WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
ஸ்டாண்டர்ட் & பூர்ஸ் கடன்தரங்களைக் குறைத்தலும் ஐரோப்பாவில்
சமூக எதிர்ப்புரட்சியும்
Peter Schwarz
17 January 2012
use this version to print | Send
feedback
ஒன்பது யூரோப் பகுதி நாடுகளின் கடன் தரத்தை
ஸ்டாண்டர்ட்&பூர்ஸ் குறைத்துள்ளது ஓர் அரசியல் உந்துதல் கொண்ட
முடிவாகும். இந்த தரம் நிர்ணயிக்கும் அமைப்பு, தொழிலாள
வர்க்கத்தின் வாழ்க்கைத்தரங்கள் அழிப்பு அதிகமாக அல்லது
விரைவாக நடக்கவில்லை என்ற கருத்துடைய ஒரு சர்வதேச நிதிய
உயரடுக்கின் நலன்களைத்தான் பிரதிபலிக்கிறது. இது,
தரமிறக்கலுக்கான உத்தியோகபூர்வ விளக்கத்தினால்
தெளிவாகின்றது.
“இன்றைய
தரம் நிர்ணயித்துள்ள நடவடிக்கைகளை அடிப்படையில் சமீப
வாரங்களில் ஐரோப்பியக் கொள்கை இயற்றுபவர்கள் எடுத்துள்ள ஆரம்ப
கொள்கை முயற்சிகள் யூரோப்பகுதியில் அமைப்புரீதியான அழுத்தங்களை
முற்றிலும் தீர்க்கப் போதுமானவையா இருக்காது என்னும் எங்கள்
மதிப்பீட்டில் உந்துதல் பெற்றுள்ளது”
என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
தொழிலாளர் சந்தையைக் கட்டுப்பாட்டில் இருந்து
அகற்றி உள்ள, ஒரு கடுமையான சிக்கனப் பொதியைப் பாராளுமன்றத்தில்
அவசர அவசரமாக இயற்றியுள்ள இத்தாலியின் அரசாங்கத்தின்
“தொழில்நுட்ப
நிர்வாகம் கட்டுமானச் சீர்திருத்த நடவடிக்கைகளை சிறப்பு
நலன்களைக் கொண்ட குழுக்களின் மூலம் எதிர்ப்பு ஏற்படலாம் என்ற
காரணத்தைக் காட்டிச் செயல்படுத்தவில்லை என்று நாங்கள்
கருதினால்,”
இன்னும் தரக் குறைப்புக்கள் ஏற்படுத்தப்படும் என்ற
அச்சுறுத்தலை ஸ்டாண்டர்ட்&பூர்ஸிடம் இருந்து பெற்றுள்ளது.
“அடிப்படைச்
சீர்திருத்த நடவடிக்கைகள்”
என்பதற்கு ஸ்டாண்டர்ட்& பூர்ஸ் கொடுக்கும் அர்த்தம்
தொழிலாளர்களுக்கு ஓரளவுப் பணிப்பாதுகாப்பு கொடுக்கும்
சட்டபூர்வ, ஒப்பந்த விதிகள் அகற்றப்பட வேண்டும் என்பதாகும்.
“சிறப்பு
நலன்கள் குழுக்கள்”
என்பது
தொழிலாள வர்க்கத்தைக் குறிக்கும் மாற்றுப்பெயர் ஆகும்—அதாவது
பரந்துபட்ட பெரும்பான்மை மக்களாகும்.
இதே விதிதான் அரசாங்கம் விரைவில் தொழிலாளர்
சந்தையைக் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றி, வரவு-செலவுத்திட்ட
பற்றாக்குறையைக் குறைக்கக் கூடுதல் நடவடிக்கைகளை
எடுக்காவிட்டால் ஸ்பெயின் அரசாங்கத்தின்மீதும் எடுக்கப்படும்
என்று அச்சறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளின் ஐரோப்பிய
அரசியல்வாதிகளும் ஸ்டாண்டர்ட்&பூர்ஸ் நடவடிக்கைகள் குறித்துச்
சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பிரான்ஸின் ஜனாதிபதிக்கு
ஆலோசகரான அலைன் மிங்க்
“இது
“தீயிட
வேண்டும் என்ற வெறியுடையவரின் செயலைவிட மோசமாகும், முற்றிலும்
மூர்க்கமான செயலாகும்”
என்று
முணுமுணுத்தார். ஜேர்மனியின் தாராளவாத ஜனநாயகக் கட்சியைச்
சேர்ந்த பொருளாதார மந்திரி, தர நிர்ணய அமைப்பு
“அதன்
சொந்த நோக்கங்களைத்தான் தொடர்கிறது”
என்று
குற்றம் சாட்டினார். இடது கட்சியின் தலைவரான கிரிகோர் கீசி
“இது
ஐரோப்பிய மக்களுக்கு எதிரான போர்”
என்று குறிப்பிட்டார்.
