World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Japan’s nuclear restart

ஜப்பான் மீண்டும் அணுச்சக்தி உலைகளைத் துவக்குகிறது

Mike Head
23 June 2012
Back to screen version

நாட்டின் அணு உலைகளை மீண்டும் செயற்படுத்தவதற்கு ஜப்பானிய அரசாங்கம் விரைந்து செயல்படும் விதம் உலக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், வாழ்க்கை மீது முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையினால் முன்னிறுத்தப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை அடிக்கோடிடுகிறது.

மார்ச் 2011இல் ஏற்பட்ட புகுஷிமா அணுஉலை பேரழிவு (இது உலக வரலாற்றில் இரண்டாம் மிக மோசமான பேரழிவாகும்) ஏற்பட்டு ஒரு ஆண்டுக் காலத்திற்குச் சற்றே கூடுதலான காலக்கட்டத்திற்குள், பிரதம மந்திரி யோஷிஹிகோ நோடாவின் நிர்வாகம் ஜப்பானின் மேற்கு கடற்கரையின் Oiஇல் உள்ள இரண்டு அணுஉலைகளை மீண்டும் திறப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

தெளிவாக இந்த முடிவானது, பொதுமக்களின் எதிர்ப்பு மற்றும் அடிப்படை பாதுகாப்பு விஷயங்களை மீறி, எரிசக்தி பெறுநிறுவனங்கள் உட்பட பெரு வணிகங்களின் கோரிக்கைகளால் உந்துதல் பெற்றிருந்தது. புக்கூஷிமா பேரழிவிற்கு பொறுப்பான டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் நிறுவனம் (TEPCO) நிர்வகிக்கப்படும் அணுஉலைகள் உட்பட ஏனைய அணு உலைகளும் திறக்கப்படுவதற்கு ஏற்கனவே வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன.

புக்கூஷிமா அணுஉலையின் அவசரகால முறைகள் செயல்படாமல் போனது, அதன் ஆறு அணுஉலைகளில் மூன்று பகுதியாக கரைந்து போனது ஆகியவற்றோடு கடந்த ஆண்டின் பூகம்பமும், சுனாமியும் அதனை மிக வேகமாக மூழ்கடித்தன. ஏறத்தாழ 87,000 மக்கள், ஒருகால் பல தசாப்தங்களுக்கு வாழ தகுதியற்ற, அவ்விடத்தைச் சுற்றியிருந்த பகுதிகளுக்கு கட்டாயமாக இடம் பெயர்த்தப்பட்டனர். பேரழிவின் உச்சமாக, கிரேட்டர் டோக்கியோவில் வாழும் ஏறத்தாழ 35 மில்லியன் மக்களுடைய வாழ்வின் பாதுகாப்பு குறித்து அங்கே அச்சங்கள் நிலவின.

மே 2011க்குள் ஜப்பானின் அனைத்து 50 அணுஉலைகளையும் மூடப்பட வேண்டுமென்ற அளவிற்கு மக்களிடையே அங்கே ஆழ்ந்த கவலைகள் நிலவின. பல அணுஆலைகள் வெறுமனே பராமரிப்பு அல்லது பாதுகாப்பு மேம்பாட்டிற்காக மூடப்பட்டன. ஆனால் மின் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் மீது இருந்த பொதுமக்களின் பரந்த அவநம்பிக்கையால் அவற்றை மீண்டும் திறக்க இயலாமல் இருந்தது. இந்த கோபம் இன்னும் மறைந்துவிடவில்லை. Oiக்கு அருகிலுள்ள பகுதியில் வாழும் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், அந்த அணுஆலையும் புக்கூஷிமா போன்றவொரு விபத்தால் பாதிக்கப்படக்கூடும் என்று கருதுகின்றனர் என்று தேசிய ஒளிபரப்பு நிலையம் NHK சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டறிந்தது.

பதிமூன்று அணுஉலைகள் அமைந்துள்ள ஜப்பானில் “அணுச்சக்திக்கான குறுஞ்சந்து” (nuclear alley) என்று அறியப்படும் வகாசா விரிகுடா பகுதியிலேயே இரண்டு Oi நகர அணுஉலைகள் அமைந்துள்ளன. கொயோடா மற்றும் ஒசாகா ஆகிய இரண்டு பிரதான நகரங்கள் அருகில் உள்ளன. ஆயினும்கூட அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் நெருக்கடிக்கால வசதிகள் முறையாக அமைக்கப்படவில்லை. சுனாமியிலிருந்து அணுஉலைகளைப் பாதுகாக்க உயர்த்தப்பட்ட ஒரு கடலோர சுவர்கள் அடுத்த ஆண்டு வரை தயாராக இருக்காது; 2016 வரை அணுஆலைக்குள் கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவப்பட்டிருக்காது; கதிரியக்க கசிவுகளைக் குறைக்கும் வடிகட்டும் கலன்கள் (filtered vents) இன்னும் மூன்று ஆண்டுகளுக்குத் தயாராக இருக்காது.

