World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japanese nuclear reactor re-activated despite mass protest

பரந்த எதிர்ப்புகளையும் மீறி ஜப்பானிய அணு சக்தி உலை மீண்டும் இயக்கப்படுகின்றது

By Mike Head
3 July 2012
Back to screen version

மார்ச் 11, 2011 புகுஷிமா நில அதிர்ச்சிப் பேரழிவிற்குப் பின்னர், கடந்த வெள்ளியன்று ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதில் பிரதிபலிப்பான ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பை மீறி முதல் தடவையாக மறுபடியும் ஞாயிறன்று ஒரு ஜப்பானிய அணுச்சக்தி உலை திறக்கப்பட்டுள்ளது.

மத்திய டோக்கியோவில் பிரதம மந்திரி யோஷிகோ நோடாவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே ஒரு அணிவகுப்பில் 150,000ல் இருந்து 180,000 க்குள்ளான மக்கள் கலந்து கொண்டனர் என்று அமைப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இது சமீபத்திய ஆண்டுகளில் மிகப் பெரிய எதிர்ப்புக்களில் ஒன்றாகின்றது. முந்தைய வார அணிவகுப்பில் 45,000 பேர் கலந்து கொண்டதில் இருந்து இந்த அணிவகுப்பில் மக்கள் மிக அதிகமாகப் பங்கு பெற்றனர்.

 

Asahi Shimbun, அணு உலைக்கூடங்கள் மீண்டும் திறப்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்ற பொருள்தரும் சைகடோ ஹன்டாய்! என்னும் கோஷம் தெருக்களில் நிறைந்திருந்தது என்று குறிப்பிடுகிறது. மக்களின் பரந்த பிரிவு, குழந்தைகளுடன் இருந்த தாய்மார்கள், ஓய்வூதியம் பெறுவோர், வணிகர்கள் என கோஷ அட்டைகளையும் பதாகைகளையும் ஏந்திய வண்ணம் ஜப்பானின் மேலைக் கடற்கரையோரத்தில் மீண்டும் இரு அணு உலைக்கூடங்கள் ஓய் என்னும் இடத்தில் திறக்கப்பட உள்ளது குறித்த அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்தனர்.

தன்னுடைய இரு சிறு குழந்தைகளை அணிவகுப்பிற்குக் கொண்டுவந்த ஒரு 36 வயது பெண்மணி, செய்தித்தாளிடம் தான் அத்தகைய அணிவகுப்பில் முதல் தடவையாகப் பங்கு பெறுவதாகக் கூறினார். அரசாங்கம் எங்கள் வாழ்க்கைகளை பற்றி ஒருபொழுதும் கவலைப்படுவதில்லை. இதுவரை நானும் மௌனமாகப் பார்த்து வருகிறேன். ஆனால் இனி அப்படி ஒதுங்கி நிற்க முடியாது என்றார் அவர். அவருடைய கருத்துக்கள் அரசியல் ஆளும்பிரிவினரின் பரந்த அவநம்பிக்கையை பிரதிபலிக்கிறது. அதுவோ பரந்த பாதுகாப்பு, சுகாதார கவலைகளை ஒதுக்கி வைத்துள்ளது.

அணிவகுப்பு எண்ணிக்கை அதிகம் இல்லை என்பது போல் பொலிஸ் காட்ட முற்பட்டு 17,000 பேர்தான் வந்திருந்தனர் எனக் கூறியது. ஆனால் கூட்டமோ ஆறுவரிசை பாதை முழுவதும் நிறைந்து, அருகிலுள்ள தெருக்களிலும் வழிந்து நின்றது. பொலிசார் ஐந்து கவசமணிந்த கலகக் கட்டுப்பாட்டுப் பிரிவுப் பேருந்துகளை நோடா சுற்றுச் சுவருக்கு வெளியே நிறுத்தி, எதிர்ப்பாளர்கள் அங்கு நுழையாமல் தடுக்க முற்பட்டனர்; பல ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேலே சுற்றிய வண்ணம் இருந்தன.

அதே நாளில் மற்ற நகரங்களிலும் சிறு அணிவகுப்புக்கள் நடைபெற்றன. இவற்றுள் ஓசாகா, நாகோயா, நாகாசாகி, குமமோடோ ஆகிய நகரங்கள் அடங்கும், ஞாயிறன்று மற்றொரு 10,000 பேர் கொண்ட ஆர்ப்பாட்டம் டோக்கியோவில் நடைபெற்றது. 700 எதிர்ப்பாளர்கள் ஓய் நிறுவனத்தின் நுழைவாயிலை முற்றுகை இட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள், சமூகச் செய்தி ஊடகத்தின் மூலம் முக்கியமாக அமைக்கப்பட்டவை, ஐயத்திற்கு இடமின்றி பரந்த பொது உணர்விற்குக் குரல் கொடுக்கின்றன. ஜூன் 5ம் தேதி Pew கருத்துக் கணிப்பு விடையிறுத்தவர்களில் 70% நாட்டின் அணுச்சக்தி மீது கொண்டிருக்கும் நம்பகத்தன்மை குறைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு கொடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கிறது.

