World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Maruti Suzuki launches witch-hunt against workers

இந்தியா: தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையை மாருதி சுஜூகி ஆரம்பிக்கிறது

By Arun Kumar
23 July 2012
Back to screen version

புது டெல்லியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மானேசரின் மாருதி சுஜூகி இந்தியா (MSI) கார் அசெம்பிளி ஆலையில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் ஒரு பெரிய மோதல் ஏற்பட்ட பின்னர், நிறுவனமும் காங்கிரஸ் தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கமும் சுமார் 3,000கும் அதிகமான தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு பெரும் வேட்டையை ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே 90க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு வேட்டைக்கு பயந்து அப்பகுதியிலிருந்து தப்பி ஓடி உள்ள ஏனைய தொழிலாளர்களையும் பொலிஸ் தேடி வருகிறது

தங்கள் அதிகாரிகளின் "பாதுகாப்பிற்காக" என்று கூறி, MSI சனியன்று ஆலைக்கு கதவடைப்பு அறிவித்தது. ஆலையின் ஒரு நிர்வாகி கொல்லப்பட்ட சம்பவத்தின் மீது விசாரணை முடிந்து, நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரையில் உற்பத்தி தொடங்காது என்று பத்திரிகையாளர் கூட்டத்தில் நிறுவனத்தின் சேர்மேன் R. C. பார்கவா கூறினார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சில தொழிலாளர்கள் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படுவார்களா என்ற ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில், இந்த நடவடிக்கைகளை தெளிவுபடுத்துகின்றன. அவர் கூறினார்: “ஆபத்து இல்லாதவர்களை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் தொந்தரவுக்கு மூலக்காரணமாக இருந்தால், அவர்களைத் திரும்ப எடுக்க முடியாது.” அதாவது போர்குணமிக்க தொழிலாளர்கள் நீக்கப்படுவார்கள் என்பதையே இது குறிக்கிறது.

ஹரியானா மாநிலத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக மந்திரி ஷிவ் சரண் சர்மா, கதவடைப்பை "சரியான நடவடிக்கை" என்று ஆதரித்தார்.

புதனன்று ஒரு தொழிலாளருக்கு எதிராக ஒரு மேற்பார்வையாளரின் திமிர்தனமான ஜாதிய பேச்சுக்களால் தூண்டிவிடப்பட்ட ஒரு வாக்குவாதத்தை பிடித்துக்கொண்ட ஆலை நிர்வாகம், அந்த தொழிலாளரை வேலையை விட்டு நீக்கியது. தொழிலாளரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக மேற்பார்வையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி அந்நடவடிக்கை தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கிளறிவிட்டது. தொழிலாளர்கள் அவர்களின் மாருதி சுஜூகி தொழிலாளர்கள் சங்க (MSWU) தலைவர்களுடன் அப்பிரச்சினை குறித்து நிர்வாகத்துடன் விவாதித்து கொண்டிருந்த போது, பல நூறு கைக்கூலிகள் காட்டுமிராண்டித்தனமாக தொழிலாளர்களை தாக்க தொடங்கினர்.  

தொழிற்சாலையின் வளாகங்கள் தீயிடப்பட்டன. அது தொழிற்சாலையின் ஒரு பகுதியை கணிசமான அளவிற்கு பாதிப்படைய இட்டு சென்றது. நிர்வாகத்தால் வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொலிஸ், தொழிலாளர்களை கைது செய்ய முனைந்தது. பல தொழிலாளர்களும், நிர்வாக உறுப்பினர்களும் காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்துபோன ஓர் உடல் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் அது மனிதவள மேலாண்மை துறையின் பொது மேலாளர் அஸ்வின் குமார் தேவ் என்று அடையாளம் காணப்பட்டது.

