World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French automaker PSA to cut 8,000 jobs, close Aulnay plant

பிரெஞ்சுக் கார்த்தயாரிப்பாளர் PSA, 8,000 வேலைகளை அகற்றுகிறது, ஒல்நே ஆலையை மூடுகிறது

By Kumaran Ira
13 July 2012
Back to screen version

கார்த் தயாரிப்பு நிறுவனம் PSA Peugeot-Citroen ஜூலை 12ம் திகதி பிரான்ஸ் முழுவதும் 8,000 பணிகளை நீக்க இருப்பதாகவும் பாரிஸுக்கு வடக்கே Aulnay-sous-Bois வில் உள்ள அதன் ஆலையை மூடப் போவதாகவும் முறையக அறிவித்துள்ளது—இரு தசாப்தங்களில் முதலில் மூடப்பட இருக்கும் PSA ஆலை இதுதான். வியாழக்கிழமை காலை, வேலையின் போது, கார் தொழிலாளர்கள் ஆலை மூடல் பற்றிய உரையின் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேற்பார்வையாளர் அவர்களிடம் தெரிவித்தார், "நீங்கள் உங்கள் குடும்பங்களுக்கு எச்சரிக்கை செய்ய ஒரு மணி நேரம் தரப்படும், பின்னர் நீங்கள் மறுபடியும் வேலைக்கு போகவேண்டும்." தொழிலாளர் உற்பத்தியை நிறுத்தியதோடு ஒரு பொது கூட்டத்தை கூட்டி, ஒருமனதாக வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்தனர். "PSA குற்றவியல் முதலாளிகள்," "PSA இடம் பணம் உள்ளது, எந்த தொழிற்சாலையும் மூடப்படக்கூடாது.” என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

இந்த ஆலை மூடலும், வேலை வெட்டுக்களும் சில காலமாகத் தயாரிப்பில் உள்ளன. கடந்த ஆண்டு தொழிற்சங்கங்கள் கசிய விட்ட ஆவணங்கள் Aulnay-ous-Bois, வடக்கு பிரான்ஸில் ஹோர்டானில் உள்ள செவெல்நோர்ட், மற்றும் மாட்ரிட்டில் ஓர் ஆலை என மூன்றையும் மூடும் திட்டங்களை வெளியிட்டது; இவற்றில் 3,100 வேலைகள் இழக்கப்படும். (பார்க்க: “பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலுள்ள கார்த் தயாரிப்பு நிறுவனமான ஆலைகளை மூடவிருக்கிறது”). ஆனால் PSA நேற்றுவரை உத்தியோகபூர்வமாக இத்திட்டங்கள் உறுதியானவை என மறுத்து வந்தது.

Le Nouvel Observateur  இடம் ஒரு தொழிலாளி கசப்பான வகையில் கூறினார்: “ஓராண்டாக நாங்கள் பொய்களைத் தவிர வேறு எதையும் கேட்டதில்லை.”

Peugeot உடைய மறுகட்டுமானத் திட்டத்தில் ஒல்நேயில் 3,000 நிரந்தர வேலைகளை நீக்குதல் மற்றும் 380 தற்காலிகப் பணிகளை நீக்குதல், 250 துணை ஒப்பந்தக்காரர்களை நீக்குதல், மற்றும் ரென் இல் 1,400 வேலைகளை அழித்தல் ஆகியவையும் அடங்கும். இது 3,600 வெள்ளைக் காலர் ஊழியர்களுக்கு விரும்பிப் பணியை விட்டு விலகும் திட்டத்தையும் அளிக்கும். கார்த்தயாரிப்பு நிறுவனத்தின் கருத்துப்படி, ஒல்நேயில் இருந்து  3,000 தொழிலாளர்களில் பாதிப் பேர் பாரிசுக்கு மேற்கே Poissy என்னும் இடத்தில் உள்ள ஆலையில் வேலை கொடுக்கப்படுவர். இந்த நடவடிக்கைகள் Peugeot உடைய தொழிலாளர் தொகுப்பான 100,000 என்று பிரான்ஸில் இருப்பதை கிட்டத்தட்ட 10% குறைத்துவிடும்.

