World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

2012 opens with mounting war threat in Persian Gulf

பாரசீக வளைகுடாவில் அதிகரித்துவரும் யுத்த அச்சுறுத்தலோடு 2012 ஆரம்பிக்கிறது
Peter Symonds
4 January 2012
Back to screen version

இம்முறை ஈரானுக்கு எதிரான அதிகரித்துவரும் ஒரு புதிய அமெரிக்க யுத்த அச்சறுத்தலோடு இந்த ஆண்டு தொடங்குகிறது. அமெரிக்க விமானம்தாங்கி கப்பலான USS John C. Stennis ஈரானுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருப்பதால், அது பாரசீக வளைகுடாவிற்கு திரும்பக்கூடாது என்ற ஈரானின் எச்சரிக்கையை, நேற்று அமெரிக்கா அதன் சமீபத்திய கூர்மையான வார்த்தை பரிமாற்றங்களில் ஒதுக்கிதள்ளியது.   

ஏற்கனவே பலவீனமாகிவிட்டிருக்கும் ஈரானிய பொருளாதாரத்தை முடமாக்கும் கூடுதல் பொருளாதார தடைகளோடு அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அந்த வளைகுடாவில் வேண்டுமென்றே பதட்டங்களை அதிகரித்துள்ளன. ஈரானின் மத்திய வங்கியோடு வியாபாரம் செய்யும் (முக்கியமாக ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளைத் தடுக்கும் விதத்தில்) வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் ஒரு முறைமையை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டத்தை (National Defense Authorisation Act – NDAA) சட்டமாக்க, சனியன்று, ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டார். ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளின்மீது ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் ஓர் தடையாணையைக் கொண்டு வர, ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாத இறுதியில் கலந்தாலோசிக்க உள்ளது.

ஈரானிய பொருளாதாரத்தின்மீது உடனடியாக தாக்கம் ஏற்படும். மத்திய வங்கி தலையீடு செய்ய நிர்பந்திக்கப்படும் அளவிற்கு, திங்களன்று, வெளிநாட்டு செலாவணிகளுக்கு எதிராக ஈரானிய நாணயமான ரியால் 11 சதவீதம் சரிவடைந்தது. அந்நாட்டின் உயர்ந்த பணவீக்க விகிதத்தோடு சேர்ந்து, செப்டம்பரில் இருந்து அந்த செலாவணி சுமார் 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனைகள் ஈரானின் மொத்த செலாவணி ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தைக் கொண்டுள்ளன.  

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டால், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) தடைசெய்யப்படுமென்ற அச்சுறுத்தல் மூலமாக வாஷிங்டனின் பொருளாதார யுத்தநடவடிக்கைக்கு தெஹ்ரான் விடையிறுப்பு காட்டியுள்ளது. வளைகுடாவை அணுகுவதன்மீது எவ்வித கட்டுப்பாடுகளையும் "பொறுத்துக் கொள்ளாதென" குறிப்பிட்டு அமெரிக்க கப்பற்படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானை அரக்கத்தனமாக காட்டுவதற்காக, அதன் கப்பற்படை ஒத்திகை மற்றும் புதிய ஏவுகணை பரிசோதனை ஆகிய செய்திகளைப் பிடித்துக் கொண்டுள்ள அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள், ஈரானிய "வலுச்சண்டைக்கு போதலை" குற்றஞ்சாட்டுவதோடு "அணுசக்தி ஈரானின்" அபாயங்கள் குறித்து தம்பட்டம் அடிக்கின்றன.    

பொதுமக்களிடையே பீதியைக் கிளப்பவும், ஒரு பொறுப்பற்ற இராணுவ சாகசத்திற்கான அரசியல் சூழலை உருவாக்கவும் அமெரிக்க நிர்வாகம் அணுஆயுதங்கள் குறித்த ஆதாரமற்ற முறையீடுகளை மீண்டுமொருமுறை பயன்படுத்தி வருகிறது. ஓராண்டிற்குள் ஈரான் அணுஆயுதத்தைக் கொண்டிருக்கும் என்று அறிவித்தவரும், “அதை சமாளிக்க என்னென்ன நடவடிக்கைகள் அவசியமோ அதையெல்லாம் அமெரிக்கா முன்னெடுக்கும்" என்று எச்சரித்தவருமான அமெரிக்க பாதுகாப்பு செயலர் லியோன் பானெட்டாவின் சமீபத்திய குறிப்புகள், 2002இல் ஈராக் படையெடுப்பிற்குத் தயாரிப்பு செய்த போது ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் சென்னியின் போர்நாடும் வாய்ஜாலத்தைப் போலவே எதிரொலித்தது.  

ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள ஆண்டில் அவருடைய முக்கிய குடியரசு கட்சி போட்டியாளர்களின் அழுத்தத்தின்கீழ் ஒபாமா ஈரானை நோக்கி இன்னும் கூடுதலாக யுத்தம்நாடும் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளார். கடந்த ஞாயிறன்று ஜனாதிபதி வேட்பாளர் ரிக் சாண்டொர் அறிவிக்கையில், தெஹ்ரான் அதன் அணுசக்தி உலைகளை கலைத்துவிட உடன்படவில்லையென்றால் அவர் அவற்றை விமான தாக்குதல்கள் மூலமாக "சேதப்படுத்த இருப்பதாக" குறிப்பிட்டார். ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வெள்ளை மாளிகை இஸ்ரேலின்  அழுத்தத்திற்கு உள்ளாகின்றது

ஒபாமா நிர்வாகத்தின் மத்திய கிழக்கு கணப்பீடுகளில், கடந்த ஆண்டுகளின் போது ஈரான் அதன் மையத்தில் இருந்து வந்துள்ளது. துனிசியா மற்றும் எகிப்தில் எழுந்த எழுச்சிகளால் அதிர்ந்துபோன அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள், கடாபியை வெளியேற்றவும், திரிபோலியில் அவர்களின்தரப்பு ஆட்சியை நிறுவவும் ஒரு குற்றஞ்சார்ந்த குண்டுவீச்சு பிரச்சாரத்தோடு இராணுவ தலையீடு செய்ய, லிபியாவில் அந்த அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த போராட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டன. தற்போது அதேபோன்ற முறைகள், ஈரானின் அப்பிராந்திய முக்கிய கூட்டாளிக்கு, அதாவது ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் சிரிய ஆட்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது

அசாத்திற்கு குழிபறிக்கவும், அவரைத் தனிமைப்படுத்தவும் செய்யப்பட்ட அமெரிக்க முயற்சிகள் கணிசமான அளவிற்கு துருக்கியிலிருந்து உதவிகளைப் பெற்றுள்ளன. அப்பிராந்திய சக்தியாக விளங்க வேண்டுமென்ற துருக்கியின் சொந்த அபிலாசையை எட்ட, துருக்கி அரேபிய வசந்தம் என்றழைக்கப்படுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. சமீபத்திய மாதங்களில், சந்தேகத்திற்கு இடமின்றி  வாஷிங்டனால் ஊக்குவிக்கப்பட்ட துருக்கி அரசாங்கம், அசாத்திற்கு எதிரான எதிர்ப்பு குழுக்களுக்கு உதவியளிக்க, ஈரானுடன் வளர்த்துவந்த அதன் தொடர்புகளிலிருந்து பின்வாங்கியுள்ளது.

ஈராக்கில் தொடர்ந்து அமெரிக்க துருப்புகளை இருத்துவதில் வாஷிங்டன் தோல்வியடைந்ததும், தெஹ்ரானுடன் மிகவும் நெருக்கமாக சாய்ந்திருப்பதாக கருதப்படும் பிரதம மந்திரி நௌரி அல்-மாலிக்கியின் ஈராக்கிய அரசாங்கத்திற்கு எதிரான சுன்னி பிரிவு கட்சிகளோடு இரகசிய சதியிலும் வாஷிங்டன் ஈடுபட்டு வருகிறது. மலிக்கியை தன்தரப்பில் கொண்டு வர அல்லது அமெரிக்க நலன்களுக்கு ஏற்ற ஒரு ஆட்சியை அங்கே ஏற்படுத்த வாஷிங்டன் பாக்தாத்தில் நிலவும் தற்போதைய கசப்பான உட்குழு பூசலைப் பயன்படுத்துகிறது.

மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தால் டிசம்பர் 20இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ஆய்வாளர் ஆண்டனி கொர்டெஸ்மெனும், மற்றும் இதர ஆய்வாளர்களும், “அமெரிக்கா கூடுதல் தீர்க்கமானகரமாக செயல்படாவிட்டால், அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பின் நடைமுறை பயனாளியாக ஈரான் மாறிவிடக்கூடும்,” என்ற வாஷிங்டனில் நிலவும் பரந்த உணர்விற்கு குரல் கொடுத்திருந்தனர். "ஈரானை அதைரியப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் ஈராக்கிற்கு வெளியில் அமெரிக்கா என்ன செய்கிறது என்பதே நிறைய முக்கியமாகும்" என்ற தீர்மானத்தை அந்த அறிக்கை எட்டியிருந்தது.

