World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama unveils war strategy focused on China

சீனா மீது கவனம் செலுத்தும் போர் மூலோபாயத்தை ஒபாமா அறிவிக்கிறார்

By Bill Van Auken
7 January 2012
Back to screen version

வியாழனன்று ஒபாமா அறிவித்த இராணுவ மூலோபாயம் அமெரிக்கப் போர் இயந்திரத்திற்கு செலவழிக்கப்படும் மிகப் பெரிய நிதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், உறுதியாகச் சீனா மீது அதன் கவனத்தை மாற்றியுள்ளது.

வியாளனன்று ஒபாமா ஒரு முன்னோடியில்லாத வகையில் பென்டகனில் தோன்றினர்; இத்தகைய மூலோபாய ஆவணத்தை அளிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பங்கு பெறுவது இதுவே முதல் தடவையாகிறது; இந்த ஆவணம் அமெரிக்க ஆயுதப் படைகளின் முன்னுரிமைகள் மற்றும் இயக்கம் குறித்துப் பரந்தளவில் கோடிட்டுக் காட்டுகிறது.

 “அமெரிக்க உலகத் தலைமையை தொடர்ந்து நீடித்தல்: 21ம் நூற்றாண்டுப் பாதுகாப்பின் முன்னுரிமைகள் என்ற தலைப்பைக் கொண்ட ஆவணத்தை அளித்ததில், அமெரிக்க இராணுவ வரவு-செலவுத் திட்டம், 10 இராணுவ சக்திகளின் கூட்டைவிட அதிகமாகத்தான் இருக்கும் என்று ஒபாமா வலியுறுத்தினார். அவர் இராணுவச் செலவுகளைக் குறைக்கிறார் என்ற வலதுசாரிக் கூற்றுக்களை தவிர்க்காமல் எதிர்கொண்ட அவர், பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தின் வளர்ச்சி குறைவாக இருக்கலாம், ஆனால் இதுதான் உண்மை: அது தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்று சுட்டிக்காட்டினார்.

இந்த வழிகாட்டி அழைப்புக்கள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை நோக்கி  அமெரிக்க இராணுவ சக்தி ஒரு அடிப்படையான மறுநோக்கு நிலை செய்யவேண்டும்  என அழைப்புவிடுகின்றன; அதே நேரத்தில் எண்ணெய் வளம் உடைய பேர்சிய வளைகுடாப் பகுதியில் அமெரிக்க இராணுவக் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக்கொள்வதும் உறுதியாக்கப்படுகிறது. அனைத்துப் போக்குகளும் பசிபிக்கிற்கு மாறுகின்றன. நம் மூலோபாய சவால்களும் அதிகமாக பசிபிக் பகுதியில் இருந்துதான் வெளிவரும் என்று கூட்டுப்படைகளின் தலைவர் மார்ட்டின் டெம்சே கூறினார்.

சீனாவை ஒரு விரோதி என்று அப்பட்டமாகத் தூண்டிவிடும் தன்மையில் சித்திரித்துள்ள ஆவணம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மேலாதிக்கம் குறித்து ஒரு மோதலை நோக்கி படிப்படியாக முன்னேறுவதைத்தான் பிரதிபலிக்கிறது. இதுதான் உலகின் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியின் பகுதியாக உள்ளது.

வழிகாட்டும் ஆவணம், அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு நலன்கள் தவிர்க்க முடியாமல் இப்பிராந்தியத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் பிணைந்துள்ளது என்று வலியுறுத்துகிறது; அதே நேரத்தில் வாஷிங்டன் தன் குறுக்கீடுகளை மத்திய கிழக்கு இன்னும் உலகின் பல பகுதிகளில் தொடரும்; தேவையையொட்டி நாம் ஆசிய-பசிபிக் பகுதியில் மறு சமநிலையைக் கொண்டுவருவோம்.  [வலியுறுத்தல் மூல உரையில்]

ஆவணம் ஜப்பான், தென் கொரியாவில் இருந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் வரை தொடர்ந்த புதிய இராணுவ உடன்பாடுகளைக் காணும் அமெரிக்க முயற்சிகளை வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் பாதுகாப்பு நலன்களுக்கு இந்தியாவை நங்கூரம் போன்ற பங்கிற்குச் சிறப்பிடம் கொடுத்துள்ளது.

