World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்துக்கு தலவாக்கலை தொழிலாளர்கள் ஆதரவு

By Gaminee Karunatilaka
9 January 2012
Back to screen version

இலங்கையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தின் பாகமாக சோ.ச.க. குழுவினர் கடந்த ஜனவரி 1 அன்று தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்திற்கு சென்றிருந்தனர். அங்கு எங்களைச் சந்தித்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் ஆயிரக்கணக்கானவர்களை அரசியல் கைதிகளாக தடுத்துவைத்திருப்பது ஜனநாயக உரிமைகளுக்கு பெரும் தாக்குதல் எனக் குறிப்பிட்டனர். அவர்களை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்திற்கு தாம் செயலூக்கத்துடன் ஆதரவளிப்பதாக அவர்கள் மேலும் கூறினர்.

இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும் சிறை முகாங்களில் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி தடுத்து வைக்கப்ட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை சுமார் 6,000 ஆகும். அவர்களில் அதிகளவானோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இராஜபக்ஷ அரசாங்கம் முடிவகுக்கு கொண்டு வந்த போதும், அதன் பின்னரும் புலி சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டவர்களாவர். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தனது பிரச்சாரத்தின் பாகமாக, சோ.ச.க. ஜனவரி 8 அன்று தலவாக்கலை நகரில் நடத்தவிருந்த பகிரங்க கூட்டத்துக்காக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தின் போது, தலவாக்கலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.  

தலவாக்கலை நகருக்கு அருகில் உள்ள தலவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த தாளமுத்து சுதாகரன், ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்த பீ. சந்திரசேகரன் ஆகிய இளைஞர்கள் இருவரும் இவ்வாறு எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி புலி சந்தேக நபர்களாக 2010 அக்டோபரில் கைது செய்யப்பட்டு பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதே போல் நுவரொலியா மாவட்டத்திலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுதாரன் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற இளைஞராவார். எந்தவொரு குற்றமும் செய்யாத சுதாகரனை பிடித்து சிறை வைத்துள்ளனர். இது பெரும் அநியாயம். அவர் மலையக மக்கள் முன்னணியின் (ம.ம.மு.) தலைவர்களில் ஒருவராக செயற்பட்டவர், என அவரது நண்பர் ஒருவர் எம்மிடம் கூறினார்.

அந்த முன்னணியில் எவரும் இதைப் பற்றி பேசியதில்லை. அது மட்டுமல்ல. ஏனைய அரசியல் கட்சிகளோ அல்லது அமைப்புகளோ இது பற்றி எந்தவொரு தேடுதலையும் செய்யவில்லை. அதற்காக செயற்படும் உங்களுக்கு நாங்கள் எந்தவொரு உதவியும் செய்வோம். மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.), ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) போன்ற எந்தக் கட்சியும் இது பற்றி தலையீடு செய்யவில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் அவர்கள் எங்களைப் பார்ப்பார்கள். இப்போது அவர்கள் எங்கென்றே தெரியவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) போன்ற தொழிற்சங்கங்கள் செய்வது மோசடி. எங்களுக்கு என்ன நடந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. இருக்கிறோமா செத்துவிட்டோமா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இது போல் அனைத்து சங்கங்களும் இந்தப் பிரச்சினை பற்றி மௌனமாக இருக்கின்றன.

இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.சு.க.யை தலைமையாகக் கொண்ட அவரது கூட்டரசாங்கம், அரசியல் கைதிகளாக ஆயிரக்கணக்கான இளைஞர்களை தடுத்து வைத்திருப்பது உட்பட, தொழிலாள வர்க்கத்தினதும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களதும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதில் நேரடியாக ஈடுபட்டுள்ளது. தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் செயற்படும் இ.தொ.கா., ம.ம.மு. மற்றும் அவற்றின் தலைவர்களும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளிகளாக அதன் தாக்குதல்களுக்கு நேரடி பங்காளிகாளக இருக்கின்றன.