வாக்குவாதம் மற்றும் தீயெரிப்பு ஆகியவற்றிற்காக தொழிலாளர்களைக் குறை கூறிய MSI நிர்வாகம், தொழிற்சங்க அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை பதிவு செய்தது. அது அச்சம்பவத்தை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்திற்கு எதிரான ஒரு வேட்டைக்குள் திசைதிருப்பிவிட முயல்கிறது. தூண்டுதல் இல்லாமலேயே தொழிலாளர்கள் நிர்வாக பணியாளர்களைத் தாக்கி ஆலைக்கு தீ வைத்ததாக அது முறையிடுகிறது.

எவ்வாறிருந்த போதினும், தொழிலாளர்களை மிரட்டவும், நிர்வாகத்தால் திணிக்கப்பட்ட அடிமை உழைப்பு நிலைமைகளுக்கு எதிராக எந்தவொரு எதிர்ப்பும் வளர்ந்து விடாமல் தடுக்கவும், MSI நிர்வாகம் திட்டமிட்டு வாக்குவாதத்தைத் தூண்டிவிட்டது என்பது தெளிவாக உள்ளது.

நிர்வாகத்தின் முறையீடுகளுக்கு முரண்பட்ட விதத்தில், MSWU தலைவர் ராம் மெஹெர் ஓர் அறிக்கையில் கூறினார்: “முன்கூட்டியே திட்டமிட்ட விதத்தில், நேற்று, அதாவது ஜூலை 18 மதியம், விற்பனை தளத்தில் இருந்த ஒரு மேற்பார்வையாளர் நிரந்தர தொழிலாளர் பிரிவை சேர்ந்த ஒரு தலித் [ஹிந்து ஜாதிய அமைப்புமுறையின்படி தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்படுபவர்கள்] தொழிலாளருக்கு எதிராக ஜாதியவாத கருத்துக்களை பேசினார். அது தொழிலாளர்களால் முறைப்படி எதிர்க்கப்பட்டது.”

 “அவ்வாறு பேசிய மேற்பார்வையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, தொழிலாளர்களால் கோரப்பட்ட விசாரணைகள் எதைக் குறித்தும் கவலைப்படாமல் நிர்வாகம் உடனடியாக அந்த தொழிலாளரை வேலையை விட்டு நீக்கியது. மேற்பார்வையாளருக்கு எதிராக நிறுவன சட்டத்தைக் கோரவும், அநீதியான தொழிலாளர் பணிநீக்கத்தை திரும்ப பெறவும் கோரி தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளோடு சேர்ந்து மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகளைச் சந்திக்க சென்ற போது, மனிதவள மேலாண்மை துறை அதிகாரிகள் எங்கள் தரப்பு வாதத்தை முழுமையாக மறுத்துவிட்டனர். அவர்கள் அந்த பிரச்சினையைச் சமாதான முறையில் தீர்க்கும் மனோபாவத்திலும் இல்லை.”   

 “அலுவலகத்திற்குள் தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்த நிர்வாகம் அது சம்பளம் அளித்து வரும் நூற்றுக்கணக்கான முரடர்களை வரவழைத்தது... நிர்வாகத்தின் கட்டளையின்படி ஆலை பாதுகாவலர்களால் கதவுகள் மூடப்பட்டன. அந்த முரடர்கள் காட்டுமிராண்டித்தனமாக கூர்மையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு தொழிலாளர்களை தாக்கினர். நிர்வாக பணியாளர்களும் மற்றும் பின்னர் பொலிஸிம் அதில் சேர்ந்து கொண்டனர். அவர்கள் பல தொழிலாளர்களை அடித்து நொருக்கினர். அவர்களில் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்த சமூக-விரோத உட்கூறுகளாக விளங்கிய முரடர்கள், நிறுவனத்தின் சொத்துக்களை அழித்ததோடு, ஆலையின் ஒரு பகுதியையும் தீயிட்டு கொளுத்தினர். தொழிலாளர்களை வெளியேற்றவும், நிறுவனத்தால் ஒரு கதவடைப்பு அறிவிக்கவும் பின்னர் கதவுகள் திறக்கப்பட்டன...”  

உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசுகையில், ஒரு மாருதி சுஜூகி தொழிலாளர் மெஹெர் கூறிய கருத்துக்களை உறுதிப்படுத்தினார்: “ஜாதியைக் குறிப்பிட்டு பேசி மேற்பார்வையாளர் தான் ஒரு தொழிலாளியைத் தூண்டிவிட்டார். அதன்பின்னர் அந்த தொழிலாளரை பணிநீக்கம் செய்தமைக்கு ஏனைய அனைத்து தொழிலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் பணிநீக்க ஆணையை உடனடியாக திரும்ப பெற கோரினர். ஆனால் நிர்வாகம் பிடிவாதமாக மறுத்துவிட்டது. அத்தோடு தாக்க பொலிஸையும், குண்டர்களையும் வரவழைத்தது. மாருதி சுஜூகி தொழிலாளர்களை பிடித்து தர உதவுபவர்களுக்கு ஒரு தொழிலாளருக்கு ரூ. 500 வீதம் ($US9) அளிக்கப்படும் என்ற ஒலிபெருக்கி அறிவிப்போடு தப்பியோடிய தொழிலாளர்களை பொலிஸ் இன்று [வியாழனன்று] வேட்டையாட தொடங்கி உள்ளது.”   

MSI நிர்வாகம் தொழிலாளர்களை அடிபணிய செய்ய, அவர்களை மிரட்டும் அதன் நடவடிக்கைகளின் ஒரு பாகமாக MSWUஐ இலக்கில் கொண்டுள்ள போதினும், நிர்வாகத்தின் திட்டங்களை எதிர்த்து போராட அந்த தொழிற்சங்கத்திடம் எந்தவொரு சுயாதீனமான முன்னோக்கும் இல்லை. நிர்வாகத்துடன் ஒரு சமாதானத்தை எட்டுவதன் மூலமாக தொழிலாளர்களின் கோரிக்கையை வென்றெடுக்க தொழிற்சங்கம் விரும்புகிறது. மெஹெர் கூற்றின்படி, "ஏப்ரலில் MSWU மாருதி சுஜூகி நிர்வாகத்திடம் நாங்கள் கோரிக்கை மனு சமர்ப்பித்தோம். கூலிகள் மற்றும் ஏனைய கோரிக்கைகளுக்காக பேரம்பேசும் நிகழ்முறை நடந்து வருகிறது,” என்பதாக உள்ளது

"தொழிற்சங்க அங்கீகாரத்தின் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமை உணர்வின் முதுகெலும்பை உடைக்கவும், அதன் போக்கை செயல்குலைக்கவும்" முனையும் நிர்வாகத்தின் தூண்டுதல்களுக்காக தொழிற்சங்கம் அதை குறைகூறி வருகின்றது. அதேவேளையில், பிரச்சினைகளைத் தீர்க்க நிறுவனம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் அமர்ந்து பேச்சுவார்த்தையில் இறங்கவும் தொழிற்சங்கம் ஆர்வமுடன் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

MSI தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் வேட்டையைத் தொடங்குவதில் ஹரியானா தொழிற்துறை மந்திரி ரண்தீப் சிங் சுர்ஜிவாலா அவருடைய நிர்வாகத்தின் பாத்திரத்தை உறுதிபடுத்தி, நிறுவனத்திற்கு சார்பாக, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் குறித்து கூறுகையில், “படுகொலை, கொலை முயற்சி மற்றும் சொத்துகள் மீது சேதம் ஏற்படுத்தியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்றார். “வளர்ச்சியை செயல்குலைக்க முனைந்துள்ள, செயல்முறை மீது பொறாமை கொண்டுள்ள, ஒரு குறிப்பிட்ட விதமான அரசியல் சிந்தனைகளுக்கு இணங்கி செயல்படுவதற்காக" அவர் தொழிலாளர்களைக் குற்றஞ்சாட்டினார்

