World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Chinese leaders brace for European crisis

சீனத் தலைவர்கள் ஐரோப்பிய நெருக்கடிக்கு ஆயத்தம் செய்கின்றனர்

By John Chan
21 June 2012
Back to screen version

சீன மக்கள் வங்கி ஜூன் 7 அன்று தனது முக்கிய வட்டி விகிதத்தை திடீரெனக் குறைத்திருக்கும் ஆச்சரியமூட்டத்தக்க நடவடிக்கையானது - 2008 உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின் முதன்முறையாக இவ்வாறு செய்யப்படுகிறது - ஐரோப்பாவின் அதிகரித்துச் செல்லும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் பாதிப்பைக் கண்டு சீன ஆட்சி அஞ்சுவதன் இன்னுமொரு அறிகுறியாகும்.

ஒராண்டுக்கான கடன் வட்டிக்கான நிர்ணய விகிதம் எதிர்பாராத அளவாக 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.31 சதவீதத்திற்குக் குறைக்கப்பட்டது. தொழிற்துறை வளர்ச்சி, சில்லரை விற்பனை மற்றும் அசையாச் சொத்துகளின் (சாதனங்கள் மற்றும் கட்டிடங்கள் போன்றவை) மீதான முதலீடு ஆகியவற்றிலான வளர்ச்சியில் மே மாதத்தில் மாற்றம் அதிகமில்லை என்பதை வெளிப்படுத்துகின்ற புள்ளிவிவரத்தை தேசிய புள்ளிவிவர அமைப்பு வெளியிட்டதன் பின் இது நிகழ்ந்தது.  

சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கும் நீண்ட கால ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் கூடுதல்தீர்மானகரமானநடவடிக்கையை எடுப்பதற்கு ஐரோப்பியத் தலைவர்களை மூத்த சீன அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பாவில் ஆவேசமிகுந்த வர்க்க மோதல்களும் அரசுகளிடையேயான மோதல்களும் எழுந்து கொண்டிருப்பதாய் சீனா அஞ்சுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தினசரியில் வெளியானதொரு முக்கியமானதொரு கருத்து எச்சரித்தது: ”அடிப்படையாய் ஐரோப்பா, அமைப்புமுறைரீதியான ஒருங்கிணைப்பு மற்றும் தாக்குப்பிடிப்பின் ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நெருக்கடியை வெல்வதென்பது, கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகள் வலி மிகுந்த சீர்திருத்தங்கள் விடயத்தில் முடிவெடுக்க முடிகிறதா, அந்நிலையைச் சமாளிப்பதற்கு அந்நாடுகள் தமது ஆன்ம வலிமையைத் தட்டியெழுப்ப முடிகிறதா என்பதைச் சார்ந்தே  அமைந்துள்ளது.”

சென்ற வார இறுதியில் மெக்சிகோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில், ஐரோப்பாவுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் 456 பில்லியன் டாலர் பிணைத் தொகுப்பிற்கு 43 பில்லியன் டாலர் தொகையை பங்களிக்க சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ உறுதியளித்தார். ஜப்பான் மற்றும் ஜேர்மனிக்கு அடுத்த அதிகப்பட்ச பங்களிப்பாய் இது அமைந்துள்ளது.

சீனத் தலைமை ஒரு இருதலைக்கொள்ளி நிலைக்கு முகம் கொடுக்கிறது. உலக நிதிச் சந்தைகளை ஸ்திரம் செய்வதற்குவலிமிகுந்தசிக்கன நடவடிக்கைகள் அவசியமாய் இருக்கின்றன, ஆனால் (மொத்தமாய்ப் பார்க்கையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மலிவு விலைப் பொருட்களுக்கான மிகப்பெரும் நுகர்வோராய் இருக்கக் கூடிய) ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைத் தரங்களை இவை சின்னாபின்னமாக்கி விடவும் செய்யும்

ஐரோப்பாவில் நடைபெற்று வருகின்ற குழப்பத்தின் காரணத்தினாலும் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து செல்லும் காரணத்தாலும், 2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீன வளர்ச்சியென்பது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 8.1 சதவீதத்திற்குச் சரிவடைந்திருந்தது. இரண்டாம் காலாண்டில் இந்த எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் கீழாய் சரியக் கூடும் என சர்வதேசப் பொருளாதாரப் பரிவர்த்தனைக்கான சீன மையம் என்கிற அரசாங்கத்தின் முன்னணி சிந்தனைக் குழாம் எச்சரிக்கை செய்திருந்தது.  

