகைக்கு ஏதோவொரு வகையாக மிகைப்படுத்தப்பட்ட பிரதிபலிப்பாக ட்ரொட்ஸ்கி அரசியல் புரட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அரசியல் புரட்சி மூலம் மட்டும் தான் சோவியத் ஒன்றியம், ஒரு தொழிலாளர் அரசாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பாதுகாக்கப்பட முடியும் என்பதால் தான் ஒரு அரசியல் புரட்சி அவசியம் என்று அவர் கூறினார்.” [பக். 6]

சோவியத் ஒன்றியம் அதிகாரத்துவத்தால் கலைக்கப்படுவதற்கு எதிராக எழுவதில் சோவியத் தொழிலாள வர்க்கம் ஏன் தோற்றது என்பதற்கு நான் விளக்கம் தேட முனைந்தேன். நாஜி ஊடுருவலின் பயங்கரங்களுக்குத் தப்பிய சோவியத் ஒன்றியம்சோவியத் சமூகத்தின் கழிசடைகளின் நலன்களின் பேரில் செயல்பட்ட அற்பமான போக்கிலிகளின் ஒரு பரிதாபகரமான குழுவினால் நடத்தப்பட்ட நடவடிக்கையில் அழிக்கப்படுவது எவ்வாறு சாத்தியமானது? இதற்கு நான் பின்வரும் பதிலையே  கூறினேன்:

சோவியத் ஒன்றியத்திற்குள்ளாக ஸ்ராலினிச ஆட்சியால் நடத்தப்பட்ட புரட்சிகரக் காரியாளர்கள் மீதான பாரிய அழித்தொழிப்பு நடவடிக்கையின் தாக்கங்களை வலியுறுத்துவதன் மூலம் தான் இந்தக் கேள்விகளுக்கு நாம் பதில் கூற வேண்டும். புரட்சிக்கு நனவுடன் தயாரிப்பு செய்து வழிநடத்திய புரட்சிகரப் பாரம்பரியத்தின் மனிதப் பிரதிநிதிகளில் ஏறக்குறைய அத்தனை பேருமே துடைத்தழிக்கப்பட்டார்கள். புரட்சியின் அரசியல் தலைவர்களுடன் சேர்த்து, சோவியத் அரசின் ஆரம்ப வருடங்களில் பூத்துக்குலுங்கிய  மிகவும் படைப்பாக்கம்மிக்க புத்திஜீவித்தட்டின் பிரதிநிதிகளும்  சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார்கள் அல்லது அமைதியாவதற்கு அச்சுறுத்தப்பட்டார்கள்.

மேலும், தொழிலாள வர்க்கமே அரச சொத்துகளில் இருந்து ஆழமாய் அந்நியப்படுத்தப்பட்டதை நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, சொத்துகள் அரசுக்குச் சொந்தமாய் இருந்தது, அரசு அதிகாரத்துவத்துக்குஉரியதாய் இருந்தது. அரசுச் சொத்துக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைச் சொத்துக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு - ஒரு தத்துவார்த்த நிலைப்பாட்டில் அது எத்துணை முக்கியமானதாக இருந்தாலும் நடைமுறை நிலைப்பாட்டில் மேலும் மேலும் சம்பந்தமற்றதாகிக் கொண்டிருந்தது. முதலாளித்துவச் சுரண்டல் என்பது அந்த பதத்தின் விஞ்ஞானரீதியான அர்த்தத்தில் அங்கு நிலவவில்லை என்பது உண்மையே, என்றாலும் தொழிற்சாலைகளிலும் சுரங்கங்களிலும் மற்றும் பிற வேலையிடங்களிலும் அன்றாட வாழ்க்கை நிலைமைகள் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் எதிலும் காணக் கூடியதான அளவுக்கு, பல சந்தர்ப்பங்களில், அதனினும் மோசமானதாக இருந்தது என்கிற உண்மையை அது மாற்றி விட முடியாது.

இறுதியாக, சர்வதேச சோசலிச இயக்கத்தின் நீடித்த சீர்குலைவின்  பின்விளைவுகளையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்... 

முக்கியமாக கடந்த தசாப்தத்தில், உலகின் எந்தப் பகுதியிலும் முதலாளித்துவ தாக்குதலுக்கு எதிரான தாக்கம்மிக்க தொழிலாள வர்க்க எதிர்ப்பு என்பது உருக்குலைந்து போயிருந்ததானது சோவியத் தொழிலாளர்களிடம் ஒரு விரக்தி ஏற்படுத்தும் விளைவைக் கொண்டிருந்தது. முதலாளித்துவம்வெல்ல முடியாமை ஒளிவட்டத்தை சுமப்பதாய் கருத முடிந்தது, இந்த ஒளிவட்டம் என்பது உலகெங்கிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்து முதலாளித்துவத்திடம் சரணடைந்த தொழிலாளர் அதிகாரத்துவங்களின் முதுகெலும்பற்ற தன்மையின் அவநம்பிக்கையான பிரதிபலிப்பு மட்டுமே என்ற போதிலும். சோவியத் தொழிலாளர்கள் கண்டதெல்லாம் மூலதனத்தின் சர்வதேசத் தாக்குதலுக்கு தொழிலாளர் பிரிவுகளின் கடுமையான எதிர்ப்பை அல்ல, மாறாக தோல்விகளையும் அவற்றின் பின்விளைவுகளையும் தான். [பக். 13-14]