வறிய கூலிகள், ஒப்பந்த தொழிலாளர் முறை, சர்வாதிகார தொழிலக விதிமுறைகள் மற்றும் போர்குணமிக்க தொழிலாளர் தண்டிக்கப்பட்டமை உட்பட கொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக, தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் இரண்டு ஆலை ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றோடு, ஒரு மாத-கால கதவடைப்பு, பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் கைக்கூலிகளின் வன்முறை ஆகியவற்றையும் முகங்கொடுத்து, MSI தொழிலாளர்கள் கடந்த ஆண்டு ஒரு நான்கு மாத-கால தீர்க்கமான போராட்டத்தை நடத்தினர். இறுதியாக அக்டோபரில், அவர்களின் அடிப்படை முறையீடு பூர்த்தி செய்யப்படாமலேயே, மாருதி சுஜூகி தொழிலாளர்கள் சங்கம் (MSEU) உட்பட தொழிற்சங்கங்களால் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப அனுப்பப்பட்டனர். MSEU தொழிற்சங்கத்தில் தான் மானேசர் தொழிலாளர்களின் பெரும்பான்மையினர் அப்போது இணைந்திருந்தனர். அந்த தொழிற்சங்கங்கள் நிறுவனத்தின் சர்வாதிகார "நன்னடத்தை" பத்திரத்தில் கையெழுத்திடுமாறு அவர்களைக் கோரின.  

குர்காவ்-மானேசர் தொழிற்சாலை சரகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சங்க அமைப்புகள்—முக்கியமாக ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு (CPI) இணைந்த அனைத்திந்திய தொழிற்சங்க சம்மேளனம் (AITUC) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) தொழிற்சங்க கூட்டமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) ஆகியவை—மானேசர் MSI தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டத்தின் குரல்வளையை நெரிப்பதில் முதன்மை பாத்திரம் வகித்தன. மானேசர் MSI தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவை ஒடுக்கவும், அடக்கவும் ஏனைய தொழிற்சங்கங்களுடன் அவை இணைந்து வேலை செய்தன. அதேவேளையில் நிறுவனத்துடன் "சமாதானத்தை" எட்ட MSEU அழுத்தம் அளித்து வந்தது.   

மானேசர் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு பரந்த தொழிலாளர் போராட்டம் எழுவதற்கான தொடர்ச்சியான அறிகுறிகளுக்கு இடையில் (அதாவது, மானேசர் பகுதியில் ஏனைய சுஜூகி ஆலைகளில் இருந்த சுமார் 12,000 தொழிலாளர்களின் அனுதாப வேலைநிறுத்தத்தால் இது வெளிப்பட்டது), ஸ்ராலினி தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது நம்பிக்கையை வைக்காமல் மாறாக காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், அதன் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைக்குமாறு மானேசர் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தன.

தொழிலாளர்களை கொத்தடிமை நிலைமைகளுக்குள் அழுத்த அவர்களுக்கு எதிரான ஒரு வேட்டையைத் தொடங்க MSIஆல் நடத்தப்பட்ட நகர்வுகள், அதிகரித்து வரும் ஓர் உலகளாவிய மந்தநிலை தாக்கத்தின் கீழ் முதலாளித்துவவாதிகள் ஒரு பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்து வருகின்ற நிலையில், உற்பத்தியை அதிகரிக்கவும் மற்றும் கூலிகளை குறைக்கவும் இந்திய முதலாளித்துவத்தால் செய்யப்படும் முயற்சிகளோடு பின்னி பிணைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2011-12இல் 6.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 2010-11இல் அண்ணளவாக 30 சதவீத அதீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்த பின்னர், இந்தியாவில் கார் விற்பனை 2011-12இல் வெறுமனே 2.19 சதவீதத்திற்கே வளர்ச்சி அடைந்தது. மார்ச்சில் ஒரு விறுவிறுப்பான வேகத்தில் விரிவடைந்த பின்னர், ஏப்ரலில் பெரும்பாலான கார் உற்பத்தியாளர்களின் விற்பனைகள் வீழ்ச்சியையோ அல்லது குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்வையோ சந்திக்கவில்லை. மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான MSI, ஏப்ரலில் பயணிகள் கார் விற்பனையில் 1.3 சதவீத வீழ்ச்சியை அறிவித்தது.