World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka tilts toward the US

அமெரிக்காவை நோக்கிச் சாய்கிறது இலங்கை

By Sarath Kumara
23 June 2012
Back to screen version

ஒபாமாவின் நிர்வாகம் ஆசியாவில் சீனாவின் செல்வாக்கைப் பலவீனப்படுத்த தனது இராஜதந்திர மற்றும் மூலோபாய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் தனது பாதையை மாற்றுகிறது. சீனாவில் இருந்து தன்னை சற்று தள்ளி நிறுத்திக் கொள்ளும் இலங்கை அமெரிக்காவுக்கு நெருக்கமாகும் முயற்சிகளில் இறங்குகிறது.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரி-லா பாதுகாப்புப் பேச்சுவார்த்தைகளில் இந்த அம்சம் வெளிப்படையாக இருந்தது. இலங்கையின் பாதுகாப்புச் செயலரான கோத்தபய ராஜபக்சவும் அயலுறவுத் துறை அமைச்சரான ஜி.எல்.பீரிஸும் அமெரிக்க இராணுவ ஊழியர்களின் கூட்டுத் தலைமையகத் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சேவை ஜூன் 5 அன்றான பேச்சுவார்த்தைகளுக்கு இடையில் சந்தித்துப் பேசினர். இலங்கையின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு, குறிப்பாக இலங்கையின் கடற்படைக்கு, இராணுவ உதவியை அளிக்க டெம்ப்சே ஒப்புக் கொண்டார்.

அதிக விவரங்கள் வெளியாகவில்லை. என்றாலும் பாதுகாப்பு வீரர்களின் திறனை உயர்த்துவதற்கு மேம்பட்ட பயிற்சி வாய்ப்புகளை வழங்க இராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் சாதகமான பதிலை அளித்தன என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் வலைத் தளம் குறிப்பிட்டது. கோத்தபய இராஜபக்ச ஜனாதிபதி மஹிந்தா இராஜபக்சவின் சகோதரர் ஆவார்.

இந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது: ஒரு கடல் சூழ்ந்த நாடாக, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பாதைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இலங்கையின் கடற்படை ஆற்றத்தக்க ஒரு முக்கியமான பாத்திரத்தை இந்த சந்திப்புகள் அங்கீகரித்தன என்பதோடு, சர்வதேசப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்நாடுகளின் ஒன்றுபட்ட முயற்சியைக் கொண்டுவருவதற்கு நெருக்கமாய் ஒத்துழைக்கவும் உறுதிப்பாடு கொண்டன.

சர்வதேசப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது பற்றிய குறிப்பு இந்த கடற்படைக் கூட்டணியை அபிவிருத்தி செய்வதன் உண்மையான நோக்கத்தை சுலபமாய் மங்கச் செய்கிறது. 2020 ஆம் ஆண்டுக்குள்ளாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்காவின் மொத்தப் படைகளில் கடற்படையின் அளவு 60 சதவீதம் என்கிற அளவுக்கு அதனை அமெரிக்கா அதிகப்படுத்த இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலரான லியோன் பனெட்டா சிங்கப்பூர் கூட்டத்தில் அறிவித்தார்

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து எரிசக்தி மற்றும் கச்சாப்  பொருட்களைப் போக்குவரத்து செய்வதற்கு சீனாவால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற முக்கியமான கடல் வழிகளைக் கட்டுப்படுத்துவதையே கடற்படை சக்தி மீதான அமெரிக்காவின் கவனம் நோக்கமாய்க் கொண்டிருக்கிறது. சீனாவுடன் மோதல் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில், அத்தியாவசியமான சீன இறக்குமதிகளை நிறுத்தி ஒரு பொருளாதார முற்றுகையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க கடற்படையால் இயலுவதாக இருக்கும்.

மூலோபாயரீதியாக இலங்கை, இந்தியத் துணைக் கண்டத்தின் தென் முனையில், இந்தியப் பெருங்கடலில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்தான முக்கியமான கடல் வழிகளின் அருகே அமையப் பெற்றுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே ஏற்படக் கூடிய மோதலில், இலங்கை, இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அது ஆற்றியதைப் போன்ற ஒரு ஆதாரமான சரக்கு மற்றும் தடவாளப் போக்குவரத்துப் பாத்திரத்தை ஆற்ற முடியும். இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூரும் பர்மாவும் ஜப்பானிய துருப்புகளிடம் வீழ்ந்து விட்ட பிறகு, நேச நாடுகளின் தென்கிழக்கு ஆசியப் படையின் தலைமையகம் இலங்கையின் மத்திய மலைப் பகுதியில் அமைந்திருக்கும் கண்டிக்கு மாற்றிக் கொள்ளப்பட்டது

ஜனாதிபதி மஹிந்தா இராஜபக்ச பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)அமைப்புக்கு எதிரான தனது அரசாங்கத்தின் இனவாதப் போரின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ ஆதரவிற்கு சீனாவையே பெருமளவில் நம்பியிருந்தார். அதற்கான பிரதிபலனாய், தீவின் தெற்கு முனையில் ஹம்பந்தோட்டாவில் ஒரு பெரும் துறைமுகத்தைக் கட்டுவதற்கு அவர் சீனாவை அனுமதித்தார்.

