World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek government announces further austerity

கிரேக்க அரசாங்கம் மேலதிக சிக்கன நடவடிக்கைகளை அறிவிக்கிறது

By Christoph Dreier
9 July 2012


Back to screen version

அரசாங்கத் தலைவர்கள் வளர்ச்சி பற்றிப் பேசி, சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறிய ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு முடிந்த ஒரு வாரத்தில், அனைத்து ஐரோப்பிய அரசாங்கங்களும் பாரிய வெட்டுக்களை கிரேக்க வகையில் கண்டம் முழுவதும் செயல்படுத்த தயாரிப்புக்களை மேற்கொண்டுள்ளன. கிரேக்கத்திலேயே, ஆழ்ந்த மந்த நிலை இருந்தும், மேலும் வெட்டுக்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கடந்த வெள்ளியன்று அன்டோனிஸ் சமரஸ் புதிய கிரேக்கப் பிரதம மந்திரி என்னும் முறையில் அவருடைய முதல் குறிப்பிடத்தக்க பாராளுமன்ற உரையை நிகழ்த்தினார். ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்னும் முக்கூட்டிற்கு கிரேக்கம் அதன் முந்தைய ஒப்புக்கொள்ளப்பட்ட வெட்டுக்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று உறுதியளித்தார்; அவற்றுள் 150,000 பொதுத்துறைப் பணிகள் நீக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தன. இன்னும் தனியார்மயமாக்கச் செயல்களையும் கட்டுமான நடவடிக்கைகளையும் அவர் அறிவித்தார்.

முக்கூட்டின் பிரதிநிதிகள் முன்னதாக அடுத்த தவணையான 31.5 பில்லியன் யூரோக்கள் உதவி நிதியை ஒப்புக்கொள்ளப்பட்ட வெட்டுக்கள் விரைவில் செயல்படுத்தப்படாவிட்டால் கொடுக்கப்பட மாட்டாது என அச்சுறுத்தியிருந்தன. இத்தவணைப் பணம் கிடைக்காவிட்டால் சில வாரங்களுக்குள் கிரேக்கம் திவால்தன்மைக்கு தள்ளப்படும் அச்சுறுத்தல் உள்ளது; ஏனெனில் அது வாங்கியுள்ள கடன்களுக்கு உயர்ந்த வட்டிவிகிதங்களை அளிக்க நேர்ந்துள்ளது.

அவருடைய சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில், சிக்கன நடவடிக்கைகளுக்கு வெகுஜன எதிர்ப்பை முகங்கொடுக்கும் வகையில் சமரஸ் குறைந்தப்பட்சம் பகுதியேனும் முக்கூட்டுடனான உடன்பாட்டுக் குறிப்பை மறு பேச்சுக்களுக்கு உட்படுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். ஆனால், இப்பொழுது அவர் அதை உறுதியாக நிராகரித்துவிட்டார்.

“நாங்கள் இலக்கை மாற்ற விரும்பவில்லை. மாற்றப்பட வேண்டியது இலக்குகளை அடைவதற்கு எங்களுக்கு தடையாக இருப்பவற்றைத்தான். முக்கிய நோக்கம் சமூகச் சீர்திருத்தங்கள் ஆக்கிரோஷத்துடன் தொடரப்பட வேண்டும்; கடன் கொடுத்தவர்களை விதிமுறைகளை மாற்றுக்கள் எனக்கோருவதற்கு பதிலாக.” என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.

இன்னும் குறிப்பாக பிரதம மந்திரி அரசாங்க நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுதல் விரைவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். முன்பு திட்டமிட்டபடி, இரயில்வேக்களையும் மின்சார நிறுவனங்களையும் அவர் விற்க விரும்புவதோடு மட்டுமின்றி, ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகியில் நீர் வழங்குமுறை அமைப்பு, துறைமுகங்கள் மற்றும் மாநிலங்களில் இருக்கும் விமான நிலையங்கள், ஏதென்ஸ் கடலோரத்தில் அரசாங்க நிலம் ஆகியவற்றையும் விற்க விரும்புகிறார்.

