WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Military scuttles
Jaffna protest against abduction
யாழ்ப்பாணத்தில் ஆட்கடத்தலுக்கு எதிராக
நடக்கவிருந்த எதிர்ப்புப் போராட்டத்தை இராணுவம் தடுத்தது
By our
correspondent
25
January 2012
ஜனவரி 17
அன்று,
இரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டதற்கு எதிராக
ஒரு எதிர்ப்புக் குழு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த
போராட்டத்துக்கு இலங்கை இராணுவம் கடிவாளமிட்டது. இது
யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வட மாகாணத்தில் ஜனநாயக உரிமைகள்
மீது இலங்கை அரசாங்கமும் இராணுவமும் தொடுக்கும் தாக்குதல்கள்
அதிகரித்து வருவதன் பாகமாகும்.
2009 மே மாதம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள்
யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஜனாதிபதி மஹிந்த
இராஜபக்ஷ வட மாகாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பை இறுக்கியுள்ளார்.
எதிர்க் கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணியில்
(ஜே.வி.பீ.) இருந்து பிரிந்து சென்ற மக்கள் போராட்ட இயக்கம்
(பீ.எஸ்.எம்.), டிசம்பர் 9 அன்று கடத்தப்பட்ட லலித் குமார்,
குகன் முருகானந்தன் ஆகிய இரு உறுப்பினர்களின் விடுதலையைக் கோரி
இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் இருவரும்
ஆவரங்கால் கிராமத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி மோட்டார்
சைக்கிளில் வந்துகொண்டிருந் போதே கடத்தப்பட்டனர். இந்த
கடத்தலில் தமக்கு தொடர்பில்லை என பாதுகாப்பு படை மறுத்தாலும்,
தாம் சேகரித்துள்ள தகவல்கள் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதையே
காட்டுகிறது என பீ.எஸ்.எம். வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாண நகரில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்காக
பீ.எஸ்.எம். தென் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானவர்களை
வாகனங்களில் அணிதிரட்டிச் செல்ல திட்டமிட்டிருந்தது.
பீ.எஸ்.எம். கூறுவதன் படி, அவர்களது 20 பஸ்களுக்கும் ஏனைய
வாகனங்களுக்கும் இராணுவத்தினரும் பொலிசாரும் வழமைக்கு மாறான
சோதனைகளைச் செய்து, வவுனியாவுக்கு தெற்கில் உள்ள புனவயில்
இருந்து புளியங்குளம் வரை இடையூறுகளை ஏற்படுத்தினர். இராணுவம்
கடமையில் இருக்கும் ஓமந்தை பிரதான சோதனை நிலையத்திலும் மற்றும்
புளியங்குளத்திலும் இந்தக் குழு அடக்குமுறைக்கு
உள்ளாக்கப்பட்டது.
பாதை திருத்தப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் பிரதான பாதையூடாக
பயணிக்க முடியாது என்றும் ஏற்பாட்டாளர்களுக்கு
புளியங்குளத்தில் வைத்து தெரிவித்த இராணுவத்தினர், அவர்களை
வேறு வழியில் திருப்பி விட்டனர். அந்த வழியாக சென்றால் அதிக
நேரம் எடுக்கும் என தெரிந்துகொண்டு அவர்கள் மீண்டும்
புளியங்குளத்துக்கு வந்த போது, இராணுவம் அவர்களை
யாழ்ப்பாணத்துக்குச் செல்ல அனுமதிக்காததோடு, அவர்களை தடுத்து
நிறுத்துமாறு தமக்கு உயர் மட்டத்தில் இருந்து கட்டளை
வந்திருப்பதாக தெரிவித்தனர். அந்தப் பாதையில் வந்த லொறி
ஒன்றில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அற்ப காரணம் ஒன்றை
இராணுவம் கூறியுள்ளது.
இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் நிலைமையைக் கண்காணிக்க
படையினரையும், பொலிசையும் மற்றும் புலனாய்வுத் துறையினரையும்
நகரில் ரோந்து செல்ல கனமாக இறக்கிவிட்டிருந்தனர். அவர்கள், ஏன்
நீங்கள் நகருக்கு வந்தீர்கள் என சாதாரண மக்களிடம் கேள்விக்
கேட்டு அச்சுறுத்தினர். நிருபர்கள் சந்திப்புக்கு வந்திருந்த
ஊடகவியலாளர்களின் வாகனங்களும் இராணுவத்தினர் என
சந்தேகிக்கப்படுபவர்களால் சேதமாக்கப்பட்டிருந்தன.