Süddeutsche Zeitung பத்திரிகை,
“ஜனநாயக
முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள அரசாங்கங்களின்
அரசியற்செயற்பாடுகளை ஒரு ஏகபோக உரிமை நிறுவனம் முற்றிலும்
அச்சுறுத்துகிறது.... அமெரிக்கர்கள் வெளிப்படையாக ஐரோப்பிய
கண்டத்து மக்களை தங்கள் சொந்தப் பொருளாதார, நிதிய கொள்கை
என்னும் ஆங்கிலோ-சாக்சன் கோட்பாடுகளை ஏற்க செய்யஆர்வம்
காட்டுகின்றனர்.”
என்ற கருத்தைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தர நிர்ணயம் செய்யும் அமைப்பு
யூரோவைக் காப்பாற்ற தாங்கள் எடுக்கும் முயற்சிகளைக்
குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்ற சீற்றத்தைக்
கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் இது ஐரோப்பிய அரசாங்கங்களுக்கு
இடையே வேண்டும் என்றே ஏற்படுத்தப்படும் பிளவு என்றும்
காண்கின்றனர். ஆயினும்கூட, அவை ஸ்டாண்டர்ட்&பூர்ஸுடன் அடிப்படை
விடயங்களில் உடன்பட்டுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொழிலாள
வர்க்கம் போராடிப்பெற்ற சமூகநல அரசின் எஞ்சியுள்ள கூறுபாடுகள்,
வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை நிதியச் சந்தைகளின்
கோரிக்கைகளுக்கு அடிபணிய செய்யப்படவேண்டும் என்ற கருத்தை
அவர்களும் கொண்டுள்ளனர். இதுதான் டிசம்பர் மாதம் ஐரோப்பிய
உச்சிமாநாடு உடன்பாடு கொண்டிருந்த நிதிய ஒப்பந்தத்தின்
முக்கியத்துவம் ஆகும். இதன்படி ஐரோப்பிய உறுப்புநாடுகள்
அனைத்தும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த
வேண்டும் என்றும் தொழிலாளர் சந்தையில் வளைந்து கொடுக்கும்
தன்மை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஒப்புக்
கொள்ளப்பட்டது.
சர்வதேச நிதிய நெருக்கடியின் மத்தியில் ஐரோப்பா
உள்ளது. இதற்குக் காரணம் நிதியச் சந்தைகள் ஐரோப்பாவில்
அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மிக அதிக விகிதத்தை
கொண்டிருப்பதாக நிதியச் சந்தைகள் நம்புவதுதான். மிக அதிகமாக
கல்வி, சுகாதாரம், சமூகநலச் செலவுகள், உள்கட்டுமானம்
போன்றவற்றில் அதிகம் செலவழிக்கப்படுகின்றன—இத்தகைய
நிலைப்பாடு மூலதனத்தில் தனியுடமையாளர்களின் இலாபங்களைக்
குறைத்துவிடும்.
அரசாங்கச் செலவு விகிதம் என்று அழைக்கப்படும்
இந்நடவடிக்கை, நாட்டின் மொத்தப் பொருளாதாரத்தில் அரசாங்கச்
செலவின் பங்கு ஆகும். பொருளாதார கூட்டுழைப்பிற்கும்
அபிவிருத்திக்குமான அமைப்பில் -OECD-
உள்ள தொழிற்துறை நாடுகளில் இந்த சராசரி 41% என உள்ளது.
யூரோப்பகுதியைப் பொறுத்தவரை இந்த சராசரி 46 சதவிகிதமாக உள்ளது.
இங்கு முன்னணியில் இருப்பது 54% ஐக் கொண்ட பிரான்ஸ் ஆகும்.
ஹார்ட்ஸ் பொதுநலச்
“சீர்திருத்தங்கள்”
மற்றும் பிற பிற்போக்குத்தன நடவடிக்கைகள் மக்களின் பரந்த
தட்டுக்களை வறுமைக்குத் தள்ளியிருக்கும் ஜேர்மனியில் இத்தரம்
43% ஆகும். இது
OECD
சராசரிக்கு அருகேதான் உள்ளது.
39% என்ற நிலையில் அமெரிக்கா கணிசமாகக் குறைந்த
இடத்தில் உள்ளது. இந்த வேறுபாடு அமெரிக்க அரசாங்கத்தின் செலவு
மிக அதிகம் இராணுவ வரவு-செலவுத்திட்டத்திற்குச்
செல்லுகிறது என்பதைக் கருதும்போது இன்னும் அதிகமாகிறது.
வங்கிகளின் சுவர்க்கமாக இருக்கும் ஸ்விட்ஸர்லாந்தில் அரசாங்கப்
பங்கு 33% தான்.
ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள கட்சிகள், பொதுவாக
இடது மற்றும் வலதில் இருப்பவை, மிருகத்தனமான பொதுச் செலவினக்
குறைப்புகளுக்கு உடன்பட்டுள்ளன. இவ்வகையில் பிரெஞ்சு சோசலிஸ்ட்
கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹோலந்து
ஸ்டாண்டர்ட்&பூர்ஸ் பிரான்ஸின் தரத்தையும் தாழ்த்தியுள்ளதை
முகங்கொடுத்துள்ள விதம் உகந்த முன்மாதிரியாக உள்ளது. இப்பொழுது
நடக்கும் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில்
இப்பிரச்சினையைத் தந்திரோபாயமாகக் கையாளும் விதத்தில் ஹோலந்து
பழைமைவாத கட்சி ஜனாதிபதியாக இருக்கும் நிக்கோலோ சார்க்கோசியை
வலதில் இருந்து தாக்கியுள்ளார். வரவு-செலவுத்திட்ட
பற்றாக்குறையை போதுமான அளவிற்குக் குறைக்கவில்லை, பிரெஞ்சுப்
பொருளாதாரத்தின் போட்டித்தன்மையைக் கணிசமாகப் பெருக்கவில்லை
என்று குற்றம் சாட்டும் அவர் சார்க்கோசி சந்தைகளில் நம்பிக்கை
இழந்துவிட்டதற்கும் குறைகூறினார்.
பசுமை வாதிகளும் ஐரோப்பா முழுவதும் செலவுக்
குறைப்புக்கள் கொள்கைக்கு வாதிடுகின்றன. ஜேர்மனியின் இடது
கட்சியைப் பொருத்தவரை, பல மாநில அரசாங்கங்களில் அதன்
வரலாற்றுச் சான்று அது சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு
கொடுப்பதுடன், அவை தேவையானவை, தவிர்க்க முடியாது என்று
அவற்றைப் பாதுகாப்பதை சான்றாக காட்டுகின்றது.
தொழிலாளர் வர்க்கத்தின்மீதான இத்தாக்குதலின்
பின்னணி முன்னோடியில்லாத சமூக துருவப்படுத்தல்கள்
இருப்பதுதான். செல்வம் கொழிக்கும் உயர் பத்து சதவிகிதத்தினர்,
மிகச் செல்வமுடையோரில் 1 சதவிகிதம் மற்றும் சமூகத்தின் மிக,
மிக அதிக செல்வம் படைத்த ஆயிரத்தில் ஒரு பகுதி என்று
இருப்பவர்கள் நம்பமுடியாத அளவிற்குச் சொத்துக்களைச்
சேமித்துள்ளதுடன் அதை அவர்கள் மிக உறுதியாக பாதுகாக்கின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளில், மூன்று மில்லியன்
ஐரோப்பிய மில்லியனர்களின் சொத்துக்கள் மொத்த ஐரோப்பியத்
தேசியக் கடன்களைவிட அதிகம் வளர்ந்துள்ளன. இச்சொத்துக்கள்
பறிமுதல் செய்யப்பட்டால், ஒரே அடியில் கடன்களைத் தீர்க்கப்
பயன்படுத்தப்படமுடியும்.
கிரேக்கச் செல்வந்தர்கள்,
மொத்த அரசாங்கக் கடனைக் காட்டிலும் அதிகமான
பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிதியப் பிரபுத்துவம் 1789
புரட்சிக்காலத்தில் பிரெஞ்சுப் பிரபுத்துவம் அதன் சலுகைகளை
விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்ற இருந்த நிலையில்தான்
உள்ளது.
கிரேக்கத்தின் நிதியப் பிரபுத்துவம் எல்லா
ஐரோப்பாவிற்கும் உதாரணத்தை நிலைநிறுத்துகிறது. முந்தைய செலவுக்
குறைப்பு நடவடிக்கைகள் வேலையின்மை மற்றும் வறுமையை வியத்தகு
அளவில் அதிகரித்து, நாடு மந்தநிலைக்கு மூழ்குகையில், ஐரோப்பிய
ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி
என்னும்
“முக்கூட்டின்”
புதிய தூதுக்குழு இந்த வாரம் ஏதென்ஸிற்குப்
பயணித்து அரசாங்கத் திவால் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தைக்
காட்டிக் கிரேக்கம் இன்னும் கடுமையான சிக்க நடவடிக்கைகளை
எடுக்கக் கட்டாயப்படுத்தும்.
உலக நிதிய உயரடுக்கின் பேராசை
தீர்க்கமுடியாதது, தொழிலாள வர்க்கத்தின் மீதான அதன்
தாக்குதல்களுக்கு வரம்பு ஏதும் இல்லை.
ஐரோப்பா முழுவதுமே சமூகமோதல்கள், புரட்சிகரப்
போராட்டங்கள் ஆகியவற்றை நோக்கிச் செல்லுகின்றன. அவற்றிற்காகத்
தயாரிப்புக்கள் நடத்துவது தேவையாகும். நிதியப்
பிரபுத்துவத்தின் அதிகாரத்தை முறிக்காமல், அவற்றின்
செல்வங்களைப் பறித்து எடுக்காமல், வங்கிகள், பெருநிறுவனங்களைத்
தேசியமயமாக்கி அவற்றை ஜனநாயக முறைக் கட்டுப்பாட்டின்கீழ்
இருத்தாவிடின், எந்த ஒரு சமூகப் பிரச்சினையும் தீர்க்கப்பட
முடியாது. ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் ஒன்றுபட்டு, சர்வதேச
சோசலிசத் வேலைத்திட்டத்திற்காகப் போராடவேண்டும். |