World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Massive expansion of domestic spying under Obama

ஒபாமாவின்கீழ் பாரிய உள்நாட்டு உளவுபார்ப்பு விரிவாக்கம்

By Niall Green
10 July 2012
Back to screen version

கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களின் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களும் நீதிமன்றங்களும் 2011ல் பயன்படுத்துவோர் குறித்த தகவல்கள் பற்றி குறைந்தபட்சம் 1.3 மில்லியன் கோரிக்கைகளை விடுத்தன என்று கைத்தொலைபேசி நிறுவனங்கள் கூறியுள்ளன.

நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கை ஒன்றின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாக அன்றாடம் தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றி, தகவல் செய்திகள், அழைத்தவர் இருப்பிடங்கள் உட்பட ஆயிரக்கணக்கான தகவல்களை அரசாங்கத்திற்குக் கொடுக்கின்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான AT&T ஒவ்வொரு நாளும் 700க்கும் மேற்பட்ட அரசாங்க கோரிக்கைகளுக்கு விடையளிக்கிறது; அதே நேரத்தில் மற்றொரு முக்கியக் கைத்தொலைபேசி நிறுவனமான Sprint தான் சராசரியாகக் கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் 1,500 அரசாங்கக் கோரிக்கைகளைப் பெற்றதாகத் தகவல் கொடுத்துள்ளது.

இந்த எங்கும் படர்ந்துள்ள அரசாங்கக் கண்காணிப்பு தங்கள் வாடிக்கையாளர்கள்மீது இருப்பதற்கான சான்று குறித்து ஒன்பது தொலைபேசி நிறுவனங்கள் பெருகிய முறையில் தொலைபேசி ஒற்றுக்கேட்டல் இன்னும் பிற வகை தகவல் தேடுதல் குறித்த காங்கிரஸ் குழு ஒன்று விசாரணையில் ஒரு கேள்விக்கு விடையிறுக்கையில் தெரிவித்துள்ளன. டைம்ஸ் முழுச் சான்றுகளும் இல்லாத நிலையில், கைத்தொலைபேசி பயன்படுத்துவோர் குறித்த அந்தரங்கத் தகவல்கள் பற்றிய அரசாங்கக் கோரிக்கைகள் காங்கிரஸிற்குக் கூறப்பட்டுள்ள 1.3 மில்லியன் என்பதை விட மிக அதிகமாக இருப்பது உறுதி என்று தகவல் கொடுக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட 12 முதல் 16% வரை வாடிக்கையாளர் குறித்த தகவல்களை பற்றிய அரசாங்கக் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன என்று கைத்தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கைத்தொலைபேசி தகவல் குறித்த பல கோரிக்கைகள் நீதிமன்ற உத்தரவுகள் அல்லது சட்டபூர்வ கட்டளைகளுடன் இணைந்துவரவில்லை. இதன் பொருள் பிடிப்பாணை இல்லாமல் அந்தரங்கத்தை ஊடுருவ முடியாது என்ற பெயரளவிலான பாதுகாப்பு நெறிகள் கூட இப்பொழுது வாடிக்கையாக மீறப்படுகின்றன என்பதாகும்.

கைத்தொலைபேசி பயன்பாட்டை அரசாங்கம் கண்காணிப்பது என்பது இப்பொழுது எல்லா நிலையிலும் படர்ந்துவிட்டது என்பது உண்மையில் கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றங்களில் தொலைபேசி ஒட்டுக்கேட்பதற்கான பிடிஆணை வழங்குமாறு கோரும் பொலிஸாரின் வேண்டுகோள்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதின் மூலம் புலனாகும்.

கைத்தொலைபேசி உளவு பார்த்தல் குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் மட்டம் எந்தவொரு பொலிஸ் அரசாங்கத்திற்கும் பொறாமையைக் ஏற்படுத்தும். இது அமெரிக்க மக்களை இது உலகிலேயே மிக அதிக கண்காணிப்பிற்கு உட்பட்டவர்கள் என்றாக்குகின்றது.

 “அவர்கள் உணர்ந்தாலும், உணராவிட்டாலும், அமெரிக்கர்கள் தாங்கள் எங்கு சென்றாலும் அவர்களைப் பின்தொடரும் கருவிகளையும் கொண்டுள்ளனர்” என்று அமெரிக்க குடி உரிமைகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டோபர் கலாபிரெஸ் கைத்தொலைபேசி வைத்திருப்போர் குறித்து காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்ட தகவல்கள் பற்றி விடையிறுக்கையில் கூறினார். “நிரபராதியான அமெரிக்கர்கள் பற்றிய கைத்தொலைபேசி தகவல்கள், இந்த வேண்டுகோள்களினால் மிகப் பெரிய அளவை அடைந்துவிட்டன” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