யூ.என்.பீ. மற்றும் ஜே.வி.பீ.யும் இராஜபக்ஷவின் இனவாத யுத்தத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததோடு அதன் மூலம் தமிழ் இளைஞர்களை கைது செய்வதற்கு ஒத்துழைப்பும் வழங்கின. சுதாகரன் ம.ம.மு. இளைஞர் அமைப்பின் தலைவராக இருந்தார். தமது அமைப்பின் பிரதான அங்கத்தவரின் பாதுகாப்புக்காக முன் நிற்பதைக் கூட கைவிடுமளவுக்கு ம.ம.மு. தலைமைத்துவம் இராஜபக்ஷ அரசாங்கம் அபிவிருத்தி செய்யும் பொலிஸ்-அரச திட்டத்துடன் தன்னை பிணைத்துக்கொண்டுள்ளது.

ஒரு பெண் தொழிலாளி தோட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ள வேலைச் சுமை அதிகரிப்பினால் தாம் எதிர்கொண்டுள்ள நிலைமைகளை தெளிவுபடுத்தினார்: முன்னர் ஒரு நாளுக்கு 18 கிலோ கொழுந்து பறித்தோம் இப்போது அதை 20 கிலோவாக ஆக்கிவிட்டனர். பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வரவிருந்த வாய்ப்பையும் இப்போது இல்லாமல் செய்துவிட்டனர். அரசியல் கைதிகளைப் பற்றி நாம் கேட்ட போது, இது மிகவும் அநியாயமாகும், அப்பாவிகளையே தடுத்து வைத்துள்ளார்கள், எந்தவொரு அரசியல் கட்சியும் இதைப்பற்றி அக்கறை காட்டுவதில்லை, இ.தொ.கா.வைச் சேர்ந்தவர்கள் எப்படியும் இதில் அக்கறை காட்ட மாட்டார்கள், சில சமயம் எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூட தோன்றுகிறது, எங்களையும் ஒரு காலத்தில் தூக்கிச் செல்வார்களோ தெரியாது, என அவர் குறிப்பிட்டார்.

இப்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சுதாகரனைப் பற்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: அவர் எல்லோருக்கும் உதவி செய்தவர். அவர் மேல் கொத்மலைத் திட்டத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் முன்னணி வகித்தவர். அத்தகைய ஒருவரை தடுத்து வைத்துள்ளதால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேல் கொத்மலை மின் உற்பத்தி நிலைய திட்டத்தினால் வீடுகள் மற்றும் நிலங்களை இழக்கவிருந்த மக்களின் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்வது போன்ற, அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக செயற்பட்டமையே அவரைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதற்கான காரணமாகும்.

ஹொலிரூட் தோட்டத்தில் 45 வயதான பெண் தொழிலாளியும் எம்முடன் பேசினார். அவரது குடும்பம் வளர்ந்த பிள்ளைகள் நால்வருடன் ஒரே ஒரு அறையைக் கொண்ட லயன் அறையில் நெருக்கமாக வாழத் தள்ளப்பட்டுள்ளது. அவர் தோட்டப்புறங்களில் இராணுவ முகாங்களை அமைப்பதைப் பற்றி அவர் கருத்துத் தெரிவித்தார்: அந்த பக்கம் இராணுவ முகாம் ஒன்றை போட்டுள்ளனர். எங்களது பெண் பிள்ளைகள் அந்தப் பக்கம் போவது வருவது எப்படி? அவர்களால் எதுவும் செய்ய முடியும். நாங்கள் எதுவும் சொன்னால் எங்களை அடித்து ஆற்றில் போடுவார்கள். அவர்களது அரசாங்கம் தானே. மழை காலத்தில் மழை தண்ணீர் வீட்டுக்குள் வருகின்றது. கூரைத் தகடு போடுவதில்லை. போடுவதாக பொய் சொல்லுவார்கள். இந்த லயன் அறைகளுக்கு ஒரு தண்ணீர் குழாயே உள்ளது. தாம் எதிர்கொண்டுள்ள கொடூரமான நிலைமைகளுக்கு எதிராகவும் உயர்ந்த சம்பளம் மற்றும் ஏனைய உரிமைகளுக்காகவும் தொழிலாளர்களின் வளர்ச்சியடையும் எதிர்ப்பை நசுக்குவதை குறியாகக் கொண்டே அரசாங்கம் இவ்வாறு தோட்டங்களில் இராணுவ முகாங்களை அமைக்கின்றது 