ஆயினும்கூட ஆர்ப்பாட்டங்கள் ஓய் 3வது எண் உலைக்கூடம் மறுதிறப்பை நிறுத்துவதில் தோல்வியற்றன. இந்த ஆலையை இயக்கும் அமைப்பு கன்சாய் மின் சக்திநிறுவனமான KEPCO, அதன் வலைத் தளத்தில் ஞாயிறன்று ஒரு அணுச்சக்தி வெளிப்பாடு ஏற்பட்டது என்றும் இது மின் உற்பத்தியில் ஒரு முக்கிய அடி என்றும் எழுதியுள்ளது.

ஜப்பானின் மூத்த தொழில்துறைத் துணை மந்திரி சைசூ மகினோ ஓய் எதிர்ப்பு முற்றுகையை மீறி மறுதிறப்பில் கலந்து கொண்டார். அவர் KEPCO துணைத் தலைவர் கிடேக்கி டோயோமட்சு உடன் நின்று, அரசாங்கம் இத்திசையில் தொடர இருக்கும் உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கெப்கோவின் இரண்டாம் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள உலைக்கூடம், ஓய் இல் எண் 4, ஜூலை 17 அன்று செயல்படத் தொடங்கும். மற்ற உலைக்கூடங்கள் ஏற்கனவே இதைப் பின்பற்றும் வழிவகையில் உள்ளன; இவற்றுள் டோக்கியோ மின்சக்தி நிறுவனம், (TEPCO) செயல்படுத்தும் நிறுவனமும் அடங்கும். அந்நிறுவனம்தான் புகிஷிமாப் பேரழிவிற்குப் பொறுப்பாகும்.

ஜப்பானின் 50 உலைக்கூடங்களும் பராமரிப்பு மற்றும் தரமுயர்த்தலுக்காக மே மாதத்தில் இருந்து மூடப்பட்டன. ஆனால் கடந்தாண்டு புகுஷிமா உலைக்கூடங்களில் மூன்று ஓரளவு கரைந்து நின்ற நிலையில் மக்களின் கவலை கணிசமாகப் பெருகியது. ஏனெனில் அக்கரைப்பு அப்பகுதியில் வசித்து வந்த 87,000 மக்களைத் தங்கள் வீடுகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றிவிட்டது.

KEPCO வின் ஓய் 3ம் எண் உலைக்கூடம் மறுபடி செயல்படத் தொடங்குகையில், TEPCO செயற்படாது இருக்கும் புகுஷிமா ஆலையில் மற்றொரு பிரச்சினை குறித்துத் தகவல் கொடுத்துள்ளது. செலவழிக்கப்பட்ட அணு எரிபொருள் பொதி அதன் 4ம்எண் உலைக்கூடத்தில் உள்ள குளிர்விக்கும்முறை சனிக்கிழமை அன்று செயலிழந்துவிட்டது என்றும் ஒரு தற்காலிக முறை ஞாயிறு நிறுவப்பட்டது என்றும் கூறியுள்ளது. TEPCO, இந்த குளிர்விக்கும் முறை மீட்கப்பட வேண்டும் இல்லாவிடின் வெப்பநிலை பாதுகாப்புத் தரங்களைவிட உயர்ந்துவிடும் என்று கூறியுள்ளது.

கடந்த வாரம் TEPCO வின் பங்குதாரர்கள் முறையாக ஒரு டிரில்லியன் யென்னை (அமெரிக்க$12 பில்லியன்) பிணையெடுப்பாக அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டது. இது ஒரு வணிகத்திட்டத்தைத் தளமாகக் கொண்டுள்ளது. அதில் நிறுவனம் அணு உலைக்கூடங்களை அதன் Niigata Prefecture ல் உள்ள Kashiwazaki-Kariwa ஆலையை மறுபடியும் திறக்கலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. இந்த முன்கருத்து, கடந்த ஆண்டுப் பேரழிவில் பொறுப்பை மறுத்துள்ள TEPCO வின் வரலாறு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பற்றிப் பேச்சுக்கள் நடத்துவதில் அது காட்டும் தாமதங்களுடன் இணைந்து TEPCOவைப் பொறுத்தவரை, அதிகம் ஏதும் மாறாது என்பதைத்தான் காட்டுகிறது. அணுச்சக்தி விபத்துக்களை மூடிமறைத்தல் அல்லது குறைத்துக் கூறுதல் என்ற நீண்ட நிரூபிக்கப்பட்ட வரலாற்றை TEPCO கொண்டுள்ளது.

பெரும்பாலான செய்தி ஊடகப் பிரிவுகள் TEPCOவிற்கு பிணை கொடுக்கப்பட்டதை தவறாக தேசியமயமாக்கல் என விவரித்துள்ளன. அரசாங்கம், நிறுவனத்தில் இப்பொழுது பெரும்பாலான பங்குகளைக் கொண்டுள்ளது. ஆனால் பெருநிறுவனம் பிற வணிகங்கள், நிதி கொடுப்போர் ஆகியோருடன் நெருக்கமான பங்காளித்தனத்துடன் ஒரு இலாப நோக்குடைய நிறுவனமாகத்தான் செயல்படும்.