ஆண்டின் இதே காலத்துடனான ஒப்பீட்டு கணக்கீட்டில் மின் நுகர்வு ஏப்ரல் மாதத்தில் வெறும் 1.5 சதவீதம் மட்டுமே அதிகரிப்பு கண்டிருந்தது என்பதும், மே மாதத்தில் வெறும் 3.2 சதவீதம் மட்டுமே அதிகரிப்பு கண்டிருந்தது என்பதும் பொருளாதாரம் பலவீனமடைந்து செல்வதன் ஒரு மிகத் தெளிவான அடையாளங்களாய் அமைந்துள்ளன. வழக்கமாய் இந்த அதிகரிப்பு இரட்டை இலக்கத்தில் இருந்து வருவதாகும். 2008 நிதிப் பொறிவைத் தொடர்ந்து 2009 இன் மோசமான இலையுதிர் காலத்தில் பல ஏற்றுமதித் தொழிற்சாலைகள் மூடப்பட்டு 20 மில்லியன் தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்தித்தனர். அச்சமயத்திற்குப் பின் இந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களின் இந்தக் குறைவான அதிகரிப்பு தான் மிக மோசமானவை ஆகும்.

HSBC இன் மே மாதத்திற்கான கொள்முதல் மேலாளர் குறியீடு (PMI) தொடர்ந்து ஏழாவது மாதமாய் உற்பத்திக் குறுக்கத்தைப் பதிவு செய்தது. வாங்கி (Vanke) என்கிற ஒரு மிகப்பெரும் ரியல் எஸ்டேட் கட்டுமானத் துறை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான யு லியாங் ஜூன் ஆரம்பத்தில் பேசுகையில், சீனாவின் முக்கியமான நகரங்களில் சுமார் 114 மில்லியன் சதுர மீட்டர் நிலச் சொத்துகள் விற்பனையாகாதிருப்பதாகவும், இவை விற்பனையாவதற்கே அடுத்த 11 மாதங்கள் பிடிக்கலாம் என்றும் அறிவித்தார். இந்த மந்த நிலையானது கட்டுமானத் துறையிலும், மற்றும் டிரக் தயாரிப்பு முதல் உருக்கு ஆலைகள் வரை தொடர்புபட்ட மற்ற துறைகளிலும் மந்தமான செயல்பாடுகளுக்கு பங்களிப்பு செய்துள்ளது.   

மே மாதத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சி என்பது எதிர்பார்த்ததை விடவும் அதிகம் (முறையே வருடாந்திர 15.3 மற்றும் 12.7 சதவீத அதிகரிப்பு) என்பது மட்டுமே சமீபத்திலான ஒரேநல்ல செய்தி”. எப்படியிருந்தபோதிலும், சீனாவின் வர்த்தக எதிர்காலம் குறித்து சீனப் பொருளாதார நிபுணர்களிடையே பெரும் நம்பிக்கையுறுதி இருக்கவில்லை.

BNP Paribas ஐச் சேர்ந்த கென் பெங் AFP இடம் கூறினார்: “வெளிநாடுகளிலிருந்தான தேவை அதிகரிக்காமல், அதே சமயத்தில் சீன நாணய மதிப்பானது [RMB] அதன் போட்டி நாணய மதிப்புகளுக்கு, குறிப்பாக யூரோவுக்கு, எதிராய் கூர்மையாய் அதிகரிப்பு கண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே ஏற்றுமதி அதிகரிப்பை இச்சமயத்தில் ஒரு நீடிக்கக் கூடிய அபிவிருத்தியாகக் காண்பதற்கு முகாந்திரமில்லை.” 

அதிகமாய் மந்தமடைந்து செல்லும் பொருளாதாரமானது சமூகக் கிளர்ச்சிகளுக்கு வித்திடும் என்கிற அச்சத்தில் பொருளாதார ஊக்குவிப்புகளை நோக்கி சீனா நகரத் தொடங்கியிருக்கிறது. வங்கிகள் கடனளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், அவை கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய மூலதன அளவினை சீன நிதித் துறை அதிகாரிகள் டிசம்பர் முதலாய் மூன்று முறை குறைத்திருக்கின்றனர். ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரையான காலத்தில், தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணையம் 8,000க்கும் அதிகமான புதிய தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. மே 21 அன்று மட்டும் அது 100க்கும் அதிகமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததாய் கூறப்படுகிறது. குவாங்டாங் மற்றும் குவாங்க்சி மாகாணங்களிலான இரண்டு மாபெரும் உருக்காலைத் திட்டங்களும் இதில் அடங்கும்

ஒரு விரிவாக்கக் கொள்கை என்பது 2008 இன் பிற்பகுதியிலான முந்தைய ஊக்குவிப்புத் தொகுப்பினால் விட்டுச் செல்லப்பட்டிருக்கும் தீர்க்கப்படாத நெருக்கடியை அநேகமாய் மேலும் தீவிரப்படுத்தும். அச்சமயத்தில் பீஜிங் 4 டிரில்லியன் யுவான் திட்டத்தை கட்டவிழ்த்து விட, அது இறுதியாய் அரசின் வங்கிகளில் இருந்து மலிவுக் கடன்களை வெள்ளம் போல் மடை திறந்து விட இட்டுச் சென்றது. அரசின் தலைமையிலான இந்த முதலீடு உள்நாட்டில் புதிய நுகர்வுக்கு வழிசெய்வதற்குப் பதிலாக, உள்கட்டமைப்பு உள்ளிட்ட சில துறைகளில் தேவைக்கு மிகையான உற்பத்தி நிலைமையை இன்னும் மோசமாக்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பகுதியாய் நுகர்வின் அளவினை உண்மையில் கீழிறக்கியது.