தன்னுடைய சொந்தச் சட்டச் செயல்படுத்தும் நிறுவனங்கள் கைத்தொலைபேசி பற்றிய ஆவணங்கள் குறித்த ஆய்வைப் பற்றிய அமெரிக்க குடி உரிமைகள் சங்கமும் தகவல் கொடுத்துள்ளது. பொலிஸ் துறையின் சில பிரிவுகள் தங்களுடைய சொந்த கைத்தொலைபேசி தொடர்பறியும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து, சேவைநிறுவனங்கள் வைத்திருக்கும் குறைந்தப்பட்ச பாதுகாப்புக்களையும் கடந்து விட்டனர். இதைத்தவிர, குடி உரிமைகள் குழு சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்து கைத்தொலைபேசி பயன்பாடு குறித்தும் தங்கள் நிரந்தர பதிவுகளை வைத்துள்ளன. இவை அவற்றிற்கும் அரசாங்கத்திற்கும் ஆராய்வதற்கு பாரிய புதையல் போன்ற தகவல்களை வழங்குகின்றன எனக் கண்டறிந்துள்ளது.

அமெரிக்க அரசாங்கப் பிரிவுகளிடம் இருந்து கைத்தொலைபேசி பயன்பாட்டாளர்கள் தனி வாழ்வு குறித்த விவரங்கள் பற்றி இருக்கும் கோரிக்கையின் தன்மையினால், இப்பொழுது நிறுவனங்கள் பெரும் தொழில்நுட்ப வல்லுனர்கள், வக்கீல்கள் குழுக்களை நாள் முழுவதும் வெள்ளமென வரும் வேண்டுகோளை நெறிப்படுத்த நியமித்துள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் காங்கிரஸ் விசாரணையின்போது எந்த அளவு அரசாங்க வேண்டுகோள்கள் கைத்தொலைபேசி தகவல்கள் குறித்து மறுக்கப்பட்டுவிட்டன என்று கூறாவிட்டாலும், ஒரு சிறு நிறுவனமான C Spire Wireless, தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்புக்களின் கோரிக்கைகளில் கிட்டத்தட்ட 15% விகிதமான 12,500 இனை நிராகரித்துவிட்டதாகக் கூறியுள்ளது.

டைம்ஸிற்கு காங்கிரசின் விசாரணை விளைவுகளை வெளியிட்ட மசாச்சூசட்ஸ் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி எட்வர்ட் மார்க்கே, கைத்தொலைபேசி பயன்பாட்டாளர் பற்றிய சட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்கள் நாடும் கோரிக்கையின் அளவு “வியத்தகு முறையில்” உள்ளது என விவரித்தார்.

“இந்தத் தகவல் வேண்டுகோள்களின் பரந்த தன்மையினால் அந்தரங்கப் பாதுகாப்புக்கள் நெறிகளை நாம் அகற்றிவிட முடியாது” என்று ஜனநாயகக் காங்கிரஸ் உறுப்பினர் கூறினார். “சட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு ஒரு ஊசி தேவைப்படுகிறது; ஆனால் அதற்காக அவர்கள் வைக்கோல் போரில் என்ன செய்கின்றன?”

இத்தகைய கவலைகளைக் காட்டுவது போல் இருந்தாலும், ஜனநாயகக் கட்சிதான் அமெரிக்க மக்களுடைய ஜனநாயக உரிமைகள் அகற்றப்படுவதற்கு முன்னணியில் நிற்கிறது. புஷ் சகாப்த காலத்தில் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் (NSA) செயல்படுத்தப்பட்ட சட்டவிரோத தொலைபேசி ஒற்றுக்கேட்டலில் பங்குபெற்ற தொலைபேசி நிறுவனங்களுக்கு சட்டபூர்வ விதிவிலக்கு அளித்த முறையில் செயல்பட்டதால்  ஒபாமா நிர்வாகம் பிடியாணையற்ற அரசாங்கக் கண்காணிப்பின் விரிவாக்கத்திற்கு ஒரு முக்கிய முன்னோடியை அமைத்துக் கொடுத்தது.

ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காங்கிரசுடன் சேர்ந்து, 2009ம் ஆண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒபாமா, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தனியார் வழக்குகளில் இருந்து காப்பாற்றுவதற்கு முந்தைய நிர்வாகம் செய்திருந்த உள்நாட்டு ஒற்றுக் கேட்டலுக்கு எதிராக தனிநபர் உரிமைகள் செல்லுபடியாகாது என்பதை நிலைநிறுத்த உதவியது. இது இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாவது மேல்முறையீட்டுச் சுற்று நீதிமன்ற முடிவு ஒன்றில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்நீதிமன்றம் பிடி ஆணையில்லாத இலத்திரனியல் முறைக் கண்காணிப்பில் பங்கு பெற்ற நிறுவனங்களுக்கு எதிரான 33 வழக்குகளைத் தள்ளுபடி செய்தது.

