World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Germany’s six-point plan for sweatshop Europe

ஐரோப்பாவை குறைவூதிய பிராந்தியமாக மாற்றுவதற்கு ஜேர்மனியின் 6 அம்சத் திட்டம்

Peter Schwarz
30 May 2012

Back to screen version

திவால் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் ஊதியங்களையும் தொழிலாளர்களின் உரிமைகளையும் இல்லாதொழித்தல் இப்பொழுது வழமையான நடவடிக்கையாகிவிட்டது. இது பற்றி நன்கு அறியப்பட்ட நிகழ்வு அமெரிக்க பெரும் கார்த்தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் ஆகும். இது 30.000 தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்து, புதிதாக நியமிக்கப்படும் தொழிலாளர்களின் ஊதியங்களைப் பாதியாகக் குறைத்து, ஓய்வு பெறுவோரின் நலன்களை வெட்டியது. ஜேர்மனிய அரசாங்கத்தின் விருப்பப்படி, இந்த நடவடிக்கைதான் எல்லா நாடுகளிலும் செயல்படுத்தப்பட முடியும் என்பதாகும்.

செய்தி இதழான Der Spiegel இல் வந்துள்ள தகவல்படி, கிரேக்கம் மற்றும் அதிக கடன்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நீண்டகால விளைவுகளைத் தரும் கட்டுமானச் சீர்திருத்தங்களுக்காக பேர்லினில் சான்ஸ்லர் அலுவலகம் ஓர் ஆறு-அம்சத் திட்டத்தை இயற்றியுள்ளது. இத்திட்டத்தில் அரசாங்க நிறுவனங்களின் விற்பனை, ஊழியர்கள் பாதுகாப்பு உரிமைகளை அகற்றுதல், குறைவூதிய தொழிலாளர் பிரிவை உருவாக்குதல், வணிகங்கள் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுதல் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுதல் மற்றும் ஜேர்மனியின் Treuhand மாதிரியில் தனியார்மயமாக்கலை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

ஜேர்மனிய அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஸ்ரெபான் சய்பேர்ட் இத்திட்டத்தை இன்னும் உறுதிப்படுத்தவோ அல்லது இதை மறுக்கவோ இல்லை. Der Spiegel கருத்துப்படி, ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி உச்சிமாநாடு எனப்படுவதில் பேச்சுக்களுக்கு அடித்தளமாக இது அமையும். சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் விடுத்துள்ள வளர்ச்சிக் கொள்கைக்கான அழைப்பை வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஜூடோ போரிடுவோர் கொள்கைகளைச் செயல்படுத்துவார். அதாவது எதிராளியின் ஆற்றலைப் பயன்படுத்தி தன் தாக்குதலை மேம்படுத்துதல் என்பதே அது.

மேர்க்கெலின் விருப்பத்தின்படி நிகழ்வுகள் நடந்தால், வளர்ச்சி என்பது தொழிலாளர்களை சுரண்டுவது தீவிரப்படுத்துவதின் மூலம்தான் முற்றிலும் சாதிக்கப்படும். இது பொருளாதார மீட்பிற்கான திட்டத்தின் மூலமோ, அதிகரிக்கும் சமூகநலச் செலவுகள் மூலமோ அல்ல. இத்திட்டங்களுக்கு ஹாலண்டின் ஆதரவு இருக்கும் என மேர்க்கெல் நம்புகிறார். ஏனெனில் இந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு ஜூன் 17 பிரெஞ்சுத் தேர்தல்களுக்குப் பின் நடைபெறவிருப்பதால், அதன் பின்னர் புதிய பிரெஞ்சு ஜனாதிபதி வாக்காளர்கள் கருத்துப்படியோ தன்னுடைய பிரச்சார உறுதிமொழிகளின்படியோ கட்டுப்பட்டிருக்க மாட்டார் என அவர் நம்புகின்றார்.

இப்பொழுது கிழக்கு ஐரோப்பா, ஆசிய குறைவூதியத் சொர்க்கங்களான சீனா, வியட்நாம் போன்றவற்றில் நிலவும் சுரண்டுதல் தரங்களைச் சுமத்தத்தான் ஜேர்மனிய அரசாங்கம் முனைகின்றது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சீனாவை உலகின் மிகப் பெரிய குறைவூதிய பட்டடையாக வெளிப்படுத்துவதில் முக்கியப் பங்கைக் கொண்டவை. இப்பகுதிகள் நிறுவனங்கள் வரிகள் செலுத்துவதில் இருந்து விலக்குகள் வழங்குகின்றன, சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்க வேண்டியதில்லை, தொழிலாளர் உரிமைககளை மதிக்க வேண்டியதில்லை எனவும் கூறுகின்றன. இவை தொழிலாளர்களை வறிய தொழில்துறை அடிமைகள் என்ற நிலைக்கு தாழ்த்திவிடும்.