2009 டிசம்பரில், இலங்கை: போருக்குப் பின் அமெரிக்க மூலோபாயத்தை மறுவரைவு செய்தல் என்ற தலைப்பில் அயலுறவு விவகாரங்களுக்கான அமெரிக்க செனட் குழு அளித்த ஒரு அறிக்கை, அமெரிக்கா என்ன செலவிலேனும் இலங்கையை இழந்து விடக் கூடாது என்று அறிவித்தது. இலங்கையை அமெரிக்காவின் சுற்றுவட்டத்திற்குள் கொண்டுவருவதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட அந்த அறிக்கை அழைப்பு விடுத்தது.

இலங்கையின் இராணுவம் நடத்திய ஒரு கொடூரமான போரில், 2009 மே மாதத்தில் LTTE தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாய், பத்தாயிரக்கணக்கிலான அப்பாவிப் பொதுமக்களும் உயிரிழந்தனர். இலங்கையின் போரை ஒபாமா நிர்வாகம் ஆதரித்திருந்த போதிலும் அமெரிக்காவுடன் நெருக்கமாய் அணிசேர இராஜபக்சவுக்கு நெருக்குதல் அளிக்கும் பொருட்டு போர்க் குற்ற விசாரணைகள் குறித்த மிரட்டலைப் பயன்படுத்தி வந்திருக்கிறது.

இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்ய இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கின்ற ஒரு தீர்மானத்தை ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்து அத்தீர்மானம் நிறைவேறியது. இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கம் இத்தீர்மானத்திற்கு ஒருபோதும் இருந்திருக்கவில்லை. பதிலாக, இலங்கையின் மீதான இராஜதந்திர நெருக்குதலை அமெரிக்கா இன்னும் தீவிரப்படுத்தக் கூடும் என்பதான ஒரு எச்சரிக்கையாக மட்டுமே அது இருந்தது.

இராஜபக்ச அரசாங்கம் அமெரிக்காவுடனான தனது உறவினைச் சீர்செய்து கொள்ள முடிவெடுத்தது. போருக்குப் பிந்தைய நல்லிணக்கத்திற்கு அரசாங்கம் என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்த ஒரு அறிக்கையை வழங்குவதற்கு, அயலுறவுத் துறை அமைச்சரான பீரிஸை மே 19 அன்று அமெரிக்காவுக்கு அது அனுப்பி வைத்தது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அரசாங்கத்தின் மறுநிவாரண மற்றும் மறுகட்டுமானப் பணிகள் குறித்து பீரிஸ் அளித்த அறிக்கைக்கு அமெரிக்க இராணுவத் தலைவரான டெம்ப்சேயும் இந்திய பாதுகாப்பு அமைச்சரான .கே.அந்தோனியும் சிங்கப்பூரில் பாராட்டு தெரிவித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இப்பகுதிகள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தான் இருக்கின்றன என்கிற உண்மைக்கு அமெரிக்காவும் இந்தியாவும் கண்ணை மூடிக் கொண்டன. அங்கு ஜனநாயக உரிமைகள் தீவிரமாய் முடக்கப்பட்டிருக்கின்றன என்பதோடு சுமார் 17,000 பேர் இன்னும் தங்களது வீடுகளுக்குத் திரும்ப வழியின்றி அகதி முகாம்களில் தான் தவித்து வருகின்றனர்

ஆசியாவிலான ஒபாமா நிர்வாகத்தின் மூர்க்கமான தலையீட்டிற்கு இராஜபக்ச அரசாங்கம் தகவமைத்துக் கொள்வது அப்பட்டமாகிக் கொண்டிருக்கிறது. பிராந்தியத்தில் இருக்கும் அதன் சக நாடுகளில் போலவே இலங்கையின் ஆளும் வர்க்கமும் ஒரு அடிப்படையான இருதலைக் கொள்ளி நிலையை எதிர்கொள்கிறது. ஏற்றுமதிச் சந்தையாகவும் உதவி மற்றும் முதலீட்டுக்கான ஆதாரமாகவும் இது இன்னும் சீனாவையே பெருமளவிற்குச் சார்ந்திருக்கிறது. அதே நேரத்தில் உலகின் வலிமையான இராணுவ சக்தியும், அத்துடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகளிடம் இருந்து நிதி உதவி கிட்டுவதைத் தீர்மானிப்பதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகின்றதுமான ஒரு சக்தியில் இருந்து முற்றிலுமாய் தன்னை அந்நியப்படுத்திக் கொள்வதற்கும் அதனால் இயலாது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஊசலாடிக் கொள்வதற்கு இலங்கைக்கு இருந்த இடம் மறைந்து கொண்டிருக்கிறது. சீரழிந்து செல்லும் வாழ்க்கைத் தரங்கள் குறித்த பரந்த மக்களின் கோபத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு வழியாக, இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை வைக்கும் சர்வதேச சதியினை மிகவும் எச்சரிக்கையாக கண்டனம் செய்வதை இராஜபக்சவும் அவரது அரசாங்கமும் தொடர்ந்து செய்து வருகின்றனர். என்ற போதிலும், சாய்வு அதிகமாய் அமெரிக்காவை நோக்கியதாய் இருக்கிறது