WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
இலங்கை சிறைக் காவலர்கள்
ஆர்ப்பாட்டம் செய்த கைதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்
By
Wasantha Rupasinghe
28 January 2012
use
this version to print | Send
feedback
இலங்கை
சிறைக் காவலர்கள், புதன் கிழமை நாட்டின் மிகப் பெரிய சிறைச்சாலையான கொழும்பின்
வெலிக்கடை மகஸின் சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டம் செய்த கைதிகளை சுட்டு பலரைக்
காயப்படுத்தினர். இந்த வன்முறையும் அது கொடூரமாக நசுக்கப்பட்ட முறையும்,
சிறைச்சாலைகளில் உள்ள கொடுமையான நிலைமைகளையும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ
அரசாங்கத்தின் ஜனநாயக-விரோத பண்பையும் கோடிட்டுக் காட்டுகின்றன.
26
சிறைக் கைதிகள் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் சுமார் 19 பேருக்கு முழங்காலுக்குக் கீழ் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்
ஏற்பட்டுள்ளன. ஐந்து சிறைக் காவலர்களும் செங்கற்கள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டு
காயமடைந்துள்ளனர்.
ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்த சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர,
வன்முறைகள் “வெளியாரால்”
தூண்டிவிடப்பட்டதாகவும் வன்முறையில் ஈடுபட்டவர்கள்
“போதைப்
பொருளுக்கு அடிமையானவர்கள்”
என்றும் கூறினார். பொலிஸ், சிறை அதிகாரிகள் மற்றும் ஊடங்களும் அதே பிரச்சாரத்தையே
மீண்டும் மீண்டும் செய்தன. இவை அனைத்தும் உயர் அதிகாரிகளின் கட்டளையின் பேரில்
துப்பாக்கி ரவைகளால் கைதிகள் சுடப்பட்டதன் உள்ளர்த்தங்களை மூடி மறைக்கவும்
மேற்கொள்ளப்பட்டுள்ள ஒடுக்குமுறையை நியாயப்படுத்தவும் செய்யப்பட்டன.
புதன்
கிழமை காலை, சிறையின் மகஸின் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான கைதிகள், தமது
நண்பர்களும் உறவினர்களும் வெளியில் இருந்து உணவு கொண்டுவருவதற்கு புதிய தடை
விதிக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் உடனடியாக
கைதிகளை அடிக்கத் தொடங்கினர். அடித்து ஆத்திரமூட்டியதற்கு பதிலடியாக கைதிகள்
காவலர்களை கற்களால் தாக்கிய வேளை, காவலர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
வன்முறையில் மேலும் கைதிகள் இணைந்துகொண்டு கற்களை வீசியதோடு கோப்புகள் இருந்த
அறைக்கு தீ மூட்டினர். சிலர் சிறைச்சாலை கூறை மேல் ஏறிக்கொண்டனர். சிறைச்சாலையின்
பிரதம அதிகாரியை உடனடியாக நீக்கக் கோரிய கைதிகள்,
“எங்களை
சுட வேண்டாம்! எஸ்.பீ. (பிரதம அதிகாரி) வேண்டாம்!”
என்ற வாசகத்துடன் பதாதைகளையும் காட்சிப்படுத்தினர்.
வன்முறையை அடக்குவதற்கு அரசாங்கம் பொலிசையும் இராணுவப் பிரிவையும் அழைத்தது. சுமார்
நான்கு மணித்தியாலங்களாக ஆர்ப்பாட்டம் செய்த கைதிகளை விரட்டுவதற்காக பொலிசார்
பரந்தளவில் கண்ணீர் புகை வீசியதோடு விசேட பொலிஸ் படையும் நிலைகொண்டது.
சிறைச்சாலையினுள் போதைப் பொருட்களை அழிப்பதில்
“மிகச்
சிறந்த சேவையாற்றியிருந்ததால்”
இந்த புதிய பிரதம அதிகாரியை கலஹாரி சிறையில் இருந்து மகஸினுக்கு நியமித்ததாக சிறை
அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். உணவு மீதான தடை, புதிய அதிகாரி நடத்தும்
இறுக்கமான ஆட்சிக்கு அறிகுறியாகும்.