அண்மைய மாதங்களாக யாழ்ப்பாணத்தில் மக்களை பயமுறுத்துவதையும்
அச்சுறுத்துவதையும் இராணுவம் அதிகரித்துள்ளது. யுத்தத்தின்
போது கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் டிசம்பர் 9 ஏற்பாடு
செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை அச்சுறுத்துவதற்காக இராணுவம்
தலையிட்டது. வட மாகாணத்தில் மட்டும் பலர் கடத்தப்பட்டுள்ளதோடு
சிலரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
லலித்குமார் மற்றும் குகன் காணாமல் போயுள்ளமை பற்றி
பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பிய போது, பொலிசார் பல குழுக்களை
அமைத்துள்ளதாக அமைச்சரவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா
பதிலளித்தார். அவர்கள் 13 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருந்த
போதிலும் அவர்கள்
“வெள்ளை
வான்களில்”
கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்தனர்.
பாதுகாப்பு படையினர் அல்லது துணைப்படையினர் என
சந்தேகிக்கப்படுவோர் கடத்துவதற்காக வெள்ளை வான்களையே
பயன்படுத்தினர்.
இத்தகைய பொலிஸ் அறிக்கைகள் வழமையானவையாகும். ஒருவர்
கடத்தப்பட்டவுடன் அவரது உறவினர்களோ அல்லது ஏனையவர்களோ பொலிசில்
முறைப்பாடு செய்வார்கள். விசாரணை செய்துவருவதாக பொலிசார்
கூறினாலும் கடைசி வரை அவர்கள் எந்தவொரு ஆதாரத்தையும்
கண்டுபிடிப்பதில்லை. யுத்தத்தின் போது இடம்பெற்ற
நூற்றுக்கணக்கான கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கும்
சம்பங்களுக்கு இதுவே நேர்ந்தது.
இராணுவம் மறுப்புத் தெரிவிக்கும். எவ்வாறெனினும்,
யாழ்ப்பாணத்தில் மட்டும் 40,000 படையினர் தங்கியிருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கான பொலிசாரும் கடமையில்
உள்ளனர். அவர்களுக்குத் தெரியாமல், அவர்களது ஆதரவு அல்லது
உடந்தையில்லாமல் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது
நிகழ்தற்கரியதாகும்.
வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் தொடர்ச்சியான துன்பகரமான
நிலைமைகளுக்கும் எதிராக பகைமை வளர்ச்சியடைந்து வருகின்ற
நிலையில், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களும்
அச்சுறுத்தல்களும் இடம்பெறுவது அதிகரிக்கின்றது. வடக்கிலும்
தெற்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் கூட்டான சமூகப்
போராட்டம் வெடிக்கும் என்பதையிட்டு அரசாங்கமும் இராணுவமும்
அச்சமடைந்துள்ளன.
இந்த சூழ்நிலையில், யுத்தத்தின் போது உயிரிழந்த சிப்பாய்களை
நினைவுகூர்ந்து மாத்தளையில் நடந்த கூட்டமொன்றில் ஜனவரி 20
அன்று உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ கூறிய
கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. காணாமல் போனவர்கள் பற்றிய
விசாரணைகளைக் கோரி நடக்கும் ஆர்ப்பாட்டங்களை சுட்டிக் காட்டி
அவர் குறிப்பிட்டதாவது:
“காணாமல்
போனவர்களின் படங்களைத் தூக்கிக்கொண்டு இவர்கள் போராட்டம்
நடத்தி அவர்களைப் பற்றி விசாரிக்குமாறு கோருகின்றனர். அவர்கள்
சட்ட விரோத அமைப்புக்களில் சேர்ந்து போராடியவர்களேயாவர்.
இந்தப் பயங்கரவாதிகள் சம்பந்தமாக முப்படைகளும் பொறுப்புச்சொல்ல
முடியாது.”
இந்த அறிக்கைகள் படையினருக்கு தண்டனையிலிருந்து விலக்களிப்புக்
கொடுப்பதைத் தவிர வேறொன்றும் அல்ல. இத்தகைய விலக்களிப்பு
யுத்தத்தின் போது கொடுக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்துக்கு
எதிராக வெகுஜன அதிருப்தி வளர்ச்சியடைகின்ற நிலையில் இதே நிலைமை
பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றது. அரசாங்கமும்
இராணுவமும் மற்றும் பொலிசும் எதிரணியில் இருக்கும் எவரையும்
பயங்கரவாதிகள் என சித்தரித்து, அவர்களை காணாமல் ஆக்கச் செய்ய
முடியும் அல்லது ஏனைய தாக்குதல்களை மேற்கொள்ள முடியும்.