சோவியத் ஒன்றியம் ஆளும் அதிகாரத்துவத்தால் அழிக்கப்பட்டதை ஒரு விரிந்த சர்வதேச நிகழ்வுடன் இந்த அறிக்கை தொடர்புபடுத்தியது. சோவியத் ஒன்றியம் நொருக்கப்பட்டமை அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் பாதுகாப்புக்கான பகுதி அமைப்பாகளாகவேனும் தொழிற்சங்கங்கள் செயல்படுவது அழிக்கப்பட்டது மூலம் பிரதிபலித்தது.  

முன்னேறிய நாடுகள் உள்ளிட்ட உலகின் ஒவ்வொரு பகுதியிலும், தொழிலாள வர்க்கத்தை திட்டமிட்டபடி சம்பளத்தை தாழ்த்துவது மற்றும் வறுமைக்குள் தள்ளுவதென்னும் தொடர்புபட்ட பணியில் தமது சொந்தக் கட்சிகளும் தமது சொந்த தொழிற்சங்க அமைப்புகளுமே ஈடுபட்டிருப்பதை தொழிலாளர்கள் கண்டு கொண்டிருக்கின்றார்கள். [பக். 22]

இறுதியாக, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு முற்போக்கான முதலாளித்துவ அபிவிருத்திக்கான ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும் என்ற எந்தவொரு கருத்தையும் இந்த அறிக்கை நிராகரித்தது.

மில்லியன்கணக்கான மக்கள் ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகத்தைக் காணவிருக்கிறார்கள். ஜனநாயக முகமூடி கிழியப் போகிறது. ஏகாதிபத்தியம் சமாதானத்துடன் இணக்கமுடையதே என்கிற கருத்து அம்பலப்படவிருக்கிறது. கடந்த காலத்தில் பரந்த மக்களை புரட்சிகரப் போராட்டத்துக்குள் தள்ளிய அதே கூறுகள் மறுபடியும் பிரசன்னமாகி இருக்கின்றன. ரஷ்யாவிலும் உக்ரைனிலும் இருக்கும் தொழிலாளர்களுக்கு அவர்கள் முதலில் ஏன் ஒரு புரட்சியை செய்ய நேர்ந்தது என்பதை ஞாபகப்படுத்தப்பட இருக்கின்றனர். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு தாங்களும் கூட ஒரு ஆரம்ப கால கட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு எதிராக மிகப் பெரும் போராட்டங்களில் ஈடுபட நேர்ந்தது ஏன் என்பதும் ஞாபகப்படுத்தப்பட இருக்கிறது. ஐரோப்பியத் தொழிலாளர்களுக்கு அவர்களது கண்டம் ஏன் சோசலிசம் மற்றும் கார்ல் மார்க்ஸின் பிறப்பிடமாக இருந்தது என்பது பற்றி ஞாபகப்படுத்தப்படவுள்ளனர். [பக். 25]

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னர்: 20 வருட பொருளாதார நெருக்கடி, சமூக சிதைவு மற்றும் அரசியல் பிற்போக்குத்தனம்

தாராளவாத தத்துவத்தின் படி, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஜனநாயகத்தின் ஒரு புதிய மலர்ச்சியை உருவாக்கியிருக்க வேண்டும். சந்தேகமே அவசியமில்லை, அப்படியான எதுவும் நடக்கவில்லை, முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் சரி அல்லது, இந்த விஷயத்தில், அமெரிக்காவிலும் கூட. மேலும் கம்யூனிசத்தின் தோற்கடிப்பு என்பதாய்ச் சொல்லப்படுகிற சோவியத் ஒன்றியத்தின் உடைவைத் தொடர்ந்து சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் இருந்த அதன் சமரசமற்ற எதிரிகளான சமூக ஜனநாயக மற்றும் சீர்திருத்தவாத தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் ஒரு வெற்றிகரமான மறு எழுச்சி எதுவும் நடக்கவில்லை. அதன் நேரெதிர் விஷயம் தான் நடந்தது. இந்த அமைப்புகள் எல்லாமே, சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பிறகு, ஒரு பேரழிவான இன்னும் தீர்க்கமுடியாத நெருக்கடியையும் கூட சந்தித்தன. அமெரிக்காவில் ஒட்டுமொத்த பனிப்போர் காலத்திலும் கம்யூனிசத்தைத் தோற்கடிப்பதை மட்டுமே தனது பிரதானமான நோக்கமாக கொண்டிருந்த தொழிற்சங்க இயக்கம் கிட்டத்தட்ட உருக்குலைந்து போய் விட்டது சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவைத் தொடர்ந்து வந்த இரண்டு தசாப்தங்களின் போது, AFL-CIO தனது உறுப்பினர்கள் எண்ணிக்கையில் கணிசமான பகுதியை இழந்தது, முற்றுமுதலாய் கையாலாகாத ஒரு நிலைக்குக் குறைந்து போனது, ஒரு தொழிலாளர் அமைப்பு என்கிற பதத்தின் சமூகரீதி முக்கியத்துவம் பெற்ற எந்தவொரு அர்த்தத்திலும் அது நிலவுவது முடிந்து போனது. அதே சமயத்தில் உலகெங்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலை அரசின் கொள்கையின் திசையில் அதன் செல்வாக்கு மற்றும் தனது சொந்த உழைப்பால் உருவான உபரி மதிப்பில் தனது பங்கை அதிகரித்துப் பெறுவதற்கான அதன் திறன் ஆகிய விடயங்களில் - மிகப் பெருமளவுக்கு சேதத்தை சந்தித்தது.