PSA, அதன் தொழிலாளர்கள் மற்றும் பிரெஞ்சு வரிசெலுத்துவோர் மீது முற்றிலும் இகழ்வான முறையில் செயல்பட்டு, ஏராளமான தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது; 2008 உலகப் பொருளாதார நெருக்கடி தோன்றியபின் PSA, Renault இரண்டுமே 6 பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய அரச உதவியைப் பெற்றுள்ளன. PSA இன் தலைமை நிர்வாக அதிகாரி, பிலிப் வாரன் இழிந்த முறையில் நிருபர்களிடம் கூறினார்: “தொடர்புடைய மக்களுக்கும் எங்கள் முழு நிறுவனத்திற்கும் எவ்வளவு முக்கியம் இந்நடவடிக்கைகள் என்பது எனக்குத் தெரியும்.” ஆனால், PSA  மாதம் ஒன்றிற்கு 200 பில்லியன் யூரோக்கள் ($245) இழப்பைக் கொண்டுள்ளது என்றார் அவர்; மேலும், “தாமதப்படுத்துவது என்பது முழுக்குழுவையும் பெரும் ஆபத்திற்கு உட்படுத்திவிடும்” என்றும் கூறினார். பிரான்சின் போட்டித்தன்மையை உயர்த்தும் உந்துதலில் --ஊதியங்கள் மற்றும் சமூகநலச் செலவுகளைக் குறைப்பதின் மூலம்— வாரன் ஒரு முக்கிய பங்கைக் கொண்டு வெளிப்பட்டுள்ளார்.  பெப்ருவரி மாதம் அவர் பைனான்சியல் டைம்ஸிடம், “எங்கள் ஆலைகளில் ஒரு மணி நேரம் மனித சக்திக்கு ஆகும் செலவை நீங்கள் பார்த்தால், அதுவும் பிரான்ஸில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு 35 டாலர்கள் என இருக்கையில், ஜேர்மனியைவிட அதிகமாகும்....பிரான்ஸ் சரியான வழியில் செல்லவில்லை. குறிப்பாக அது கொண்டுள்ள சமூகப் பாதுகாப்பு போன்ற நலன்களின் தரத்தில்.” என்றார். தொழிற்சங்க அதிகாரத்துவம் PSA ஆலை மூடல், பணிநீக்கங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள விதம் பெரும் இழிந்த தன்மையைக் கொண்டது. ஒல்நே தொழிலாளர்கள் ஓராண்டாகவே தங்கள் ஆலை மூடப்பட உள்ளது என்பதை அறிந்இதருந்தபோதிலும்கூட, தொழிற்சங்கங்கள் PSA உடைய வெட்டுக்களை எதிர்ப்பதற்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்த ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபடவில்லை.

CGT எனப்படும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் ஒல்நே பிரதிநிதியும் மற்றும் குட்டி முதலாளித்துவ தொழிலாளர் போராட்டம் (LO)  குழுவின் ஜனாதிபதி வேட்பாளரான Nathalie Arthaud வின் பிரச்சாரச் செய்தித்தொடர்பாளராகவும் இருந்த Jean-Pierre Mercier, “12 மாதப் பொய்களுக்குப் பின்னர் போராட்டங்கள் இப்பொழுது ஆரம்பிக்க போகிறது” என்றார்.