ஆஸ்பத்திரியில் வைத்து லக்பிம பத்திரிகையுடன் பேசிய ஒரு கைதி,
“எங்கள்
வீடுகளில் இருந்து கொண்டுவந்த உணவுகளை அதிகாரிகள் தடை செய்துள்ளதை இன்று காலை
கண்டோம். அதற்கு எதிராக சுமார் 2,000 கைதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த
அநியாயத்தைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் சிறைச்சாலை ஆணையாளரை சந்திக்க
முயற்சித்தோம். ஆனால் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. சிறைக் காவலர்கள் கேட்டுகளை
மூடிவிட்டு எங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு
இலக்கான கைதிகள் ஒருவர் பின் ஒருவராக விழுந்தனர். நானும் தாக்கப்பட்டு தரையில்
விழுந்தேன். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தாலும் எங்களை சுடுவதற்கு அவர்களுக்கு உரிமை
இல்லை. அவர்களுக்கு அவ்வாறு ஒரு உரிமை இருக்கின்றதா?”
எனக் கேட்டார்.
“எங்கள்
வீடுகளில் இருந்து கிடைக்கும் உணவை மட்டுமே நாம் சாப்பிடுவோம். இங்குள்ள கைதிகளில்
90 வீதமானவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். ஏனெனில் சிறையில் கிடைக்கும் சாப்பாடு
அவ்வளவு நல்லதல்ல. வீடுகளில் இருந்து உணவு கொண்டுவருவதை தடுப்பது மிகவும்
அட்டூழியம்”
என இன்னொரு கைதி கூறினார். “நான்
மூன்று பிள்ளைகளின் தந்தை. எனக்கு ஏதாவது நடந்தால் எனது மனைவிக்கும்
பிள்ளைகளுக்கும் என்ன நடக்கும்?”
என அவர் மேலும் கேட்டார்.
மகஸின்
சிறையில் உள்ள சகல கைதிகளும் விசாரணைகளை எதிர்பார்த்திருக்கும் விளக்கமறியல்
கைதிகள். சிலர் பல ஆண்டுகளாக அங்கேயே இருந்து தளர்ந்து போயுள்ளனர். அங்கு தடுத்து
வைக்கப்பட்டுள்ள சுமார் 180 தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றாததோடு மறுநாள்
வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
கைதிகளை
மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதில் இலங்கை சிறைகள் பேர்போனவை. கடந்த நவம்பரில்,
அனுராதபுறம் சிறையில் நடந்த ஒரு இனவாத ஆத்திரமூட்டலில் சிறை அதிகாரிகளால்
தாக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பு கோரி கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பல்வேறு
சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், தாம் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக
தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் வசதிப் பற்றாக்குறையை எதிர்த்தும் அடிக்கடி
எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கடந்த
ஆண்டு ஜனவரி மாதம், அனுராதபுறம் சிறையில் தரமற்ற உணவை எதிர்த்து கைதிகள் போரடிய
போது, காவலர்கள் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
கைதிகளுக்கு எதிராக படைகளைப் பயன்படுத்துவதானது ஒரு தனியான போக்கு அல்ல. ஜனாதிபதி
மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் அரசியல் எதிரிகளை அடக்கவும் ஆர்ப்பாட்டம் செய்யும்
தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தாக்கவும் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான
படுகொலைகளை செய்யவும் பாதுகாப்பு படைகளுக்கும் பொலிசுக்கும் சுதந்திரம்
கொடுத்துள்ளது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின்
போது இத்தகைய பொலிஸ்-அரச வழிமுறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு கூர்மைபடுத்தப்பட்டன.