Oi ஆலையின் விரிவாக்கத்திற்குள் இருக்கும் 30 கிலோமீட்டர் வெளியேற்ற பகுதியினுள் உள்ள பல நகரங்கள் இன்னும் கதிரியக்க கண்காணிப்பு கருவிகள், கதிரியக்க-எதிர்ப்பு மருத்துவ பொருட்கள் மற்றும் பாதுகாப்பான வெளியேற்ற பாதைகள் இல்லாமல் இருக்கின்றன. “இப்பொழுது மற்றொரு நெருக்கடி தாக்கினால், ஓடுவதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கில்லை” என்று உள்ளூர் அவசரக்கால மேலாண்மை அதிகாரி கவோரு சுசியா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார். நாடெங்கிலும் சுமார் ஐந்து மில்லியன் மக்களின் இருப்பிடமாக விளங்கும் 135 சிறு நகரங்களில் இந்நிலைமையே உள்ளன. உள்ளூர் அதிகாரிகள் இன்னமும் கடந்த ஆண்டின் இறுதியில் வாக்குறுதி அளிக்கப்பட்ட ஒரு தேசிய பேரழிவுத் திட்டத்திற்காக காத்து நிற்கின்றனர்.

ஒரு முன்மொழியப்பட்ட அணுசக்தி பாதுகாப்பு ஆணையம் ஸ்தாபித்தல் ஒருபுறம் இருக்க, திருத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகள் ஆவணமும் கூட இதுவரையில் வெளியிடப்படவில்லை. திட்டமிடப்பட்டுள்ள அமைப்பு, அவபெயர்பெற்ற அணுசக்தி மற்றும் தொழில்துறை பாதுகாப்பு முகமைக்கு (NISA) பிரதியீடாக நிறுவப்பட உள்ளது. அது டெப்கோவுடன் கொண்டிருந்த நயமான உறவுகள் புக்கூஷிமா பேரழிவின் போது அம்பலப்பட்டது. டெப்கோ பல தசாப்தங்களாக பாதுகாப்பு விதிமீறல்கள், மூடி மறைத்தல்கள் மற்றும் விஷயங்களைக் கசியவிடுபவர்களைத் தண்டித்தல் போன்றவற்றைக் கையாண்டிருந்தாலும் கூட, NISA மற்றும் அரசாங்கம் இரண்டுமே டெப்கோவையே புகுஷிமா நெருக்கடிக்குப் பொறுப்பாக விட்டன.

நெருக்கடியை டெப்கோ கையாண்ட விதம், சாதாரண உழைக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டின் நலன்களுக்கு திட்டமிட்டு அடிபணிய செய்தமைக்கு அடையாளமாக இருந்தது. அந்த பெரும் மின் நிறுவனம் ஒரு பாரிய சுனாமியின் அபாயம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை புறக்கணித்ததோடு, அதன் பங்குபத்திரங்கள் மற்றும் இலாபங்களின் மீது ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் பந்தயத்தில் சேதத்தின் அளவைத் தொடர்ச்சியாக குறைமதிப்பீடு செய்தது.

தண்டிக்கப்படுவதற்கு மாறாக, டெப்கோவிற்கு அதன் நஷ்டஈட்டு கட்டணங்கள் மற்றும் அணுஉலைகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு அளிக்க வேண்டிய நிதியியல் செலவுகளில் இருந்து பாதுகாக்க ஒரு ட்ரில்லியன் யென்னுக்கும் அதிகமாக அரசாங்கத்தால் பிணையெடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிகமாக எதுவும் மாறவில்லை என்பதை இந்த வாரம் டெப்கோ குறிப்பிட்டு காட்டியது. புகுஷிமா நெருக்கடியின் போது அது தகவல்களை மறைத்தது என்பதை மறுத்தும், எந்த நிறுவனமும் 9.0 ரிக்டர் அளவிலான பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்த பேரலைகளை அனுமானிக்கவோ அல்லது தயாரிப்பு செய்துகொள்ளவோ முடியாது என்று முறையிட்டும், தனக்குத்தானே கௌரவமாக மன்னிப்புக் கொடுத்துக் கொண்ட அறிக்கை ஒன்றையும் அது வெளியிட்டது

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எண்ணெய் இறக்குமதிகளைத் தீவிரமாக நம்பியிருந்த நிலையை ஈடுகட்ட, “எரிசக்தி பாதுகாப்பிற்கான" தேடலில் ஜப்பானின் ஆளும் மேற்தட்டு அணுசக்திக்கு திரும்பி இருந்ததால், அது நீண்ட காலமாக டெப்கோவிற்கும் அந்நாட்டின் ஏனைய அணுச்சக்தி தோற்றுவிக்கும் அமைப்புக்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது. பூமியில் மிகவும் பூகம்ப ஆபத்து நிரைந்த பிரதேசங்களை ஒட்டி டஜன் கணக்கான அணு ஆலைகளை அமைப்பதே அதன் அர்த்தமாகும். அனைத்திற்கும் மேலாக, ஜப்பானிய அமைப்புமுறையின் இராணுவ பிரிவுகள், அணுஆயுத தளவாடங்களை அபிவிருத்தி செய்வதற்குரிய முக்கிய திறமையாக அணுசக்தி தொழில்நுட்பத்தைக் காண்கின்றன.