இந்த உண்மையில் இருந்து சில முக்கியமான முடிவுகள் தோன்றுகின்றன. முதலாவதாய், சோவியத் ஒன்றியத்தின் உடைவு மார்க்சிசம் மற்றும் சோசலிசத்தின் தோல்வியாகச் சித்தரிக்கப்படுவனவற்றில் இருந்து எழவில்லை. அவ்வாறாக இருந்திருப்பின், சோவியத்துக்குப் பிந்தைய சகாப்தத்தில் மார்க்சிச-விரோத மற்றும் சோசலிச-விரோத தொழிலாளர் அமைப்புகள் தான் பலனடைந்திருக்க வேண்டும். இந்த அமைப்புகள் எல்லாம் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தன என்கிற உண்மையானது, தொழிலாளர் அமைப்புகள் என்று கூறிக் கொள்ளக் கூடியகம்யூனிஸ்ட் அமைப்புகள் மற்றும் கம்யூனிச விரோத அமைப்புகள் அனைத்திலும் ஒன்றுபோல அமைந்திருக்கக் கூடிய வேலைத்திட்ட மற்றும் நோக்குநிலை பொது அம்சத்தை வெளிக் கொண்டுவர நிர்ப்பந்திக்கிறது. இந்த அமைப்புகள் அனைத்தின் அரசியல் மரபணுவிலும் இருக்கக் கூடிய பொதுவான கூறு என்ன? பதில் இதுதான், அவர்களின் பெயர்கள் என்னவாக இருந்தாலும், அவர்களின் அரசியல் வரிசைகள் மாறுபட்டாலும், இல்லாத அவர்களது தத்துவங்களுக்குள் வித்தியாசங்கள் இருந்தாலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்ட பெரும் தொழிலாளர் அமைப்புகள் அடிப்படையாக தேசியவாதக் கொள்கைகளைப் பின்பற்றின. அவை தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியை ஏதேனும் ஒரு தேசிய-அரசுடன் பிணைத்தன. இது உலகப் பொருளாதாரத்தின் அதிகரிக்கும் ஒருங்கிணைப்புக்கு பதிலளிக்கத் திறனற்றவையாய் அவற்றை ஆக்கியது. நாடுகடந்த பெருநிறுவனங்கள் உருவானதும் அதனுடன் தொடர்புபட்டு நடந்த முதலாளித்துவ பூகோளமயமாக்கல் நிகழ்வும் தங்களை ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் அடித்தளமாக கொண்டிருந்த தொழிலாளர் அமைப்புகள் அனைத்தையும் உடைத்து நொருக்கிவிட்டது.

இரண்டாவது முடிவு என்னவென்றால், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வாழ்நிலைமைகள் மேம்படுவதென்பது ஏதோவொரு அளவில் சோவியத் ஒன்றியத்தின் இருப்புடன் பிணைக்கப்பட்டதாய் இருந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் துரோகங்களும் குற்றங்களும் இருந்தாலும், ஒரு சோசலிசப் புரட்சியின் அடிப்படையில் எழுந்திருந்த சோவியத் ஒன்றியம் என்கிற ஒரு அரசு இருந்து வந்தமையானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் மீது சோவியத் ஒன்றியம் இருந்திரா விட்டால் அவை சற்றும் ஏற்றுக் கொண்டிருக்க முடியாத குறிப்பிட்ட அரசியல் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகளைத் திணித்திருந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களில் வரைமுறையற்ற ஏகாதிபத்திய இராணுவவாதம், சர்வதேசச் சட்ட மீறல்கள், மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் மறுதலிக்கப்படுவது ஆகியவற்றால் குணாதிசயப்படுத்தப்படும் அரசியல் சூழல் சோவியத் ஒன்றியம் கலைக்கப் பட்டதன் நேரடி விளைவாகும்.

