WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
உலக பொருளாதாரம்
World economy set for another major downturn
உலக பொருளாதாரம் மற்றொரு பெரும்
வீழ்ச்சியை எதிர்நோக்குகின்றது
By Nick Beams
19 January 2012
செப்டம்பர்
2008இல்
லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவைத் தொடர்ந்து ஏற்பட்ட
நெருக்கடியையும் விட மிகவும் மோசமானவொன்று ஏற்படுவதற்கான
சாத்தியக்கூறுகளோடு,
உலக பொருளாதார கண்ணோட்டத்தின் மீது ஓர்
அச்சமூட்டும் மதிப்பீட்டை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நேற்று வெளியிடப்பட்ட
அவ்வங்கியின் எதிர்கால உலக பொருளாதார அறிக்கையில் உள்ளடங்கி
இருந்தது.
இந்த கணிப்புகள்,
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையிலும்
ஆதரிக்கப்பட்டிருந்தன. 2011இல்
"கணிசமான
அளவிற்கு"
ஏற்பட்ட மெதுவான உற்பத்தி வளர்ச்சியோடு சேர்ந்து,
உலக பொருளாதாரம்
"மற்றொரு பிரதான
வீழ்ச்சியின் விளிம்பை நோக்கி செல்வதாகவும்",
2012 மற்றும்
2013இல்
"நலிந்த வளர்ச்சி"
மட்டுமே எதிர்பார்க்கப்படுவதாகவும்
அந்த அறிக்கை குறிப்பிட்டது.
யூரோ மண்டல நிதியியல்
நெருக்கடி ஆழமடைய தொடங்கியிருந்த நிலையில்,
பொருளாதாரம் ஒரு குறிப்பிடத்தக்க
அளவிற்கு மோசமடைவதற்குரிய சாத்தியக்கூறுகளை,
2011 ஆகஸ்ட் தொடக்கத்தில்,
உலக வங்கி சுட்டிக்காட்டியது.
இது வளர்ந்துவரும் சந்தைகள்
என்றழைக்கப்பட்டவை மீது பெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தது.
அத்தகைய வளர்ந்துவரும் சந்தைகளில்
திருப்பி செலுத்தவியலா கடன்களுக்கான காப்பீட்டு மதிப்பு
விகிதங்கள் (credit default swaps –
CDS), அதாவது திருப்பி செலுத்தவியலா
கடன்கள் (debt default)
குறித்த அச்சங்கள் மீதான அறிகுறி,
உயர்ந்து வந்தன.
இருந்தபோதினும்,
இதுமட்டுமே ஒரேயொரு அறிகுறி அல்ல.
“அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைப்
பொறுத்த வரையில்,
தொற்றுநோய் பரந்தளவில் அடித்தளமிட்டுள்ளது,”
என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
“அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின்
சந்தைகள் ஜூலை இறுதியிலிருந்து அவற்றின் மதிப்பில்
8.5 சதவீதத்தை
இழந்துள்ளன. 4.5
சதவீத உயர்-வருமான
பங்குச்சந்தை மதிப்புகளோடு சேர்ந்து,
இது செல்வவள இழப்புகளில்
6.5 ட்ரில்லியன்
டாலராக,
அல்லது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
9.5 சதவீதமாக
மாறியுள்ளது,”
என்று அது குறிப்பிட்டது.
கடந்த ஆண்டின் இரண்டாம்
அரையாண்டில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிருந்து
முதலீட்டாளர்கள் பணத்தை பின்வாங்க ஆரம்பித்ததால்,
அங்கே மூலதன பாய்ச்சல் கூர்மையாக
வீழ்ச்சியடைந்தது என்பது இன்னும் அதிக முக்கியத்துவமானதாகும்.
“ஒட்டுமொத்தமாக,
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில்
2011இன்
இரண்டாம் அரையாண்டில் மொத்த மூலதன பாய்ச்சல்
170 பில்லியன்
டாலருக்கு,
அதாவது 2010இன்
இதே காலப்பகுதியில் இருந்த 309
பில்லியன் டாலரில் வெறும்
55 சதவீதமாக,
வீழ்ச்சி அடைந்தது.”
அந்த அறிக்கையின்படி,
ஐரோப்பாவின் நிதியியல் கொந்தளிப்பு
முன்னர் பாதிக்கப்படாமல் இருந்த அபிவிருத்தி அடைந்துவரும்
நாடுகளுக்கும் மற்றும் ஏனைய உயர்-வருவாய்
பெறும் நாடுகளுக்கும் பரவியதால், “உலக
பொருளாதாரம் ஓர் அபாயகரமான காலக்கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.”