இந்த நடவடிக்கைளில் ஏராளமான பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் ஆகியவை அடங்கும் என்பதுடன் அடிப்படைப் பொருட்களின் விலைகள் உயர்வும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஐந்து மாதங்களில், சமரஸ் டஜன் கணக்கான பொது வசதிகளை மூட இருக்கிறார்; இது கூட்டாட்சிப் பற்றாக்குறையைக் குறைக்க உதவும். இது பணிநீக்கம் இல்லாமல் நடத்தப்படும் என்னும் பிரதம மந்திரியின் கூற்றுக்கள் நம்பகத்தன்மை உடையவை அல்ல. ஒரு வரிச் சீர்திருத்தத்தையும் சமரஸ் அறிவித்துள்ளார்; இது முதலாளிகளுக்கு நன்மை அளிக்கும்; இவற்றை சமரஸ் முதலீட்டாளர்களை ஈர்க்கத் தேவையானது என நியாயப்படுத்துகிறார்.

அவருடைய புதிய நிதி மந்திரி யானிஸ் ஸ்டௌர்நரஸ் சனிக்கிழமை பாராளுமன்ற விவாதம் ஒன்றின்போது கிரேக்க அரசாங்கக் கடன்பத்திரங்கள் தனியார்மயமாக்குதலுக்கு பெறப்படும் பணவழிகளில் ஒன்றாக ஏற்கப்படும் என்றார். இதன் பொருள் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களை மிக மலிவான விலைக்கு விற்பது என்பதாகும்; ஏனெனில் இத்தகைய பத்திரங்கள் இப்பொழுது அவற்றின் பெயரளவு மதிப்பில் ஒரு சிறிய விகிதம் அளவில்தான் விற்பனையாகின்றன.

முக்கூட்டுடன் புதிய பேச்சுக்கள் பற்றி பரிசீலிக்கும் முன், ஒப்புக் கொள்ளப்பட்ட வெட்டுக்கள் அனைத்தையும் அரசாங்கம் செயல்படுத்தும் என்று ஸ்டௌர்நரஸ் வலியுறுத்தினார். “பெப்ருவரி மாதம் இரண்டாம் கடனில் சேர்க்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நாம் ஏற்க வேண்டும்; அப்பொழுதுதான் இக்கடன் பெறுவது குறித்து நாம் அச்சுறுத்தலுக்கு உட்படமாட்டோம்.” என்றார் அவர்.

ஸ்டௌர்நரஸ், மந்த நிலையை சமாளிக்க, அரசாங்கம் இலக்குகளை எட்ட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றார். “இப்படி நீடிப்பதற்குக் காரணம் எவரேனும் நமக்குக் கூடுதல் பணம் கொடுக்க வேண்டும் என்பதாகும், அது அவ்வளவு எளிதல்ல. பேச்சுவார்த்தைகள் விரைவில் முடியாது; அவை நீண்டு போகும், கடினமானவையாக இருக்கும்.”

தாங்கள் இந்தக் குறைந்தப்பட்ச கால அவகாச நீட்டிப்பைக் கூட ஏற்பதற்கில்லை என்பதை முக்கூட்டின் பிரதிநிதிகள் தெளிவாக்கியுள்ளனர். IMF தலைவர் கிறிஸ்டின் லகார்ட் கடந்த வாரம் தான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் மனோநிலையில் இல்லை என்று கூறினார். ஜேர்மனிய அரசாங்கத்தின் பல பிரதிநிதிகளும் பேச்சுக்களுக்கு எதிராகத்தான் உள்ளனர்.

ஜேர்மனிய சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) யின் பாராளுமன்றப் பிரிவின் தலைவர் Rainer Brüderle கிரேக்க அரசாங்கம் ஒப்புக்கொள்ளப்பட்ட வெட்டுக்களை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒத்திவைத்தல் குறித்து, அவர் இழிந்த முறையில் அது உண்மையில் இயலாது என்றார், “ஒருவேளை சில வாரங்களுக்கு முடியும், ஆனால் சில ஆண்டுகள் என்பது முடியாது.”

ஏற்கனவே ஒரு மஞ்சள் அட்டையை கிரேக்கம் பெற்றுவிட்டது, அடுத்த குற்றம் என்றால் சிவப்பு அட்டை, வெளியே அனுப்பப்படல் என்ற பொருளாகும் என்றார் Brüderle. பவேரியப் நிதி மந்திரி Markus Söder (கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) உடைய ஆதரவும் இவருக்குக் கிடைத்துள்ளது; அவர் கிரேக்கத்தின் மீட்பு முயற்சிகள் தோற்றுவிட்டன, யூரோப்பகுதியில் இருந்து திரும்பச் செல்லுவது என்பது தவிர்க்க முடியாதது என்றார். 