சோவியத் ஒன்றியம் உடைந்ததென்பது, அதன் முன்னாள் குடிமக்களான பரந்த மக்களுக்கு, ஒரு முற்றுமுழுதான பேரிழப்பாகும் அக்டோபர் புரட்சிக்கு இருபது வருடங்களுக்குப் பிறகு, ஸ்ராலினிச ஆட்சியின் அத்தனை அரசியல் குற்றங்களையும் தாண்டி அக்டோபர் புரட்சிக்குப் பின் ஸ்தாபிக்கப்பட்டிருந்த புதிய சொத்து உறவுகள் பின் தங்கிய ரஷ்யாவின் ஒரு அசாதாரணமான சமூக உருமாற்றத்தைச் சாத்தியமாக்கியது. நாஜி ஜேர்மனியுடன் நான்கு ஆண்டுப் போர் சமயத்தில் படுபயங்கர இழப்புகள் நேர்ந்ததற்குப் பின்னரும் கூட, போரைத் தொடர்ந்து வந்த 20 ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் அதன் பொருளாதாரத்தில் கண்ட அசுர வளர்ச்சியும், அதனுடன் கைகோர்த்து விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் ஒட்டுமொத்த உலகத்தையும் மலைக்க வைத்திருந்தது.

ஆயினும் சோவியத் ஒன்றியத்திற்குப் பிந்தைய அனுபவத்தின் மீதான ரஷ்ய மக்களது தீர்ப்பு என்ன? முதலும் முதன்மையுமாய் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஒரு மக்கள்தொகைரீதியான பேரழிவைக் கொண்டுவந்தது. சோவியத் ஒன்றியம் உடைந்து பத்து வருடங்களின் பின், ரஷ்ய மக்கள்தொகை வருடாந்திரம் 750,000 என்கிற விகிதத்தில் சுருங்கிக் கொண்டிருந்தது. 1983 ஆம் ஆண்டுக்கும் 2001 ஆம் ஆண்டுக்கும் இடையில், வருடாந்திர குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை பாதியாகச் சரிந்திருந்தது. ரஷ்யாவில் இருந்த கர்ப்பிணிப் பெண்களில் 75 சதவீதம் பேர் அவர்களது கருவிலிருந்த குழந்தைக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஏதேனும் ஒரு வகை நோயினால் பாதிப்புற்றிருந்தனர். குழந்தைகளில் நான்கில் ஒன்று தான் ஆரோக்கியமாய்ப் பிறந்தது.

முதலாளித்துவம் மீள்புனருத்தானம் செய்யப்பட்டதன் பின்னர் ஒட்டுமொத்தமாய் ரஷ்ய மக்களின் ஆரோக்கியம் மிகப் பெருமளவில் மோசமடைந்தது. குடிப்பழக்கம், இதய நோய், புற்றுநோய் மற்றும் பாலியல் நோய்களின் அதிகரிப்பு மலைக்க வைப்பதாய் இருந்தது இவை எல்லாமே முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரம் ஒரு பேரழிவு கொண்ட நிலைமுறிவு கொண்டு பரந்த மக்களின் வறுமை மிகப் பிரம்மாண்டமான அதிகரிப்பைக் கண்டதொரு பின்புலத்தில் நிகழ்ந்தன.

ஜனநாயகத்தைப் பொறுத்தவரை, சோவியத்துக்குப் பிந்தைய அமைப்புமுறை என்பது பரந்த படுகொலைகளின் அடிப்படையில் தான்  உறுதிப்படுத்தப்பட்டது. 70 வருடங்களுக்கும் அதிகமாய், 1918 ஜனவரியில் சட்டமன்ற அவை போல்ஷிவிக் அரசினால்  கலைக்கப்பட்டது ஒரே ஒரு உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தியிராத நிகழ்வாக இருந்தபோதிலும் ஜனநாயகக் கோட்பாடுகள் மீதான மறக்கவியலாததும் மன்னிக்க முடியாததுமான மீறல் என்பதைப் போல உரத்து கூறப்பட்டுவந்திருக்கிறது ஆனால் 1993 அக்டோபரில், மக்கள் தேர்வு செய்த நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து விட்ட நிலையில், யெல்ட்சினின் ஆட்சி மாஸ்கோவின் மையத்தில் அமைந்திருக்கின்ற ரஷ்ய நாடாளுமன்றத்தின் அமைவிடமான வெள்ளை மாளிகை மீது குண்டுமழை பொழிய உத்தரவிட்டது. இராணுவத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமான எண்ணிக்கையில் 2,000 வரை இருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்தப் படுகொலையின் அடிப்படையில், யெல்ட்சினின் ஆட்சி இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வாதிகாரமாக திறம்பட உருமாற்றப்பட்டது. புட்டின் மெட்வடேவ் ஆட்சியும் இதே சர்வாதிகாரப் பாதைகளில் தான் தொடர்ந்து பயணிக்கிறது. வெள்ளை மாளிகையின் தாக்குதலுக்கு கிளின்டன் நிர்வாகம் ஆதரவளித்தது. ரஷ்ய நாடாளுமன்றத்தின் மீது குண்டுமழை பொழிந்த சம்பவம், சட்டமன்ற அவையைக் கலைத்த சம்பவம் போலன்றி, ஏறக்குறைய மறந்து போன ஒரு நிகழ்வாக இருக்கிறது.