சீனாவின் இராணுவ சக்தியின் வளர்ச்சி, இப்பிராந்தியத்தில் மோதலுக்கு காரணமானவற்றை தவிர்க்கும் பொருட்டு அதன் மூலோபாய விழைவுகளுடன் இணைந்து கூடுதலான தெளிவுடன் வர வேண்டும் என்று ஆவணம் எச்சரிக்கிறது.

 அணுகுதலுக்கு விரோதம்/பிராந்திய மறுப்புச் சவால்கள் என்ற தலைப்புடைய பிரிவில், வழிகாட்டி ஆவணம் சீனாவையும் ஈரானையும் சீரான வகையில்லாமல் நம் சக்தியின் ஏற்றத் திறன்களைத் தொடர்ந்து எதிர்க்கும் நாடுகள் என்று ஒன்றாகக் கூறியுள்ளது; இதற்கு மின்னஞ்சல்,சைபர் போர்முறை, ஏவுகணை, க்ரூஸ் ஏவுகணைகள், நவீன வான்பாதுகாப்புக்கள், சுரங்கவகை இன்னும் புதிய வழிவகைகள் ஆகியவை மேற்கோளிடப்பட்டுள்ளன. சீனா அமெரிக்க விமானத் தளமுடைய போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் திறன் கொண்டுள்ளது பற்றியும் பென்டகன் பெருகிய கவலையைக் காட்டியுள்ளது; முன்னர் இவை சிறிதும் அசைக்கமுடியாதவை என்று கருதப்பட்டன, சீனக் கடலோரங்களில் அமெரிக்க இராணுவச் சக்தியைப் பெரிதும் நிலைநாட்டுவதற்கான வழிவகை என்றும் கருதப்பட்டன.

அமெரிக்க உறுதிப்பாடான தடையற்ற முறையில் பொருட்கள் போக்குவரத்து நடப்பது, உலகச் சந்தைகள் முழுவதையும் அணுகும் திறன் ஆகியவற்றிகான பலதரப்பட்ட நிலைப்பாடுகளையும் ஆவணம் அடக்கியுள்ளது; இவை அதிகம் மறைக்கப்படா தென் சீனக்கடல் பிராந்திய பூசல்களில் அமெரிக்கா பெருகியமுறையில் திமிர்த்தனத் தலையீடு குறித்த குறிப்புக்கள் ஆகும்.

தன்னைச் சுற்றிலும் சீருடை அணிந்த கூட்டுப்படைகளின் தலைவர்கள் மற்றும் பென்டகனில் உள்ள சிவில் அதிகாரிகள் இருக்கையில், ஒபாமா சந்தேகத்திற்கு இடமின்றித் தன்னைத் தயாராக இருக்கும் தலைமைத் தளபதி என்று காட்டிக் கொள்ள முற்படுவதுடன், குடியரசு வலதுபிரிவின் குறைகூறல்களில் இருந்தும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள முயல்கிறார். குடியரசுக் கட்சியின் ஜனாதிபதிப் பதவி வேட்பாளர்கள், காங்கிரசில் முக்கிய குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் வலதுசாரிச் செய்தி ஊடகத்தினர் என்று அனைவருமே ஆவணத்தின் வரவு-செலவுத் திட்ட உட்குறிப்புக்களைப் பற்றி எடுத்து, அவை அமெரிக்க இராணுவத்தைக் குப்பையில் எறிவது போல் சித்தரித்துள்ளனர்.

இந்த மூலோபாய வழிகாட்டி, அத்தகைய நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை. ஒபாமாவே தற்பெருமையுடன் கூறியது போல், கிட்டத்தட்ட 450 பில்லியன் டொலர்கள் அடுத்த 10  ஆண்டுகளில் குறைக்கப்படும் என்னும் நிர்வாகத்தின் திட்டம் பென்டகனுடைய அடிப்படை வரவு-செலவுத் திட்டத்தில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நிர்வாகம் கடைசியாகச் செயல்படுத்தியதைவிட அதிகமாகத்தான் நிலைக்க வைக்கும்.