அமெரிக்க அரசாங்கத்தின் குற்ற நடவடிக்கைகளை மூடி மறைப்பதில் தன் பங்கை நியூ யோர்க் டைம்ஸும்  கொண்டிருந்தது. 2003ம் ஆண்டு அது புஷ் நிர்வாகத்தின் உள்நாட்டு உளவுத்திட்டத்தை குறித்து ஓராண்டிற்கும் மேலாக ஒரு தகவலை வெளியிடாமல் இருந்தது. அமெரிக்காவின் “பெருமைமிக்க செய்தித்தாளின்” ஆசிரியர்கள் NSA உடைய சட்டவிரோத தொலைத்தொடர்பு ஒட்டுக்கேட்டலை 2004 தேர்தல்களுக்குப்பின்தான் வெளியிட்டது. இதற்குக் காரணம் புஷ்ஷின் வெள்ளை மாளிகையைப் பாதுகாப்பது மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் பற்றிய பகிரங்க விவாதங்களைக் குறைப்பது என்பதாகும்.

இப்பங்கைக் கொண்டிருக்கையில், அதன் தற்போதைய முயற்சிகளான இரு கட்சிகளும் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்தல் குறித்து அதிகம் குறைகூறாத தன்மை, நியூ யோர்க் டைம்ஸும் மற்ற அதன் சக செய்தி ஊடகப் பெருநிறுவனங்களும் எந்த பிற குற்றங்களை மூடி மறைத்தனவோ என்பது பற்றி நாம் ஊகிக்கத்தான் முடியும்.

அமெரிக்க முதலாளித்துவத்தில் எந்த முக்கிய பிரிவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல், அதாவது அந்தரங்க உரிமைகள் பாதுகாப்பு போன்றவற்றிற்கு உறுதி கொண்டிருக்கவில்லை என்பது, அதுவும் அமெரிக்க அரசியலமைப்பிற்குள் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் 1934ம் ஆண்டு தொடர்புகள் சட்டம், 1978ம் ஆண்டு வெளியுறவு உளவுத்துறைத் தொடர்புச் சட்டம் போன்ற சட்டங்களில் விரிவாக்கப்பட்டதையும் பொருட்படுத்துவதில்லை.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு கடந்த மூன்று தசாப்தங்களாக சமூக சமத்துவமின்மைக்கு விடையளித்துள்ள விதம் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கருவியைக் கட்டமைத்துள்ளதுதான். அதாவது பொலிஸ் பிரிவுகள், சிறைகள், ஒற்றுச் செயல்கள் ஆகியவற்றை விரிவாக்குவதுதான். அதே நேரத்தில் அடிப்படை ஜனநாயகப் பாதுகாப்புக்கள் தகர்க்கப்பட்டுவிட்டன இப்பொழுது இணைக்கமுடியாத சமூகப் பிளவு பெரும்பாலான மக்களுடன் ஏற்பட்டு பிரிந்துள்ள நிலையில், அமெரிக்க நிதியப் பிரபுத்துவம் மற்றும் அதனால் இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ள இரு கட்சிகள் ஆகியவற்றைச் சுற்றி ஒரு தெளிவான சர்வாதிகார நாற்றம் உள்ளது.

கைத்தொலைபேசிக் கண்காணிப்புக்களை பற்றிய மிகச் சமீபத்திய வெளிப்பாடுகள், “பயங்கரவாதத்தின் மீதான போர்” அறிவிக்கப்பட்டதில் இருந்து செயல்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக விரோத தாக்குதல்களின் நீண்ட பட்டியலுடன் சேர்க்கப்படுகையில், குவாந்தநாமோ வளைகுடா சிறைமுகம் நிறுவப்பட்டதில் இருந்து ஒபாமா நிர்வாகம் அமெரிக்கக் குடிமக்கள் எவரையும் உலகெங்கிலும் கொலை செய்யும் உரிமையை உறுதிப்படுத்தியிருப்பது வரை, அமெரிக்கப் பொலிஸ் அரசு என்னும் உண்மையான, பெருகும் அச்சுறுத்தும் சாட்சியத்தை வழங்குகின்றன.

ஜனநாயக உரிமைகளின்மீது நடக்கும் இத்தாக்குதல்களை எதிர்க்கும் திறனுடைய ஒரே சக்தி தொழிலாள வர்க்கம்தான்; ஒரு தொழிலாளர்கள் அரசாங்கம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு அது தன் பரந்த சமூக சக்தியை அரசியல்ரீதியாக அணிதிரட்டத் தயாராகவேண்டும்.