World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Bailout of Spanish banks will “tighten the austerity thumbscrew”

ஸ்பெயின் வங்கிகளின் பிணையெடுப்பு சிக்கன நடவடிக்கைகளை இறுக்கும்

By Stefan Steinberg 
12 June 2012

Back to screen version

திங்களன்று ஜேர்மனியின் நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள கூறியுள்ள கருத்துக்கள் ஸ்பெயினின் பிரதம மந்திரி மரியனோ ரஜோய் கொடுத்துள்ள உத்தரவாதங்களுடன் நேரடியாக முரண்படுகின்றன. ஸ்பெயினின் வங்கிகளுக்குக் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட மீட்புநிதி உடன்பாட்டின் மீது எவ்வித நிபந்தனைகளும் இணைக்கப்படவில்லை என்று மரியனோ ரஜோய் கூறியிருந்தார்.

ஸ்பெயினின் வங்கிகளைப் பிணையெடுத்தல் என்பது யூரோப் பகுதியின் நிதி மந்திரிகளால் வார இறுதியில் அவசர தொலைபேசி மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஐரோப்பிய வங்கி முறை ஒரு சாத்தியமான உடைவிற்கு உட்படுவதை தடுக்க இது வழங்கப்படுகிறது. ஸ்பானிய அரசாங்கத்தின்மீது, அமெரிக்க, ஐரோப்பிய அரசாங்கங்கள், சர்வதேச நாணய நிதியம் (IMF), சர்வதேச வங்கிகள் ஆகியவை பெரும் அழுத்தங்கள் கொடுத்தபின் இந்த உடன்பாடு வந்துள்ளது.

உடன்பாட்டை அறிவிக்கையில், ரஜோய் மீட்பு ஒரு முழு அளவு பிணையெடுப்பைப் பிரதிபலிக்கிறது என்ற உணர்வைத் தவிர்ப்பதில் பெரும் அக்கறை கொண்டிருந்தார். இந்த உடன்பாடு ஸ்பெயினுக்கு ஒரு வெற்றி என்றும், ஐரோப்பியத் திட்டத்திற்கு ஒரு புதிய நம்பகத்தன்மை கொடுத்துள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

ஆரம்பத்தில் செய்தி ஊடகத் தகவல்கள் சிறிய அளவு பிணையெடுப்பு பற்றிப் பேசி, ஸ்பெயினின் வங்கிகளுக்காகக் கொடுக்கப்படும் பணத்தில் கிரேக்கம், அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல்லிற்கு கொடுக்கப்பட்ட 400 பில்லியன் யூரோக்களில் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் நிர்ணயித்திருந்த கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வரவு-செலவுத் திட்ட கண்காணிப்பு வகைகள் இல்லை என்று வலியுறுத்தப்பட்டது.

யூரோப் பகுதி நிதி மந்திரிகள் ஸ்பெயின் ஏற்கனவே அதன் வீட்டுவேலையை (செய்ய வேண்டிய சிக்கன நடவடிக்கைகளை) கணிசமான நிதிய, தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள் மூலம் செய்து விட்டது என்று அறிவித்து, திங்களன்று வணிகம் ஆரம்பித்தபோது ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இதற்கு சாதகமான விடையிறுப்பை கொடுத்தன. ஆனால் இத்தகைய பரபரப்பான ஆர்வம் குறுகிய நேரத்திற்குத்தான் நீடித்தது.

பங்குச் சந்தைகள் அன்றைய போக்கில் அவற்றின் ஆதாயங்கள் பெரும்பாலானவற்றை இழுந்துவிட்டன; ஐரோப்பிய செய்தி ஊடகத்தில் பொதுக் கருத்து இந்நடவடிக்கை ஒரு பெரும் பொருளாதாரப் பள்ளத்தின் விளிம்பில் நிற்கும் ஐரோப்பியத் தலைவர்களுக்குக் குறைந்த கால அவகாசத்தை மட்டுமே பெற்றுத் தந்துள்ளது என்று இருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் கடனில் மறைமுகமாக விதிகள் ஏதும் இல்லை என்னும் ரஜோய் அரசாங்கத்தின் கூற்றுக்கள் ஸ்பெயினின் பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தை உடையவை. ஸ்பெயின் நாட்டு வேலையின்மையை மிக அதிக அளவிற்கு உயர்த்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, அம்மக்கள் தெருக்களுக்கு வந்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜேர்மனியின் நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிளவால் ரஜோயின் கூற்றுக்கள் விரைவில் நிராகரிக்கப்பட்டன. ஜேர்மனிய வானொலியில் அவர் திங்களன்று ஸ்பெயினுக்கான உடன்பாடு முக்கூட்டினால் (ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய ஆணையம், சர்வதேச நாணய நிதியம்) கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் மீது சுமத்தப்பட்ட அதே கடுமையான கண்காணிப்புக்களுக்குத்தான் உட்படும் என்றார்.