இத்தகைய அடித்தளத்தில் உள்ள உந்து சக்திகள், அதாவது போட்டி தேசிய அரசுகளுக்குள் உலகின் பிரிவுகளிலிருந்து பாய்ந்துவரும் பெருநிறுவன இலாபங்கள், புவி மூலோபாயக் கணக்கீடுகள், ஜப்பானுடன் மட்டும் நின்றுவிடவில்லை. புக்கூஷிமா பேரழிவு அம்பலப்படுத்தியுள்ள அபாயங்கள் இருந்தபோதினும்கூட, அணுமின்சக்தி மற்றும் ஏனைய எரிசக்தி வினியோகங்கள் மீது சர்வதேச பதற்றங்கள் நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கு இடையில், அணுச்சக்தி தொழில்துறை விரைவிலேயே உலகெங்கிலும் விரிவாக்கத்தைத் தொடங்கியுள்ளன. உலக அணுச்சக்தி ஆணையத்தின் கருத்துப்படி இன்று 61 அணுஉலைகள் கட்டமானத்தில் உள்ளன என்பதோடு அமெரக்கா, பிரித்தானியா, துருக்கி, சௌதி அரேபியா, தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் சீனா, இந்தியா, ரஷியா ஆகியவையோடு சேர்ந்து மேலும் பல திட்டமிடப்பட்டுள்ளன.

அணுச்சக்தி தொழில்நுட்பமே பிரச்சினை என்பதல்ல, ஆனால் அது எம்மாதிரியான சமூக மற்றும் பொருளாதார அமைப்புமுறையின்கீழ் வளர்த்தெடுக்கப்படுகின்றன என்பதே பிரச்சினையாகும். எதிர்காலத்திற்கு "சுற்றுச்சூழல் பாதிப்பற்ற எரிசக்தியை" அளிப்பதில் மட்டுமே தங்களின் நலன்கள் தங்கியுள்ளது என்ற அணுச்சக்தி பெருநிறுவனங்களின் சுய-ஆதாய வாதங்களுக்கு நம்பகத்தன்மை அளிக்க முடியாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்ற விதத்திலும், ஏனைய பல புதுப்பிக்கக்கூடிய மாற்று எரிசக்திகளைவிட குறைந்த செலவிலும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஒரு அருமையான மற்றும் நம்பகமான ஆதாரமாக விளங்குவதற்கான சாத்தியக்கூறை அணுமின்சக்தி கொண்டிருக்கலாம். ஆனால் அது கடினமாக, பேரழிவு தரக்கூடிய பாதுகாப்புச் சிக்கல்களின் திறனையும், இராணுவப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. எனவே அதை பெருநிறுவன மற்றும் தேசிய மேற்தட்டுகளின் பொறுப்பில் மனிதயினம் ஒப்படைக்க முடியாது.

பகுத்தறிவார்ந்த திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தின் கீழ் மட்டுமே, அணுசக்தியின் பாதுகாப்பான வளர்ச்சி இருக்க முடியும்; அவ்விதத்தில் தான் அணுசக்தி பயன்பாட்டை செயற்படுத்தலாம். அப்போது அணுச்சக்தி தொழில்நுட்பமானது உலக மக்களின் மற்றும் உலகச் சுற்றுச்சூழலின் நீண்ட கால நலன்களின் அடித்தளத்தில் பயன்படுத்தப்படும். விஞ்ஞானிகள் மற்றும் எரிசக்தித்துறை வல்லுனர்களால் மிக கவனமாக மதிப்பீடு செய்யப்பட்டவைகளின் அடிப்படையில், அதன் பயன்பாடு மீதான பரந்த மற்றும் ஜனநாயகரீதியிலான விவாதத்தை சாதாரண மக்களிடையேயும் கொண்டு சென்று நிறுத்தலாம்.

புக்கூஷிமா பேரழிவால் வெளிப்பட்ட ஆழ்ந்த அபாயங்களைக் கருத்தில் கொள்ளாமல், உலகம் முழுவதும் அணுஉலைகள் மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் மற்றும் கட்டமைக்கப்படுவதுடன் சேர்ந்த இரக்கமற்ற மற்றும் பொறுப்பற்ற பரபரப்பு முதலாளித்துவத்தின் மீதான ஓர் அதிர்ச்சியூட்டும் குற்றபத்திரிக்கையாகும். சமூக உடைமையாக்கம் மற்றும் தொழிலாளர்களின் ஜனநாயகரீதியிலான கட்டுப்பாடு ஆகியவற்றின் கீழ், பரந்த சாத்தியக்கூறைக் கொண்டுள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பயன்பாட்டைப் பயன்படுத்தி, உலக ஆதாரவங்களின் ஒத்திசைந்த அபிவிருத்தி பாதையைத் திறந்துவிட சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தால் முதலாளித்துவம் தூக்கியெறியப்பட வேண்டும்.