இராஜபக்ஷவின் கூற்றுக்களை தொடர்ந்து ஏனைய அரசாங்க மற்றும்
இராணுவ அதிகாரிகளின் எச்சரிக்கைகளும் வந்துள்ளன. ஜனவரி 21
அன்று, ‘புணர்வாழ்வளிக்கப்பட்டு’
விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழ் கைதிகள்,
“அரசாங்கத்தை
தூக்கி வீச முயற்சிக்கும் எந்தவொரு குழுவுடனும் சேர்ந்து
செயற்பட்டால்”
அவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள், என புணர்வாழ்வு
ஆணையாளர் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு எச்சரித்தார்.
சுமார் இரண்டு ஆண்டுகள் இராணுவத்தால் தடுத்து
வைக்கப்பட்டிருந்த பின்னரே இவர்கள் விடுதலை
செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் யுத்தத்தின் முடிவில் கைது
செய்யப்பட்டு பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலான தடுப்பு
நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட 11,000க்கும் அதிகமானவர்களில்
அடங்குவர். அரசாங்கம் இந்த முகாங்களைப் பார்வையிட சர்வதேச
செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் கூட அனுமதிப்பதில்லை. அவர்கள்
விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கூட, பொலிசாரும் இராணுவப்
புலனாய்வுத் துறையினரும் அவர்களது நடமாட்டங்களை
கண்காணிக்கின்றனர்.
பீ.எஸ்.எம். ஆர்ப்பாட்டத்தின் மீது பாய்ந்ததை எதிர்ப்பதோடு
குகன் மற்றும் லலித்குமாரின் விடுலையைக் கோரும் அதே வேளை,
இந்தக் குழுவின் அரசியலில் இருந்து சோசலிச சமத்துவக் கட்சி
(சோ.ச.க.) முழுமையாக வேறுபடுகின்றது. உண்மையில், இந்த
அமைப்பின் தலைவர்கள் ஜே.வி.பீ.யில் முன்னணியில் இருந்ததோடு 30
ஆண்டுகால யுத்தத்துக்கு ஆதரவளித்ததுடன் இராஜபக்ஷ
அரசாங்கத்தையும் நெருக்கமாக ஆதரித்தனர்.
இந்த அமைப்பு அப்போது கைதுகள், கடத்தல்கள் மற்றும் காணாமல்
ஆக்கும் நடவடிக்கைகளை ஆதரித்ததோடு, அவை யுத்தத்தின் தேவையான
நடவடிக்கைகளும் தவிர்க்க முடியாததுமாகும் என்றும் கூறியது.
வடக்கு மற்றும் கிழக்கில் நடக்கும் தாக்குதல்களை எதிர்ப்பதாக
பீ.எஸ்.எம். வாய்ச்சவாடல் விடுத்தாலும், அது இராணுவ
ஆக்கிரமிப்பை ஆதரிக்கின்றது.
கொள்கைப் பூர்வமான முறையில் யுத்தத்தை எதிர்த்ததோடு வடக்கு
மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை திருப்பியழைக்குமாறு
தொடர்ச்சியாக கோரும் கட்சி சோ.ச.க. மட்டுமே ஆகும். சோ.ச.க.,
சோசலிச அனைத்துலகவாதத்துக்கான போராட்டத்தின் பாகமாக,
ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்கும் ஏனைய வெகுஜனங்களுக்கும்
தலைமையாக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை சர்வதேச ரீதியில்
சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த
போராடுகின்றது.
அந்த வகையில் சகல அரசியல் கைதிகளையும் உடனடியாகவும்
நிபந்தனையின்றியும் விடுதலை செய்யக் கோரி சோ.ச.க.
முன்னெடுத்துள்ள சர்வதேச பிரச்சாரத்தின் பாகமாக
யாழ்ப்பாணத்தில் ஒரு பகிரங்க கூட்டமொன்றையும் ஏற்பாடு
செய்துள்ளது. ஜனவரி 29, ஞாயிற்றுக் கிழமை, பி.ப. 2.00 மணிக்கு
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடக்கவுள்ள கூட்டத்திற்கு வருகை
தந்து எமது போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு நாம் தொழிலாளர்கள்,
இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு
விடுக்கின்றோம். |