ரஜாயின் உற்சாகத்திற்கு மற்றொரு தடையாக ஸ்பெயினின் நாளேடு El Mundo அதன் திங்கள் பதிப்பில் கடன் மற்றும் வட்டி நிதிகள் ஆண்டு ஒன்றிற்கு 1.8 பில்லியன் யூரோக்கள் என்பது அரசாங்கத்தை சிக்கன நடவடிக்கைகளை இன்னும் அதிகமாக இறுக்க வைக்கும்.... ஒன்று உறுதி, 100 பில்லியன் யூரோக்களை எவரும் பதிலுக்கு ஈடு ஏதும் இல்லாமல் கடனாகக் கொடுக்க மாட்டார்கள். என்று எழுதியது.

எந்த நிபந்தனைகளின் பேரில் இந்த ஸ்பெயினின் பிணையெடுப்பு உடன்பாடு வந்துள்ளது என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் ஏற்கவே அறியப்பட்டுள்ளபடி, கிரேக்க சிரிசாத் தலைவர் சிப்பிரஸ் போன்றவர்களின் கருத்துக்களான இது ஐரோப்பிய ஒன்றியத்தை அதன் சிக்கனக் கொள்கைகளை நீர்க்க வைக்க அழுத்தம் கொடுக்க முடியும் என்பதை நிரூபிக்கிறது என்னும் கூற்றை மறுக்கிறது.

சர்வதேச மத்திய வங்கிகளால் கடந்த வாரம் செய்யப்பட்ட பல தொடர்ச்சியான கூட்டங்கள், அறிவிப்புக்கள் ஆகியவற்றை அடுத்து, ஒவ்வொன்றும் ஐரோப்பிய வங்கிகள் மீதான அழுத்தங்களைக் குறைக்க மறுத்துவிட்டன என்பதற்குப் பின் உடன்பாடு வந்துள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக ஐரோப்பிய மத்திய வங்கி, பாங்க் ஆப் இங்கிலாந்து, அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு ஆகியவை தங்கள் கொள்கைகளில் மாற்றத்தை அறிவிக்க மறுத்துவிட்டன.

கடந்த வெள்ளியன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஐரோப்பியத் தலைவர்கள் தங்கள் நிதிய முறையை உறுதிப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பலவீனமான வங்கிகளுக்குள் மூலதனத்தை உட்செலுத்த விரைவில் தெளிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரோன் உடன் தொலைபேசி விவாதம் நடத்தப்பட்டபின் இந்த அறிவிப்பு வந்தது. அப்பேச்சுக்களில் ஒபாமா கமரோனை ஜேர்மனிய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை அதிகரித்து ஐரோப்பிய வங்கிகளின் பிணையெடுப்பிற்கு அதிக நிதியை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். கமெரோன் வியாழன் அன்று பேர்லினுக்குப் பயணித்து ஒபாமாவின் தகவலைத் தெரியப்படுத்தினார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி, ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலால் மூக்குடைபட்டார். கமெரோனிடம் அவர் நெருக்கடியை தீர்க்க மந்திரத் தோட்டா ஏதும் இல்லை என்றும் ஜேர்மனிய நலன்களைக் பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவைக்கூடத் தான் பரிசீலிக்க இருப்பதாகக் கூறினார்.

வெள்ளியன்று ஒபாமா கூறிய கருத்துக்கள் உடனடி நடவடிக்கை எடுக்க மேர்க்கெல் மறுத்துள்ளதற்கு அவருடைய விடை ஆகும். ஜேர்மனிய அரசாங்கம் பலமுறை ஸ்பெயின் அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நிதியை அதன் வங்கிகளுக்காகப் பெறுமாறு கேட்டது, ஆனால் முந்தைய பிணையெடுப்புக்களில் தொடர்பிருந்த விதிகளைப் போன்றவற்றை அது ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில். அதாவது, கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தேசிய வரவு-செலவுத் திட்டத்தை இயற்றும் அதிகாரங்களை பிரஸ்ஸல்ஸிற்கு மாற்றுவது ஆகும்.

வங்கிகளுக்கு இன்னும் அதிக பணம் கொடுக்க வேண்டும் என்பதற்கான அழுத்தம் கூடுதலான ஆதரவை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தும், தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்களிடம் இருந்தும், சர்வதேச வங்கிகளிடம் இருந்தும் பெற்றது.