ஒபாமா நிர்வாகம் முன்வைக்கும் வெட்டுக்கள் தற்போதைய வரவு-செலவுத் திட்டத்திற்கு அல்ல; மாறாக அடுத்த தசாப்தத்திற்கு என கணிக்கப்படும் செலவுகளைப் பற்றி ஆகும்; இவற்றில் வாஷிங்டனின் பெருத்த ஆயுதப்படைகளுக்கு நிதியளிப்பது உறுதியாக விரிவாக்கத்தைப் பெறும் என்ற முன்கருத்து ஒரு காரணியாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்று கடந்த தசாப்தம் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருக்கையில், ஒரே நேரத்தில் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய இடங்களில் போர்களும் ஆக்கிரமிப்புக்களும் இருக்கையில், அது அமெரிக்க இராணுவச்  செலவுகள் 80 சதவிகிதம் உயர்ந்ததைக் கண்டது. ஒபாமா செயல்படுத்தும் திட்டம் இந்த முன்னோடியில்லாத உயர் அளவில் இராணுவச் செலவைத் தக்க வைத்துக் கொள்கிறது; அதே நேரத்தில் வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்கக் காங்கிரஸ் மருத்துவப் பாதுகாப்பு, சமூகநலப் பாதுகாப்பு போன்ற சமூக நலத் திட்டங்கள் அதன் நலன்கள் ஆகியவற்றிற்கான செலவுகளைப் பெரிதும் குறைக்கத் தயாராக உள்ளன.

மூலோபாய ஆய்வு அளிப்பு குறித்த செய்தி ஊடகத் தகவல்கள் வியாழனன்று வெளிவந்த இந்த ஆவணம் ஒபாமா அமெரிக்க இராணுவக் கொள்கையில் தன்னுடைய சொந்த முத்திரையைப் பதித்துள்ளதை பிரதிபலிக்கிறது என்று கூறுகின்றன. இது கடுமையான வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் பற்றிய கூற்றுக்களையும் விட அபத்தமானது ஆகும். மூலோபாய வழிகாட்டு நெறிகளில் கோடிட்டுக் காட்டப்பட்டிருப்பவை அமெரிக்க ஆயுதப்படைகள் கட்டுப்பாடு, இராணுவம்-தொழில்துறைப் பிணைப்பு ஆகியவற்றால் திட்டமிடப்பட்டவை, ஒபாமா இந்தச் சக்திவாய்ந்த நலன்களுக்கு வெறும் அரசியல் செய்தித்தொடர்பாளராகத்தான் செயல்புரிகிறார்.

அதன் பரந்த பார்வையில், வழிகாட்டி நெறி புஷ்ஷின் முதல் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட் கொண்டிருந்த திட்டங்களைப் பெரிதும் ஒத்திருக்கிறது. அவர் இராணுவக் கொள்கையில் ஒரு புரட்சி தேவை என்ற கருத்துடன் பென்டகனில் நுழைந்தார். ரம்ஸ்பெல்டின் திட்டங்களைப் போலவே, வியாழனன்று வெளிவந்துள்ள வழிகாட்டி நெறியும் தரைப்படைகள், குறிப்பாக இராணுவம் சீராக்கப்பட வேண்டும் என்று வாதிடுகையில், சிறப்புச் செயற்பாடுகள் துருப்புப் பிரிவு, உயர் தொழில்நுட்ப ஆயுத வகைகள், ஆளில்லாத தாக்குதல் டிரோன்கள் உட்பட, ஆகியவற்றிடம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த ஆவணம் வரவு-செலவுத் திட்டங்கள், மனிதசக்தி ஆகியவை குறித்து குறிப்பான எண்ணிக்கையை அளிக்கவில்லை என்றாலும், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் இருந்து அமெரிக்கத் துருப்புக்கள் பின்வாங்கப்படும் நிலையில், அமெரிக்க படையினர்கள் எண்ணிக்கை தற்போதைய 570,000ல் இருந்து 490,000 எனக்குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் எண்ணிக்கைக் குறைப்புக்கள் மரைன் பிரிவிலும் வரக்கூடும் என்று கூறுப்படுகிறது; இதன் பொருள் ஈராக் மற்றும் ஆப்கானியப் போர்களில் இருந்து திரும்பும் பல்லாயிரக்கணக்கான படையினர்கள் அமெரிக்காவின் நீண்ட வேலையில்லாதவர் பட்டியலில் சேருவர் என்பதாகும்.

