World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

A brutal abortion calls into question Chinas one child policy

ஒரு ஈவிரக்கமற்ற கருத்தடை சீனாவின் ஒரு குழந்தை கொள்கையை கேள்விக்குட்படுத்துகிறது

By John Chan
25 June 2012
Back to screen version

பலவந்தமாய் கருத்தடை செய்யப்பட்ட 22 வயது தாய் ஒருவரையும் அவரின் பக்கத்தில் இரத்தம் தோய்ந்து கிடக்கும் குறை மாதக் கரு ஒன்றையும் காட்டுகின்ற படங்களும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி சீனாவின் பிறப்புக் கட்டுப்பாட்டு ஆளுகைமுறைக்கும் அதன் ஒரு குழந்தைக் கொள்கைக்கும் எதிராக சீனாவிலும் சர்வதேசரீதியாகவும் பெரும் மக்கள் கோபத்தைக் கிளறி விட்டுள்ளது. 

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஃபெங் ஜியான்மெய் கட்டாயக் கருத்தடைக்கு பலவந்தப்படுத்தப்பட்டிருந்தார். 40,000 யுவான் (6000 அமெரிக்க டாலர்) அபராதத் தொகையை ஃபெங் செலுத்தத் தவறியதை அடுத்து ஷான்சி மாகாணத்தில் இருக்கும் அங்காங் நகரத்தைச் சேர்ந்த குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்திருந்தனர்.

சீனாவின் மலிவு உழைப்புத் தொழிலாளர் படையில் ஒரு பகுதியாய் உள்நாட்டிற்குள் புலம்பெயர்ந்தோர்  பல மில்லியன்கணக்கில் சீனாவில் இருக்கின்றனர். அவர்களில் தான் ஃபெங்கும் அவரது கணவரும் வருகின்றனர். ஃபெங் தான் பிறந்த மங்கோலிய உட்பகுதியில்  இருக்கும்  ஒரு நகரத்தில் வசித்து வந்தவர். ஆயினும் அவர் திருமணம் முடித்து கணவருடன் 2006 இல் அங்காங் மாநகரத்தில் இருக்கும் ஜென்சியாசென் நகராட்சிக்கு இடம் பெயர்ந்த போது தனது உத்தியோகப்பூர்வ வசிப்பிடப் பதிவை புதிய கிராமப்புற இருப்பிடத்திற்கு மாற்றத் தவறி விட்டார்

நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு குழந்தை பெறுவதற்கு மட்டுமே அனுமதி உண்டு. இத்தம்பதி கிராமப்புற பின்புலத்தில் இருந்து வருவதால் முதலாவது குழந்தை பெண்ணாக இருந்தால் இவர்கள் இன்னொரு குழந்தையும் பெற்றுக் கொள்ள முடியும். இத்தம்பதிக்கு ஏற்கனவே ஆறு வயதில் மகள் இருக்கிறார்.

இந்த கருத்தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பது ஃபெங்குக்கு முந்தைய சில நாட்கள் அவகாசத்தில் தான் சொல்லப்பட்டிருந்தது. இந்தக் கட்டாய நடைமுறையைத் தவிர்க்க ஒரே வழி அவர் மிகப்பெரும் அபராதத் தொகையைக் கட்டுவது தான். அவரது கணவர் டெங் ஜியாயுவான், அபராதத் தொகையின் அளவு உள் மங்கோலியாவில் வேலை பார்த்து வரும் தனது ஏறக்குறைய  நான்கு வருட சம்பளத் தொகை என்றும் அந்த அளவுப் பணம் தங்களிடம் இருக்க வழியற்றிருக்கிறோம் என்றும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாளிடம் கூறினார். 

உள்ளூரின் குடும்பக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மே 30 அன்று ஃபெங்கை வீட்டுச் சிறையில் வைத்தனர், ஆனால் அவர் எப்படியோ ஒரு உறவினரின் இல்லத்திற்குத் தப்பிச் சென்று விட்டார். ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பின் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவரைக் கொண்டு சென்று விட்டனர். ஒரு வேனுக்குள் திணிக்கப்பட்ட அவர் அங்கிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்தார். அபராதத் தொகை செலுத்தம் 40,000 யுவானுக்குச் சல்லியும் குறையக் கூடாது என்று அதிகாரி ஒருவர் ஃபெங்கின் சகோதரிக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தியும் அனுப்பினார். கடனுக்குத் தேடித் தேடியலைந்த டெங் ஜியாயுவானால் சரியான நேரத்தில் பணத்தைச் செலுத்தி இத்துயர சம்பவத்தை நிகழாமல் தடுக்க முடியாமல் போனது. 