ஜப்பானிய அரசாங்க கட்சியான நோடாவில் ஜனநாயகக் கட்சி, மீண்டும் திறக்கப்படும் அனைத்து உலைக்கூடங்களும் நெருக்கடிச்சோதனைகளுக்கு உட்படுத்தப்படும், அதையொட்டி பாதுகாப்பு உத்தரவாதம் ஆகும் என்று கூறியுள்ளது. ஆனால் அடிப்படை நெருக்கடிக்கால உள்கட்டுமானம் உரிய இடத்தில் இல்லை. புதிதாகத் திட்டமிடப்பட்டுள்ள அணு ஒழுங்கமைப்பு ஆணையம் இன்னமும் செயல்படத் தொடங்கவில்லை. இன்னும் தேவைப்படும் அடிப்படை வசதிகளில் உலைக்கூடங்களை சுனாமியில் இருந்து பாதுகாக்கும் உயர்த்தப்படும் கடற்சுவர்கள், தளக்கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் கதிரியக்கக் கண்காணிப்புக் கருவி, விரிவுபடுத்தப்பட்டுள்ள வெளியேற்றப் பகுதிகளில் மருத்துவ விநியோகங்கள் ஆகியவை அடங்கும்.

மேலும் உலகில் மிக அதிகமாக நில அதிர்ச்சிப் பாதிப்புடைய பிராந்தியங்களில் ஜப்பானும் ஒன்றாகும். டோயோ பல்கலைக்கழகத்தின் மிட்சுஹிசா வாட்டனாபே மற்றும் கோபே பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியர் கட்சுஹிகோ இஷிபீஇ ஆகிய நில அதிர்வு வல்லுனர்கள் இருவர் கடந்த வாரம் KEPCO வின் ஓய் ஆலை நான்கு பெரிய கடலடித் தளத் தவறுகள் ஏற்படக்கூடிய இடங்களுக்கு மேல் உள்ளது என்றும் ஒரு சிறிய தளத்திற்கு மேல் உள்ளது என்றும் எச்சரித்துள்ளனர். KEPCOவின் அவசரக்கால வழிவகைகள் ஒரே நேரத்தில் இரண்டு தவறுகளைத்தான் எதிர்கொள்ள முடியும். ஆலை வகாசா வளைகுடாவில் உள்ளது. இது 13 உலைக் கூடங்களுக்குத் தாயகம் ஆகும். க்யோடோ, ஓசாகா ஆகிய இரு பெருநகரங்கள் பெரும் தொலைவில் இல்லை.

நோடாவில் உள்ள அரசாங்கம் உலைகள் மறுதிறப்பை விரைவுபடுத்துவதை நியாயப்படுத்தும் வகையில் அதன் முக்கிய கவலை சாதாரண மக்களைப் பற்றி என வாதிடுகிறது. இக்கோடையில் கடுமையான மின் பற்றாக்குறைகள் வரும் என வலியுறுத்துகிறது. புகுஷிமா பேரழிவிற்கு முன்னர், ஜப்பான் கிட்டத்தட்ட அதன் எரிசக்தி தேவையை அணுசக்தியில் இருந்துதான் பெற்றது. அரசாங்கம் மக்கள் கருத்தை ஈர்க்கும் வகையில், நாடு அணுசக்தி மின்சார உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றால் இல்லங்களின் மின் கட்டணங்கள் 2030க்குள் இருமடங்கு ஆகும் எனவும் எச்சரித்தது. ஆயினும்கூட, அதன் டிரில்லியன் யென் டெப்கோ பிணையெடுப்பு அதன் உண்மை முன்னுரிமைகள் பெருநிறுவன உயரடுக்கிடம் உள்ளன என்பதையே நிரூபித்துள்ளன.

ஜப்பான் முழுவதும் புகுஷிமாப் பேரழிவு அணுச்சக்தி தொழில்நுட்பத்தின் அழிவுதரும் ஆபத்துக்களைப் பற்றிய ஆழ்ந்த கவலைகளை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது. இந்த அச்சம் ஹிரோஷிமா, நாகாசாகியில் 1945ம் ஆண்டு போட்ட அணுகுண்டுக் காலத்தில் இருந்து உள்ளது. அரசியல், பெருவணிக உயரடுக்கு, தாராளவாத ஜனநாயகக் கட்சியின் முக்கிய ஆதரவுடன் உள்ள அரசாங்கம் ஆகியவை இக்கவலைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. அதேபோல், இது TEPCOவை மீட்கையில், மிகவும் மதிப்பிழந்த நுகர்வு வரியை 10% ஆல் இருமடங்காக உயர்த்தியுள்ளது. கடந்த வெள்ளியன்று டோக்கியோவில் நடந்த வெகுஜன எதிர்ப்பு அரசியல் ஆளும்தட்டு முழுவதும் பெருவணிகச்சார்பு கொண்டிருப்பதில் ஆழ்ந்த அதிருப்தி அடைந்துள்ளதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.