இராணுவம், மரைன்ஸ் ஆகியவற்றிலுள்ள மூத்த அதிகாரிகள் இக்குறைப்புக்களைக் குறித்து சாடுகையில், அவர்களுடைய கவலைகளைவிட வழிகாட்டி நெறியில் உள்ள புதிய ஸ்டெல்த் குண்டுவீச்சு முறை, நீர்மூழ்கிக் கப்பல்கள், ஸ்டார் போர் தொழில்நுட்பம் இன்னும் பிற விமான, கடற்படை ஆயுதமுறைகள் குறித்து தொடர்ந்து அதிகச் செலவுகள் என்றும் உறுதிமொழிகளைக் குறித்து பெருநிறுவன நலன்கள் மிகவும் களிப்பு அடைந்துள்ளன. வியாழன் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா நேரடியாக இந்நலன்கள் குறித்துப் பேசி, பென்டகன் நாட்டின் பாதுகாப்புத் தொழில் தளத்தின் சுகாதாரம், சீராக நடைபெறும் தன்மையைக் காப்பதற்கும் உறுதி கொண்டுள்ளது என்று அறிவித்தார்.

பென்டகனில் தோன்றிய நிலையில், ஒபாமா ஈராக்கில் படைகள் திரும்பப் பெற்றுள்ளது, மற்றும் ஆப்கானிஸ்தானில் படைகள் எண்ணிக்கையைக் குறைத்தது ஆகியவற்றைத் தளம் கொண்டு போர் அலைகள் பின்வாங்குகின்றன என்றும் தன் கூற்றை மீண்டும் தெரிவித்தார்.

மாறாக, பாதுகாப்பு மூலோபாய வழிகாட்டி நெறி அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகிய எண்ணெய் வளமுடைய பகுதிகளில் தன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது.

அரபு வசந்தத்திற்கு இழிந்த மரியாதையைக் காட்டிய வகையில், வழிகாட்டி நெறி அமெரிக்கா வளைகுடா ஒத்துழைப்புக் குழுவில் இருக்கும் சர்வாதிகார முடியாட்சிகளை  ஈரானுடன் ஒரு இராணுவ மோதலுக்கான தயாரிப்பில் நம்பியிருப்பதையும் உறுதிப்படுத்துகிறது

தொடுவானத்தில் என்ன வரவிருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் கூடியிருந்த செய்தி ஊடகத்தினரிடம் பாதுகாப்பு மந்திரி பானெட்டா, அமெரிக்க இராணுவம் கொரியாவில் ஒரு நிலப்போருக்குத் தயாராக உள்ளது என்றும் அதே நேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு மோதலில் ஈரானைத் தோற்கடிப்பது குறித்து உத்தரவாதம் அளித்தும் பேசினார்.

பாதுகாப்புத்துறை வழிகாட்டி ஆணவம் குறித்து தன் வலுவான எதிர்விளைவை வெளிப்படுத்தி சீனா ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தன் ஏற்றம் நிறுத்தப்படமுடியாதது என்பதை அமெரிக்கா உணருமாறு சீனா செய்யவேண்டும் என்று அரசாங்கத்தின் உரிமையான சீனச் செய்தித்தாள் குளாபல் டைம்ஸ் அறிவித்துள்ளது. பெய்ஜிங் அதன் சுற்று எல்லைப்புறப் பகுதிகளில் பாதுகாப்பை விட்டுவிடக்கூடாது என்று வலியுறுத்திய செய்தித்தாள், சீனா அதன் நீண்ட தொலைதூர இராணுவத் தாக்கும் திறனைப் பெருக்கவேண்டும், அமெரிக்கப் பகுதியை அச்சுறுத்துவதற்கு இன்னும் அதிக வழிவகைகளைக் கொள்ளவேண்டும், படிப்படியாக அமெரிக்காவுடனான விளையாட்டிற்கு தன் முன்னணி வரிசையை முன்தள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஒப்புமையில் அமெரிக்க முதலாளித்துவத்தின் சரிவு, சீனாவின் எழுச்சி ஆகியவற்றை எதிர்கொள்ளும் வாஷிங்டன் அதன் உலக மேலாதிக்க நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பொறுப்பற்ற இராணுவப் பயன்பாட்டை நோக்கிச் செல்லுகிறது. இது கடந்த தசாப்தத்தில் நிகழ்ந்த போர்களையெல்லாம் மறைத்துவிடக்கூடிய பெரிய மோதல்கள் என்னும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.