ஒரு ஒப்புதல் ஆவணத்தில் கைரேகையிட ஃபெங் பலவந்தம் செய்யப்பட்டார், பின் அவரது தலை மூடப்பட்டது. அவரை அசைய முடியாமல் செய்து அவருக்கு சிசுவைக் கொன்று கருத்தடையை தூண்டுகிற ஊசி போடப்பட்டது. சீனாவில் போதுமான வசதிகளற்ற மருத்துவமனைகளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு பல சமயங்களில் கர்ப்பிணிப் பெண்கள் இறந்திருக்கின்றனர். ஷாண்டாங் மாகாணத்தின் லிஜின் கவுண்டியில் சென்ற அக்டோபரில் கட்டாய கருத்தடை நடவடிக்கை மூலம் உயிரிழந்த 38 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவரின் கதையை லாஸ் ஏஞ்சல்ஸில் வெளியான ஒரு கட்டுரை விவரித்திருந்தது. 

1970களின் பிற்பகுதியில் முன்னாள் சீனத் தலைவர் டெங் சியோபிங்கினால் ஒரு குழந்தைக் கொள்கை கொண்டுவரப்பட்ட நாள் முதலாகவே இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து பரவலான எதிர்ப்பை உருவாக்கி வந்திருக்கின்றன. இந்தக் கொள்கையில் விளையும் துஷ்பிரயோகங்களை மூடிமறைக்க முடியாத அளவுக்கு இப்போது இணைய அணுகல் பரவலாகி விட்டது.

ஃபெங்கின் கணவரின் சகோதரி இப்புகைப்படங்களையும் விவரங்களையும் இணையத்தில் பதிவிட்டார். ஜூன் 14க்குள்ளாக, வேய்போ (Weibo) நுண்பதிவு தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கருத்துரைகள் பதிவாகியிருந்தன. சிலர் இந்தக் கருத்தடையை இரண்டாம் உலகப் போரின் போதான ஜப்பானிய மற்றும் நாஜி அட்டூழியங்களுடன் ஒப்பிட்டிருந்தனர். இன்னும் பலர் சீனாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான லியு யாங் குறித்து உத்தியோகப்பூர்வ ஊடகங்கள் வெளியிடும் புளகாங்கிதச் செய்திகளுடன் ஃபெங்கின் பரிதாபகரமான நிலையை ஒப்பிட்டு சீன சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவம் பற்றியும் கருத்துகள் வெளியிட்டிருந்தனர். 

மக்கள் கோபம் வெடித்ததில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (CCP) ஆட்சி அதிர்ச்சியுற்றது. நிலக்கரி சுரங்கப் பேரழிவுகள் அல்லது ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பால் பொருட்களை நஞ்சாக்குகின்ற பால் பவுடர் உற்பத்தி போன்ற உணர்ச்சிப்பூர்வமான சமூகப் பிரச்சினைகள் வெடித்த போது எப்படி அது சமாளித்ததோ அதே வகையில் இப்போதும் அது பின்வாங்கி மழுப்புவதற்குத் தள்ளப்பட்டது.

ஃபெங்கிற்கு பலவந்தமாக செய்யப்பட்ட கருத்தடை நடவடிக்கை அதிக மாத கர்ப்பங்களை பலவந்தமாகக் கருத்தடை செய்வதை தடை செய்கின்ற 2001 ஆம் ஆண்டு கட்டுப்பாட்டு விதியை மீறியிருப்பதாக சீன அதிகாரிகள் இப்போது கூறுகின்றனர். ஜூன் 14 அன்று, சென்பிங் கவுண்டியின் குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் மற்றும் ஜென்சியாசென் நகராட்சித் தலைவர் உட்பட மூன்று அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அங்காங் நகராட்சி ஃபெங்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. ஷான்சி மாகாண அரசாங்கம் கர்ப்பிணிப் பெண்களின் சட்ட உரிமைகள் குறித்து வலியுறுத்திக் கூறும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதோடு நன்கு வளர்ந்த கர்ப்பங்களை கருத்தடை செய்வது தடை செய்யப்பட்டிருந்த ஒன்று என்றும் அறிவித்தது. ஃபெங் விவகாரத்தில் மிகவும் உயர் மட்டம் தொடங்கி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய குடும்பக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒரு அதிகாரி பீஜிங்கில் அறிவித்தார்.