சான்ஸ்லர் அலுவலகத்தில் தனியார்மயமாக்கும் நிறுவனங்களுக்கு பரிந்துரைக்கப்படும் முன்மாதிரி Treuhand  எனப்படும் அமைப்பு ஆகும்.  இது 1989ல் ஸ்ராலினிச ஆட்சியின் சரிவைத் தொடர்ந்து கிழக்கு ஜேர்மனியின் தொழில்துறை பிராந்தியங்களை அழித்துவிட்டது. பெருவணிகம் மற்றும் வங்கிகள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு சிலரால் நடத்தப்பட்ட இவ்வமைப்பு எந்த ஜனநாயக அமைப்பிற்கும் பொறுப்புக் கூறத் தேவையில்லாதது, என்ற நிலையில் Treuhand மில்லியன் கணக்கானவர்களின் விதியை முடிவு செய்தது. இது 45,000 பிரிவுகளை கொண்ட 8,500 நிறுவனங்களை மிகக்குறைந்த விலைக்கு விற்று முடித்தது அல்லது அவற்றை அப்படியே மூடிவிட்டது. முதலில் இருந்த 4 மில்லியன் தொழில்துறை வேலைகளில் சிறு விகிதமே எஞ்சியிருந்தது.

சான்ஸ்லர் அலுவலகம் இயற்றியுள்ள ஆறு-அம்சத் திட்டம் தேசிய இறைமை அல்லது ஜனநாயகத்துடன் இயைந்து இருக்காது. Tagesspiegel என்னும் செய்தித்தாள் பல ஜேர்மனியப் பொருளாதார வல்லுனர்களை நேர்காணல் செய்தது. அவர்கள் கிரேக்கத்தின் எதிர்கால சாத்தியங்கள் குறித்துத் தங்கள் கருத்துக்களை கூறுவதில் மிருகத்தன வெளிப்படைத்தன்மையைத்தான் காட்டினர்.

Hamburg Institute of International Ecomomics அமைப்பின் இயக்குனரான தோமஸ் ஸ்ரௌப்கார், ஓர் ஐரோப்பிய ஏவலாட்சி” (protectorate) கிரேக்கத்தின் மீது நிறுவப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஜூன் 17 தேர்தல்களில் கிரேக்கத்தில் எத்தகைய முடிவுகள் வந்தாலும், நாடு ஒரு தோற்றுவிட்ட நாடு என்றாகிவிட்டதுடன், தானே மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் திறன் அற்றதாகப் போய்விட்டது என்றார்.

ஏவலாட்சி என்னும் சொற்றொடர் கொடூர நினைவுகளைத்தான் தூண்டுகிறது. தன்னுடைய முன்னாள் காலனித்துவங்களை ஏவலாட்சி என்று பிரித்தானிய ஏகாதிபத்தியம் குறிப்பிட்டது; அதனால் அது உள்ளூர் கையாட்களை எகிப்திலும் சில வளைகுடா ஷேக் ஆட்சிகளிலும் அரசாங்கத்தின் தலைவர்களாக நிறுவியது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பிக்கமுன் இச்சொற்றொடர் இழிவுக்குரியதாயிற்று. அதுவும் நாஜிக்கள் செக்கோஸ்லோவாக்கியாவை ஆக்கிரமித்தபோதும், பொகிமியா, மோராவியா ஏவலாட்சிகளை நிறுவியபோதும்.

இச்சொற்றொடர் மீண்டும் உத்தியோகபூர்வ சொற்தொகுப்பில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்னும் உண்மை, ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் ஆளும் வட்டங்கள் என்ன நினைக்கின்றன என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. சிறப்புப் பொருளாதாரப் மண்டலங்கள், ஏவலாட்சிகள் பற்றிய விவாதங்கள் மோசமான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் நடக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் (EU), சர்வதேச நாணய நிதியம் (IMF), மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) எனப்படும் முக்கூட்டு ஆணையிடும் சிக்கனத் திட்டத்தின் விளைவாக, கிரேக்கப் பொருளாதாரம் வலிமை மிகுந்தவர்களின் கைகளில் சிக்கியுள்ளது. நாடு இப்பொழுது தொடர்ச்சியான ஐந்தாமாண்டு மந்த நிலையில் உள்ளது. சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சரிந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் அவற்றின் வணிக அமைப்புகள், 61,000 நிறுவனங்கள் மூடப்பட்டுவிடும் என எதிர்பார்க்கின்றன. இது 240,000 வேலைகளைத் தகர்த்துவிடும். கிரேக்க வேலைகள் ஐந்தில் ஒன்றை கொடுக்கும் சுற்றுலாத் துறை கடந்த ஆண்டில் அதன் வருவாய் 45% சரிந்துவிட்டதைக் கண்டுள்ளது.