சோவியத்துக்குப் பிந்தைய ரஷ்ய கலாச்சாரம் குறித்து கூறுவதற்கு ஏதேனும் இருக்கிறதா? எப்போதும் போல், முக்கியமான  படைப்புகளை உருவாக்குவதற்கு தம்மால் முடிந்த அளவு பாடுபடுகிற திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் பொதுவான சித்திரமோ  அநாதரவான ஒன்றாகத் தான் இருக்கிறது. ”மாபியா”, “தொழிலதிபர் மற்றும்செழுமையான கும்பல் போன்றவை மட்டுமே சோவியத் ஒன்றியத்தின் உடைவில் இருந்து எழுந்த நவீன ரஷ்யக் கலாச்சாரத்தை வரையறை செய்யப் பயன்படுகின்ற, அல்லது அதில் எஞ்சியுள்ள சொற்களாக உள்ளன.

ரஷ்யாவில் நடந்திருப்பது எல்லா முதலாளித்துவ நாடுகளிலுமே கண்ணுறத்தக்க சமூக மற்றும் கலாச்சார நிலைமுறிவின் ஒரு அதீதமான  வெளிப்பாடு மட்டுமே. ரஷ்யாவில் காணும் பொருளாதார அமைப்புமுறை பிரிட்டன் அல்லது அமெரிக்காவில் இருப்பதை விடவும் அதிக  ஊழலடைந்தது என்று கூட நிச்சயமாகக் கூற முடியுமா? ரஷ்யாவின்வசதிபடைத்த கும்பல் அவர்கள் பயன்படுத்தும் வழிமுறைகளில் வேண்டுமானால் அதிக முரட்டுத்தனமுடையதாகவும் அதிக இழிவானதாகவும் இருக்கலாம். எனினும், அவர்களது கொள்ளை வழிமுறைகள் அவர்களது போட்டியாளர்கள் அமெரிக்க நிதிய உயர்மட்டம் பயன்படுத்தியதை விட திறம் குறைந்தவை என்கின்ற வாதம் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், 2008 இலையுதிர் காலத்தில் அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை கிட்டத்தட்ட உருக்குலைந்த நிலைக்கு கொண்டுவந்த ஊக வணிக செயல்பாடுகளை செய்த அமெரிக்க நிதிய அதிகாரக் கும்பலால் ஒரு சில நாட்களுக்குள்ளேயே தங்களது இழப்புகளின் முழுச் சுமையையும் பொதுமக்களின்  தலைக்கு மாற்ற முடிந்தது.

1991 ஆம் ஆண்டின் இறுதியில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதானது அமெரிக்காவின் அதிகாரம் பால்கன் பகுதியில், மத்திய கிழக்கு பகுதியில், மற்றும் மத்திய ஆசியப் பகுதியில் பயன்படுத்தப்படுவதற்கான எல்லையற்ற வாய்ப்புகளை திறந்து விட்டது என்பது  சந்தேகத்திற்கிடமில்லாத உண்மையே. ஆனாலும் அமெரிக்க இராணுவவாதம் எழுந்ததென்பது, இறுதி ஆய்வில், அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார நிலையின் நீண்டகாலச் சரிவு என்கிற கூடுதல் ஆழமான மற்றும் வரலாற்றுரீதியாக முக்கியத்துவம் படைத்த ஒரு போக்கின் வெளிப்பாடே ஆகும். இந்த வெளிப்பாடு சோவியத் ஒன்றியத்தின் உடைவினால் மாறி விடவில்லை. கடந்த  இரண்டு தசாப்தங்களின் போது அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாறு என்பது வீழ்ச்சியுற்ற ஒன்றாகத் தான் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சியின் குறுகிய அத்தியாயங்கள் எல்லாம் பொறுப்பற்றதும் தாக்குப்பிடிக்காததுமான ஊக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கின்றன. 1990களின் கிளிண்டன் கால பொருளாதார எழுச்சி டாட்.காம் குமிழி-dot.com bubble- என்று சொல்லப்படுகிற வோல் ஸ்ட்ரீட் ஊக வணிகத்தின்பகுத்தறிவுக்குப் பொருந்தாத உற்சாகத்தினால் எண்ணெய் வார்க்கப்பட்டது தசாப்தத்தின் மிகப் பெரும் பெருநிறுவன அடையாளங்களுக்கு - இவற்றில் என்ரோன்-Enron- தான் ஜொலிக்கும் அடையாளமாய் இருந்தது அவற்றின் முழுக்க குற்றவியல் செயல்பாடுகளின் அடிப்படையில் மலைக்க வைக்கும் மதிப்பீடுகள் அளிக்கப்பட்டன. இது அனைத்தும்  2000-2001 இல் நிலைகுலைந்தது. தொடர்ந்து வந்த புத்தாக்கம் என்பது வீட்டுத்துறையிலான வெறிகொண்ட ஊக வணிகத்தால்  எண்ணெய் வார்க்கப்பட்டது. இறுதியில் 2008 உடைவு வந்தது. இதிலிருந்து மீளவே இல்லை.