ஆயினும், ஃபெங் நடத்தப்பட்ட விதத்திற்கான பொறுப்பு உள்ளூர் அதிகாரிகளுடையது மட்டுமல்ல. கவுண்டி மற்றும் மாகாண அளவுகளில் உள்ள குடும்பக் கட்டுப்பாட்டு ஆணையங்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டுக்கான ஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்கின்ற ஒரு தேசிய அமைப்புமுறையை மேற்பார்வை செய்கின்ற CCP தலைமையிடம் தான் இந்தப் பொறுப்பு இறுதியாக சென்றுசேர்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் தனது ஒதுக்கீட்டு அளவை எட்டத் தவறியமைக்காக ஜென்சியாசென் நகராட்சி மஞ்சள் அட்டை எச்சரிக்கையைப் பெற்றிருந்த காரணத்தினாலும் ஃபெங் அத்தனை இரக்கமற்ற வகையில் நடத்தப்பட்டிருக்கலாம்.

ஃபெங் விவகாரத்தில் ஊடக விவாதத்தை மூடச் செய்வதைக் காட்டிலும் அது தொடர்வதை பீஜிங் அனுமதித்திருக்கிறது. பொதுமக்களின் கோபத்தைத் தணிப்பதற்கு ஆட்சி முனைகிறது, ஆனாலும் இப்போதிருக்கும் பிறப்புக் கட்டுப்பாட்டுக் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து ஆளும் வட்டாரங்களுக்குள் ஒரு தொடர் விவாதத்திற்கு இந்த விவகாரம் வழிகோலியிருக்கிறது.

1970களின் பிற்பகுதியில் டெங் தனது முதலாளித்துவ மீட்சி வேலைத்திட்டத்தை தொடங்கிய போது இந்த ஒரு குழந்தை கொள்கையானது அறிமுகம் செய்யப்பட்டது. 1949 புரட்சிக்குப் பின்னால் சீனாவால் அதன் பொருளாதாரப் பின்தங்கிய நிலைமையை வெல்ல முடியாமல் போனமைக்குக் காரணம் அதன் பொருளாதார விளைச்சலும் இயற்கை ஆதார வளங்களும் மிதமிஞ்சிய மக்கள்தொகையால் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியிருந்தமை தான் என்று அவர் வலியுறுத்தினார். உண்மையில், அந்தத் தேக்கம் என்பது, தனியொரு நாட்டில் சோசலிசம் என்கிற பிற்போக்குத்தனமான தேசியத் தன்னிறைவு முன்னோக்கின் அடிப்படையிலமைந்த ஸ்ராலினிசத்தின் திவால்நிலைமையின் விளைபொருளாகவே இருந்தது.   

இப்போது, சீனாவின் பிறப்புக் கட்டுப்பாட்டுக் கொள்கை அதன் மக்கள்தொகை ஈவினை (population dividend - கடந்த மூன்று தசாப்தங்களாய் அதன் பொருளாதார விரிவாக்கத்திற்கு உந்துசக்தி அளித்திருக்கக் கூடிய மலிவு உழைப்பின் முடிவற்ற விநியோகம்) அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக சில சீனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். சீனாவின் தொழிலாளர்களது பெரும் படையின் கையிருப்பு என்பது நாடுகடந்த பெருநிறுவனங்களுக்கு அசகாய இலாபங்களை அளிப்பது மட்டுமின்றி சர்வதேசரீதியாக முன்னேறிய பொருளாதாரங்கள் மற்றும் வளரும் நாடுகளிலும் ஊதியங்களையும் வேலை நிலைமைகளையும் குறைத்துப் பராமரிக்க உதவி செய்கிறது.  