நாட்டின் வங்கிகள் சரிவை எதிர்நோக்கியுள்ளன. ஏனெனில் கடன் வாங்குபவர்கள் தங்கள் கடன்களைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. முதலீட்டாளர்ளும் சேமிப்பாளர்களும் தங்கள் பணத்தை வங்கிகளில் இருந்து திரும்பப் பெறுகின்றனர். வங்கிகள் மீது மெதுவான முறையில் பணத்தை எடுக்கும் நிகழ்வு நடப்பது குறித்து வல்லுனர்கள் கூறியுள்ளனர். இது ஸ்பெயினுக்கும், இத்தாலிக்கும்கூட பரவியுள்ளது. நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்தே, தனிப்பட்ட மக்களும் வணிகர்களும் கிரேக்க வங்கிக் கணக்குகளில் இருந்து 63 பில்லியன் யூரோக்களான மொத்த சேமிப்புக்களில் மூன்றில் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொண்டுவிட்டனர். கடந்த ஆண்டு நடுப்பகுதியில் இருந்து, 100 பில்லியன் யூரோக்கள் ஸ்பெயினின் வங்கிகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இத்தாலிய வங்கிகளில் இருந்து 160 பில்லியன் யூரோக்கள் திரும்பப் பெறப்பட்டு விட்டன.

இச்சூழலில், ஆளும் வர்க்கம் அது இனி ஜனநாயகம் என்னும் ஆடம்பரத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற முடிவிற்கு வருகிறது. ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள மற்றும் சர்வதேச நாணய நிதிய தலைவர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர் உடனடித் திவால் அறிவிக்க்கப்படும் என்று கிரேக்க மக்களை அச்சுறுத்தியுள்ளனர். அதாவது ஜூன் 17ம் திகதித் தேர்தல்களில் வங்கிகள் முக்கூட்டு மூலம் ஆணையிடும் சிக்கனக் கொள்கைகள் மிருதுவாக்கப்பட வேண்டும் எனக்கூறும் கட்சிகளுக்கு வாக்களித்தால்.

அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத் தேசியத் திவால்தன்மைக்கும், கிரேக்கம் யூரோவை விட்டு நீங்குவதற்குமானத் தயாரிப்புக்களை நடத்துகிறது. யூரோ செயற்குழு என்னும் அனைத்து 17 யூரோ நாடுகளின் நிதி மந்திரிகளின் குழு, அனைத்து அரசாங்கங்களையும் கிரேக்கம் யூரோவை விட்டு அகற்றப்பட்டால் தேவையான நெருக்கடியைச் சமாளிக்கும் திட்டங்களைத் தயாரிக்குமாறு கூறியுள்ளது. கிரேக்கத்திலேயே ஆளும் வர்க்கம் இரகசியமாக சிக்கன நடவடிக்கைகள் மீதான மக்கள் எதிர்ப்பை நசுக்குவதற்கு இராணுவத் தயாரிப்புக்களை திட்டமிட்டு வருகிறது.

ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமையை கிரேக்கம் தெளிவாக்குகிறது. உலக நிதிய நெருக்கடி வெடித்துக் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் ஜனநாயக அமைப்புக்கள் சரிந்து கொண்டிருக்கின்றன, நிதிய, பெருநிறுவன உயரடுக்குகள் தங்கள் ஆட்சியை பாதுகாக்கும் வகையில் ஊதியங்கள், வேலைகள், சமூகநலத் திட்டங்கள் ஆகியவற்றின் மீது முடிவிலாத் தாக்குதல்களை நடத்துகின்றன.

இத்தாக்குதலை தொழிலாள வர்க்கம் சர்வதேச ரீதியாக ஒன்றிணைந்து கொள்வதின் மூலமும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கு போராடுவதின் மூலமுமே எதிர்க்க முடியும். இன்றுள்ள பணி ஐரோப்பிய ஒன்றியத்தை சீர்திருத்துவது அல்ல. மாறாக, அதை தூக்கிவீசுவதற்காகவும், அதனை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளால் பதிலீடு செய்வதற்கும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும்.