வரலாற்றாசிரியர்கள் தமது புத்திஜீவித்தன மயக்கத்தில் இருந்து மீளத் தொடங்கும் போது, ’சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீடித்த வீழ்ச்சியும் ஒரு உலகளாவிய நெருக்கடியின் ஒன்றோடு ஒன்றிணைந்த காலகட்டங்களே மனிதகுலத்தால் அபிவிருத்தி செய்யப்பட்ட பாரிய உற்பத்தி சக்திகளை உற்பத்தி சாதனங்களின் தனியுடைமை அடிப்படையிலும் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் கட்டமைப்புக்குள்ளாகவும் அபிவிருத்தி செய்ய இயலாமையில் இருந்து அவை எழுகின்றன’  என்பதை அவர்கள் காண்பார்கள்.

அனைத்துலகக் குழுவும் உலக சோசலிசப் புரட்சிக்கான முன்னோக்கும்

பிற்போக்கான அரசியல் காலகட்டங்களில், சமூக சிந்தனையின் மட்டம் செங்குத்தாய் வீழ்கின்றது. கோட்பாடுகளைப் பொதுவாக நிராகரிப்பது நிகழ்கிறது. புத்திஜீவிகள், அரசியல் காற்றுகளின் மாற்றத்தால் குழப்பமடைந்து நோக்குநிலை தவறி, ஒழுங்கமைந்த  சிந்தனைக்கு கூட போக வேண்டாம், பகுத்தறிவாய் சிந்திப்பதற்கான திறனையும் கூட இழக்கச் செல்கின்றனர். உத்தியோகபூர்வ  “பொதுக்கருத்து உடன் இணைத்துக் கொள்வதற்கும் அதனிடம் நல்லெண்ணம் சம்பாதிப்பதற்குமாய் தடுக்கமுடியாத ஒரு உந்துதலை  தம்முள் உணர்கின்றனர். இணக்கம் நிதியியல் ரீதியாய் ஆதாயமளிக்கும், மாறாய் அதிருப்தி காட்டினாலோ அதற்கு ஒரு பெரும் விலை கொடுக்கவேண்டி வரும் என்று புரிந்து கொள்ளும்போது இந்த அவமானகரமான போக்குகள் வலுவூட்டப்படுகின்றன.

சோவியத் ஒன்றியத்தின் உடைவைப் பின் தொடர்ந்து ஏறக்குறைய உலகெங்கிலும் மார்க்சிச இடது புத்திஜீவிகள் மார்க்சிசம் மற்றும்  சர்வதேச சோசலிச முன்னோக்கினைக் கிட்டத்தட்ட கைதுறந்தனர். மார்க்சிசத்துடனான தங்களது கடந்த காலத் தொடர்பையே அவர்கள் மறுதலித்ததால், இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர எழுச்சிகளை எல்லாம் ஒரு அஞ்சுதற்குரிய தவறாகக் கேலி செய்ய அவர்கள் விரைந்தனர். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் நெடுங்கால உறுப்பினரும் ஸ்ராலினிசத்தின் வக்காலத்துவாதியுமான  பேராசிரியர் எரிக் ஹோப்ஸ்பாம், ‘1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுகுறுகிய இருபதாம் நூற்றாண்டை (இது  1914 இல் தொடங்கியிருந்ததாய் அவர் கூறிக் கொண்டார்) ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாய் அறிவித்தார். இந்தகுறுகிய  இருபதாம் நூற்றாண்டு என்கின்ற கருத்தாக்கம் சாரத்தில் ஃபுகுயாமாவின்வரலாற்றின் முடிவு கருத்தாக்கத்தின் ஒரு எதிரொலியே இப்போது போர்கள் மற்றும் புரட்சிகளின் கலகம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதால், எல்லோரும் சுய-திருப்தியுடனான தாராளவாதி ஆக முடியும் அல்லவா.