CGT தலைவர் பேர்னார்ட் தீபோ ஆலை மூடல் ஒரு “நிலநடுக்கம் போன்றது” என்றார். France Inter இடம் அவர் கூறியதாவது: “ஓராண்டிற்கு முன் எங்கள் பிரதிநிதிகள் ஏற்கனவே இத்தகவலை வெளியிட்டனர். சந்தேகத்திற்கு இடமின்றி தேர்தல் பின்னணி இந்த நிலநடுக்கம் குறித்து உறுதி செய்வதாக இருக்கவில்லை.” அதாவது ஓராண்டிற்கு முன்னரே CGT க்கு இந்த ஆலைகள் மூடல் பற்றித் தெரியும், இதற்கு பாரிய வெகுஜன எதிர்ப்பு இருந்த்து, அது PSA அல்லது வெளிப்படையாக வெட்டுக்களுக்கு பிரச்சாரத்தின்போது ஆதரவு கொடுக்கும் முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களை தடுத்திருக்கும். இருந்தபோதிலும்கூட CGT மற்றும் பிரான்ஸின் பிற தொழிற்சங்கங்கள் தங்கள் முழு ஆதரவையும் ஹாலண்டிற்குக் கொடுத்தன. ஏனெனில் தொழிற்சங்கங்கள் இந்த ஆலைகள் மூடப்படுவதற்கும் தொழிலாளர்கள் ஊதியங்களைக் குறைப்பதற்கும் பணிநிலைமைகளை மாற்றுவதற்கும் ஆதரவு கொடுத்திருந்தன.

PSA நிர்வாகி டெனிஸ் மார்ட்டின், ராய்ட்டர்ஸிடம் கூறினார்: “தொழிற்சங்கங்கள் மற்றும் வருங்கால பங்காளிகளுடன் நடக்கும் பேச்சுக்கள் ‘சரியான பாதையில்’ செல்கின்றன. வருங்கால உற்பத்தி, இப்பொழுது நாம் தொழிலாளர் தொகுப்பிடம் கேட்கும் முயற்சிகள் உட்பட பிற நிபந்தனைகளில் உள்ளன.”