58 வயதான இரு பிள்ளைகளின் தாயான இன்னொரு பெண் தொழிலாளி எம்மிடம் பேசும் போது, மழை காலத்தில் இந்த ஆறு பெருக்கெடுப்பது எங்களுக்குள்ள பிரதான பிரச்சினை. எங்களது லயன் அறைகளில் 4 அடி வரை தண்ணீர் வந்துவிடும். அப்போது நாங்கள் பெரும் பயத்திலேயே இருப்போம். இதை தீர்ப்பதாக தேர்தல் காலத்தில் வந்து வாக்குறுதி கொடுப்பார்கள். அதன் பின்னர் இந்தப் பக்கம் வரமாட்டார்கள், என்றார்.

இத்தகைய கொடூரமான நிலைமைகள் தோட்டப் புறங்களில் எல்லா இடங்களிலும் சமமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான பெண் தொழிலாளி தெரிவித்ததாவது: இந்த லயன்களுக்கு பாதைகள் இல்லை. 14 வருடங்களாக தண்ணீர் இல்லை. வெவ்வேறு வழிகளில் பெற்றுக்கொள்கிறோம். இ.தொ.கா. காரர்கள் தேர்தல் காலத்தில் வருவார்கள். வாக்குகளை வாங்கிச் செல்வார்கள். பின்னர் அவர்களைக் காணக் கிடைக்காது. ஆஸ்பத்திரி வசதிகள் பற்றிக் கேட்டபோது, ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. ஆனால் மருந்துகள் காசுக்கே வாங்க வேண்டும். 250 ரூபா கொடுத்து நாங்கள் மருந்து வாங்குகிறோம், என்றார்.

எங்களுடன் பேசிய 45 வயதான பெண் தொழிலாளி, எங்களுக்கு மலசல கூடம் கிடையாது, மிகவும் சிரமம், சரியான வீடும் இல்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் எங்களுக்கு கிடைத்த நன்மை என்ன? நாங்கள் நினைத்தோம் நல்லது நடக்கும் என்று. எந்தவொரு பொருளும் இலாபமாக இல்லை. விலைவாசி வானுயர்ந்துள்ளது. 10,000 ரூபா கொண்டு சந்தைக்குப் போனாலும் 10 ரூபாய் பை ஒன்றிலேயே சாமான் வாங்க முடியும். என்ன நன்மை கிடைத்துள்ளது?, என கேட்டார்.  அரசியல் கைதிகளாக இளைஞர்களைத் தடுத்து வைத்திருப்பதைப் பற்றி கருத்துத் தெரிவித்த அவர், எந்தவொரு குற்றமும் செய்யாத எங்களது அப்பாவிகளை அடைத்து வைத்துள்ளனர், என்றார்.

தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள மேல் குறிப்பிட்ட நிலைமைகளுக்கு எதிராக அவர்களுக்கு மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என்பதை இராஜபக்ஷ அரசாங்கமும் தோட்ட உரிமையாளர்களும் நன்கு தெரிந்து வைத்துள்ளன. புலி சந்தேக நபர்களாக முத்திரை குத்தி, தமிழர் விரோத இனவாதத்தை தூண்டி, தோட்ட தொழிலாளர்களையும் இளைஞர்களையும், விசேடமாக அவர்கள் மத்தியில் உள்ள போராளிப் பகுதியினரை கைது செய்து தடுத்து வைத்திருப்பது, தோட்டப் புறங்களில் வளர்ச்சியடையும் போராட்டங்களை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களின் பாகமாகும்.