உதாரணமாக, இரும்பாலைத் துறை மிகை உற்பத்தியின் ஒரு கடுமையான நெருக்கடியில் இருக்கிறது. ஆண்டிற்கான மொத்த உற்பத்தித் திறன் 900 மில்லியன் டன்களைக் கடந்து சென்று விட்டது, ஆனால் சென்ற ஆண்டின் உள்நாட்டு நுகர்வு மற்றும் ஏற்றுமதி இரண்டும் சேர்ந்து 700 மில்லியன் டன்களுக்கும் குறைவாகவே இருந்தன. இந்த உபரியான உற்பத்தித் திறன் மட்டுமே அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளின் மொத்த வருடாந்திர இரும்பு உற்பத்தியைக் கூட்டிக் கிடைக்கும் அளவையும் விட அதிகமானதாய் இருக்கிறது.

உற்பத்தித் துறையில் முதலீடு இலாபகரமாய் இல்லாமல் போனமையானது பெரும் நிதிகள் ரியல் எஸ்டேட் ஊக வணிகத்திற்குள் பாயத் தூண்டியிருக்கிறது. ஹி கிங்லியன் (He Qinglian)என்கிற எதிர்ப்புப் பொருளாதார நிபுணர் பிபிசியின் சீன மொழி இணையத் தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் கூறுகையில், 2009 முதலான ஊக்குவிப்புத் தொகுப்பின் அரசு நிதியில் 20 முதல் 30 சதவீதத்தை சீனாவின் பிரத்யேகமான உத்தியோகப்பூர்வ ஊழல் விழுங்கி விட்டதாய் தெரிவித்திருந்தார்அப்பெண்மணி எழுதினார்: “பணத்தின் ஒரு பகுதி சுருட்டப்பட்டு வங்கிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்குப் பறந்து விட்டது, ஆனால் மிகப் பெரும் பகுதி  வேட்கை மிக்க நிலச் சொத்து சந்தைக்குள் போய், சீனாவின் பிரத்யேகத் தன்மைகளுடனான ரியல் எஸ்டேட் சொத்துகளை உருவாக்கியது.” அரசு அதிகாரிகளில் 80 சதவீதம் பேர் வரையிலானோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் நேரடியாகப் பங்குபெற்றிருந்தனர். “இது அவர்களை மிகப்பெரும் சிக்கலான குறுகிய நலன்களாய் ஆக்கியிருந்தது.”

2008 ஆம் ஆண்டிற்கும் 2011 ஆம் ஆண்டின் முதல் பாதிக்கும் இடையில் நடந்த மொத்த ரியல் எஸ்டேட் விற்பனையளவான 15 டிரில்லியன் யுவான் தொகையளவில், 3 டிரில்லியன் யுவானுக்குக்கும் குறைந்த அளவு மட்டுமே தனிநபர் அடமானங்களின் பேரில் வங்கிகளின் நிதியாதாரத்தைப் பெற்றவையாக இருந்தன என்று எகானாமிஸ்ட் மதிப்பிட்டது. பெரும் தொகைகள் வீடு கட்டும் நோக்கங்களைக் காட்டிலும் ஊக வணிக நோக்கங்களுக்குப் பாய்ச்சப்பட்டன என்பதையே இது சுட்டிக் காட்டியது

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், விலையேற்றத்தால் மக்களின் கோபம் பெருகிச் சென்றதற்கு இடையில் வீட்டு விலைகளை ஸ்திரப்படுத்துவதற்கு சீனா வாக்குறுதியளித்திருக்கிறது. பொருளாதாரத்தை துரிதமான வளர்ச்சியில் தொடர்ந்து பராமரிப்பதற்கான ஒரு வழியாக மீண்டும் சொத்துகளின் மீதான ஊக வணிகத்தை ஊக்குவிக்கத்  திரும்பினால் அது அரசியல்ரீதியாக திருப்பித் தாக்கக் கூடும் என்பதோடு இறுதியாக சீனாவின் சொத்துக் குமிழி உடைவதற்கும் இட்டுச் செல்லலாம். அத்தகையதொரு விளைவு சீனப் பொருளாதாரத்தை மட்டுமல்லாது, உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தையே உலுக்குவதாய் அமையும்.