வரலாற்றின் மீதான திருத்தல்வாதம் என்பது பின்நவீனத்துவம் மற்றும் தொடர்புபட்ட சடவாதவிரோத தத்துவ பகுத்தறிவின்மைப்  பள்ளிகளின் மேலாதிக்கத்துடன் தொடர்புபட்ட ஒரு பரந்த புத்திஜீவித்தன பிற்போக்குத்தன நிகழ்வுப்போக்கின் பகுதியாகும். அரசியல்  தோல்விகளையொட்டி எழுந்த தனிநபர் விரக்திகளை மட்டுமே புத்திஜீவித்தன நிலைமுறிவு வெளிப்படுத்தவில்லை, பற்பல  கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் சோவியத்துக்குப் பின் மார்க்சிசத்தை மறுதலித்ததில் இந்த விரக்தி ஒரு திட்டவட்டமான  பாத்திரத்தை ஆற்றியது என்றாலும் கூட. ஒரு மிக ஆழமான மட்டத்தில், மார்க்சிச கைதுறப்பு என்பது சமூக வித்தியாசப்படுத்தல் என்கின்ற ஒரு புறநிலை நிகழ்வுப்போக்கைப் பிரதிபலித்தது. நடுத்தரவர்க்கத்தின் மிக்க வசதி படைத்த சமூக அடுக்கு - இதிலிருந்து தான் புத்திஜீவிகள் ஈர்க்கப்பட்டார்கள், இந்த அடுக்கிற்காகத்  தான் அவர்கள் பேசினார்கள் - பெருகிய முறையில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அந்நியப்பட்டிருந்தது. மார்க்சிசம் மற்றும் சோசலிசத்திடம் இருந்து புத்திஜீவிகள் முறித்துக் கொண்டது ஆளும் வர்க்கத்துடன் அவர்கள் கொண்டிருந்த பொருள்ரீதியான  தொடர்புகளையும் பகிர்ந்து கொண்ட நலன்களையும் பிரதிபலித்தது. இது தான் அமெரிக்காவிற்குள்ளும் சரி சர்வதேச அளவிலும் சரி  முதலாளித்துவ அரசியலின் கட்டமைப்புக்குள் எண்ணற்றஇடது போக்குகளின் அரசியல் ஒருங்கிணைவிற்கான அடிப்படையான அஸ்திவாரமாக இருந்தது.

பின்னோக்கி செல்லும் சமூக, அரசியல் மற்றும் புத்திஜீவித்தனப் போக்குகள் அனைத்துக்கும் எதிரான ஒரு போராட்ட நிகழ்முறையின் மூலமாக நான்காம் அகிலத்தின் அபிவிருத்தி முன்னேறி வந்திருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பிற்குப் பிந்தைய காலத்தில் அனைத்து சரணாகதிப் போக்குகளையும் நா...கு. எதிர்த்ததென்றால் அது ஒரு எதிர்பாரா நிகழ்வு அல்ல. அந்த எதிர்ப்பு அதற்கு முந்தைய 10 ஆண்டுகளின் காலத்தில், அதாவது 1982 தொடங்கி, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) அரசியல் சரணடைவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருந்த போராட்டத்தின் விளைபொருளாகும். வரலாற்றில் இன்னும் ஆழமாய் பார்த்தால், WRPக்கு எதிரான போராட்டம் என்பது வேர்க்கர்ஸ் லீக்கிற்குள் [சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பு] முந்தைய தசாப்தத்தில் டிம் வோல்ஃபோர்த்தினதும் மற்றும் ஜோசப் ஹான்சனின் SWPயின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்டிருந்த போராட்டத்தில் இருந்தே அபிவிருத்தி செய்யப்பட்டிருந்ததாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கும் அதன் ட்ரொட்ஸ்கிச பாரம்பரியத்திற்கும் இடையிலான பிணைப்புகளுக்குப் புத்துயிரூட்டிய இந்த நெடிய போராட்ட வரலாறு தான் அனைத்துலகக் குழுவிற்கு, அபிவிருத்தியுற்று வந்த உலக நெருக்கடியின் முக்கிய அம்சங்களைச் சரியாகப் பகுப்பாய்வு செய்த, அத்துடன் சோவியத் ஒன்றியத்தின் உடைவினால் இயக்கமுற்ற தீவிரமான மாற்றங்களுக்கு இயக்கத்தைத் தயாரிப்பு செய்த, ஒரு உலக புரட்சிகர முன்னோக்கினை வடித்தெடுப்பதை சாத்தியமாக்கியிருந்தது.

கடந்த 20 ஆண்டுகளில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பரிணாம வளர்ச்சியை ஆராய்கையில், அதன்  அபிவிருத்தியிலான சில முக்கியமானகாலகட்டங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படுவது அவசியமாகும்.

(1) 1992 மார்ச் மாதத்தில், நான்காம் அகிலத்தின் 12வது உறுப்பினர் மாநாட்டில், தொழிலாள வர்க்கத்துக்குள்ளாக ஒரு சர்வதேச  சோசலிசக் கலாச்சாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான குறிப்பான மிக்க நனவானதொரு போராட்டத்தின் முக்கியத்துவத்தை  நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. அந்த பொருளடக்கத்தில், அடுத்த இருபது வருடங்களில் கலை  தொடர்பான பிரச்சினைகளில் கணிசமான வேலையை நா...கு. அபிவிருத்தி செய்தது.