ஒபாமா நிர்வாகம், ஐந்தாவது அமெரிக்க கப்பற்படையின் தலைமையிடமான பஹ்ரென் உட்பட, குவைத்திலும் ஏனைய வளைகுடா நாடுகளிலும் அதன் இராணுவ பிரசன்னத்தை பலப்படுத்த ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வாஷிங்டனின் ஊக்குவிப்போடு, ரியாத்தில் நடந்த சமீபத்திய வளைகுடா கூட்டுறவு குழுவில் மாநாட்டில், வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு எதிரான (அதாவது வெளிப்படையாக ஈரானுக்கு எதிரான) பாதுகாப்பு கூட்டுறவுகள் சம்பந்தமான ஓர் உத்தியோகபூர்வ "கூட்டை" உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.   

அமெரிக்காவின் ஒரு கூட்டாளியும், வளைகுடாவில் பிராந்திய செல்வாக்கிற்கான ஈரானின் நீண்டகால போட்டியாளராக விளங்கும் சவூதி அரேபியாவிற்கு 30 பில்லியன் டாலர் பெரும் ஆயுத விற்பனை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை கடந்த வியானன்று குறிப்பிட்டது. அதற்கடுத்த நாள், ஐக்கிய அரேபு எமிரேட்டிற்கு (UAE) அமெரிக்கா $3.5 பில்லியன் மதிப்பில் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை விற்கவிருப்பதாக அது அறிவித்தது. பதுங்குகுழி-தகர்ப்பு குண்டுகள் உட்பட  (ஈரானின் நிலத்தடி அணுசக்தி மற்றும் இராணுவ முகாம்களே இதன் வெளிப்படையாக இலக்காகும்) மற்றொரு ஆயுத உடன்படிக்கையையும் ஒபாமா நிர்வாகம் ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு கடந்த நவம்பரில் முன்மொழிந்திருந்தது.   

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்த தயாரிப்புகள், ஈரானின் குற்றஞ்சாட்டப்படும் அணுசக்தி ஆயுத திட்டங்களை நிறுத்துவதை நோக்கமாக கொண்டதல்ல, மாறாக மத்தியகிழக்கு மற்றும் மத்திய ஆசியாவின் எரிசக்தி வளம்மிக்க மற்றும் மூலோபாயரீதியிலான பிராந்தியங்களின் மீது வாஷிங்டனின் இன்னும் கூடுதலான மேலாதிக்கத்தைக் கொண்டு வருவதே ஆகும். அமெரிக்கா அதன் ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டியாளர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயு வினியோகங்களின்மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டுமென்ற நோக்கத்தை அது கைவிட்டுவிடவில்லை. அந்த நோக்கம் தான் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் படையெடுப்புகளை உந்தியது.

மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கிற்கு குழிபறித்தும், லிபியாவின் மீது நடத்தப்பட்ட நேட்டோவின் குண்டுவீச்சில் இணைவதில் ஒபாமா நிர்வாகத்திற்கு இருந்த முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். லிபியா மீதான யுத்தமானது. சீனாவின் பல பில்லியன் டாலர் திட்டங்களை பிரச்சனைக்குள்ளாக்கியது. ஈரான் மீது எண்ணெய் தடையாணை அல்லது இராணுவ மோதல் என்பது சீனாவிற்கு பெரும் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும். சீனாவின் எண்ணெய் இறக்குமதிகளில் 11 சதவீதத்திற்கு ஈரான் ஆதாரமாக உள்ளது. மேலும் கட்டுமானம் மற்றும் எரிசக்தி துறைகளிலும் ஈரான் சீனாவின் பெரும் முதலீடுகளுக்கான இலக்கிடமாக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் வடக்கில் அமெரிக்க துருப்புகளை நிறுத்தவும், இன்னும் சீனாவிற்கு எதிரான ஒரு நகர்வில் அமெரிக்க இராணுவத்தையும், உளவு நடவடிக்கைகளையும் மேலும் விஸ்தரிக்கவும் கடந்த நவம்பரில் தான் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஒரு புதிய உடன்படிக்கையை அறிவித்தன.

பாரசீக வளைகுடாவில் பொறுப்பற்ற அரசியல் வெப்பத்தை அதிகரித்திருப்பதன் மூலமாக, ஒபாமா நிர்வாகம் அப்பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் சூழக்கூடிய இராணுவ மோதல் அச்சுறுத்தல்களின் அபாயத்தை உயர்த்தியுள்ளது. இத்தகைய ஒரு பேரழிவைத் தடுக்கும் ஒரே சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே உள்ளது. ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராகவும், அதன் மூலகாரணத்திற்கு எதிராகவும் அதாவது இலாப அமைப்புமுறைக்கும் மற்றும் உலகத்தை போட்டி தேசிய அரசுகளாக காலாவதியானமுறையில் பிரிப்பதற்கும் எதிராகவும், உலக சோசலிச புரட்சியின் வேலைதிட்டத்தின் அடிப்படையில் அது ஒன்றுதிரட்டப்பட வேண்டும்.