உலக பொருளாதார வளர்ச்சி
குறித்த உலக வங்கியின் முன்கணிப்புகள்,
ஆறு மாதங்களுக்கு முந்தைய அதன்
மதிப்பீட்டிலிருந்து "குறிப்பிடத்தக்க
அளவிற்கு கீழிறக்கப்பட்டிருந்தது".
உலக பொருளாதாரம்
2012 மற்றும்
2013இல்
3.6 சதவீதம்
விரிவடையும் என்ற முந்தைய கணிப்போடு ஒப்பிடுகையில்,
அந்த இரண்டு ஆண்டுகளிலும் வெறும்
2.5 சதவீதம்
மற்றும் 3.1
சதவீதம் மட்டுமே விரிவடையும் என்று தற்போது
எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக 3
சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் எந்தவொரு
விகிதமும் ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரத்தின் ஒரு பின்னடைவு
என்று கருதப்படுகிறது.
தற்போது ஐரோப்பா ஒரு பின்னடைவில் உள்ளது.
உயர்-வருவாய்
நாடுகளின் வளர்ச்சி 1.4
சதவீதமாக மட்டுமே இருக்குமென்று
எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரத்தின் முடிவுகளைக்
கூட எட்ட முடியாமல் போகலாம்.
“ஐரோப்பாவின் நிலைமுறிவும்,
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில்
நிலவும் மெதுவான வளர்ச்சியும் அனுமானிக்கப்பட்டதையும்விட
அதிகமாக ஒன்றன்மீது ஒன்று சுமையேற்றும்.”
இது இன்னும் மோசமான விளைவுகளை கொண்டு
வரும் என்பதோடு, "சந்தையின்
நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இன்னும்
சிக்கலாகவும் ஆக்கும்.”
அதேநேரத்தில்,
ஏனைய உயர்-வருவாய்
நாடுகளில் உள்ள அதிக கடன்கள் மற்றும் மெதுவான வளர்ச்சி
போக்கால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் மத்திய-கால
சவால்கள் தீர்க்கப்படாமல்,
அவை கேடு விளைவிக்கத்தக்க திடீர் அதிர்வுகளைத்
தூண்டிவிடும்.”
இந்த விளைவுகள்,
செப்டம்பர்
2008க்கு பிந்தைய உலகளாவிய நிதியியல்
அமைப்புமுறையின் உடைவின் போது ஏற்பட்டதையும் விட இன்னும்
பெரியளவில் இருக்கக்கூடும்.
“தற்போதைக்கு
அடக்கப்பட்டிருந்தாலும்,
மூலதன சந்தைகள் மிகப் பரந்தளவில் உறையும்
அபாயமும்,
லெஹ்மென் நெருக்கடிக்கு இருந்த அதேயளவிற்கான கனத்தோடு ஒரு
உலகளாவிய நெருக்கடி ஏற்படும் நிலைமையும் நிலவுகிறது.
குறிப்பாக,
உயர்-வருவாய்
நாடுகளின் பற்றாக்குறைக்கும் மற்றும் கடன் முதிர்விற்கும்
நிதியளிக்க சந்தைகளில் விருப்பமிருக்கும் என்பதற்கு
உத்திரவாதமளிக்க முடியாது.
அதிகமான நாடுகளுக்கு இத்தகைய நிதியளிப்புகள்
மறுக்கப்பட்டால்,
அட்லாண்டிக்கின் இரண்டு பக்கங்களிலும்
இருக்கும் தனியார் வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல்
அமைப்புகளைச் சூழக்கூடிய ஒரு மிகப் பரந்த நிதியியல்
நெருக்கடியைத் தவிர்க்க முடியாது.”
வேறு வார்த்தைகளில்
கூறுவதானால்,
கடந்த மூன்று ஆண்டுகளில் உலகெங்கிலும்
உள்ள அரசாங்கங்களால் வங்கிகள் மற்றும் நிதியியல்
அமைப்புகளுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை ஒப்படைத்தும் கூட,
எதுவுமே தீர்க்கப்படவில்லை.
உலக பொருளாதாரம் எந்த நேரத்திலும் ஒரு
பேரழிவிற்குள் மூழ்கலாம்.
இது, 2008
நெருக்கடியானது ஒரு மீட்டெடுக்கக்கூடிய
காலகட்டத்திற்குரிய வீழ்ச்சியால் ஏற்பட்டதல்ல,
மாறாக பில்லியன் கணக்கான மக்களின்
வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் அச்சுறுத்தும் விதத்தில்,
உலக முதலாளித்துவ பொருளாதாரத்தில்
ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நிலைமுறிவின் ஒரு தொடக்கமாகும்
என்பதை அடிக்கோடிடுகிறது.
