தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lanka: Chilaw fisherman committed suicide after injured by police shootingஇலங்கை: பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலாபம் மீனவர் தற்கொலை
By Our Correspondents கடந்த பெப்பிரவரி மாதம் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலாபம் வெல்ல பிரதேச மீனவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முடமாக்கப்பட்ட W. ஜேசுமரி கிங்ஸ்லி பெர்ணான்டோ, கடந்த 15ம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 40 வயதான அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிங்ஸ்லியின் வீட்டின் முன் அவரது மனைவியும் பிள்ளைகளும் கிங்ஸ்லியின் மரணம், எரிபொருள் விலையை மோசமாக அதிகரித்தமை உட்பட சிக்கன நடவடிக்கைகள் ஊடாக, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் தொழில் மற்றும் குடும்பங்களுக்கு இராஜபக்ஷ அரசாங்கத்தால் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலின் நேரடி விளைவாகும். ஆயினும், மீனவர்கள் சங்கங்கள், அரசியல் கட்சிகள், கத்தோலிக்க தேவாலயம் மற்றும் ஊடகங்களாலும் மரணத்தின் உண்மையான காரணம் மக்களுக்கு மூடிமறைக்கப்பட்டு வருகின்றது. பிள்ளைகளின் கல்வி சீரழிகின்றமை, பிள்ளைகளுக்கு சரியான முறையில் உணவு வழங்க முடியாமை மற்றும் கடையில் கடன் குவிகின்றமை பற்றி கிங்ஸ்லி பெரும் திகைப்பில் ஆழ்ந்திருந்ததாகவும், குடும்பத்தின் இந்த பொருளாதார நெருக்கடியே அவரது மரணத்துக்கு காரணம் என்றும் அவரது மனைவி ஜெனிட்டா நிலந்தி உலக சோசலிச வலைத் தளத்துக்குத் தெரிவித்தார். “பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்திருக்காவிட்டால் அவர் இன்றும் வாழ்ந்திருப்பார்” என ஜெனிட்டா கண்ணீருடன் தெரிவித்தார். பெப்பிரவரி 15 அன்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் முழங்காலில் ஏற்பட்ட கடும் காயத்தின் காரணமாக கிங்ஸ்லி சிலாபம் ஆஸ்பத்திரியில் இருந்து கொழும்பு தேசிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். ஒரு மாதமும் 10 நாட்களும் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கிங்ஸ்லியை, ஒவ்வொரு மாதமும் கொழும்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வருமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியிருந்த போதும், கொடூரமான பொருளாதார நெருக்கடி உக்கிரமடைந்திருந்த நிலையில் அவரால் ஜூன் 6ம் திகதி சிகிச்சைக்கு செல்ல முடியாமல் போனது. கிங்ஸ்லி அன்றிருந்தே சம்பள அடிப்படையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த அதே வேளை, சில சமயங்களில் மரம் வெட்டுதல் மற்றும் தேங்காய் பறித்தல் மூலமும் வாழ்க்கையை ஓட்டியுள்ளார். அவரது சிறிய வீட்டில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ளதோடு அவர் கடந்த பெப்பிரவரியில் தரைக்கு சீமந்து பூசி புதுப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். முடமான பின்னர், 14 வயது மற்றும் 7 வயதான அவரது இரு மகன்மாரதும் கல்வி நடவடிக்கைகள் குழம்பிப்போனதோடு, மூத்த மகன் வலைகளில் மீன்களை தேர்வு செய்வதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 200 ரூபா அளவில் சம்பாதித்துள்ளார். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜெனிட்டா, கூலிக்கு மீன்களைக் காயவைத்து அதே அளவு தொகையையே சம்பாதிக்கின்றார். கிங்ஸ்லியுடன் மோசமாக காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சில வாரங்கள் சிகிச்சை பெற்று, இப்போது முடமானவராக இருக்கின்ற செபஸ்டியன் ரீகன் உலக சோசலிச வலைத் தளத்துக்கு பின்வருமாறு கூறினார். செபஸ்டியன் ரீகனும் அவரது குடும்பமும் “பெப்பிரவரி 15 அன்று சிலாபம் வெல்ல தேவாலயத்தில் பாதிரியாரின் தலைமையில் மூவாயிரம் மீனவர்கள் பங்குபற்றிய கூட்டமொன்று நடந்தது. அதில் விசேடமாக எதுவும் இடம்பெறாததால் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். சிறிது நேரத்தில் மீனவர்களுக்கு விசேட அதிரடிப் படையினர் தாக்குதல் தொடுப்பதாக கேள்விப்பட்டு நானும் போனேன். அதற்குள் நான் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானேன். கடலுக்குப் போய் முகத்தைக் கழுவிக்கொண்டு திரும்பி வருவதற்குள் எனது நண்பன் அன்டனி பெர்ணான்டோ கீழே விழுந்தார். அத்துடன் எனக்கும் சூடு பட்டது. எனக்கு நினைவு திரும்பிய பின்னரே அன்டனி உயிரிழந்தது தெரியும். கொழும்பு ஆஸ்பத்திரியில் இருந்த போது சிவில் உடையில் வந்த அடையாளந்தெரியாத சிலர், பொலிசுக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டாம் என என்னை அச்சுறுத்தினர். நான் சிகிச்சையை நிறுத்திக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் எனது வலது கை செயலிழந்துள்ளது. இப்போது மருந்து எடுக்கவும் பணம் இல்லை. அன்டனி ரொஷான் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலை தடுக்க முயன்று கடும் காயமடைந்த இன்னொரு மீனவரான அன்டனி ரொஷானின் ஒரு கையில் நான்கு விரல்களும் அகற்றப்பட்டுள்ளன. கிங்ஸ்லி உட்பட சூடுபட்டு முடமான எவருக்கும் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு நட்ட ஈடும் கிடைக்கவில்லை. ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற போது போக்குவரத்துச் செலவு உட்பட சுமார் ஆயிரம் ரூபா நாள் செலவுக்கு பணம் கொடுத்து இந்தக் குடும்பங்களுக்கு உதவியது அயலவர்களும் உறவினர்களுமே ஆகும். எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக இலங்கையின் தெற்கில் மற்றும் வடமேற்கு கடற்கரையோரத்தில் உள்ள சிறிய படகு உரிமையாளர்கள் மற்றும் பங்குக்கு வேலை செய்யும் மீனவர் தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டம் வெடித்ததோடு சிலாபம் அதில் முன்னிலை வகித்தது. அரசாங்கத்தின் பயமுறுத்தல்கள் மூலமே வட கிழக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களில் மீனவர் போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. எரிபொருள் விலை அதிகரிப்புக்கு முன்னர், ஒரு சிறிய படகுக்கு எரிபொருளுக்கான செலவு 1,000 முதல் 1,500 ரூபாவாக இருந்ததோடு இப்போது ஒரு நாளுக்கு 2,500 முதல் 3,000 ரூபா வரை தேவைப்படுகின்றது. முன்னர் மாதமொன்றுக்கு 24,000 ரூபா அளவில் செலவான அதே வேளை, இப்போது 60,000 ரூபா தேவைப்படுகின்றது. மாதமொன்றுக்கு அரசாங்கம் கொடுக்கும் 9,325 ரூபா எரிபொருள் மானியத்தை கழித்த பின்னரும் மாதமொன்றுக்கு 26,675 ரூபா செலவிட வேண்டியிருப்பதோடு மானியத்தில் எந்தவொரு நன்மையும் கிடையாது என மீனவர்கள் கூறுகின்றனர். எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய மானிய நிதியை கொடுக்காமல் இருப்பதன் காரணமாக சிலாபம் வெல்ல மீனவர்கள் பலருக்கு இந்த மாதம் மானியம் கிடைக்கவில்லை. எரிபொருள் விலைக்கு சமாந்தரமாக ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மற்றும் வலை போன்ற உபகரணங்களின் விலையும் அதிகரித்ததன் காரணமாக, முன்னெப்போதையும் விட மீனவர்களுக்கு கடற் தொழில் சிரமமானதாக இருக்கின்றது. 2010ல் 25 குதிரை வலு கொண்ட இயந்திரத்தின் விலை 200,000 ஆக இருந்ததோடு இப்போது அது 250,000 வரை அதிகரித்துள்ளது. அந்த காலப் பகுதியில், ஒரு சோடி வலையை 12,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடிந்தாலும் இப்போது அது 17,000 ரூபாவாகும். அதிக விலையின் காரணமாக விநியோகம் குறைகின்றதனாலும், எரிபொருள் விலை மற்றும் உபகரண விலையும் அதிகரிப்பதனாலும் எற்படும் பாதிப்பை சமாளிப்பதற்காக மீன்களின் விலையை அதிகரிக்க முடியாது என்றும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த காரணத்தால் மீனவர்களின் கடன் சுமை அதிகரித்துள்ளதோடு, பொருட்களை அடகு வைக்கவும், கூலி வேலைகளைத் தேடவும் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டுப் பணிப் பெண்களாக மத்திய கிழக்குக்குச் செல்லும் நிலைமை மீனவ பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் சிலாபம், உடப்பு மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 150 பேர் ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்ல முயன்று, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருவக் காற்றின் தாக்கத்தால் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அலை வீசுவதால் இந்த மீனவர்களின் தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மேலும் ஆபத்தான நிலையில் உள்ளது. சிலாபம் அலுத்வத்த மீனவர்கள் தமது நெருக்கடி நிலைமைகளை பின்வருமாறு விளக்கினர். “எங்களுக்குள்ள பெரும் பிரச்சினை கலப்பு பருவக் காற்று காலத்தில் மணலால் நிரம்பிப் போவதாகும். இப்போது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு படகை இழுத்துச் செல்ல வேண்டும். அதனால் தாமதமும் நட்டமும் ஏற்படும். பருவக் காற்று காலத்தில் கடலில் தொழில் செய்வதால் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருவர் உயிரிழப்பதோடு பலர் காயமடைகின்றனர். இவை எமது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து இடம்பெறுபவை. ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் எங்களுக்கு இந்தத் தடைகளை நீக்கியதில்லை.” யுத்தத்துக்கு முன்னதாக இத்தகைய பருவக் காற்று காலத்தில் கணிசமானளவு மீனவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைக்கு இடம்பெயர்ந்து தொழில் செய்து வந்த போதிலும், யுத்தத்தின் காரணமாக அதை முழுமையாக நிறுத்திவிட நேர்ந்தது. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்திருந்த போதிலும், அந்த பிரதேசங்களில் மீன்பிடிக்கு அரசாங்க பாதுகாப்பு படைகள் விதித்துள்ள தடைகள் மற்றும் மீனவர்களுக்கு எதிரான கெடுபிடிகள் முடிவுக்கு வரவில்லை. பெப்பிரவரியில் எரிபொருள் விலையை அதிகரித்த அரசாங்கம், உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையிலும் விலையை குறைக்காதது ஏன் என மீனவர்கள் கேள்வியெழுப்பியதோடு, தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு அவசியம் என்றும், அரசாங்கம் மற்றும் எதிர்க் கட்சிகள் எவற்றிலும் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தனர். வலை, உபகரணங்கள் மற்றும் மீன் விலை போலவே எரிபொருள் விலையும் சர்வதேச முதலாளித்துவ விற்பனைச் சந்தை சக்திகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்தச் சக்திகள் மக்களின் தேவைக்காக அன்றி ஒரு சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் இலபாத்தை குவித்துக்கொள்வதற்கே செயற்படுகின்றன. இதன் பாகமாகவே இராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி எரிபொருள் விலையை அதிகரித்தல், ரூபாயை மதிப்பிறக்கம் செய்து இறக்குமதி பொருட்களின் விலையை அதிகரித்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீது உயர்ந்த வரியை சுமத்துவதற்கும் மேலாக, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகளையும் வெட்டித் தள்ளுவதை துரிதப்படுத்தியிருக்கின்றது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உக்கிரமடைந்துள்ள பொருளாதார வீழ்ச்சி நிலைமைகள் இலங்கையிலும் ஆசியாவிலும் பொருளாதார நெருக்கடியை உக்கிரமடையச் செய்துள்ளதோடு அது இராஜபக்ஷ அரசாங்கத்தின் கடன் நெருக்கடியை உக்கிரமாக்கியுள்ளதுடன் மக்கள் மீதான சுமையைத் திணிக்கும் வெட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. மீனவர்கள் உட்பட ஒட்டு மொத்த தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதல்களின் உண்மையான காரணங்களை மூடி மறைத்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிலைமையை மாற்ற முடியும் என்ற மாயையை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) பரப்புகின்றது. ஜே.வி.பீ. தனது மீனவர் சங்கம் ஒன்றின் ஊடாக, “உலக விற்பனைச் சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சின் நன்மையை மீனவர்களுக்கு கொடுக்குமாறும், வலை உபகரணங்களின் விலையை குறைக்குமாறும் கோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் மனு ஒன்றை கைச்சாத்திட்டு வருகின்றது. யுத்தத்துக்காக முன்னணியில் பிரச்சாரம் செய்த தோடு இராஜபக்ஷவை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பாத்திரம் ஆற்றிய ஜே.வி.பீ.யும் கிங்ஸ்லியின் மரணத்துக்கும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கும் நேரடி பொறுப்பாளியாகும். 1983ல் இனவாத யுத்தத்தையும், 2002ல் “இலங்கையை மீண்டும் மலரச் செய்வோம்” என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வெட்டு நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்த வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), மீனவர்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்காக, பொலிஸ் சூட்டில் கொல்லப்பட்ட அன்டனியின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி உதவி செய்துள்ளதோடு சூட்டுக்கு இலக்கான மீனவர்களின் குடும்பங்களுக்கு படகுகளை வாங்கித் தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் இதே தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கும் யூ.என்.பீ.யின் இந்த பாசாங்குக்குள் மீனவர்கள் அகப்படக் கூடாது. அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துக்கு வந்த மீனவர்களுக்கு தொழிலாள வர்க்கத்தின் ஒத்துழைப்பைக் கோரி, சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் போராடியது சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே. அனைத்துலக சோசலிச கொள்கையை நடைமுறைப்படுத்துகின்ற, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்குக் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே, எரிபொருள் விலையைக் குறைத்து மீன் பிடி உபகரணங்களை இலகு விலைக்கு கொடுத்து, கடற் தொழிலை புதிய தொழில்நுட்ப முறையின் மூலம் தூக்கி நிறுத்த முடியும். இந்த வேலைத் திட்டத்தை கலந்துரையாடுவதற்காக, “மீனவர் போராட்டத்தை வெற்றிகொள்ள ஒரு சோசலிச வேலைத் திட்டம்” என்ற தலைப்பில் சோ.ச.க. இம்மாதம் 30ம் திகதி சனிக்கிழமை மாலை 3.30க்கு சிலாபம் “சுதசுன மண்டபத்தில்” நடத்தவுள்ள பொதுக் கூட்டத்துக்கு வருகை தருமாறு மீனவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. |
|
|