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் கிரேக்கப் பணிப் பிரிவிற்கான தலைவர் Horst Reichenbach அரசாங்கம் பொருட்கள் வழங்கியவர்களுக்கு உரிய பாக்கிப் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இவை கிட்டத்தட்ட 6 பில்லியன் யூரோக்கள் என்று உள்ளன; இன்னமும் இவை தேசியக் கடனின் ஒரு பகுதி எனக் கருதப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வேலையின்மையை அதிகரிக்கும், ஊதியத் தரங்களைக் குறைக்கும், இதையொட்டி மந்த நிலை ஆழமாகும் என்பதில் ஐயத்திற்கு இடம் இல்லை. ஏற்கனவே கிரேக்கம் உத்தியோகபூர்வ 22.6 சதவிகித வேலையின்மையைக் கொண்டுள்ளது; இது இளவயதினரிடேயே இன்னும் இரு மடங்கு கூடுதலாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் 1,000 வணிகங்கள் மூடப்படுகின்றன; பொருளாதாரம் இந்தக் காலாண்டில் 9 சதவிகிதத்திற்கும் மேல் சுருக்கம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஆணையம் உத்தரவிட்ட கருத்துக் கணிப்பு ஒன்று கிரேக்கர்களில் 90% பேர் உணவுத் தட்டுப்பாடு குறித்து பெரும் அச்சம் அடைந்துள்ளனர் என்று கண்டறிந்துள்ளது. ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகியில் சூப் வழங்கும் இடங்களில் வரிசைகள் இன்னும் நீண்டுள்ளன; அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களின் மின் வசதி வெட்டப்படுகின்றன; அவர்களால் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்பதால்.

ஒவ்வொரு கூடுதலான சமூகநலக் குறைப்பும் கிரேக்கத் தொழிலாளர்களின் எதிர்ப்பைச் சந்திக்கும். பாராளுமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மையினர் முக்கூட்டுடனான உடன்பாட்டுக் குறிப்பை விமர்சித்த கட்சிகளுக்கு வாக்களித்தனர். பழமைவாத புதிய ஜனநாயகக் கட்சி ND அரசாங்கத்தை சமூக ஜனநாயக PASOK, இடது ஜனநாயகம் DIMAR ஆகியவற்றுடன் இணைந்து அமைக்க முடிந்ததற்குக் காரணம் நாட்டின் ஜனநாயகத் தன்மை அற்ற தேர்தல் முறையினால்தான்.

ஒன்றாக இம் மூன்று கட்சிகளுக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மையான 50% ஐ அடைய முடியவில்லை. உண்மையில் வாக்களிக்காதவர்களின் விகிதம் 38% என்ற நிலையில், வாக்களிக்கும் தகுதி பெற்ற கிரேக்க வாக்காளர்களில், 29.8 சவிகிதத்தினர்தான் அரசாங்கக் கட்சிகள் மூன்றில் ஒன்றிற்கு தங்கள் வாக்குகளைப் போட்டனர்.

சிரிசா எனப்படும் மாற்றிட்டு இடது கூட்டணியைத்தான் அரசாங்கம் வெகுஜன எதிர்ப்பைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு நம்பியுள்ளது. தேர்தல்களில் சிரிசா உடன்பாடு நிராகிரக்கப்பட வேண்டும் என்று கோரி மொத்த வாக்குகளில் 27%த்தைப் பெற்றது.

ஆரம்பத்தில் இருந்தே சிரிசா தான் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுக்கும் என்பதைத் தெளிவாக்கியது; அவைதான் சிக்கனத்திட்டத்தை ஆணையிட்டன, முதலாளித்துவ ஒழுங்கின் புறம் உறுதியாக நிற்கின்றன. இப்பொழுது இது எதிர்ப்பை அடக்கத் தயார் அல்லது அதை தீமையற்ற வழிகளில் திருப்பிவிடக்கூடும் என்பதில் விருப்பம் உண்டு என அறிக்கை விடுத்துள்ளது.

கட்சிப் பிரதிநிதிகள் அரசாங்கம் “நாட்டை விற்றுவிட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளனர்; ஆனால் பலமுறையும் சிரிசா ஒரு “பொறுப்புடைய எதிர்க்கட்சியாக” செயல்படும் என்றும் தொழிலாளர்களை வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்கள் செய்ய அழைப்பு விடாது என்றும் கூறியுள்ளது.