இந்த அறிவிப்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்களுடன் ஒரு “சமூக மாநாடு” நடத்திய மறுநாள் வந்துள்ளது. அம்மாநாட்டில் பொதுச் செலவுகள, ஊதியங்கள், வேலை வெட்டுக்கள் ஆகியவற்றை பெரு வணிகத்தின் நலன்களுக்காக வெட்டும் சிக்கன நடவடிக்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டன. பிரெஞ்சு போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு தொழிலாளர் பிரிவுச் செலவுகளைக் குறைப்பதற்குத் தான் ஏற்றம் தருவதை ஹாலண்ட் தெளிவுபடுத்தியுள்ளார். பிரான்சுவா ஹாலண்டை ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படையாக ஆதரித்த தொழிற்சங்கங்கள் சமூக மாநாட்டை பாராட்டியுள்ளன, PS ன் தொழிலாளர் விரோத வெட்டுக்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளன. (பார்க்க: “பிரான்ஸ்: தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல்களை சமூக மாநாடு கோடிட்டுக் காட்டுகிறது”). PS அரசாங்கம் ஆலை மூடலுக்கு ஒப்புதல் கொடுத்து, நிர்வாகம் தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைத்து தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளது. பிரதம மந்திரி Jean-Marc Ayrault PSA உடைய நிர்வாகத்தை “சமூகப் பங்காளிகளுடன் மிகச் சிறந்த, விசுவாசமான, பொறுப்புடைய பேச்சுக்களைத் தொடங்க வேண்டும்; அதையொட்டி தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அவர்களுடைய வல்லுனர்கள் முன்வைக்கும் அனைத்து மாற்றீடுகளும் விவாதிக்கப்படலாம், ஆராயப்படலாம்—முக்கியமான இலக்கு வேலைகள் இயன்ற அளவு தக்க வைக்கப்பட வேண்டும், அனைத்து பிரெஞ்சு இடங்களிலும் தொழில்துறை நடவடிக்கை தொடரப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், அரசாங்கம் இன்னும் கூடுதலான அரசாங்க உதவியை கார்த்தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் வேலைகள், ஊதியங்கள், நலன்கள் ஆகியவற்றைக் குறைக்கும்போது இலாபங்களை அதிகரித்துக் கொள்ளக் கொடுக்கின்றனர். Ayrault கார்த்தயாரிப்பாளர்களுக்கு நிதியளிக்கும் நடவடிக்கைகள் ஜூலை 25 அன்று காபினெட்டில் விவாதிக்கப்படும் என்றார். ஆலை மூடல்கள், வேலைவெட்டுக்கள் ஆகியவை PSA பெருநிறுவனப் பிணைப்பு ஒன்றை அமெரிக்க கார்த்தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸுடன் மார்ச் மாதம் செய்து கொண்டபின் வந்துள்ளன. இரு குழுக்களும் கொண்டுள்ள இந்தப் பிணைப்பு பிரெஞ்சுத் தொழிலாளர்கள் மீது ஆழ்ந்த ஊதிய, வேலை வெட்டுக்களைச் சுமத்துகிறது; அவ்வகையில்தான் ஜெனரல் மோட்டார்ஸும் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கமும் UAW அமெரிக்க கார்த்தயாரிப்பு தொழிலாளர்கள் மீதும் வெட்டுக்களை சுமத்தின. 2009ல் ஒபாமா நிர்வாகம் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் நிறுவனங்களைத் திவால் நிலைமையில் தள்ள, செலவுக் குறைப்பு நடவடிக்களை அவை சுமத்துவதற்குப் பாதையை வகுத்துக் கொடுத்தது; ஆலை மூடல்கள், 50 சதவிகித ஊதியக் குறைப்புக்கள், அனைத்துப் புதிய தொழிலாளர்களுக்கும், மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்களில் குறைப்புக்கள் ஆகியவை சுமத்தப்பட்டன. பிரெஞ்சுக் கார்த்தயாரிப்பாளர்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை சுமத்த விரும்புகின்றனர். மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்களில் குறைப்புக்கள் ஆகியவை சுமத்தப்பட்டன. பிரெஞ்சுக் கார்த்தயாரிப்பாளர்களும் இதேபோன்ற நடவடிக்கைகளை சுமத்த விரும்புகின்றனர். UAW தலைவர் பாப் கிங், நிர்வாகம் நிறுவன இலாபங்களை அதிகரிக்க, தொழிலாளர் செலவினங்களை குறைப்பதற்கு தொழிற்சங்கங்கள் செய்த பங்கை வெளிப்படையாகவே பாராட்டினார். ஓப்பலில் இருக்கும் மேற்பார்வைக் குழுவிற்கு ஜேர்மனிய IG Metall union ஆதரவுடன் கிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; இக்குழு ஐரோப்பாவில் ஜெனரல் மோட்டார்ஸின் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை மேற்பார்வையிடும். ஏற்கனவே ஜெனரல் மோட்டார்ஸ் அதன் பெல்ஜியத்திலுள்ள அதன் ஆன்ட்வெர்ப் ஓப்பல் ஆலையை மூடி; அதில் 2,500 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்தது. இப்பொழுது அது ஜேர்மனியில் உள்ள Bochum ஆலையையும் (3,100 வேலைகள்) இங்கிலாந்தில் உள்ள எல்லெஸ்மியர் துறைமுக ஆலையையும் (2,100 வேலைகள்) மூட உள்ளதாக பயமுறுத்துகிறது.

ஆலை மூடல்கள் வேலை வெட்டுக்களுக்கு எதிரான போராட்டம் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக நடத்தப்பட்ட வேண்டும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; அவை அரசியலளவில் ஹாலண்ட் அரசாங்கத்தை ஆதரிக்கின்றன; அதுவோ PSA தொழிலாளர்கள் மற்றும் முழுத் தொழிலாள வர்க்கத்தின் மீதான தொடர்ந்த தாக்குதல்களை மேற்பார்வை செய்துகொண்டுள்ளது.