ஆசிய
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் படி, 2011ம் ஆண்டில் பொலிஸ் காவலில் இருந்த போது 12
பேர் கொல்லப்பட்டுள்ளனர். எந்தவொரு குற்றத்துக்கும் குற்றஞ்சாட்டப்படாதவர்கள்
வெளியில் கொண்டு செல்லப்பட்டு வசதியான இடங்களில் வைத்து சுட்டுக்
கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்கள் பொலிசாரை தாக்க அல்லது தப்பிச்செல்ல முயற்சித்ததாக
பொலிசார் கூறிக்கொண்டனர்.
உழைக்கும் மக்கள் மற்றும் வறியவர்களின் சமூக நிலைமைகள் சீரழிந்து வருவதால், போதைப்
பொருள் கடத்தல் மற்றும் சிறிய திருட்டுக்களை செய்வதன் மூலம் பிழைப்புத் தேட
முயற்சித்தவர்களால் சிறைக் கூடங்கள் நிரம்பிப்போயுள்ளன. அவர்கள் தடுத்து
வைக்கப்பட்டுள்ள நிலைமைகள் பயங்கரமானதாகும். சிறைச்சாலைகள் ஐ.நா.வின்
“கைதிகளை
நடத்துவதற்கான குறைந்தபட்ச தர விதிமுறைகளை”
பின்பற்றுவதில்லை என ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்
பொருள் மற்றும் குற்றங்கள் சம்பந்தமான ஐ.நா. அலுவலகத்தின் பிரதிநிதியான கிறிஸ்டினா
அல்பெடின், நாட்டின் சிறைச்சாலைகளில் 11,000 கைதிகளையே வைத்திருக்க முடியும், ஆனால்
சிறைச்சாலைகளின் ஜனத்தொகை 30,933 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது என கடந்த ஜூலையில்
ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். 50 வீதமான கைதிகள் விளக்கமறியலில் உள்ளதோடு
பாதிப்பேர் தண்டப் பணத்தைக் கட்ட முடியாததால் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அல்பெடின்
மேலும் கூறினார்.
பெண்
கைதிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஐ.நா. கற்கையின் படி, வெலிக்கடை சிறையில்
650 பெண் கைதிகள் 150 கைதிகளுக்காக கட்டப்பட்ட ஒரு பகுதியில் அடைத்து
வைக்கப்பட்டுள்ளனர். காலை 5 மணிவரை மலசல கூடங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு
அனுமதியில்லாததோடு தமது கூடங்களில் வாளிகளைப் பயன்படுத்தத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனைய
மனித உரிமை மீறல் பிரச்சினைகளோடு, ஐ.நா. அறிக்கை வந்த போது, அரசாங்கம் நிலைமையை
ஆராய்வதாக வாக்குறுதியளித்தது. புதன் கிழமை சிறையில் நடந்த சம்பவம், இந்த
வாக்குறுதிகள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
சிறையில் நடந்த வன்முறை சமூக அமைதியின்மையின் ஒரு அறிகுறி என்பதையிட்டு அரசியல்
ஸ்தாபனத்தின் ஒரு பகுதியினர் கவலை வெளிப்படுத்தியுள்ளனர். தொழிலாளர்கள் மற்றும்
பல்கலைக்கழக மாணவர்களின் அண்மைய ஆர்ப்பாட்டங்களோடு, இந்த சம்பவமும், இலங்கை ஒரு
“பூகம்பத்தின்”
உச்சியில் உள்ளது என சுட்டிக்காட்டி டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர்
தலைப்பு எச்சரித்துள்ளது.
தொழிகளை, தொழில் நிலைமைகளை மற்றும் வாழ்க்கை நிலைமைகளையும் வெட்டித் தள்ளி,
அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை உக்கிரமாக்குவதற்கு எதிராக
எதிர்ப்பு வளர்ச்சியடைகின்ற நிலையில், தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின்
ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு அரசாங்கமும் ஆளும் தட்டும் தயார்
செய்து வருகின்ற வழிமுறைகளின் வகையையே வெலிக்கடை சிறைச்சாலை வன்முறை கொடூரமாக
ஒடுக்கப்பட்ட விதம் வெளிப்படுத்துகிறது. |