முன்னதாக ஆண்டின் ஆரம்பத்தில், உழைக்கும் வயதிலான - 15 மற்றும் 64 வயது இடையிலான - மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையின் விகிதாச்சாரத்தில் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.1 சதவீதம் சரிந்து 74.4 சதவீதமாக ஆகியிருந்ததாக சீனாவின் புள்ளி விவரங்களுக்கான தேசியப் பிரிவு தெரிவித்திருந்தது. அடுத்த சில வருடங்களுக்கு சிறு சிறு ஏற்ற இறக்கங்களைக் காண்பது சாத்தியம் தான் என்றபோதிலும் (குறைந்து செல்கின்ற) உழைப்பு விநியோகத்தின் மீதான  தாக்கத்திற்கு கவனம் செலுத்துவது பயனுள்ளதாய் இருக்கும் என்று அந்தப் பிரிவு குறிப்பிட்டது.

உழைப்புப் பற்றாக்குறைக்கு காரணமாகும் என்பதால் சீனாவிலும் சர்வதேசிய அளவிலும் பெருநிறுவன ஆய்வாளர்கள் இந்த ஒரு குழந்தை கொள்கை குறித்து பல சமயங்களில் விமர்சனம் கொண்டிருந்திருக்கின்றனர்.

இந்தக் கொள்கை சீனாவின் பணக்காரர்களுக்கு ஒருபோதும் பொருந்தியதில்லை. வேண்டிய எண்ணிக்கையில் குழந்தைகளை வைத்துக் கொள்ள முடிவது குறித்து அவர்களுக்கு எந்த மனக்கிலேசமும் தோன்றுவதில்லை. இதற்கு அப்பட்டமான உதாரணம் சென்ற டிசம்பரில் வெளியான ஒரு செய்தி. குவாங்க்சோவில் ஒரு வசதியான தொழிலதிபரும் அவருடைய மனைவியும் வாடகைத் தாய்கள் கரு சுமக்கின்றதான மிகுந்த செலவு பிடிக்கும் IVF முறை மூலமாக பெற்றுக் கொண்ட எட்டுக் குழந்தைகளுடன் வாழ்கின்றனர். இந்தக் குழந்தைகளை பராமரிப்பதற்கு அவர்கள் பத்து செவிலியர்களையும் பணியமர்த்தியிருந்தனர். 

பரந்த பெரும்பான்மை மக்களுக்கு, இந்த ஒரு குழந்தைக் கொள்கை தீவிரமான சமூகப் பின்விளைவுகளைக் கொண்டதாய் இருக்கிறது. பெண் குழந்தைகளை விடவும் ஆண் குழந்தைகளைப் பெறவே விருப்பமிருப்பதானது பெண் சிசுக்கள் கைவிடப்படுவதற்கும், அத்துடன் பால் அடிப்படையிலான கருத்தடைகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது. இதன் விளைவாக சீன சமூகத்தில் பாலினச் சமநிலை என்பது தடம்புரண்டு கிடக்கிறது. 2020 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 24 மில்லியன் ஆண்களுக்கு வாழ்க்கைத் துணை காண முடியாத நிலை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. சகலருக்குமான ஓய்வூதிய ஆதரவு ஏதுமற்ற ஒரு நாட்டில், பெற்றவர்கள் நிதி ஆதரவுக்கு  தமது ஒரே பிள்ளையையே சார்ந்திருக்கும் நிலையானது, 1980கள் மற்றும் 1990களுக்கு இடையே பிறந்த தலைமுறையின் மீது பெரும் சுமைகளை சுமத்தியிருக்கிறது.  

சீனாவில் வாழ்வின் மற்ற ஒவ்வொரு அம்சத்தையும் போலவே, மக்கள்தொகையையும், அதிகாரத்துவ உத்தரவின் மூலம் கட்டுப்படுத்தி விடுவதற்கு முனைந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் உழைக்கும் மக்களின் மீது அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தைக் குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை. இப்போது அது மலிவு உழைப்பு கோரும் பெருநிறுவனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு குழந்தைக் கொள்கையைத் தளர்த்துவதற்கு அல்லது அகற்றுவதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அதன் விளைவும் இதே அளவுக்கு அழிவுகரமாகவே இருக்கும்சந்தையின் செயல்பாடுகள் தவிர்க்கவியலாமல் மிகப் பெரும் வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையும் சமூக நெருக்கடியையும் உருவாக்கும்.