அந்த அறிக்கை குறிப்பிட்டது:
“உயர்-வருவாய்
நாடுகள் வங்கிகளுக்கு பிணையெடுப்பு அளிக்க நிதி அல்லது நாணய
ஆதாரவளங்களை கொண்டிருக்கவில்லை என்பதாலும் அல்லது
2008/2009இல்
வழங்கப்பட்ட அளவிற்கு ஊக்கப்பொதி கோரிக்கைகளைப் பூர்த்தி
செய்யவியலாது என்பதாலும்,
நிலைமுறிவானது
2008/2009இல் இருந்ததையும் விட
நீண்டதாக இருக்கும்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள்
கண்காணிப்பின் பக்கம் சில உபாயங்களை வைத்திருக்கின்ற போதினும்,
குறிப்பாக நிதி பற்றாக்குறைகளுக்கான
நிதியுதவிகள் வறண்டு போகும் போது,
அவை செலவுகளை வெட்டுவதற்கு...
நிர்பந்திக்கப்படும்.”
ஐரோப்பாவின் நிதியியல்
கொந்தளிப்பின் தாக்கம்,
உலக பொருளாதார நிலைக்கு எப்போதும் ஒரு
அறிகுறியாக விளங்கும்,
உலக வர்த்தகத்தில் வெளிப்படுகிறது.
"முக்கியமாக ஐரோப்பிய இறக்குமதிகளில்
ஆண்டு சராசரி வீழ்ச்சியாக 17
சதவீதத்தை பிரதிபலித்து காட்டும் விதத்தில்,
”அக்டோபர்
2011க்கு முந்தைய மூன்றுமாத கால
முடிவாக, 8
சதவீத ஆண்டு சராசரி வேகத்தில் வர்த்தகம் வீழ்ச்சி
அடைந்திருந்ததாக"
அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அபிவிருத்தி அடைந்துவரும்
நாடுகள் என்றழைக்கப்படுபவையின் ஏற்றுமதிகள் கடந்த ஆண்டின்
மூன்றாவது காலாண்டில்
1.7 சதவீத ஆண்டு
சராசரி விகிதத்தில் வீழ்ச்சி அடைந்து,
நவம்பரிலும் வீழ்ச்சி அடைவதைத்
தொடர்ந்தது.
அவ்வாண்டின் முதல் காலாண்டில் இருந்த வேகமான
ஏற்றமதிக்கு கூர்மையாக முரண்பட்ட விதத்தில்,
கடுமையாக பாதிக்கப்பட்டவைகளில்
தெற்காசிய நாடுகளும் இருந்தன.
கிழக்கு ஆசிய ஏற்றுமதிகள் இரண்டு இலக்க
ஆண்டு சராசரி விகிதங்களில் வீழ்ச்சி அடைந்து வந்தன.
சில விதத்தில் தாய்லாந்தில் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கின் தாக்கமும் இந்த வீழ்ச்சியில் இருந்த
போதினும்,
ஐரோப்பா மற்றும் ஏனைய உயர்-வருவாய்
பிராந்திய சந்தைகளின் முரண்பாடுகளும் வெளிப்பட்டிருந்தன.
உலக வங்கியின் தலைமை பொருளாதார
வல்லுனர் ஜஸ்டின் லிஃபு லியூ,
சீனா இப்போதும் ஒரு முக்கிய இடத்தில்
உள்ளதாக தெரிவித்தார்.
அதன் வளர்ச்சி விகிதம்,
கடந்த ஆண்டின்
9.1 சதவீதத்தோடு
ஒப்பிடுகையில்,
இந்த ஆண்டில் 8.4
சதவீதத்திற்கும் கீழே அனுமானிக்கப்பட்ட
போதினும்,
அது ஒப்பீட்டளவில் உயர்வில் நின்றது.
“சீனாவால் அதன் வளர்ச்சியைத் தக்க
வைக்க முடியுமென்றால்,
அது உலகிற்கு நல்லதே.
அது ஏனைய நாடுகளின் பண்டங்களின்
சந்தைகள் மற்றும் வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.”
உலகளவிலான வீழ்ச்சியினால் சீனாவின்
ஏற்றுமதி எதிர்மறையான முறையில் பாதிக்கப்பட்டாலும்,
உலகில் மிகக் குறைவாக கடன்பட்டுள்ள
அரசுகளில் சீன அரசும் ஒன்றாக உள்ளது.