வெள்ளியன்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்  கிறிஸ்டின் லகார்ட் ஐரோப்பிய நெருக்கடியைத் தீர்க்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் சர்வதேச நாணய நிதியம் பிணையெடுப்பு பொதிக்கு நேரடியாக நிதி ஏதும் கொடுக்காது என்பதைத் தெளிவுபடுத்தி விட்டார். சர்வதேச நாணய நிதியம்  ஓர் அறிக்கையை வெளியிட்ட அதேநாள் ஸ்பெயின் வங்கிகளின் கடன்களின் தன்மையை விவரித்த லகார்ட் அக்கருத்தைக் கூறியிருந்தார். இந்த அறிக்கை யூரோ மந்திரிகள் திங்களன்று நிதியச் சந்தைகள் திறக்கு முன் உடன்பாட்டைக் காண வேண்டும், அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அக்கூட்த்திற்கு மூன்று நாட்கள் முன்பே வெளியிடப்பட்டது.

வார இறுதி உடன்பாட்டிற்கு வழிவகுத்த அரசியல் காரணி ஒன்று அடுத்த ஞாயிறன்று பிரான்ஸிலும் கிரேக்கத்திலும் தேர்தல்கள் நடக்க உள்ளன என்பதாகும். ஐரோப்பிய முதலாளித்துவம் பெரும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வாக்கு இரு தேர்தல்களிலும் ஏற்பட்டால்குறிப்பாகக் கிரேக்கத்தில்அது தற்பொழுது மந்தமாக நடக்கும் வங்கிகளில் இருந்து பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளுதல் என்பதை சூறாவளி போல் செயல்படுத்தி எடுக்க வகை செய்துவிடும் என்பதுதான்.

பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைத்துள்ள சமீபத்திய புள்ளி விவரங்கள் கண்டம் முழுவதும் மந்நிலைப் போக்கு தீவிரமாகியிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

திங்களன்று Insee எனப்படும் புள்ளிவிவர அலுவலகம், பிரான்ஸில் உற்பத்தித் துறையில் உற்பத்தி ஏப்ரல் மாதம் மார்ச் மாதத்தைவிட 0.7 குறைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. பிரெஞ்சுப் பொருளாதாரத்தில் குறிப்பாகப் பாதிக்கப்பட்ட துறைகள் கார்த்தயாரிப்பு மற்றும் உலோகத் தயாரிப்புத் துறைகள் ஆகும்.

திங்களன்று ரோமைத் தளமாகக் கொண்ட Istat  என்னும் புள்ளிவிவரக்கூடம் இத்தாலியின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 0.8 சதவிகிதம் சுருங்கியது என்று தகவல் கொடுத்துள்ளது.

வெள்ளியன்று வெளியிடப்பட்ட தகவல்கள் கிரேக்கப் பொருளாதாரம் 2012ன் முதல் மூன்று மாதங்களில் இன்னும் சுருக்கம் அடைந்துள்ளது என்றும், இந்த ஆண்டு 5%க்கும் மேல் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கிறது. ஏற்கனவே கிரேக்கம் அதன் ஐந்தாம் ஆண்டு மந்த நிலையில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் ஆகியவை சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகள் இதற்குக் காரணம் ஆகும். இதற்கு ஈடாக கிரேக்கம் 130 பில்லியன் யூரோ மீட்பு நிதியைப் பெற்றது.

கிரேக்கத்தில் வேலையின்மை விகிதம் புதிதாக உயர்ந்த அளவான 21.9% என்பதை மார்ச் மாதம் எட்டியது. இது நாட்டை ஸ்பெயினுக்கு அருகில் நிறுத்தியுள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 24.4 சதவிகிதத்தை அடைந்துள்ளது.

கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள ஒரே ஐரோப்பிய நாடு ஜேர்மனி ஆகும். ஆனால் வெள்ளியன்று கூட்டாட்சிப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள விவரங்கள் ஜேர்மனியின் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க அளவில்  சரிந்து கொண்டிருக்கின்றன என்றும், இதற்குக் காரணம் ஐரோப்பியச் சந்தைகள் நலிந்துகொண்டிருப்பதுதான் என்றும் தெரியவருகிறது. யூரோப்பகுதி நாடுகளுக்கு ஜேர்மனிய ஏற்றுமதிகள் ஏப்ரல் மாதம் 3.6% சரிந்தன. அதேபோல் சீனா, இந்தியாவில் இருந்தும் தேவைகள் குறைந்துள்ளன. ஜேர்மனியக் கார்த்தயாரிப்புத் தொழில்துறை 2011ல் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாத ஏற்றுமதிகளில் 13% சரிவைப் பதிவு செய்தது.