(2) 1993 பிப்ரவரியில், அனைத்துலகக் குழு மறைந்த வாடிம் ரோகோவின் உடன் தனது நெருக்கமான புத்திஜீவித்தன ஒத்துழைப்பைத்  தொடக்கி, “சோவியத்துக்குப் பிந்தைய வரலாற்றுப் பொய்மைப்படுத்தல் பள்ளி என்று அடையாளம் காணப்பட்ட ஒன்றுக்கு எதிராக ஒரு சர்வதேச எதிர்த்தாக்குதலைத் தொடுத்தது. அக்டோபர் புரட்சியின் வரலாற்று மதிப்பீட்டை, அத்துடன் குறிப்பாக, லியோன் ட்ரொட்ஸ்கியின் பாத்திரத்தை பாதுகாத்தது கடந்த இரண்டு தசாப்தங்களில் நா...கு. செய்த வேலையின் ஒரு முக்கிய மூலபாகமாக உள்ளது. 2007க்கும் 2010க்கும் இடையில், இயன் தாட்சர், ஜேஃப்ரி ஸ்வெயின் மற்றும் ரொபேர்ட் சேர்வீஸ் ஆகிய பிற்போக்குத்தனமான வரலாற்றாசிரியர்கள் ட்ரொட்ஸ்கியின் மீது தொடுத்த தாக்குதல்களின் மீதான அம்பலப்படுத்தல்களையும் விரிவான மறுப்புகளையும் நா...கு. வெளியிட்டது. இந்த எழுத்துக்கள் எல்லாம் லியோன் ட்ரொட்ஸ்கியை பாதுகாத்து என்கிற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டன.

(3) 1995 ஜூன் மாதத்தில், வேர்க்கர்ஸ் லீக் சோசலிச சமத்துவக் கட்சியாக தனது உருமாற்றத்தைத் தொடக்கியது. இது நான்காம்  அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பிரிவுகளால் சமகாலத்தில் நிகழ்த்தப்பட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டும் நடந்த ஒரு  அரசியல் நிகழ்முறை ஆகும்.

(4) 1997 பிப்ரவரியில், உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபிப்பதற்கான வேலை தொடங்கியது, இது உத்தியோகபூர்வமாக 1998 பிப்ரவரியில் வெளியானது.

(5) 2003 மார்ச்சில், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் முதல் தேசிய பொது மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வு சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியின் தொடக்கத்தைக் குறித்து நின்றது.

(6) தொடர்ந்து வந்த வருடங்களில், சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை பெருகியதால், குட்டி-முதலாளித்துவ  தீவிரவாதத்தின் பிற்போக்குத்தனமான தத்துவ அடித்தளங்களுக்கு எதிராக தனது தாக்குதலை கட்சி அபிவிருத்தி செய்தது. இந்த  விடயத்தில்மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு பற்றி வெளியிடப்பட்டமை குறிப்பாய் முக்கியத்துவம் அமைந்ததாகும்.

(7) 2008 ஆகஸ்டில், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி தனது ஸ்தாபக மாநாட்டை நடத்தியது. இதில்சோசலிச சமத்துவக்  கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆஸ்திரேலியா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் இலங்கையில் உள்ள நா...கு. பிரிவுகளும் ஸ்தாபக மாநாட்டை நடத்தின.

(8) 2010 ஆகஸ்டு மாதம் நடந்த அதன் இருவருடத்திற்கு ஒருமுறையான தேசிய மாநாட்டில், சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள  வர்க்கத்தில் தனது விரிவடையும் போராட்டங்களுக்கு அடித்தளமாகக் கொள்ளத்தக்க ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை ஏற்றுக்  கொண்டது.

மெக்பெத் நாடகத்தில் ஒரு மறக்கமுடியாத பத்தி இருக்கிறது, அதை மறைந்த லியோபோல்ட் ஹேய்ம்சன் ரஷ்ய மார்க்சிஸ்டுகளும்  போல்ஷிவிசத்தின் தோற்றுவாய்களும் என்கிற தனது முக்கியமான வரலாற்றுப் படைப்பின் அறிமுகத்தில் மேற்கோள்  காட்டியிருக்கிறார்: “காலத்தின் விதைகளைப் பார்த்து, அதில் எந்த விதை முளைக்கும் எது முளைக்காது என்று மட்டும் உங்களால் கூற முடிந்தால்.”

பல வருடங்களுக்கு முன்பாக வேர்க்கர்ஸ் லீக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் விதைத்த விதைகள், கடந்த நான்கு  தசாப்த காலத்து தீவிரமான தத்துவார்த்த, அரசியல் மற்றும் நடைமுறை வேலைகளால் உரம்பெற்று வளர்ந்திருக்கின்றன. இந்த  விதைகளில் இருந்து எழுகின்ற ஒரு உண்மையான சர்வதேச ட்ரொட்ஸ்கிச போக்கு மார்க்சிசத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுத்  தொடர்ச்சியை உள்ளடக்கியிருக்கின்றது.

விரிவடைந்து செல்லும் சமூகப் போராட்டங்களில் தலையீடு செய்வதும் சோசலிசத்துக்கான போராட்டத்திற்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்தான மிகச் சிறந்த சக்திகளை வென்றெடுப்பதும் தான் 2012ல் நாம் முகம் கொடுக்கின்ற கடமை ஆகும்.