மேலும் ஒப்பீட்டளவில்
பொருளாதாரத்திற்கு ஊக்கம்கொடுக்கக்கூடிய உபாயங்களுக்கும் அது
கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ளது,”
என்றவர் எச்சரித்தார்.
சீன பொருளாதாரத்தின் நிலை
மற்றும் நிலவிவரும் பிரச்சினைகளை அதன் அரசாங்கமும்,
கண்காணிப்பு ஆணையகங்களும்
முகங்கொடுத்து வருவது குறித்து பெய்ஜிங்கிலிருந்து வந்த
சமீபத்திய அறிக்கைகளின்படி பார்த்தால்,
இதுபோன்ற கருத்துரைகளை
மரணப்படுக்கைக்கு இட்டுசென்ற அதிர்ச்சிகரமான கடந்தகாலத்தோடு
தொடர்புபடுத்தி பார்க்கலாம்.
2011இன்
இறுதி காலாண்டு வளர்ச்சி விகிதம்
8.9 சதவீத ஆண்டு சராசரியாக
இருந்ததாகவும்,
இது 10
காலாண்டுகளில் இருந்ததைவிட குறைந்த அளவாகும்
என்றும்; 2011இன்
ஒட்டுமொத்த வளர்ச்சி 9.2
சதவீதமாக இருந்ததாகவும்,
இது லெஹ்மென் பொறிவின் பாதிப்பை சீனா
அனுபவித்த 2009இல்
இருந்ததைவிட மிக குறைந்த அளவாகும் என்றும் இந்த வாரம் சீன அரசு
அறிவித்தது.
2012ஆம்
ஆண்டு "சிக்கல்களும்
சவால்களும்"
நிறைந்த ஓர் ஆண்டாக இருக்குமென தேசிய
புள்ளிவிபரங்கள் ஆணைய செய்தி தொடர்பாளர் கூறினார்.
அவருடைய குறிப்புகள்,
“இருண்ட", “சிக்கலான"
மற்றும் "தீவிரமான"
என்பன போன்ற சொற்களால்
பிணைக்கப்பட்டிருந்ததாக"
பைனான்சியல் டைம்ஸ்
குறிப்பிட்டது.
சீனாவின் கட்டிட-நில வணிக
குமிழி குறித்த ஓர் ஆய்வை சமீபத்தில் முடித்திருந்த பார்க்லே
வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் ஹூவாங் யெப்பிங்
பைனான்சியல் டைம்ஸிற்கு கூறுகையில்,
கடந்தமுறை அளிக்கப்பட்ட ஊக்கப்பொதியின்
பாதிப்புகளையே அரசாங்கம் இன்னமும் கையாண்டு வருவதால்,
தற்போது ஒரு பெரிய ஊக்கப்பொதியை
வழங்குவதற்கான சாத்தியக்கூறு மிகக் குறைவாகவே இருப்பதாக
தெரிவித்தார். “மிக
அதிகளவில் கடன்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளை சீனா கொண்டுள்ளது
என்பதோடு,
குறிப்பாக வீட்டுத்துறையின் பெரும் சொத்து குமிழிகளுக்கு,
கடந்த சில ஆண்டுகளில்,
பங்களிப்பு அளித்த ஓர் அசாதாரணமான
கடன்பாய்ச்சும் விரிவாக்கத்தை அது கண்டது.
அதீத-முதலீடும்
கூட ஒரு முக்கிய பிரச்சினையாகும்.
இந்த அனைத்து பிரச்சினைகளும் தான்
கடந்தகாலத்தில் ஏனைய அபிவிருத்தியடைந்துவந்த நாடுகளின்
பொறிவில் பங்குபெற்றிருந்தன,”
என்று அவர் தெரிவித்தார்.
சமூக ஸ்திரப்பாட்டைத்
தக்கவைக்கவும்,
அதன் ஆட்சிக்கு ஒரு சவாலை தடுக்கவும்
குறைந்தபட்சம் 8
சதவீத வளர்ச்சியின் அவசியத்தைக் கணக்கிடும்
எந்தவொரு அரசாங்கத்திற்கும்,
சீனாவில் ஏற்படும் ஒரு தீவிர பொருளாதார
நெருக்கடியானது,
பெரும் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை
ஏற்படுத்தும்.
உயர்ந்த விலைகள் மற்றும் சீனாவிற்கான அவற்றின்
பண்டங்களின் ஏற்றமதி அளவு ஆகியவற்றால் நிதியியல் கொந்தளிப்பின்
முழு பாதிப்பிலிருந்து,
ஓரளவிற்கு,
விலகியிருந்த கனடா,
ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் போன்ற
பண்டங்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க
பாதிப்புகள் இருக்கும்.
|